Press "Enter" to skip to content

பீவர் மறுஅறிமுகத்தால் வெள்ள அபாயங்கள் குறையலாம் – விலங்குகள் நல அமைப்பு

பட மூலாதாரம், PA Media

பீவர் (Beaver) என்கிற உயிரினத்தை ஸ்டஃபோர்ட்ஷைர் பகுதியில் அறிமுகப்படுத்துவது வெள்ள அபாயங்களைக் குறைக்கும், மற்ற விலங்குகளுக்கு, குறிப்பாக ஒயிட் கிரே ஃபிஷ் இனத்துக்கு நன்மை பயக்கும் என வன உயிரினங்கள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு பல பகுதிகளில் கொறித்து உண்ணும் இந்த வகை விலங்கினங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டன.

நதிக்கரைகளில் பீவர் உயிரினங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய, இங்கிலாந்தின் ஸ்டஃபோர்ட்ஷைர் பகுதியில், அந்நாட்டின் வன உயிரின அறக்கட்டளை ஒரு சோதனயை மேற்கொண்டது.

அதன் முடிவில், “இந்த புதிய உயிரினத்தால் வெள்ள அபாயம் குறைவது மிகப் பெரிய நன்மை” என்கிறார் அந்த அமைப்பின் மேலாளர் நிக் மோட்.

பிரிட்டனில் பீக் மாவட்டத்தில் மேனிஃபோல்ட் பள்ளத்தாக்கில் ஆற்றுக்கு குறுக்கே மரங்கள் வைக்கப்பட்டன. நீரோட்டத்தின் வேகத்தைக் குறைப்பது, ஒயிட் கிளாட் கிரே ஃபிஷ் (white-clawed crayfish) எனப்படும் நண்டு போன்ற மற்ற உயிரினங்களுக்கு உதவும் என்கிறார் மோட்.

பிரிட்டனின் உள்ளூர் உயிரினமான ஒயிட் கிளாட் கிரே ஃபிஷ், கடந்த பல தசாப்த காலமாக அமெரிக்காவின் சிக்னல் கிரே ஃபிஷ் எனப்படும் உயிரினத்துக்கு எதிராக அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்த உயிரினம் உணவுக்காக உள்ளூர் உயிரினத்தோடு போட்டியிடுகிறது. மேலும் அது நோயைப் பரப்புகிறது.

ஒயிட் க்ளாட் க்ரே ஃபிஷ் குறித்து சில விவரங்கள்:

ஒயிட் கிளாட் கிரே ஃபிஷ்

பட மூலாதாரம், IAIN REYNOLDS

கிரே ஃபிஷ் வகைகளில் பிரிட்டனில் வளரும் ஒரே உயிரினம் இது. உருவ அளவில் சிறியது. வெறும் 6 – 12 சென்டிமீட்டர் நீளம் மட்டுமே வளரக் கூடியது. இது 90 கிராம் வரை எடை இருக்கும். பொதுவாக தாமிர நிறத்தில் இருக்கும், ஆனால் அதன் கைகளின் கீழ் வெளிர் கிரீம் அல்லது ரோஸ் நிறம் இருக்கும்.

1981ஆம் ஆண்டு முதல் அந்த உயிரினம் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களில் ஒன்றாக சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

முதுகெலும்பில்லாத உயிரினங்கள், இறந்த உயிரினங்கள், நீர்த் தாவரங்கள் போன்றவையை உண்டு வாழும் இந்த உயிரினம், சிறிய, ஒரு மீட்டருக்குக் குறைவான ஆழமுள்ள நன்னீர் ஓடைகளில், கற்கள் மற்றும் பாறைகளுக்கு அடியில் வாழும்.

பீவர் உயிரினம்

பட மூலாதாரம், Getty Images

பீவர் உயிரினங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது உள்ளூர் கிரே ஃபிஷ் இனத்துக்கு தோதான நல்ல வாழ்விடத்தை உருவாக்க உதவலாம் என்று கூறினார் நிக் மோட்.

பீவர் உயிரினங்கள் பிரிட்டனில் 16ஆம் நூற்றாண்டில் அதன் தோல், இறைச்சி, வாசனை திரவிய சுரப்பிகளுக்காக வேட்டையாடி அழிக்கப்பட்டன.

மீண்டும் கொறித் துண்ணும் விலங்கினங்கள் டார்செட் மாகாணத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, டெர்பிஷைர், நாட்டிங்ஹம்ஷைர் என மற்ற பல கவுன்டிகளும் அதை விரைவாகப் பின்பற்றின.

பீவர் உயிரினங்கள் கட்டமைக்கும் அணைகள் காரணமாக, ஈர நில வாழ்விடங்களை உருவாக்கும் என்பதால் அதை இயற்கையான பொறியாளர் என்று அழைக்கிறார்கள். அது பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம் என தேசிய விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

இந்த உயிரினங்கள் மீண்டும் இங்கிலாந்தின் நதிகளில் மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பாக மக்களின் கருத்தைப் பெற ஆலோசனைப் பெட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டு நவம்பர் மாதம் மூடப்பட்டது.

பீவர் உயிரினங்கள் நாட்டின் சரியான இடங்களில் மட்டும் திரும்ப வருவதைப் பார்க்க விரும்புவதாக ஸ்டஃபோர்ட்ஷைர் வன உயிரின அமைப்பு கூறியது.

“அந்த உயிரினங்கள் எப்போதும் இங்கு இருக்க விரும்புகிறோம், எனவே நிறைய பணிகளை முன் கூட்டியே செய்ய வேண்டியது அவசியம், எல்லோரும் ஆதரவளிப்பதை உறுதி செய்ய, எல்லா நில உரிமையாளர்களோடும் பணியாற்ற வேண்டும்,” என்று கூறினார் ஜெஃப் சிம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »