Press "Enter" to skip to content

வடகொரிய ஏவுகணைகளைக் கண்டு பிற நாடுகள் கவலைப்படுவது ஏன்? பாலிஸ்டிக் ஏவுகணை, க்ரூஸ் ஏவுகணை வேறுபாடு என்ன?

பட மூலாதாரம், KCNA

இந்த வார தொடக்கத்தில், ஜப்பானின் பெரும் நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர க்ரூஸ் (Cruise) எனப்படும் சீர்வேக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்தது வட கொரியா.

இந்த ஏவுகணைகள் புவியீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பரவளையப் பாதையில் மட்டுமே இயங்கும் பாலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைகளைப் போல் அல்லாமல், வளைந்து நெளிந்து, திரும்பிச் சென்று எதிர்பாராத கோணத்தில் தாக்க வல்லவை.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பலதரப்பட்ட, நவீன வழிமுறைகளை வடகொரியா பெற்று வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

கொரோனா பெருந் தொற்று, இயற்கைப் பேரிடர், பஞ்சம் போன்றவை அந்த நாட்டின் அணுசக்தி, ஆயுதத் தேடலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

சமீபத்திய வடகொரியாவின் வெற்றிகரமான அடுத்தடுத்த ஏவுகணைச் சோதனைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. வடகொரியா இப்போது ஏன் இதைச் செய்து கொண்டிருக்கிறது? இதன் முக்கியத்துவம் என்ன? வடகொரியா எதற்கு முன்னுரிமை அளிக்கிறது என்பது பற்றி என்ன தெரிய வருகிறது?

வடகொரியா எதையும் மாற்றிக் கொள்ளவில்லை

வடகொரியா அதன் அணு ஆயுதத் திறன்களை தரம் மிக்கதாகவும் அதே நேரத்தில் எண்ணிக்கையில் அதிகரிக்கும் வகையிலான ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

2019-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தொடர்ச்சியாக அணு சக்தித் திட்டங்களில் தீவிரமாக முதலீடு செய்து, பாதுகாப்பு உத்திகளில் “தன்னிறைவு” பெறுவதில் உறுதியாக இருக்கிறார்.

பொருளாதார நெருக்கடியும், உணவுப் பஞ்சமும் இருக்கும் சூழலில் இப்படியொரு பாதையை வடகொரியா ஏன் தேர்வு செய்திருக்கிறது?

இது பல முனைக் கேள்வி.

ட்ரம்ப்

பட மூலாதாரம், AFP

பாதுகாப்பில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற கிம் ஜோங் உன்னின் முனைப்பை பெருக்கிக் காட்டுவதற்கு இது பயன்படும்.

நடைமுறையில் க்ரூஸ் ஏவுகணைகள் போன்ற புதிய ஆயுதத் திறன்களால் எதிரிகளின் திட்டமிடல் மேலும் சிக்கலாகிறது. அவர்கள் புதிய ஆயுதங்களுடன் போட்டியிட வேண்டும்.

க்ரூஸ் ஏவுகணைகள் தாழ்வாகவும் குறைந்த வேகத்திலும் பறந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. இவற்றை கட்டுப்படுத்தி வழிநடத்த முடியும்.

வடகொரியா சமீபத்தில் சோதனை செய்த க்ரூஸ் ஏவுகணைகள் இரண்டு மணி நேரத்தில் சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து சென்றன.

இந்தத் தொலைவை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சில நிமிடங்களில் அடைந்து விடும். ஆனால் தங்களது ஏவுகணைகளை எதிரிகள் கண்டறிந்து விடக் கூடாது, இடைமறித்துத் தடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே க்ரூஸ் ரக ஏவுகணைகளுக்கு வடகொரியா முக்கியத்துவம் அளித்திருக்கலாம்.

கிம்

பட மூலாதாரம், Reuters

நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார, உணவுச் சவால்களை எதிர்த்துப் போராடுவது கிம் ஜோங் உன் வெளிப்படையாகக் கூறி வந்தாலும், அணு ஆயுதத் திறன்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.

வடகொரியா எந்தப் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் மாற்றம் ஏற்படாவிட்டால், அல்லது அந்த நாடு தொடர்பான ராஜதந்திர முயற்சிகளில் அமெரிக்கா வெற்றி பெறாவிட்டால், இதுபோன்ற ஆயுதப் பெருக்க நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து காணவேண்டியிருக்கும்.

ஆயினும் தன்னுடைய புதிய ஆயுதத் தொழில்நுட்பத் திறனை உலகுக்கு காட்ட இந்த காலகட்டத்தை வடகொரியா தேர்வு செய்தது ஏன்?

ஜோ பைடன் நிர்வாகத்தின் கொள்கை மாற்றங்கள், செப்டம்பர் 11 தாக்குதலின் இருபதாம் ஆண்டு நினைவு ஆகியவை ஆகியவற்றை ஒட்டி இந்தச் சோதனைகள் நடந்திருந்தாலும், அவற்றுக்கு பெரிய தொடர்பு இல்லை என்றே தோன்றுகிறது.

அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன்கள்

புதிய ஏவுகணைகளை “பாதுகாப்பு உத்திசார்ந்தவை” என்று வடகொரிய ஊடகங்கள் கூறியிருப்பது, ஜப்பான், வடகொரியா மற்றும் உலக நாடுகளைக் கவலையடையச் செய்திருக்கிறது.

ஏவுகணைகளில் அணுகுண்டுகளைப் பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதே இதன் வழக்கமான பொருள்.

இதற்கு முன்பு வடகொரியாவிடம் இருந்த எந்த க்ரூஸ் ரக ஏவுகணையும் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை அல்ல. இருப்பினும் இப்படியொரு ஏவுகணை தயாரிக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

கடந்த ஜனவரி மாதத்திலேயே க்ரூஸ் ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வருவதாக அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்திருந்தார். வருங்காலத்தில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் பணியை இவை செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த ஏவுகணைகளைப் பற்றி வேறு என்ன தெரியும்?

அணு உலை

க்ரூஸ் ஏவுகணைகளும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் செயல்பாட்டு அளவில் வெவ்வேறானவை.

பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளைப் பரிசோதிக்க ஐக்கிய நாடுகள் சபை வடகொரியாவுக்குத் தடை விதித்திருக்கிறது. ஆனால் க்ரூஸ் ரக ஏவுகணைகளுக்கு இந்தத் தடை இல்லை.

பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மிக நீண்ட தொலைவுக்கு, அதிக எடை கொண்ட வெடிபொருள்களை மிக வேகமாக எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை என்பதே இதற்குக் காரணம்.

ஆனால் க்ரூஸ் ஏவுகணைகள் வேறு விதமான திறன்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றை இடைமறித்துத் தாக்குதவது கடினம். மிகத் தாழ்வாகப் பறந்து, கண்காணிப்பில் சிக்காமல், பாதைகளில் திரும்பி, எதிர்பாராத திசையில் இருந்து இலக்கைத் தாக்கும்.

அடிப்படையில் க்ரூஸ் தொழில்நுட்பம் என்பது வடகொரியாவுக்குப் புதிதல்ல. சோவியத் ஒன்றியத்தில் இருந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு கப்பலை அழிக்கும் க்ரூஸ் ஏவுகணைகளை வடகொரியா பல ஆண்டுகளுக்கு முன்பே பரிசோதனை செய்திருக்கிறது.

ஆனால் தற்போது பரிசோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள் அவற்றை விட நெடுந்தொலைவு செல்லக்கூடியவை.

வடகொரியா ப்ளூட்டோனியம் உற்பத்தி செய்யத் தொடங்கியிருப்பதைக் குறிக்கும் வகையில் தன்னுடைய அணு உலைகளை இயக்கியிருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமையின் சமீபத்திய மதிப்பீடு கூறுகிறது.

க்ரூஸ் ஏவுகணைகள் சோதிக்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளும் சோதிக்கப்பட்டிருப்பதால், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணைத் தயாரிப்பு, பரிசோதனை ஆகியவற்றைத் தொடங்கியிருப்பது தெரிய வருகிறது.

(அங்கித் பாண்டா, சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் அணுசக்தி கொள்கை திட்டத்தில் மூத்த உறுப்பினர்)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »