பட மூலாதாரம், VIRGIN ORBIT
பிரிட்டன் விமானப்படை விமானியான மேத்யூ ஸ்டான்னர்ட், வியாழக்கிழமை அன்று பசிபிக் பெருங்கடலில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவும்போது ஜம்போ ஜெட் விமானத்தின் கட்டுப்பாட்டில் இருப்பார்.
ஏழு விண்கலங்களை ஏவ முயலும் சர் ரிச்சர்ட் பிரான்சனின் செயற்கைக்கோள் ஏவுதள நிறுவனமான விர்ஜின் ஆர்பிட்டிற்காக அவர் இதைச் செய்கிறார்.
“ஸ்டான்னி,” என்று அழைக்கப்படும் அவர், டொர்னாடோ மற்றும் டைஃபூன் போர் விமானங்களில் இருந்து ஏவுகணைகளை வீசுவதில் மிகவும் அனுபவம் உடையவர்.
21 மீட்டர் (70 அடி) விண்வெளி பூஸ்டரை கட்டவிழ்த்து விடுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
“ஸ்டான்னி எங்கள் அணியில் சேர்ந்த ஓர் அற்புதமான மனிதர். ராயல் விமானப்படையுடனான அவருடைய பின்னணியில் நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல், அவர் ஒரு பிரகாசமான அறிவாற்றல், ஆழமான விவரங்களில் அபாரமான கவனம் மற்றும் சிறந்த அனுபத்தோடு வருகிறார்,” என்று ஆர்பிட் தலைமை இயக்க அதிகாரி டோனி கிங்கிஸ் கூறினார்.
“ஸ்டான்னி எங்கள் திட்டமிடல் அனைத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். எங்களின் முந்தைய பயணத்தில் பறந்து பல மணிநேரம் சிமுலேட்டரில் உள்நுழைந்த பிறகு, அவர் வரவுள்ள ‘எபோவ் தி க்ளவுட்ஸ்’ விமானத்தில் அமர்ந்து, சரியான நேரத்தில் எங்களின் லாஞ்சர் ஒன் ராக்கெட்டை ஏவுவார். இதன்மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்புவார்,” என்று அதன் நிர்வாகி பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ராணுவ செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு விர்ஜின் ஆர்பிட்டைப் பயன்படுத்துவதை பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் எதிர்நோக்கியுள்ளது. மேலும், அது நடப்பதற்கு முன்னமே இதுவோர் அனுபவத்தைக் கொடுக்கிறது.
கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட பிரிட்டிஷ் தொழிலதிபர் சர் ரிச்சர்டின் லாங் பீச் நிறுவனத்திற்கு வியாழன் மிஷன் அவருடைய ஒட்டுமொத்த திட்டங்களிலும் மூன்றாவதாக உள்ளது.
அவருடைய 747 மற்றும் லாஞ்சர் ஒன் அமைப்பு இதற்கு முன்பு 19 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. இதிலுள்ள ஏழு செயற்கைக்கோள்களில், பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வானிலை, கப்பல் மற்றும் விமான இயக்கங்களைக் கண்காணிக்கக்கூடிய கிளாஸ்கோவில் ஸ்பைர் குளோபல் தயாரித்த ஒரு செயற்கைக்கோளும் அடக்கம்.
விமான லெப்டிணன்ட் ஸ்டான்னர் அமெரிக்க மேற்கு கடற்கரை நேரத்தில் சுமார் 12:30 மணிக்கு (20:30 GMT) வேலையைத் தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், SAC BEN MAYFIELD/MOD
அவர் விர்ஜின் அட்லாண்டிக்கின் முன்னாள் விமானமான ஜம்போவின் இடது இறக்கையின் கீழ் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டிருக்கும் ராக்கெட்டுடன் பசிபிக் பெருங்கடலின் மீது பறந்து செல்வார்.
அவர் கிளம்பி சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, 35,000 அடி (10கிலோமீட்டர்) உயரத்தில், திரவ எரிபொருள் பூஸ்டர் துண்டிக்கப்பட்டு கீழே விழும்.
ஏறக்குறைய நான்கு விநாடிகளுக்குப் பிறகு, விமான லெப்டிணன்ட் ஸ்டான்னர்ட் 747-ஐ வலதுபுறமாகச் செலுத்தும்போது, லான்ச்சர் ஒன் அதன் முதல்நிலை இஞ்சினை பற்றவைத்து சுற்றுப்பாதையில் ஏறத் தொடங்கும்.
விர்ஜின் ஆர்பிட் நிறுவனம், இந்த ஆண்டு ஆறு விண்வெளிப் பயணங்களை இயக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. இவற்றில் இரண்டு கார்ன்வாலில் உள்ள நியூகுவே விமான நிலையத்திலிருந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவற்றில் பிரிட்டனில் நிகழவுள்ள முதன்மையான நிகழ்வுகள், ஜூன் அல்லது ஜூலையில் நடக்கலாம். இருப்பினும் பிரிட்டனின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூலம் உரிமம் பெறுவதற்கான வேலைகள் எவ்வளவு விரைவாக நடக்கின்றன என்பதைப் பொறுத்தது.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின்(CAA) முதன்மையான கவலை பாதுகாப்பு. அதில் திருப்தி அடையும் வரை தற்செயலாக ஏற்படக்கூடிய அனைத்து சம்பவங்களையும் உள்ளடக்கிப் பரிசோதிக்கும் வரை ஏவுதலைத் தொடர அனுமதிக்காது.

விண்ணப்பங்களின் தொழில்நுட்ப விவரங்களை மதிப்பிடுவதற்கு சிஏஏ, 35 பணியாளர்களைக் கொண்டுள்ளது. விண்கல ஏவுதளத்தை (Spacport) இயக்குவதற்கான உரிமம் கிடைக்க 6 முதல் 12 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட் அமைப்பை இயக்குவதற்கான உரிமம் 9 முதல் 18 மாதங்கள் வரை எடுக்கும்.
சிஏஏ புதன்கிழமையன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற குழுவிடம் இதுவரை முறையாகச் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு உரிம விண்ணப்பங்களைக் கையாள்வதாகக் கூறியது. மற்றவை சாத்தியப்படக்கூடிய விண்கல ஏவுதளம்/ராக்கெட் ஆபரேட்டர்கள் விண்ணப்பத்திற்கு முந்தைய கட்டத்தில் உள்ளன
இருப்பினும், இந்த ஆண்டு பிரிட்டன் அறிமுகம் சாத்தியமா என்று கேட்டபோது, அதிகாரத்தின் கொள்கை இயக்குநர் டிம் ஜான்சன் மறுத்துவிட்டார்.
“அரசின் உற்சாகம், தொழில்துறையின் உற்சாகம் மற்றும் இந்தப் பணிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாங்கள் முற்றிலும் பகிர்ந்துகொள்கிறோம். நாங்கள் தொழில் செய்யத் தயாராக உள்ளோம். நாங்கள் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கிறோம். விண்ணப்பங்களின் தரம் மற்றும் சமர்ப்பித்திருக்கும் ஆதாரங்கள் போன்றவையே எவ்வளவு காலம் எடுக்கும் என்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்,” என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
“நாங்கள் எங்கள் கடமைகளை முடிந்தவரை சரியான நேரத்தில் செயல்படுத்துவோம்.”
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com