Press "Enter" to skip to content

காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி

  • ரஜ்னீஷ் குமார்.
  • பிபிசி ஹிந்தி

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீர் தொடர்பாக ஆக்கபூர்வமான செயல்பாட்டைக் காட்டுமாறு பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை (OIC) வியாழக்கிழமை வலியுறுத்தியது.

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் மக்கள் ஒடுக்கப்படுவதாகவும், ஓஐசி மற்றும் இஸ்லாமிய உலகத்தின் மீதே அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், நியூயார்க்கில் ஓஐசியின் தொடர்பு குழுவில் உரையாற்றிய போது, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்ததாக பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான ஏபிபி குறிப்பிடுகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட அனைத்து முக்கிய மன்றங்களிலும் காஷ்மீர் பிரச்சினையை ஓஐசி உறுப்பு நாடுகள் எழுப்ப வேண்டும் என்று குரேஷி கேட்டுக் கொண்டார். காஷ்மீரில் இந்தியா அத்துமீறல்கள் செய்வதாக குற்றம்சாட்டிய குரேஷி, காஷ்மீரில் போலி எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்)களில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதாகவும் கூறினார்.

காஷ்மீரில் அரசியல் கைதிகள் தொடர்பாகவும், பெல்லட் குண்டுகள் பயன்பாடு தொடர்பாகவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை சாடினார்.

OIC நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்த அதிர்ச்சி

உண்மையில், காஷ்மீர் விவகாரத்தில் ஓஐசியின் உறுப்பு நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்துள்ளது. ஐநா பொதுச் சபையில் ஓஐசி உறுப்பு நாடுகளால் காஷ்மீர் பிரச்சினை தீவிரமாக எழுப்பப்படும் என்று அது நம்பியது. ஆனால் செளதி அரேபியா மற்றும் இரான் இதை செய்யவில்லை.

துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் தனது உரையில் காஷ்மீர் பற்றி குறிப்பிட்டார் என்றாலும், இந்த முறை அவரது தொனி கடந்த ஆண்டை விட மென்மையாக இருந்தது. செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்லா அஸீஃஸ், புதன்கிழமையன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். ஆனால் காஷ்மீரின் பெயரைக் கூட அவர் குறிப்பிடவில்லை.

முன்னதாக இரானின் புதிய அதிபர் இப்ராஹிம் ரயீசி, செவ்வாய்க்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றினார், அவரும் காஷ்மீர் குறித்து எதுவும் சொல்லவில்லை.

இதற்குப் பிறகு, பாகிஸ்தானுக்குள்ளேயே கேள்விகள் எழத் தொடங்கின. இப்போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரே ஓஐசியிடம் இதைச் சொல்கிறார். இந்தியாவுக்கான பாகிஸ்தானின் தூதராக இருந்த அப்துல் பாசித், காஷ்மீர் மீதான செளதியின் புறக்கணிப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஐநா பொதுச் சபையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றி பேசினார் ஆனால் காஷ்மீர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று அப்துல் பாசித் சுட்டிக்காட்டினார்.

“பாகிஸ்தானுக்கும், செளதி அரேபியாவுக்கும் இடையேயான உறவு மிகவும் நன்றாக இருந்து வருகிறது. இம்ரான் கான் பிரதமரான பிறகு செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் பாகிஸ்தானுக்கு பயணமும் மேற்கொண்டார். செளதி உடனான நமது உறவு மிகவும் முக்கியமானது. சுமார் இருபது லட்சம் பாகிஸ்தானியர்கள் செளதி அரேபியாவில் வேலை செய்கிறார்கள். பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பில், அங்கு வேலை செய்பவர்கள் கணிசமான பங்களிப்பு உள்ளது,” என்று அப்துல் பாசித் தனது காணொளி வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் மீது செளதிக்கு அக்கறை இல்லையா?

“பல சமயங்களில் செளதி அரேபியா. பாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றியுள்ளது. ஆனால் ஐ.நா பொதுச்சபையில் செளதி அரேபியாவின் மன்னர் சல்மானின் உரைக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். அவர் தனது உரையில், ஹூதி பயங்கரவாதத்தைப் பற்றி பேசினார். சூடான் மற்றும் எகிப்து இடையேயான தண்ணீர் தகராறு பற்றியும் குறிப்பிட்டார். அவர் லிபியா மற்றும் சிரியா பற்றி பேசினார். செளதிக்கு தற்காப்பு உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார். அவர் ஆப்கானிஸ்தானையும் குறிப்பிட்டார். இரான் பற்றியும் பேசினார். அணு ஆயுதங்கள் பற்றி கவலை தெரிவித்தார்.”என்று பாசித் கூறினார்.

“செளதி மன்னர் எல்லா நல்ல விஷயங்களையும் சொன்னார். ஆனால் அவர் காஷ்மீரைப் பற்றி குறிப்பிடக்கூட இல்லை. OIC இன் தொடர்பு குழுவின் ஐந்து உறுப்பினர்களில் செளதி அரேபியாவும் ஒன்று. ஆனால் மன்னர் சல்மான் காஷ்மீர் பற்றி குறிப்பிடுவது பொருத்தமானது என்று கருதவில்லை. எங்கள் வெளியுறவு அமைச்சர் ஓஐசிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார் என்பதும் எனக்குத்தெரியும்.” என்று அப்துல் பாசித் குறிப்பிட்டார்.

“காஷ்மீரில் ஓஐசியின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் பாகிஸ்தான் ஒரு தனி மன்றத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். குரேஷியின் இந்த அறிக்கை செளதி அரேபியாவுக்கு பிடிக்கவில்லை. செளதியை சமாதானப்படுத்த பிரதமர் இம்ரான் கான் அங்கு சென்றார். கடந்த ஆண்டும் செளதி அரேபியா, காஷ்மீர் பற்றி பேசவில்லை.பாகிஸ்தானை மனதில் வைத்து காஷ்மீர் பற்றி அரசர் குறிப்பிடுவார் என்று தோன்றியது ஆனால் அது நடக்கவில்லை.”

செளதி அரசர் மற்றும் இந்திய பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுடனான செளதியின் உறவுகள் மிகவும் வலுவாக இருப்பதால் அரசர் சல்மான் காஷ்மீர் பற்றி குறிப்பிடவில்லை என்று அப்துல் பாசித் கருதுகிறார்.

“ஆனால் அப்படி இருக்கும்போதிலும், செளதியில் பாகிஸ்தான் வகிக்கும் பங்கை இந்தியாவால் எடுத்துக்கொள்ள முடியாது என்று நான் நம்புகிறேன். ஆனால் பாகிஸ்தானும் தவறு செய்கிறது என்று நான் நினைக்கிறேன். காஷ்மீர் தொடர்பான கொள்கையில் தொடர்ச்சி இல்லை. ஒருபுறம் மோதி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது காஷ்மீருக்கு நல்லது என்று நாம் கூறுகிறோம். ஆனால் அடுத்த ஆண்டே அவர் ஃபாசிசவாதி என்று அழைக்கத் தொடங்குகிறோம்,”என்று பாசித் குறிப்பிடுகிறார்.

“இதுபோன்ற அறிக்கைகளைப்பார்த்து, பாகிஸ்தானுக்கு என்னதான் வேண்டும் என்று நினைத்து உலகம் கேலி செய்கிறது. துருக்கியைத் தவிர வேறு யாரும் காஷ்மீர் பற்றி குறிப்பிடவில்லை. நாம் சிறிது சிந்திக்க வேண்டும். பேசுவதால் மட்டும் சுதந்திரம் கிடைத்துவிடாது. செளதி அரேபியா இதுபற்றிப்பேசாததன் பின்னணியில், இந்தியாவுடனான அதன் வளர்ந்துவரும் உறவுகள் உள்ளன. எங்கள் மீதும் தவறு உள்ளது. பாகிஸ்தான் ஆத்மபரிசோதனை செய்வது அவசியம்.”என்கிறார் அவர்.

துருக்கி அதிபர் எர்துவான்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள்

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் நடக்கும் தீவிர மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு ஆய்வு ஆவணத்தை பாகிஸ்தான் தயார் செய்துள்ளதாக OIC தொடர்பு குழுவில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

இந்த 131 பக்க ஆவணத்தில் பாதிக்கப்பட்ட 3,432 பேர் அனுபவித்த துன்பங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆவணத்தை அனைத்து உறுப்பினர்களுக்கும் விநியோகிக்க வேண்டும் என்று OIC யின் பொதுச் செயலரிடம் குரேஷி முறையிட்டார்.

“ஜம்மு காஷ்மீர் பிரச்சனை சரியான முறையில் தீர்க்கப்படும் வரை தெற்காசியாவில் அமைதியை எதிர்பார்க்க முடியாது. ஜம்மு -காஷ்மீரில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், மக்கள்தொகையை மாற்றுவதில் ஈடுபட்டுள்ளது. 42 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்று இந்த சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று குரேஷி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் சையது அலி ஷா கிலானியின் மரணத்தை மேற்கோள் காட்டிய குரேஷி, அவர் இறந்த பிறகும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டார் என்றார். கிலானி இந்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி காலமானார்.

“அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தபோதிலும், அவர் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. குடும்பத்தினர் தங்கள் மனதிற்கு ஏற்ப இறுதி சடங்கு செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.”என்றார் குரேஷி.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

பட மூலாதாரம், Getty Images

எர்துவானின் மென்மை. மகாதீரின் கைகளில் அதிகாரம் இல்லை

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எண்ணப்படி, துருக்கி அதிபர் எர்துவானும் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதும் சர்வதேச மன்றங்களில் பேசி வருகின்றனர்.

மகாதீர் முகமது இப்போது ஆட்சியில் இல்லை. காஷ்மீர் தொடர்பான எர்துவானி்ன் தொனியும் மென்மையாகிவிட்டது. பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பது பற்றி தனது உரையில் எர்துவான் பேசினார். ஆனால் அவர் 370 வது பிரிவு பற்றி எதுவும் சொல்லவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிக்கும் எந்த இஸ்லாமிய நாடும் இப்போது இஸ்லாமிய உலகில் இருப்பதுபோலத்தெரியவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக பாகிஸ்தான்-செளதி உறவுகளில் உள்ள ஏற்ற இறக்கங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. 2018 இல் இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றபோது, பாகிஸ்தானின் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டும், கடனை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமங்களை சமாளிக்கவும் செளதி அரேபியா மூன்று பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது. இதுமட்டுமல்லாமல், அதே மதிப்பிலான எண்ணெயையும் கடனாக வழங்குவதாக உறுதியளித்தது.

காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியபோது, பாகிஸ்தானுக்கு செளதி அரேபியாவின் ஆதரவு கிடைக்கவில்லை. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி புகார் கூறினார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக செளதி அரேபியா முஸ்லிம் நாடுகளின் கூட்டத்தை (OIC) கூட்டவில்லை என்று ஷா மெஹ்மூத் குரேஷி அந்த நாட்டை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து செளதி அரேபியா தான் அளித்த கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துமாறு பாகிஸ்தானிடம் கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »