Press "Enter" to skip to content

சீனாவின் புதிய சமூக சமத்துவக் கொள்கை பிற நாடுகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?

  • கரிஷ்மா வாஸ்வானி
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

ஏழைகள் – பணக்காரர்கள் இடைவெளியை குறைக்கும் தனது கொள்கைகள், பொருளாதார பாதையை வடிவமைக்கும் இந்த தருணத்தில் அவசியமான ஒன்று என சீனா தெரிவித்துள்ளது.

இந்த `பொது வளம்` திட்டம் நாட்டு மக்களை நோக்கிய திட்டம் என்றாலும், உலகின் பிற பகுதிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று.

அதாவது `பொது வளம்` என்பது பணக்காரர்களுக்கும் ஏழை மக்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்கும் ஒரு திட்டம்.

இதில் தெளிவாக தெரியும் ஒரு விளைவு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சீனா அளிக்கும் முன்னுரிமை உள்ளூர் சந்தைகளின் பக்கம் திரும்பும் என்பது.

சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப பெருநிறுவனமான அலிபாபா, இந்த பொது வளத் திட்ட செயல்பாடுகளுக்கென்று ஒரு தனி குழுவை அமைத்துள்ளது. இந்த பொதுவள திட்டத்திற்கு 15.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக ஒதுக்கியுள்ளது அலிபாபா நிறுவனம்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாங்கள் பயன் அடைந்ததாகவும், நாடும் பொருளாதாரமும் நன்றாக இருந்தால்தான் அலிபாபா நிறுவனமும் நன்றாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலிபாபா நிறுவனத்தின் போட்டி நிறுவனமான டென்சென்ட் இந்த திட்டத்திற்கு பங்களிக்க உறுதி அளித்துள்ளது. 7.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்த நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

விலையுயர் பொருட்களின் வியாபாரம் அடிவாங்கும்

பொதுவளம் என்பது சீனாவின் வளர்ந்து வரும் மத்திய தர வர்கத்தினரை இலக்கு வைப்பது. எனவே இந்த வாடிக்கையாளர்களை இலக்கு வைக்கும் சர்வதேச வர்த்தகங்களுக்கு இது ஒரு ஆதாயம்தான்.

“இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது நல்ல விஷயம்” என சீனாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சபையின் தலைவர் ஜோர்ஜ் வுட்கே தெரிவித்துள்ளார். நடுத்தர வர்க்கத்தினர் வளர்ந்தால் அது அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்கிறார் அவர்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும் அதிக பணம் புரளும் வர்த்தகங்கள் சரிவை காணலாம் என வுட்கே எச்சரிக்கிறார்.

“சர்வதேச அளவில் சீனர்கள் 50 சதவீத அளவில் விலையுயர்ந்த பொருட்களை வாங்குகின்றனர். பணக்கார சீனர்கள் சுவிஸ் கைகடிகாரங்கள், இத்தாலிய டைகள் மற்றும் ஐரோப்பிய சொகுசு கார்களை வாங்குவதை நிறுத்திவிட்டால் இந்த துறை பலத்த அடி வாங்கும்.” என்று எச்சரிக்கிறார் வுட்கே.

ஒரு சீனரின் சராசரி வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர், `பொதுவான வளம்` திட்டம் அதற்கான தீர்வை வழங்காது என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள பிரிட்டிஷ் வர்த்தக சபையின் ஸ்டீவன் லின்ச், இந்த பொது வள திட்டம் சீனாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் கடந்த 40 வருடங்களில் வளர்ச்சி அடைந்தது போல வளர்ச்சி அடைவர் என்பதற்கான எந்தவித உத்தரவாதத்தையும் வழங்கவில்லை என்று தெரிவிக்கிறார்.

“முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு சீன குடும்பம் மாதம் ஒரு முறை டம்பிளிங்கை (மோமோஸ்) உண்ண முடியும். இருபது வருடங்களுக்கு முன்பு வாரம் ஒரு முறை அதை அவர்கள் உண்ண முடியும். பத்து வருடங்களுக்கு முன்பு தினமும் உண்ணும் அளவிற்கு நிலைமை மாறியது. தற்போது அவர்கள் ஒரு தேரை வாங்க முடியும்” என்கிறார் அவர்.

அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற நிறுவன்ங்கள் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட உறுதியளித்துள்ளதை தவிர இதுவரை இந்த பொதுவள திட்டம் எந்தவித திடமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிறார் லின்ச்.

“அதேபோன்று திடீரென பல துறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது ஒரு உறுதியற்ற நிலையை உருவாக்கியுள்ளது. பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி நோக்கி அவர்கள் திரும்பினார்கள் என்றால் பிற நாடுகள் அவர்களுக்கு தேவையில்லையா?”

புதிய சோஷியலிசம்

இந்த பொதுவள திட்டம் என்பது சீன சமூகத்தை அதிக சமமான ஒன்றாக மாற்றுவது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் இதைதான் சொல்கிறது. எனவே சர்வதேச அளவில் சோஷியலிசம் என்ற கூற்றின் விளக்கத்தை இது மாற்றும் வல்லமை கொண்டது.

“சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது டாக்சி ஓட்டுநர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், டெலிவரி பணியில் இருப்பவர்களை நோக்கி செயல்படுகிறது.” என்கிறார் பெய்ஜிங்கில் உள்ள சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் வாங் ஹுயோ.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

“சில மேற்கத்திய நாடுகளில் இருப்பது போன்ற, உலகமயமாக்கல் மற்றும் தேசியவாத கொள்கைக்கு வித்திடும் ஒரு சமூகத்தை சீனா விரும்பவில்லை.”

சோஷியலிசம் என்னும் தத்துவத்தில் சீன அம்சத்தை பொறுத்தி வேறு ஒரு புதிய வடிவத்தில் உலகின் பிற நாடுகளுக்கு வழங்க சீனா விரும்பினால் அதற்கு இந்த பொதுவள திட்டம் சரியானது இல்லை என சீனாவை கண்காணிக்கும் பலர் தெரிவிக்கின்றனர்.

இந்து `பொதுவான வளம்` திட்டம் ஐரோப்பிய சமூக நல மாதிரியை ஒத்தது கிடையாது என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சீனா மையத்தின் ஜார்ஜ் மேக்னஸ் தெரிவித்துள்ளார்.

“அதிக வருமானம் மற்றும் காரணமற்ற வருமானங்கள் மீது அதிக வரி விதிக்கப்படும். அதேபோன்று தனியார் நிறுவனங்கள் கட்சியின் கொள்கைகளுக்காக அதிக நன்கொடைகள் வழங்க நேரிடும்” என்கிறார் மேக்னஸ்.

“ஆனால் முன்னேற்ற வகையிலான வரிவிதிப்பு நோக்கிய எந்த பெரிய முயற்சிகளும் இல்லை”

ஒரு கற்பனாவாத சமூகத்தை நோக்கி

சீன அரசு ஷி ஜின் பிங்கின் நிர்வாகத்தில் எவ்வாறு செயல்படும் என்பதை முடிவு செய்வதில் இந்த `பொதுவான வளம்` கொள்கை ஒரு முக்கிய பங்காற்றும் என தெரிகிறது.

இந்த பொது வளம் என்னும் திட்டத்தில் சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிறுவனங்கள் சமூகத்திற்கு பணம் கொடுக்க வேண்டும்.

இந்த பொது வள சீனாவில் கட்சியின் கையில் மேலும் அதிகாரம் வந்து சேரும். சீனா வெளிநாட்டு வர்த்தகங்களுக்கு கடினமான ஒரு நாடாகவே இருந்துள்ளது. இப்போது அது மேலும் கடினமாகியுள்ளது. அதாவது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டில் வணிகம் செய்வதை மேலும் கடினமாக்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »