Press "Enter" to skip to content

ஹெச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் & மருந்து உட்கொள்வோர் பிரிட்டன் ஆயுதப் படைகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பட மூலாதாரம், OLIVER BROWN

ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அத்தொற்று வராமல் தடுப்பதற்காக மருந்து உட்கொள்வோர், ஆயுதப் படைகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, பிரிட்டன் ராணுவம் அறிவித்துள்ளது. உலக எய்ட்ஸ் தினத்தன்று (டிசம்பர் 1ஆம் தேதி) இந்த அறிவிப்பு வெளியானது.

ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோரும், அத்தொற்று வராமல் தடுக்க பாலியல் முன் தடுப்பு மருந்தான ப்ரெப் (PrEP) எடுத்துக் கொள்வோரும் ஆயுதப் படைகளில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

ராணுவத்தில் ஏற்கெனவே பணிபுரிவோர் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டால், ராணுவத்தில் அவர்கள் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அத்தொற்று வராமல் தடுப்பதற்காக மருந்து உட்கொள்வோர் ஆயுதப் படைகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, பிரிட்டன் ராணுவம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அந்நாட்டு ராணுவ அமைச்சர் லியோ டாச்செர்டி கூறுகையில், “ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையை மருத்துவ சிகிச்சை புரட்சிகரமாக மாற்றியுள்ளது.

“நவீன மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அமைப்பாக, சமீபத்திய அறிவியல்பூர்வமான ஆதாரங்களை அங்கீகரித்து அதன் அடிப்படையில், செயல்படுவதே சரியாக இருக்கும்” என்றார்.

இந்த அறிவிப்பின் மூலம், கருத்தடை மருந்துகளை உட்கொள்வோரைப் போன்றே பி.ஆர்.இ.பி மருந்து உட்கொள்வோரும் சமமாக நடத்தப்படுவர் எனவும், அவர்களின் வேலைவாய்ப்புக்கு இனி எந்தத் தடையும் இருக்காது எனவும், ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ராணுவத்தில் ஏற்கெனவே பணியில் இருப்போரில், ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர், அவர்களின் ரத்த மாதிரியில் தொற்றுப் பரவல் கண்டறியப்படாத போது, அவர்கள் தொடர்ந்துராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவர். இந்த புதிய மாற்றம், வரும் வசந்த காலத்துக்குள் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வறிவிப்பை பாலின சுகாதார செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆலிவர் ப்ரவுன்

பட மூலாதாரம், OLIVER BROWN

பிரிட்டனின் ராயல் கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக பணியாற்றிவரும் ஆலிவர் ப்ரவுன் (30), இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஹெச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த செய்தி அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அவர் `வானொலி 1 நியூஸ்பீட்`டுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளது என கண்டறியப்பட்டபோது, எனக்கு மூன்று கேள்விகள் இருந்தன: நான் எப்போது இறக்கப் போகிறேன்? என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது? எனக்கு இன்னும் வேலை இருக்கிறதா?”.

ஹெச்.ஐ.வி கண்டறியப்பட்டது முதலாக அவர் குறைவான ராணுவ நடவடிக்கைகளிலேயே களமிறக்கப்பட்டார்.

அவருக்கு கப்பல்களை இயக்குதல் மற்றும் கப்பல்களை எதிர்த்து போரிடுவது உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டன. ஆனால், வெளிநாடுகளில் பணியமர்த்தப்படுவதற்கான பணிகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படவில்லை.

அவர் ராணுவத்தில் சேருவதற்கு முன்பாக அவருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தால், அந்த பணிக்கு அவர் விண்ணப்பித்திருக்க முடியாது.

மருந்து - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

“எனக்கு முன்பே தொற்று ஏற்பட்டிருந்தால், நான் இந்த பணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனென்றால் எனக்கு அனுமதியில்லை என்பது எனக்குத் தெரியும்,” என்றார்.

இனி யாரும் ஏமாற்றமடையத் தேவையில்லை என உணர்வதுதான், இத்தகைய மாற்றத்தில் நான் முக்கியமானதாக கருதுகிறேன். ஹெச்.ஐ.வி தொற்றுடன் வாழ்வது சாதாரணமானது என ராணுவத்தில் உள்ள மற்றவர்கள் இதன் மூலம் கருதக்கூடும் என்று கூறினார் ஒலி.

பாலின சுகாதாரத்தை வலியுறுத்தும் அமைப்பான டெர்ரென்ஸ் ஹிக்கின்ஸ் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஐயன் க்ரீன், “ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை.

ஹெச்.ஐ.வி தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் எவ்வளவு தூரம் கடந்துள்ளோம் என்பதை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது. இது மிகச்சரியான முடிவு” என்றார் அவர்.

இந்த அறிவிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதமாக, ராணுவ அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என, ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

ஹெச்.ஐ.வி என்றால் என்ன?

ஹெச்.ஐ.வி கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

`ஹியூமன் இம்யூனோ டெஃபிசியன்ஸி நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)’ என அழைக்கப்படும் ஹெச்.ஐ.வி மனித உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அழிக்கக்கூடியது.

இதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் அதன் முற்றிய நிலையான எய்ட்ஸ் நோய் ஏற்படும். எய்ட்ஸ் என்பது ஹெச்.ஐ.வி தொற்றால் ஏற்படும் பலவித உடல்நல குறைபாடுகளின் தொகுப்பு.

இதற்காக மருந்து உட்கொள்ளும்போது, ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஒருவரின் மூலம் மற்றொருவருக்கு இத்தொற்று பரவ முடியாத வகையில், நவீன மருத்துவம் இதனை சாத்தியமாக்கியுள்ளது.

2019-ம் ஆண்டு வரை, பிரிட்டன் முழுவதும் 1,05,000-க்கும் மேற்பட்டோர் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »