Press "Enter" to skip to content

லேடி ட்ரியூ – 3ம் நூற்றாண்டில் சீனர்களை விரட்டியடித்த வியட்நாமிய பெண் கிளர்ச்சியாளர்

பட மூலாதாரம், American Museum of Natural History

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பதினான்காம் கட்டுரை இது)

லேடி ட்ரியூ வியட்நாமின் ச்சியெளசோ (தற்போதைய தன்ஹோ மாகாணம்) துணை மாகாண நகரில் உள்ள ச்சியூஸென் பகுதியில் இருக்கும் யென் பின் மாவட்டத்தில் கிறிஸ்துவுக்குப் பிறகு 226-248 ஆண்டுகளில் வாழ்ந்தவராக அறியப்படுகிறார்.

இவரது இயற்பெயர் வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படவில்லை. ஆனாலும் மூன்றாம் நூற்றாண்டில் சீனாவின் கிழக்குப் பகுதியை ஆண்ட ‘வூ’ வம்சத்தை சேர்ந்த சன் குவான் படைகள், ச்சியெளசோவை கைப்பற்ற வந்தபோது, அந்த படையினரை விரட்டியடித்ததுடன் சுமார் ஒரு மாத காலத்துக்கு சீன படையினருடன் போரிட்டு தமது வீரத்தை நிரூபித்ததாக பல வியட்நாமிய வரலாற்றுக்குறிப்புகளில் காண முடிகிறது.

அது கி.பி 226ஆம் ஆண்டு. வியட்நாம் சீனாவின் வூ வம்ச ஆளுகையின் கீழ் இருந்தது. வியட்நாமின் ஒவ்வொரு மாகாணத்தையும் ஆக்கிரமித்து தமது ராஜ்ஜியத்தை வூ வம்சம் பெருக்கி வந்தது. அப்படித்தான் ச்சியெளசோவை ஆக்கிரமிக்க தமது படையினர் சுமார் 2,000 பேரை வூ அனுப்பினார்.

அந்த பகுதி நூறாண்டுகளுக்கு முன்பு ஹான் வம்சத்தைச் சேர்ந்த பேரரசின்கீழ் இருந்தது. அதில் ஷி ஸீயின் தந்தை நிர்வாகியாக இருந்தார். ஷீ ஸீ ஆளுகையில், அங்கு வாழ்ந்த மக்களில் பலர் பெளத்த மதத்தைத் தழுவினர்.

அந்த காலத்தில் அப்பகுதியில் செல்வச்செழிப்பு மிக்க குடும்பங்களில் ஒன்றாக ஷி ஸீயின் குடும்பம் விளங்கியது. அந்த ஷீ ஸீயின் குடும்பத்தை அழிக்கவே தமது துருப்புகளை வூ பேரரசு அனுப்பியது.

அதன்படியே அந்த நகருக்குள் நுழைந்த வூ படையினர், ஷி ஹு வம்சத்தினரை சிறைப்பிடித்து தலையைத் துண்டித்தது. அந்த நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

நகரங்களின் ஆக்கிரமிப்பு முடிந்தவுடன் ச்சியெளஸீ மாகாணத்தை ச்சியெளசோ மற்றும் குவாங்செள என இரண்டாக பிரித்தது சன் குவான் நிர்வாகம். இதில் 248இல் ச்சியெளஸீ மற்றும் ச்சியூஸென் பகுதி மக்கள் சீன வூ படையினருக்கு எதிராகத் திரும்பினர்.

அப்போது ச்சியூஸென் மாவட்ட கிளர்ச்சிக்குழுவை வழிநடத்தியவர்தான் இந்த லேடி ட்ரியூ. அவரது தலைமையில் சுமார் ஐம்பதாயிரம் குடும்பங்கள் ஒரே அணியாக திரண்டன. இந்த ஆள் பலம் பெரும் படைக்கு நிகரான தோற்றமாக இருந்ததால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடவடிக்கையை தொடங்கியது வூ பேரரசு.

வியட்நாமின் இந்த பகுதிகளை சீன படையினர் கைப்பற்றிய குறிப்புகள் சீன வரலாற்றாய்வு நூல்களில் உள்ளன. ஆனால், வியட்நாமிய வராலற்று நூல்களில் மட்டுமே லேடி ட்ரியூ பற்றிய குறிப்புகளை பார்க்க முடிந்தது.

லேடி ட்ரீயூ பற்றி குறிப்பு, 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவ அறிஞர் லி டாக் நூலில் உள்ளது. அதில், ஒன்பது அடி உயரமும் நீள மார்பகங்களையும் கொண்ட பெண், யானை மீது ஏறி போரிட்டாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

வியட்நாமிய அரசியல் வரலாறு குறித்து ஆய்வு செய்த கே.டபிள்யூ டேலர், காட்டுமிராண்டித்தனமாக தங்களை எதிர்த்த பெண்ணை சீன படையினர் வெகுசீக்கிரமே அழித்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

ஆனால், அவரது கருத்துடன் உடன்படாத நவீன கால வரலாற்றாய்வாளர் கேத்ரின் சர்ச்மென், தேபிங் சகாப்தத்தில் ச்சியெளசோ பற்றி குறிப்பிடும்போது லேட் ட்ரியூ பற்றியும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

வியட்நாம் பற்றிய சுருக்கமான வரலாறு என்ற பெயரில் 20ஆம் நூற்றாண்டு வியட்நாமிய வரலாற்றாய்வாளர் டிரான் ட்ரோங் கிம் எழுதிய நூலில், நாங் காங் மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த லேடி ட்ரியூ, தனது சகோதரருடன் வாழ்ந்து வந்தார் என்று கூறியுள்ளார்.

தனது இருபதாவது வயதில் தன்னைக் கொடுமைப்படுத்தி வந்த தனது அண்ணியை கொலை செய்து விட்டு மலையில் போய் வசிக்கத் தொடங்கியதாக அந்த வரலாற்றாய்வாளர் குறிப்பிடுகிறார்.

துணிச்சல் மிக்க அந்த பெண்ணுக்கு சீடர்களும் உருவாகினர். அவரை சமாதானப்படுத்த அவரது சகோதரர் முயன்றபோது, நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன். யாரும் அடிமையாக இருக்கவும் இனி விடமாட்டேன் என்று சூளுரைத்தார். அவரது மனம் மற்றும் உள்ள உறுதியைப் பார்த்த உள்ளூர் மக்கள், அவரது தலைமையில் அணி திரண்டனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.

அந்த காலகட்டத்தில் தங்களுடைய பகுதியை ஆட்சி செலுத்திய வூ வம்ச படையினரை லேடி ட்ரியூவின் படையினர் தாக்கத் தொடங்கினார்கள்.

தங்க நிற கயிற்றில் யானை மீது ஏறி வந்து போர் புரியும் கொடூர பெண் என்று வூ படையினர் அவரை அழைத்தனர். சராசரி பெண்களை விட பல மடங்கு உயரமாக இருந்த அவரது தோற்றம் வூ படையினருக்கு கலக்கத்தை கொடுத்ததாக பல வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

லேடி ட்ரியூ

பட மூலாதாரம், WIKICOMMON

சிலர் கற்பனையின் அதீத உச்சமாக ட்ரியூவின் மார்பகங்கள் 1.2 மீட்டர் நீளம் என்றும் அதை தமது தோளில் கட்டிக் கொண்டு அவர் போரிடுவார் என்றும் கூறியுள்ளனர்.

ட்ரியூவின் கிளர்ச்சிக்குழுவினர் இருந்த பகுதி காவல் அதிகாரி, அங்கிருந்த கிளர்ச்சிக்குழுவினரை தாக்கத் தொடங்கியபோது அந்த குழுவினரின் வேகத்துக்கு படையினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்கள்வரை இந்த மோதல் விட்டு,விட்டுத் தொடர்ந்தது. ஆனால், ஒவ்வொரு முறை பின்வாங்கியபோதும், வூ வம்ச நிர்வாகம், படை வீரர்களை கூடுதலாக அனுப்பியது. கடைசியில் ராணுவத்தை அனுப்பி வைத்தது வூ வம்சம். இதனால் போதிய பரிவாரங்களின் துணை இல்லாமல் ட்ரியூ வீழ்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து போயியென் என்ற பகுதிக்கு தப்பிச் சென்ற அவர், அங்கு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக வியடாநாமிய வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர் இறந்து போனாலும், தங்களின் காவல் தெய்வமாக ட்ரியூவை உள்ளூர் மக்கள் போற்றி வழிபட்டனர்.

வியட்நாமின் ஹனோயி, ஹோ ச்சி மின் உள்ளிட்ட நகரங்களில் ட்ரியூவின் வீரத்தை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயர், சில வீதிகளுக்கு சூட்டப்பட்டுள்ளன.தனோவா மாகாணத்தில் அவருக்காக ஒரு கோயிலும் எழுப்பப்பட்டிருக்கிறது.

வரலாற்றில் ஒரு சில ஆண்டுகளே வாழ்ந்து மறைந்திருந்தாலும், லேடி ட்ரியூவின் துணிச்சலுக்கு சில வரலாற்றாய்வாளர்கள் புனைக்கதைகளையும் எழுதி அவரது வாழ்க்கைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

நவீன காலத்தில், ட்ரியூவின் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் கிரியேட்டிவ் அசெம்பிளி என்ற விடியோகேம் தயாரிப்பு நிறுவனத்தின் டோட்டல் வார்: த்ரீ கிங்டம் என்ற விளையாட்டில் லேடி ட்ரியூவின் பெயரில் சில கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஃபிராக்ஸிஸ் கேம்ஸ் என்ற நிறுவனம், வியட்நாமிய நாகரிகத்தின் தலைவி என்று ட்ரியூவை அழைத்து பெருமைப்படுத்தியிருக்கிறது.

வியட்நாமிய வரலாற்றில் அதிகமாக காணப்படும் லேட் ட்ரியூ பற்றிய குறிப்புகள், தொல்லியல் மற்றும் வரலாற்றுக்குறிப்புகளுக்கு பேர் போன சீன காப்பியங்களிலோ புராண படைப்புகளிலோ கிடைக்கப்பெறவில்லை. அதற்கு காரணம், ஆணாதிக்கம் நிறைந்ததாக அறியப்படும் சீன வரலாற்றில் பெண்களின் துணிச்சல் அவ்வளவாக அங்கீகரிக்கப்படவில்லை என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

லேடி ட்ரியூ தனது கிளர்ச்சிக்குழுவை கு-ஃபோங் மாவட்டத்திலிருந்து வடக்கே சீனர்களுக்கு எதிரான நடவடிக்கைக்காக அழைத்துச் சென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், முப்பதுக்கும் மேற்பட்ட போர்களில் வூ வம்ச படைகளை அவர் தோற்கடித்தார்.

வியட்நாமில் ஒரு கடுமையான கிளர்ச்சி வெடித்தது என்ற உண்மை இந்த காலத்திலிருந்தே தோன்றியதாக சீன வரலாற்று நூல்கள் பதிவு செய்கின்றன, ஆனால் அது ஒரு பெண்ணால் விளைந்தது என்பதை அந்த நூல்கள் குறிப்பிடவில்லை. அது பெண்களின் தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட கன்ஃபியூசிய நம்பிக்கைகளை சீனா கடைப்பிடித்த காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது

மேலும், சீன பேரரசு மற்றும் படைகளை எதிர்த்து ஒரு பெண் போரிட்டாள் என்று எதிர்கால தலைமுறை அறியக்கூடாது என்பதற்காக உள்நோக்கத்துடன் எங்கெல்லாம் ட்ரியூ பற்றிய குறிப்புகள் வர வேண்டுமோ அங்கெல்லாம் அந்த சுவடுகளை அக்கால சீன வரலாற்றாய்வாளர்கள் தவிர்த்து விட்டதாக வியட்நாமிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மொத்தத்தில் சீனாவில் ஏகாதிபத்திய ஆளுமைகளுக்கு எதிராக கிளர்ச்சிக்குழுவை உருவாக்கிய முதல் பெண் ஆக லேடி ட்ரியூ அறியப்படுகிறார். ஆனால், இவருக்கு முன்பே கி.பி 40களில் ட்ரங் சகோதரிகள் சீன ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போரிட்டு சீன படையினரை கதி கலங்கச் செய்த நிகழ்வுகளையும் வியட்நாமிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »