Press "Enter" to skip to content

கோவிட் எங்கிருந்து வந்தது? விடை தெரியாமல் தவிப்பதால், காட்டுயிர்களுக்கு மீண்டும் ஆபத்து

  • நவின் சிங் கட்கா
  • சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், WWF Greater Mekong

கோவிட் தொற்று எங்கிருந்து வந்தது என்பதை உறுதியாக கண்டறியாத நிலையில் தென் கிழக்கு ஆசியாவின் சந்தைகளில் வன உயிர்கள் மீண்டும் விற்கப்படும் நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக காட்டுயிர் பாதுகாவலர்கள், விசாரணையாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

2019 கொரோனா பரவலுக்குப் பிறகு பாரம்பரியமாக வன உயிர்களை உண்டவர்கள் அதில் தயக்கம் காட்டினர் ஆனால் தற்போது சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் அதை வாங்குபவர்களிடம் தயக்கம் குறைந்துள்ளது.

“கொரோனா தொற்று வன உயிர்களிடத்திலிருந்துதான் பரவியிருக்க கூடும் என்ற கூற்றை அனைவரும் மறக்க தொடங்கியுள்ளனர். அதுகுறித்து இனி யாரும் பெரிதாக பேச மாட்டார்கள். இது வன உயிரிகளுக்கு ஆபத்தே” என்கிறார் தென் கிழக்கு ஆசியாவின் உலக காட்டுயிர் நிதியத்தின் பிராந்திய வன உயிர் வர்த்தக திட்டத்தின் மேலாளர் டவீகன்.

மீட்கப்பட்ட சிறுத்தை

பட மூலாதாரம், Getty Images

“ஒரு பக்கம் வன உயிர்களிடத்திலிருந்துதான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தோன்றியது என்ற அச்சம் குறைந்து விட்டது. மறுபுறம் பெருந்தொற்று காலத்திலும் காட்டுயிரின சந்தைகள் இயங்கி கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

சட்ட விரோதமான காட்டுயிரின வர்த்தகம் குறித்து புலனாய்வு மேற்கொள்ளும் டிராஃபிக் என்ற அமைப்பின் நிபுணர்கள் இதே செய்தியைதான் கூறுகின்றனர்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வன உயிர்களிடத்திலிருந்துதான் பரவியது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லாததால் அதை உண்பது குறித்து மக்கள் கவலை கொள்வதில்லை என்கிறார் வியட்நாமில் உள்ள டிராஃபிக் அமைப்பை சேர்ந்த பு துய் ந்கா

கொரோனா தொற்று இருப்பிடம் குறித்த உறுதியற்ற செய்திகள் மற்றும் வாடிக்கையாளர்களின் செயல்பாடு என இரண்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆய்வும் இல்லை.

அமெரிக்க உளவு சேவைகள் இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இயல்பாக விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியதா அல்லது ஆய்வகத்திலிருந்து கசிந்துவிட்டதா என்ற முடிவுக்கு வரவில்லை.

இதுகுறித்து ஒரு முடிவை எட்டுவதற்கு பல வருடகால ஆய்வு தேவைப்படும் என பல விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பறக்கும் அணில்

பட மூலாதாரம், WWF Greater Mekong

இதற்கிடையில் செயற்பாட்டாளர்களும், விசாரணையாளர்களும், சட்ட ரீதியான வன உயிர் பொருட்கள் உட்பட பல பொருட்கள் பெருந்தொற்று காலத்திலும் சந்தைகளில் தொடர்ந்து விற்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

“செப்டம்பர் 9ஆம் தேதியன்று, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு அருகில் ஒரு வாகனத்தில் 50 காண்டாமிருக கொம்புகள், மற்றும் துண்டுகளை மலேசிய அதிகாரிகள் கைப்பற்றி இருவரை கைது செய்தனர். 2018ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவில் வன உயிர் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை” என ட்ராஃபிக் அமைப்பு தெரிவித்துள்ளது.

எத்தனை வகையான காட்டு உயிரினங்களை உண்ணுகின்றனர் என்ற தகவல் இல்லையென்றபோதிலும், பெருந்தொற்று காலத்திலும் காட்டுயிர்கள் மற்றும் அதன் உறுப்புகள் கடத்தப்படுவது நிற்கவில்லை என்கிறார் ட்ராஃபிக் அமைப்பின் மூத்த தகவல் தொடர்பு அதிகாரி எலிசபெத் ஜான்.

காட்டுயிரினங்கள் தொடர்பான பொருட்களில் தள்ளுபடி

சீனா, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளின் எல்லைகளுக்கு இடையில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் சட்ட விரோத மற்றும் சட்ட ரீதியிலான காட்டு உயிரினங்கள் தொடர்பான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

பல வருடங்களாக இந்த நாடுகள்தான் சட்ட விரோத காட்டுயிர் வர்த்தகத்துக்கான முக்கிய மையங்களாக உள்ளன.

புலிகள்

பட மூலாதாரம், Vietnam Police

“தாங்கள் சேர்த்து வைத்துள்ள பொருட்களை விற்க விரும்பிய சில கடத்தல்காரர்கள் தாங்கள் வைத்திருக்கும் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கவும் விருப்பம் தெரிவித்தனர்.” என வன உயிர் நீதி ஆணையம் என்ற சர்வதேச அரசு சாரா அமைப்பு 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது வன உயிர்கள் தொடர்பான குற்றங்களை கண்காணித்து வருகிறது.

அதேபோன்று தென் கிழக்கு ஆசிய பகுதிகளில் இந்த வருடமும் பல கட்டுப்பாடுகள் இருப்பதால் தொடர்ந்து வன உயிர் தொடர்பான பொருட்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்படுவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வன உயிர் நீதி ஆணைய அமைப்பின் உளவு சேவையால் நைஜீரியாவில் 7000 கிலோவுக்கு அதிகமான எரும்பு திண்ணி செதில்கள் மற்றும் 900 கிலோ தந்தம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அது லாகோஸிலிருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கு கடந்த ஜூலை மாதம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

Thai authorities taking DNA sample from a tiger in a tiger park in Thailand last March

பட மூலாதாரம், Department of National Parks, Thailand

2019 மற்றும் 2020 கால கட்டங்களில் கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சுமார் 1000 இடங்களில் 78 ஆயிரத்துக்கும் அதிகமான சட்டவிரோத காட்டுயிரின உடற் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டதாக ட்ராஃபிக் அமைப்பின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

கரடிகள், புலிகள், எரும்புத் திண்ணிகள், இருவாய்ச்சி பறவைகள், செரோவ் என அழைக்கப்படும் ஆடு ஆகியவற்றின் உடலுறுப்புகள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கண்டதாகவும் ஆனால் யானைகளின் தந்தங்கள்தான் அதிகப்படியாக கடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது

வியட்நாமில் சட்டவிரோத புலி வணிகம்

வியட்நாமில் குடியிருப்பு பகுதி ஒன்றில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 17 புலிகளை கடந்த மாதம் வியட்நாம் போலிசார் கைப்பற்றினர்.

அதற்கு சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் வாகனம் ஒன்றில் கடத்தி வரப்பட்ட ஏழு புலிக் குட்டிகளை கைப்பற்றினர்.

பெருந்தொற்று காலத்திலும் வன உயிர் வர்த்தகம் நடைபெற்றதற்கு இது ஒரு சாட்சி என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்லி இனம்

பட மூலாதாரம், WWF Greater Mekong

இந்த கைப்பற்றுதல் நடவடிக்கையால் கடத்தல்காரர்கள் தாங்கள் அடைத்து வைத்துள்ள கரடி மற்றும் புலிகளை கொல்ல நேரிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர். அவற்றைக் கொன்று உள்ளூரிலேயே விற்க முயற்சிப்பார்கள் என்பது செயற்பாட்டாளர்களின் அச்சம்.

பெருந்தொற்றுக்கு முன் அவர்கள் எல்லைத்தாண்டி விலங்குகளை கடத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அது முடியாத காரணத்தால் உள்ளூரிலேயே விற்க முயற்சிப்பர் என வியட்நாமின் வன உயிர்களை பாதுகாப்போம் என்ற அமைப்பின் இயக்குநர் வான் தாய் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வன உயிர்களை உண்ணுபவர்கள் கோவிட் தொற்று குறித்து பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை என்கிறார் அவர்.

தாய்லாந்தின் கடத்தப்பட்ட புலிக் குட்டிகள்

மார்ச் மாதம் தாய்லாந்தில் உள்ள மக்டா புலிகள் பூங்காவில் உள்ள புலி குட்டிகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் அவை அங்கு பிறந்த குட்டிகள் இல்லை என்பது தெரியவந்தது.

அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் ஈன்ற குட்டிகள் அவை என்றனர் பூங்கா ஊழியர்கள். ஆனால் டிஎன்ஏ பரிசோதனையில் வேறு எங்கிருந்தோ அவை கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இங்கு சுமார் 1,500 புலிக்குட்டிகள் உள்ளன. சீன சுற்றுலாப் பயணிகள் மூலம்தான் இங்குள்ளவர்களுக்கு வருமானம். ஆனால் இப்போது அது தடைப்பட்டுள்ளது. எனவே இந்த புலிகள் சட்ட விரோத கட்த்தல்கார்ர்களிடம் சிக்கி விடுமோ என அச்சமாக உள்ளது என்கிறார் டவீகன்.

வன உயிரிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை

பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் வன உயிர்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தடை விதித்தன. அதேபோன்று பாரம்பரிய மருந்துகள் மற்றும் நகைகளில் இம்மாதிரியான விலங்குகளின் பொருட்களை பயன்படுத்துவதற்கு அங்கு அனுமதியுண்டு.

தொடக்க காலத்தில் வுஹானில் உள்ள வன உயிர் சந்தை ஒன்றிலிருந்துதான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தோன்றியது என கருதிய பிறகு பல வன உயிர்களை உண்ணும் பழக்கம் குறைந்தது.

தற்போது சீன அரசு, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சீனாவிலிருந்து பரவவில்லை என்று கூறுவதால் அதை ஏற்கும் மக்கள் வன உயிர்களுக்கும் வைரசுக்கும் தொடர்பு இருப்பதாகவே பேசுவதைவிட்டுவிட்டனர்.

தற்போது இருக்கும் தடையால் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போன்று வன உயிர்கள் மாமிசமோ அல்லது அது தொடர்பான பொருட்களோ அதிகம் பயன்படுத்தப்பட மாட்டாது. ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றும் சட்டவிரோத மற்றும் சட்ட ரீதியிலான வன உயிர் வர்த்தகம் நடந்து கொண்டுதான் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »