Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி வந்த பிறகு மாறிய 5 பெண்களின் வாழ்க்கை

  • சுசீலா சிங்
  • பிபிசி செய்தியாளர்

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் குடிமக்கள் தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அங்கேயே இருப்பவர்கள் புதிய தாலிபன் அரசாங்கத்தின் சட்டத்துக்கு உட்பட்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

புதிய சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் வாழக் கற்றுக் கொள்ளும் பெண்களும் இதில் அடங்குவர். வீட்டு வாசலைத் தாண்டுவதற்கு முன் தன்னை ஒரு ஹிஜாப்பால் மூடிக்கொள்வது மற்றும் கணவன் அல்லது மகன் அல்லது தந்தை என முறையான உறவுள்ள ஆண்மகனுடன் மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், அவர்களின் சுதந்திரம் மற்றும் எதிர்காலம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ஆனால் இந்தப் பெண்களிடையே தாலிபன்களின் தோட்டாக்களைப் பற்றி கவலைப்படாத ஒரு குழுவும் இருக்கிறது, அவர்கள் அடிக்கு அஞ்சவில்லை. தங்கள் குடும்பங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்தப் பெண்கள் எல்லா கட்டுப்பாடுகளையும் அமைதியாகத் தாங்கத் தயாராக இல்லை.

ஃபராஹ் முஸ்தஃப்வி

ஃபராஹ் முஸ்தஃப்வி

பட மூலாதாரம், Farah Mustafawi

29 வயதான ஃபராஹ் முஸ்தஃப்வி, இரண்டு குழந்தைகளின் தாய்.

தாலிபன்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஃபராஹ் முஸ்தஃப்வி, 17 வயதிலிருந்தே மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டு வருகிறார்.

ஆப்கானிஸ்தான் பெண்களால் தாலிபன்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட #DoNotTouchMyClothes என்ற இயக்கத்தின் மூலம், அவர்

“கடந்த 21 ஆண்டுகளில் நாங்கள் சம்பாதித்து வைத்த அனைத்தையும், ஒரு மணி நேரத்தில் தாலிபன்கள் அழித்தனர்,” என்று கூறுகிறார்.

பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, தாலிபன்கள் வந்து ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கேட்பதாகவும் அதற்குப் பெண்கள் தர்க்கரீதியான பதிலை உறுதியாகக் கூறுவதாகவும் ஃபராஹ் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

“நாங்கள் அவர்களிடம் பேசி, முஹம்மது நபியின் மனைவியான கதீஜாவே வணிகத்தில் சிறந்தவராக விளங்கினார் என்றும் அது அவரே தேர்ந்தெடுத்த தொழில் என்றும் அது போல், இது எங்கள் மனித உரிமை பற்றியது என்றும் தர்க்க ரீதியாக நாங்கள் பதிலளிக்கிறோம்” என்று கூறுகிறார் அவர்.

தாலிபன்களிடம் வாதிடும் பெண்கள்.

பட மூலாதாரம், Farah Mustafawi

தாலிபன்களை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் செய்திகளுக்கு மத்தியில் இந்தப் பெண்கள் பயப்படவில்லையா?

தாலிபன்களிடம் அச்சமில்லையா?

இதைக் கேட்டு உரக்கச் சிரித்த ஃபராஹ், “நானும் என் தோழி ஜோலியாவும் இங்கிருந்து எங்கும் போவதாக இல்லை. நீங்கள் அவர்களை இப்படி எதிர்த்தால் அவர்கள் உங்களைக் கொன்று விடுவார்கள் என்று எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் பயப்படுகிறார்கள், ஆனால் நான் பயப்படவில்லை.” என்று உறுதியாகக் கூறுகிறார்.

மேலும் அவர், “இது என் நாடு, இங்கே என் வீடு இருக்கிறது, எனக்கும் நாட்டை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு கிடைத்தது, ஆனால் நான் இங்கிருந்து எங்கும் செல்லமாட்டேன்.” என்கிறார்.

அமெரிக்கா துருப்புக்களைத் திரும்பப் பெற்றது குறித்து ஃபராஹ் மிகவும் கோபமாக இருக்கிறார். “நாங்கள் ஒரு இருண்ட நூற்றாண்டிலிருந்து வெளியே வந்தோம், அங்கு சிவில் சமூகம் இருந்தது, பெண்கள் வேலை செய்ய முடிந்தது, ஜிம்கள், முடித் திருத்தகம்கள், பார்லர்கள், கஃபேக்கள் இருந்தன. நாங்கள் நள்ளிரவில் எங்கும் சென்று வர முடிந்தது. ஆனால் இப்போது ஒரு சில கஃபேக்கள் மட்டுமே திறந்திருக்கின்றன.

அவர் தொடர்கிறார், “தாலிபன்களின் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று நாங்கள் கோருகிறோம். அஷ்ரப் கனி மற்றும் ஹமீத் கர்சாய் ஆகியோரின் அரசாங்கங்கள் திரும்ப வருவதற்கு நாங்கள் போராடவில்லை. ஏனென்றால் அந்த ஆட்சிகளிலும் ஊழல், குடும்ப அரசியல், சாதிக் கொடுமைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே அதிகாரத்தில் பங்கு என்று அனைத்தும் இருந்தன.”

தாலிபன்கள் அதிகாரத்தில் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி, அனைவரின் உரிமைகளையும் பாதுகாத்தால், ஊழலை அகற்றினால், நாங்கள் தாலிபன் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் தாலிபன்கள் இப்போது இருக்கும் நிலையில், இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் நிறுவனங்களும் ஆப்கானிஸ்தானின் மக்களுடனும் பெண்களுடனும் ஆதரவாக நிற்க வேண்டும். இது எங்கள் பிரச்சனை மட்டுமல்ல, தாலிபன்களின் தீவிரவாத சித்தாந்தம், மற்ற மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக நாடுகளுக்கும் சவாலாக உள்ளது.

போராட்டம் நடத்தும் பெண்கள்.

பட மூலாதாரம், EPA

தாலிபன் முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தது. பெண்கள் மீதான அவர்களது சிந்தனையால், பெண்கள், படிக்க, எழுத மற்றும் வேலை செய்ய சுதந்திரம் இல்லை. பெண்கள் இப்போது மீண்டும் அதே சகாப்தத்திற்கு திரும்ப பயப்படுகிறார்கள் என்பது இவரது வாதம்.

தர்க்ஷான் ஷாதான்

தர்க்ஷான் ஷாதானும் ஒரு மனித உரிமை ஆர்வலர். தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் பகுதிகளைக் கைப்பற்றியதிலிருந்து, பெண்களின் நிலை முற்றிலும் மாறிவிட்டது என்கிறார் இவர்.

தர்க்ஷான் ஷாதான்

பட மூலாதாரம், Dorukhshan Shadan

தாலிபன்கள் சமீபத்தில் தங்கள் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தனர், ஆனால் அவர்களின் அமைச்சரவையில் தற்போது ஒரு பெண் கூட இல்லை. “இது என்ன வகையான அரசாங்கம்? முன்பு பெண்கள் விவகாரங்களுக்கு என்று ஒரு அமைச்சகம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. பெண்களின் எதிர்காலம் குறித்து நிலைமை தெளிவாக இல்லை.” என்று பொங்குகிறார் இவர்

“பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் கல்வி அல்லது சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பெண்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் என்றும் தாலிபன்கள் சொல்வதை நாங்கள் செய்திகளில் பார்த்தோம். ஆனால் வீட்டில் ஆண் உறுப்பினர் இல்லாத பெண்கள் வீட்டை எப்படிப் பராமரிக்க முடியும்? செலவுகளை எப்படி எதிர்கொள்ள முடியும்? ” என்பது இவரது கேள்வி

தாக்குதல்களில் பல பெண்கள் தங்கள் கணவர்கள், தந்தையர் அல்லது சகோதரர்களை இழந்துள்ளனர். அந்தப் பெண்கள் வேறு இடங்களில் நிறுவனங்களில் வேலை செய்து வந்தார்கள். ஆனால் இந்த தாலிபன் ஆணைக்குப் பிறகு அத்தகைய தனியான பெண்களின் நிலை என்னவாகும்? ஆனால் அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவார்கள்,” என்று கூறுகிறார்.

இந்த முறை தாலிபன்கள் ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த உரிமைகள் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லை.

ஷகேபா தம்கீன்

தேசியப் படையின் நிர்வாகத் துறையில் பணிபுரியும் ஷகேபா தம்கீன்,தாலிபன்களால் நாடு கைப்பற்றப்பட்ட பிறகு தனது வாழ்க்கையில் எண்பது சதவிகிதம் மாறிவிட்டதாக பிபிசியிடம் கூறுகிறார்.

ஷகேபா தம்கீன்

பட மூலாதாரம், Shakiba Tamkin

25 வயதான இவர், பதக்ஷான் மாகாணத்தில் இருந்து வேலைக்காக காபூலுக்கு வந்தார். அவர் வீட்டில் தாயும் இளைய சகோதர சகோதரிகளும் உள்ளனர்.

அவர் சிறிது பணத்தைச் சேமித்துத் தன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். ஆனால் இப்போது அவரே நிதி நெருக்கடியில் இருக்கிறார்.

ஷகேபா தம்கீன்

பட மூலாதாரம், Shakiba Tamkin

“முந்தைய அரசாங்கத்திடமிருந்து நான் இன்னும் சம்பளம் பெறவில்லை. வீட்டின் வாடகை கூட என்னால் செலுத்த முடியவில்லை. உணவு அல்லது துணி வாங்க பணம் இல்லை. காபூலில் ஒரு மாதம் தங்கி, நிலைமையை பார்த்து, நான் எனது மாகாணத்திற்குத் திரும்ப முடிவு செய்வேன்,” என்று வருந்துகிறார் இவர்.

ஜுலியா பார்சி

தகார் மாகாணத்தைச் சேர்ந்த ஜூலியா பார்சி, பள்ளிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

ஜுலியா பார்சி

பட மூலாதாரம், Zholia parsi

காலையில் ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கும் பிற்பகல் முதல் செமஸ்டர் மாணவர்களுக்கும் பாரசீக இலக்கியம் கற்பிக்கிறார்.

தாலிபன்களுக்கு அஞ்சி, குழந்தைகள் படிக்க வருவதில்லை என்று இவர் கூறுகிறார். 7 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும், பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் தாலிபன்கள் சட்டம் விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் அணியாததற்காக தாலிபன்கள், பெண்களை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர் என்றும் அதனால் பல பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகிறார்கள் என்றும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

கல்லூரியில் கூட, பெண்கள் ஹிஜாப் அணியவும், ஆண் மற்றும் பெண் குழந்தைகள் தனித்தனியாகப் படிக்கவும் கட்டளையிட்டுள்ளது தாலிபன்.

ஜூலியாவுக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் பல ஆண்டுகளாக வேலையில்லாமல் இருக்கிறார்.

அவருடைய மூத்த மகள் 12 வது வகுப்பிலும் இளையவள் 10 வது வகுப்பிலும் படிக்கிறார்கள். இப்போது அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. அவரது இளைய மகள் நான்காம் வகுப்பு படிக்கிறாள்.

“அந்தச் சின்னப் பெண்ணிற்கு எப்படி ஹிஜாப் அணிவிக்க முடியும்? நான் அவளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. என் குழந்தைகள் தாலிபன்களால் பயந்து அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் ஒரு மாதமாக வீட்டில் இருக்கிறார்கள்,” என்கிறார் ஜூலியா.

தனது கல்லூரியில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாகப் பாதையே அமைக்கப்பட்டிருப்பதாக இவர் கூறுகிறார். அறையில் சுவர் போல் திரை நிறுவப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பிறகு தான் மாணவிகள் வகுப்பில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.

சமீபத்திய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு அல்லது யுனெஸ்கோவின் அறிக்கை ஒன்று, தாலிபன் கட்டுப்பாடு முடிவடைந்த பிறகு கடந்த 17 ஆண்டுகளில், தொடக்கப் பள்ளிகளில் பெண்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்திலிருந்து சுமார் 25 லட்சமாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கிறது.

போராட்டம் நடத்திய பெண்கள்.

பட மூலாதாரம், Farah Mustafawi

ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை மீண்டும் குறைவதாகத் தோன்றுகிறது.

நாட்டில் பல்கலைக்கழகங்கள் பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்டு புதிய ஆடை குறியீடு அமல்படுத்தப்படும் என்று தாலிபன் கூறுகிறது.

ஹிஜாப் அணிந்த மானவிகள்.

பட மூலாதாரம், EPA

உயர் கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி பெண்கள் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் ஆண்களுடன் இணைந்து படிக்க அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்ஸா பதக்ஷான்

27 வயதான ஹம்சா பதக்ஷான், முந்தைய அரசாங்கத்தில் திட்டமிடல் மற்றும் கொள்கைத் துறையில் பணியாற்றினார்.

ஹம்ஸா பத்க்ஷான்

பட மூலாதாரம், Hamasa Badakhsh

அவர், “தாலிபன்கள் வந்த பிறகு என் அலுவலகத்திற்குச் சென்ற முதல் பெண் நான். ஆனால் நான் அங்கு சென்றபோது, என்னை வெளியேறச் சொன்னார்கள். மேலும், இங்கு எங்கள் ஊழியர்கள் இருக்கிறார்கள், எதிர்காலத்திற்கான திட்டங்களையும் கொள்கைகளையும் நாங்கள் வகுப்போம் என்று என்னிடம் கூறினார்கள்.” என்று கூறுகிறார்.

மேலும், “எங்கள் துறையிலும் முல்லாக்கள் மற்றும் மதகுருமார்கள் இருந்தனர், ஆனால் பாலினம் குறித்த கவனம் கொள்ளப்பட்டது. தாலிபன்கள் என்ன உத்தியை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால்

நாங்கள் முன்னெடுத்த பல திட்டங்கள் இப்போது வீணாகிவிட்டன” என்று கூறுகிறார்.

தாலிபன் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு எடுத்த புகைப்படம்.

பட மூலாதாரம், Zholia parsi

“புதிய தாலிபன் அரசாங்கத்திடம் எனக்கு நம்பிக்கை இல்லை, எங்கள் எதிர்காலம் இருள் நிறைந்ததாக இருக்கிறது என்று தான் சொல்ல முடியும்,” என்று அவர் கூறுகிறார்.

ஹம்சா தனது தந்தை கல்வித்துறையில் பணிபுரிந்து வந்ததாகவும், தாலிபன்கள்தான் அவரைக் கொன்றதாகவும் கூறுகிறார். அவர் வீட்டில் ஒரு தாயும் ஐந்து இளம் வயது சகோதர சகோதரிகளும் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »