Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் பட்டினிச் சூழல்: எப்படி சமாளிப்பார்கள் தாலிபன்கள்?

பட மூலாதாரம், MARCUS YAM

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தசாப்தத்தின் மோசமான வறட்சி காரணமாக இங்கு கோதுமை பயிரின் கால் பகுதி சேதமடைந்துவிட்டது. கூடவே 2 கோடியே 30 லட்சம் மக்கள் கடுமையான குளிர்காலத்தில் பட்டினியின் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மறுபுறம் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் நிதியுதவி நின்றுவிட்டதால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை இயல்பாகுமா அது எப்போது நடக்கும் என்று கூட மக்களுக்குத் தெரியாது.

இந்த நிலையில், பட்டினியின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள், கிடுகிடுக்கும் குளிரில் எப்படி உயிர் வாழ்வார்கள்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இன்றைய ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் பிரச்னை மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. இது மக்கள்தொகையின் பெரும்பகுதியின் மீது தாக்கம் செலுத்தவுள்ளது என்று காபூலில் இருக்கும் பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கிர்மானி கூறுகிறார்.

“அரசு வேலையில் இருந்தவர்கள் அதாவது சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு நான்கைந்து மாதங்களாக சம்பளம் இல்லை. அவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள், ஆனால் அவர்களின் வாழ்க்கை கடினமாகி வருகிறது. கிராமப்புறங்களில் நெடுங்காலமாகவே நிலைமை மோசமாக இருந்தது. ஆனால், இப்போது நகரங்களின் நடுத்தர வர்க்கத்தினர் வரை சிரமங்கள் அதிகரித்துள்ளன,” என்கிறார் அவர்.

ஆப்கானிஸ்தான் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மட்டுமல்லாமல், மாற்றத்தின் ஒரு காலகட்டத்தையும் கடந்து செல்கிறது. அதன் மக்கள்தொகையில் பாதியை இது நேரடியாக பாதிக்கிறது. தாலிபன்கள் பொருளாதாரம் மற்றும் கல்வியிலிருந்து பெண்களை முற்றிலுமாக நீக்கிவைத்துள்ளனர்.

“பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள், இப்போது தங்கள் வீட்டிற்கு வெளியே அரிதாகவே காணப்படுகிறார்கள். கிராமப்புறங்களை ஒப்பிடும்போது, காபூல் மற்றும் பிற பெரிய நகரங்களில் பெண்கள் வெளியே செல்கிறார்கள். ஆனால், அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட பழமைவாத உடைகளை அணிந்து காணப்படுகிறார்கள். முன்பு அவர்கள் ஜீன்ஸ் அணிந்தார்கள். முகம் ஹிஜாப் (முகத்திரை) மூலம் மூடப்பட்டிருக்கும் என்றாலும் இப்போது அவர்கள் அத்தகைய உடைகளை அணிவதில்லை. ஆனால், இதில் ஒரு விஷயம் என்னவென்றால் 90களில் தாலிபனின் அடையாளமாக மாறிய பர்தாவை அணிய பெண்கள் வற்புறுத்தப்படுவதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான பெண்கள் வேலைக்குத் திரும்ப முடியாது என்று கூறப்பட்டதாகவும், சிறுமிகள் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

குளிர்காலத்திற்குப் பிறகு பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியும் என்று தாலிபன்கள் கூறினாலும், அந்த வாக்குறுதியை நம்ப முடியாது.

போராட்டம் நடத்தும் ஆப்கானிஸ்தான் பெண்கள்

பட மூலாதாரம், EPA

ஆட்சிக்கு வந்த பிறகு, தாலிபன்கள் வேறு சில வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்று நம்ப முடியாது. பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி பற்றி அவர்கள் பேசியுள்ளனர். ஆனால், தாலிபன் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் 4 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டின் பெரும்பகுதியினரின் தலைக்கு மேல் பட்டினி வாள் தொங்குகிறது.

“ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து, தீவிர பிரச்னையாகி வருகிறது. நான் கந்தஹாரில் ஒரு மருத்துவரை சந்தித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை சந்தித்தபோது, போரில் காயமடைந்தவர்களுக்கு அவர் சிகிச்சை அளித்துவந்தார். தற்போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் வருவதாக அவர் கூறினார். ஆப்கானிஸ்தானின் நிலைமை எப்போதும் மோசமாகவே இருந்திருக்கிறது. கடந்த ஆண்டும் குளிர்காலத்தில் இங்கு 1 கோடியே 80 லட்சம் மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது 2 கோடியே 30 லட்சத்தை எட்டியுள்ளது,” என்று சிகந்தர் குறிப்பிடுகிறார்.

ஆப்கானிஸ்தான் நீண்ட கால போர்களை சந்தித்துள்ளது மற்றும் வெளிநாட்டுப் படைகள் வெளியேறிய பின்னர் நிலைமை வேகமாக மோசமடைந்தது. தாலிபன்கள் நாட்டைக் கைப்பற்றியவுடன், வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்திவிட்டன. அது இங்கே ஒரு உயிர்நாடி போல் இருந்தது.

ஆனால், வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதன் மூலம் நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இங்கு போர் முடிந்துவிட்டது என்று பல ஆப்கானியர்கள் நம்புகிறார்கள்.

“தாலிபன்கள் அதிக பிரபலமானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அது தேவையும் இல்லை. மக்கள் எதிர்ப்பின்றி தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். முந்தைய அரசின் ஊழலால் மக்கள் சோர்வடைந்தனர். போரால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களுக்குச் சென்றால், அங்குள்ள மக்கள் போர் முடிந்ததில் மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். மேலும் பஷ்தூன் பிரிவினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் உள்ள மக்களும் சில விஷயங்களில் தாலிபன்களின் பழமைவாதக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்,” என்று சிக்கந்தர் கூறுகிறார்.

இது ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. கிராமப்புறங்களில் பழமைவாத சிந்தனையை பின்பற்றுபவர்கள் தாலிபன்களுக்கு முந்தைய காலகட்டத்திற்குத் திரும்ப முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில், நகரங்களில் வாழ்பவர்கள் சுதந்திரமான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

“நாடு 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் நம்புகிறார்கள். மக்கள் நாட்டைவிட்டு வெளியேற விரும்புகிறார்கள். நல்ல வாழ்க்கைக்கான நம்பிக்கையுடன் நாட்டின் தென்மேற்குப்பகுதியில் இருந்து ஒரு நாளில் நான்கு முதல் ஐந்தாயிரம் மக்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி செல்வதை நான் பார்த்தேன்,” என்று கூறுகிறார் சிகந்தர்.

அதாவது, ஸ்திரமற்ற சூழலுக்கு மத்தியில் நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவது ஆரம்பமாகியுள்ளது. ஆனால், தற்போதைய சூழ்நிலையால் சாதாரண மக்கள் மட்டுமே சிரமப்படுகின்றனர் என்று சொல்ல முடியாது.

பொருளாதார நிலை தாலிபன்களுக்கும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால், அதன் முன்னால் இன்னொரு பெரிய சவால் இருக்கிறது. தாலிபன் அமைப்பிற்குள் கருத்து வேறுபாடுகள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டதால், அவற்றைத் தீர்ப்பது கடினமாக இருக்கிறது.

காபூலைக் கைப்பற்றிய நேரத்தில், ஹக்கானி நெட்வொர்க்கின் போராளிகள் முதலில் நகரத்திற்குள் நுழைந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

தாலிபன் அமைப்பிற்குள் ஆழமான கருத்து வேறுபாடுகள்

“தாலிபன்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்த அமைப்பு உண்மையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் மைக் மார்ட்டின்

“தாலிபன்கள் தெளிவாக இரண்டு பெரிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். முதலாவது ஹக்கானி நெட்வொர்க். இது அமெரிக்காவின் ‘பயங்கரவாத அமைப்புகளின்’ பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளது. இரண்டாவது, 90களில் தாலிபனின் முதல் அமைப்பாக தெற்குப் பகுதியில் இருந்த குழு. அது உண்மையான தாலிபனாக இருந்தது. ஹக்கானி பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. மற்ற பிரிவு இரானுடன் நெருக்கமாக இருப்பதாக கருதப்படுகிறது. இருவரும் புதிய அரசில் அதிக அதிகாரத்தை விரும்புகிறார்கள்,” என்று மருத்துவர் மார்ட்டின் கூறுகிறார்.

இப்போது இந்த வேறுபாடுகள் வன்முறையாக மாறியுள்ளன. இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பும், துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.

“இரு குழுக்களின் போராளிகளுக்கும் இடையே கைகலப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன, குறிப்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விவகாரம் தொடர்பாக தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இடைக்கால அரசில் தனக்கு பிடித்த பதவி கிடைக்காத முல்லா கனி பராதரை பல நாட்களாகியும் வெளியே பார்க்கமுடியவில்லை,” என்று மருத்துவர் மைக் மார்ட்டின் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமர் முல்லா பராதர்

பட மூலாதாரம், AFP

கொரில்லா போராளி ராணுவத்திலிருந்து நாட்டை நிர்வகிக்கும் அரசாக தாலிபன் மாறிவருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து, பல மைய அமைப்பிலிருந்து, திடமான ஒற்றை மைய சக்தியாக உருவாகும் செயல்பாட்டில் அது உள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களில், உலகின் வலிமைமிக்க ராணுவங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், தன்னுடைய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கும் பரவலாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியமாக இருந்தது என்று மருத்துவர். மைக் மார்ட்டின் விளக்குகிறார். ஆனால், அது அரசு அமைக்க வேண்டுமென்றால் ஒரு சிறப்பு கட்டமைப்பு அவசியம்.

அதை அவர்கள் செயல்படுத்திவருகின்றனர். ஆனால், பழங்குடி தலைவர்கள் தாலிபனின் கொள்கைகளை எத்தனை தூரம் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. வலுவான போராளிகள் குழுவை முஹாஜிர் தலைவர்கள் வழிநடத்தினர். இப்போது அவர்களுக்கு அரசு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், உண்மையில் தாலிபன்கள் இப்போதும் போராளிகளின் ராணுவம்தான். அதில் முஹாஜிர்கள் சக்தி வாய்ந்தவர்கள் மற்றும் போராளிகளை கட்டுப்படுத்துகிறார்கள். தேவைப்படும் போது காவல் துறை அல்லது ராணுவத்தில் பயன்படுத்தும் பொருட்டு அவர்கள் அரசில் சேர்க்கப்பட்டுள்ளனர்,” என்று மைக் மார்டின் தெரிவித்தார்.

இஸ்லாத்தின் வேறொரு கிளையைப் பின்பற்றும் அல்லது வேறு இனத்தைச் சேர்ந்த இதுபோன்ற பல சமூகங்கள் நாட்டில் உள்ளன. தாலிபன்கள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. இவற்றில் பஷ்டூன், தாஜிக், உஸ்பெக் மற்றும் குறிப்பாக ஷியா ஹசாரா சமூகங்கள் அடங்கும்.

ஆனால், ஆப்கானிஸ்தானில் தனது வேர்களை நிலைநிறுத்த விரும்பும் மற்றொரு குழுவும் தாலிபன்களுக்கு தலைவலியாக உள்ளது.

“ஐஎஸ் அமைப்பு ஒரு தீவிர வலதுசாரிக் குழு. தாலிபன்கள் இந்த அமைப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வந்த பிறகு, தாலிபனின் முக்கிய தலைவரான ஹெப்துல்லா அகுந்த்சாதா, ‘அமைப்பிற்குள் சில துரோகிகள்’ இருப்பதாக ஒரு ஒலிநாடா செய்தியை வெளியிட்டார். சிலர் தாலிபனை விட்டு வெளியேறி ஐஎஸ் அமைப்பில் சேரக்கூடும் என்று அவர் கவலைப்பட்டார்,” என்று மருத்துவர் மைக் மார்ட்டின் கூறுகிறார்.

ஹெப்துல்லா அகுந்த்சாதா தாலிபன்களை வழிநடத்துகிறார். அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-கய்தா அமைப்பின் தலைவராக உள்ளார்.

இஸ்லாமிய சட்ட விஷயத்தில், தாலிபன்களை விட ஐஎஸ் தீவிரமான பார்வையைக் கொண்டுள்ளது. இனிவரும் காலங்களில் அந்த அமைப்பு தாலிபன்களுக்கு பெரும் அரசியல் அச்சுறுத்தலாக மாறலாம்.

“9/11க்குப் பிறகு பிறந்த ஏராளமான இளைஞர்கள் தாலிபன் அமைப்பில் உள்ளனர். இவர்கள் தீவிரமான போராளிகள். தாலிபன்கள் வெளிநாட்டினரை நாட்டை விட்டு விரட்டுவார்கள், பெண்களுக்கு உரிமை வழங்கப்பட மாட்டார்கள் என்று முதலில் அவர்கள் கேள்விப்படுகிறார்கள். இப்போது திடீரென்று தாலிபன்கள் தாராளவாதமாக தோன்ற விரும்புவதை அவர்கள் பார்க்கிறார்கள். கூடவே அதன் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அகதிகள் கவுன்சிலின் பெண் பிரதிநிதிகளை சந்திப்பதையும் அவர்கள் காண்கின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தாலிபன்கள் தாராளமய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் விரும்புகிறது. ஆனால் இது அமைப்பின் சிதைவுக்கு வழிவகுக்கும்.

தாலிபன் இரண்டு துருவங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது. அது தாரளமயமாக தோன்ற விரும்புகிறது மற்றும் பழமைவாத பிரிவை புண்படுத்தவும் விரும்பவில்லை. மேலும் நிதிநிலை சரியில்லாததால், அவர்களது இக்கட்டு மேலும் அதிகரித்துள்ளது.

நிறுத்தப்பட்டுள்ள நிதி உதவி

லாரல் மில்லர், சர்வதேச நெருக்கடி குழுவின் ஆசிய திட்ட இயக்குனர் ஆவார். கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் அரசு வெளிநாட்டு உதவியை நம்பியிருந்ததால் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

அஷ்ரப் கனி தலைமையிலான அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43 சதவிகிதம் வெளிநாட்டு உதவி மூலம் வந்தது. தாலிபன்களின் வருகைக்குப் பிறகு நிதி உதவி நிறுத்தப்பட்டதோடுகூடவே அமெரிக்கா அதன் மீது பல தடைகளையும் விதித்துள்ளது.

“ஆப்கன் அரசின் சொத்துக்கள், மத்திய வங்கியின் கையிருப்பு அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத் தடைகள் அங்குள்ள பொருளாதாரத்தை முடக்கியுள்ளன. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கால் பங்கை கூட தாலிபன்களால் சேகரிக்க முடியவில்லை. இதன் காரணமாக மனிதாபிமான நெருக்கடி ஏற்படலாம் என்று ஐநா சமீபத்தில் கூறியிருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

நிதி நெருக்கடியின் விளைவும் தெரியத்தொடங்கியுள்ளது. அரசுப் பணிகள் முடங்கியுள்ளன, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை.

தாலிபன்கள் சட்டவிரோத வேலை மூலம் பணம் வசூல் செய்து வந்தனர். ஆனால், இப்போது பரிவர்த்தனையை வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவது அவர்களுக்கு நிர்ப்பந்தமாகிவிட்டது. ஆனால், அவ்வாறு செய்யும் அனுபவம் அதற்கு இல்லை.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

“இணை பொருளாதாரம் அல்லது கள்ளப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பை நடத்துவது, வங்கிகள் மூலமாக அல்லாமல் முறைசாரா ஹவாலா நெட்வொர்க்குகள் மூலம் பரிவர்த்தனை செய்வது போன்றவற்றில்தான் தாலிபனுக்கு அனுபவம் உள்ளது. இந்த முறைகள் வெளிப்படையானவை அல்ல, கூடவே சர்வதேச விதிகளுக்கு ஏற்றபடியும் இல்லை,” என்று லாரல் மில்லர் கூறுகிறார்.

தாலிபன்களின் முக்கிய வருமானம் அஃபின் சாகுபடியாகும். அதில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த வணிகத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ராணுவம் நிறைய முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் நிலைமை மோசமடைந்தால், இந்த வணிகம் மீண்டும் வளரக்கூடும்.

“தற்போதைய நிலைமைக்கு தாலிபன்கள் வெளிநாட்டு சக்திகளைக் குற்றம் சாட்டுகிறார்கள். நாட்டில் வளங்கள் பற்றாக்குறைக்கு வெளிநாட்டு சக்திகள் காரணம் என்று சொல்வது அவர்களுக்கு எளிதாக உள்ளது,” என்று லாரல் மில்லர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் இருந்து வரும் உதவி முற்றிலுமாக நின்று போய்விட்டது என்று சொல்லமுடியாது. மேற்கத்திய நாடுகளில் இருந்து மில்லியன் கணக்கான டாலர் அவசரகால மனிதாபிமான உதவிகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிவாரண முகமைகள் மூலம் ஆப்கானிஸ்தானை சென்றடைகின்றன. ஆனால் இது போதுமானதாக இல்லை.

ஆசியாவின் மற்ற நாடுகள் நிலைமையைக் கண்டும், உதவி செய்ய முன்வராததுதான் வருத்தமான விஷயம் என்கிறார் லாரல் மில்லர்.

“ஆசிய நாடுகள் மிகக் குறைவாகவே உதவுகின்றன. சீனா 3 கோடி டாலர்கள் உதவி அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியதால் அங்குள்ள நிலைமைக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சீனா நினைக்கிறது, “என்றார் அவர்.

“உதவி கிடைக்கவில்லை என்றால் போதைப்பொருள் வியாபாரம் பெருகும், குடிபெயர்வு அதிகரிக்கும், சாதாரண மக்கள் சிரமப்படுவார்கள் என்று தாலிபன்கள் கூறுகின்றனர். அதிகாரத்தை கைப்பற்றியுள்ள அமைப்பு தங்களுக்குப் பிடிக்கவில்லை, அதனால் உதவ முடியாது என்று சர்வதேச சமூகம் கூறுகிறது.”

ஆப்கானிஸ்தானின் சாதாரண குடிமக்கள் இந்த பிரச்சனைகளுக்கு இடையில் சிக்கியுள்ளனர். நெருக்கடி ஆழமடைந்து வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பட்டினியின் விளிம்பில்

ஆஷ்லே ஜாக்சன், வெளிநாட்டு மேம்பாட்டு கழகத்தில், ஆயுதக் குழுக்கள் ஆய்வு மையத்தின் இணை இயக்குநராக உள்ளார். தாலிபன்கள் இதற்கு முன் இவ்வளவு கடினமான சூழ்நிலையை சந்தித்ததில்லை என்று அவர் கூறுகிறார்.

“தாலிபன்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் சூழ்நிலை எந்த அரசுக்கும் சவாலாக இருந்திருக்கும். ஆனால் தாலிபனின் பிரச்னை என்னவென்றால், அதற்கு இந்த வேலையைச் செய்யும் திறன் இல்லை, கூடவே அதைச் சமாளிக்கும் திட்டமும் இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்துவதால் எந்தப்பலனும் இல்லை என்று ஆஷ்லே நம்புகிறார்.

“இது ஆக்ஸிஜன் விநியோகத்தை துண்டிப்பதைப் போன்றது. சர்வதேச சமூகம் ஆப்கன் பொருளாதாரத்தின் கழுத்தை நெரித்துள்ளது. அது அகற்றப்பட வேண்டும், அதன் பொருளாதாரத்தை நடத்த சர்வதேச சமூகம் உதவவேண்டும்,” என்றார் அவர்.

ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு நிபந்தனையின்றி வெளிநாட்டு உதவி கிடைக்காது என்று சொல்லமுடியாது.

“சர்வதேச சமூகம் தங்களிடமிருந்து என்ன விரும்புகிறது என்பதை தாலிபன்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பிரச்சனை என்னவென்றால், சர்வதேச சமூகம் கோரிக்கைகளை முன்வைக்கிறது. ஆனால் உண்மையான பேச்சு வார்த்தை இல்லை, அதற்கான திட்டமும் கொடுக்கபடுவதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

விவாத மேசைக்கு வர தாலிபன் தயாராக இருப்பதாக ஆஷ்லே கூறுகிறார். பெண்களுக்கு கல்வியைத்தொடர வாய்ப்பு கிடைக்கும் என்று தாலிபன் கூறியுள்ளது. கொடுத்த வாக்குறுதியை தாலிபன் நிறைவேற்றுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆனால் இதற்கு மேற்கத்திய நாடுகள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

“இப்போது கற்பனை செய்வது கடினம். ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் கடைபிடிக்கும் கொள்கை, இடப்பெயர்வு போன்ற பிரச்சனைகளைத் தீர்க்காது. நீங்கள் பொருளாதாரத் தடைக் கொள்கையை கைவிட வேண்டும். ஆப்கன் குடிமக்கள் விவரம் அறியாதவர்கள் அல்ல. தாலிபன்களால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாது என்று அவர்களுக்குத்தெரியும். சர்வதேச சமூகம் உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள்,”என்று ஆஷ்லே குறிப்பிட்டார்.

நிலைமை தவிர்க்கப்படலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆஷ்லே கூறுகிறார். குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட அவசர உதவி, மக்களுக்குத் தேவைப்படுகிறது. இதைச் செய்யாவிட்டால், லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது.

அக்டோபர் மாதம் கந்தஹாரில் எடுக்கப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தையின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

அப்படியானால், உறையும் குளிரில் பட்டினியின் அச்சுறுத்தலை ஆப்கானிஸ்தான் எப்படி சமாளிக்கும்?

கடந்த காலத்தைப் பார்த்தால், மேற்கத்திய நாடுகளின் நிதி உதவியைப் பெறுவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் சிரமங்களை எதிர்கொள்வது புதிய விஷயமல்ல. ஆனால் இப்போது வெளிநாட்டு உதவி நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியில் அமர்ந்திருக்கும் புதிய ஆட்சியாளருக்கு நெருக்கடி நிறைந்த நாட்டையும் பொருளாதாரத்தையும் நடத்துவதில் எந்த அனுபவமும் இல்லை.

நிலைமை தீவிரமானது. சில அவசரகால உதவிகள் சென்றடைகின்றன, ஆனால் அது போதுமானது அல்ல. ஆப்கன் அரசுக்கு உடனடியாக ரொக்கப்பணம் தேவைப்படுகிறது.

நாட்டின் தலைமை பலவீனமான தோள்களில் உள்ளது. இந்த நிலையில் சிலருக்கு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தமும், சிலருக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

முடிவு என்னவாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான், முழுங்கவும் முடியாமல் வெளியே துப்பவும் முடியாமல் இருக்கும், தொண்டையில் சிக்கிய எலும்பாக மாறியுள்ளது.

(‘The Inquiry’ என்ற பிபிசி பாட் கேஸ்ட்டில் வெளியானது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்: மான்சி டாஷ்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »