Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் தவறான ட்ரோன் தாக்குதல்: இறந்தோர் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய முன்வரும் அமெரிக்கா

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஒரு மனிதாபிமான சேவைப் பணியாளர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது அமெரிக்கா.

சேவைப் பணியாளர் மற்றும் அவரது ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் (அதில் ஏழு பேர் குழந்தைகள்) என மொத்தம் 10 பேர் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அக்குடும்பத்தில் உயிர் பிழைத்திருப்பவர்களை, அமெரிக்காவில் குடியேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பென்டகன் கூறியுள்ளது.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு, சில தினங்களுக்கு முன்பு இந்த ட்ரோன் தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் திடீரென அதிகாரத்துக்கு வந்த பின், மக்களை வெளியேற்றும் பணிகள் அவசரகதியில் நடந்து வந்தன. அப்போது காபூல் விமான நிலையத்துக்கு அருகில் ஐ எஸ் – கே என்கிற கடும்போக்குவாதக் குழு ஒன்று தாக்குதல் நடத்தியது. அதையடுத்து அமெரிக்கப் படையினர் வெளியேறும் முன்னர் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறியிருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அந்த இரண்டாவது தாக்குதலை தடுக்கு முனைப்பில், இந்த உதவிப் பணியாளரை தீவிரவாதி என்று தவறாக நினைத்து தாக்குதல் நடத்தியது அமெரிக்கா.

ஆகஸ்ட் 29 அன்று அமெரிக்க உளவு அமைப்பு, அந்த உதவிப் பணியாளரின் தேரை எட்டு மணி நேரங்களாக பின் தொடர்ந்தது. அந்த உதவியாளருக்கும் ஐ எஸ் – கே அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்பட்டது என அமெரிக்காவின் மத்திய கமாண்ட் ஜெனரல் கென்னத் மெக்கன்ஸி கடந்த மாதம் கூறினார்.

தாலிபன்கள்

பட மூலாதாரம், Getty Images

புலன் விசாரணையில் அவரது கார், ஐ எஸ் கே அமைப்பினருடன் தொடர்புடைய வளாகம் ஒன்றில் காணப்பட்டதாக தெரிய வந்தது. அந்த காரின் போக்குவரத்து நடவடிக்கைகள், மற்ற புலனாய்வு அமைப்புகளின் விவரங்களோடு ஒத்துப்போயின.

ஒருகட்டத்தில், அக்காரில் வெடி மருந்துகள் ஏற்றப்படுவதாக ட்ரோன் ஒளிக்கருவி (கேமரா)வில் தோன்றியது. ஆனால் உண்மையில் அவ்வாகனத்தில் தண்ணீர் குடுவைகளே ஏற்றப்பட்டன. அந்த தாக்குதல் மிகவும் சோகமான தவறு என ஜெனரல் மெக்கன்ஸி விவரித்தார்.

சமைரி அஹ்மதி என்கிற அந்த சேவைப் பணியாளர், காபூல் விமான நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், தன் வீட்டின் அருகே தன் வண்டியை செலுத்திய போது, அவர் மீது ட்ரோன் தாக்குதல் நடந்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட போது, தேர் இரண்டாவது முறை வெடித்ததற்கு, அதிலிருந்து வெடிபொருட்களே காரணமென்று அமெரிக்கா தொடக்கத்தில் கூறியது. ஆனால் விசாரணையில் அது, அவரது வீட்டுக்கு அருகில் இருந்த ப்ரொபேன் எரிபொருள் டேங்க் வெடித்திருக்கலாம் என தெரிய வந்தது.

அத்தாக்குதலில் அஹ்மத் நாசர் என்பவரும் கொல்லப்பட்டார். அவர் அமெரிக்க படைகளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.

தாலிபன்

பட மூலாதாரம், Getty Images

இறந்தவர்களின் உறவினர்களுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு – கொள்கை செயலர் கொலின் கால், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் உதவிக் குழுவான ஊட்டச்சத்து மற்றும் கல்வி இண்டர்னேஷனல் என்கிற அமைப்பின் நிறுவனர் ஸ்டீவன் க்வானிடம் நஷ்ட ஈட்டுத் தொகையை கடந்த வியாழக்கிழமை வழங்கினார் என பென்டகனின் செய்தியறிக்கை கூறியுள்ளது.

ட்ரோன் தாக்குதலில் இறந்த அஹ்மதி மற்றும் அவரது குடும்பத்தினர் அப்பாவிகள், அவர்கள் மீது பழி பாவம் எதுவும் இல்லை, அவர்களுக்கும் ஐ எஸ் கே அமைப்பினருக்கும் எந்த வித தொடர்போ, அமெரிக்க படைகளுக்கு அவர்களால் எந்த வித ஆபத்துகளோ இருக்கவில்லை என்று கூறினார் கொலின் கால்.

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் லாய்ட் ஆஸ்டின் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு மன்னிப்பு கோரியது போதாது என அஹ்மதியின் 22 வயது சகோதரர் ஃபர்ஷத் ஹைதரி கூறினார்

“அவர்கள் இங்கே வந்து எங்கள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து மன்னிப்பு கூற வேண்டும்” என காபூலிலிருந்து ஏ.எஃப்.பி முகமையிடம் கூறினார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »