Press "Enter" to skip to content

எத்தியோப்பியா டீக்ரே நெருக்கடி: மனிதாபிமான உதவிகள் பயனர்களை அடைவதில் என்ன சிக்கல்?

  • பீட்டர் ம்வாய்
  • பிபிசி ரியாலிட்டி செக்

பட மூலாதாரம், Getty Images

எத்தியோப்பியாவின் வடக்கில் உள்ள டிக்ரே பகுதியில் விரைவில் மனிதாபிமான உதவிப் பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படாவிட்டால், அதன் உதவி முகமைகளின் செயல்பாடுகளை இடைநிறுத்த வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவ உதவிப் பொருட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. டீக்ரே பிராந்தியத்தில் உள்ள 90 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் மனிதாபிமான உதவியின் அவசர தேவையை எதிர்நோக்கி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

உதவிப் பொருட்கள் செல்ல முடியவில்லை

அஃபார் பகுதி மட்டும்தான் டீக்ரே பகுதிக்கு செல்லும் ஒரே சாத்தியமான தரைவழிப் பாதையாக உள்ளது.

இந்த வழியில் கொண்டு செல்லப்படும் உதவிப் பொருட்கள், அடிக்கடி சண்டை மற்றும் அதிகார மட்டத்தில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக பல முறை பாதிக்கப்பட்டுள்ளன.

புதிய சண்டை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் எதுவும், இந்த வழியைப் பயன்படுத்த முடியவில்லை.

சுமார் 70 டிரக்குகள் அஃபார் பிராந்தியத்தில் உள்ள செமெராவிலிருந்து டீக்ரேக்குச் செல்ல காத்திருக்கின்றன, ஆனால் பாதுகாப்பு நிலைமை மேம்படும் வரை பயணத்தைத் தொடர முடியாது என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

உணவுப் பொருள்

பட மூலாதாரம், Getty Images

டீக்ரேயில் உதவிப் பொருட்களை வழங்கும் பார வண்டிகள் திரும்புவதில்லை என உலக உணவுத் திட்ட (WFP) அமைப்பினர் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி கிட்டத்தட்ட 900 டிரக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF) தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக, உதவிப் பொருட்களைச் சுமந்து வரும் டிரக்குகளை கையகப்படுத்துவதாக எத்தியோப்பிய அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது, ஆனால் கிளர்ச்சியாளர்கள் குழு அக்குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.

டீக்ரே பிராந்தியத்தில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய, நாள் ஒன்றுக்கு 100 டிரக்கு உதவிப் பொருட்கள் டிக்ரேவைக் கடக்க வேண்டும் என்று கூறுகிறது ஐக்கிய நாடுகள் சபை.

எத்தியோப்பிய அரசு மற்றும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியினருக்கு மத்தியில் நடக்கும் இந்த மோதல் “இப்போது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்று” என அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமை (USAID) கூறுகிறது.

மற்ற வழித்தடங்கள் தடைபட்டுள்ளன

டீக்ரே வரைபடம்

டீக்ரே பிராந்தியத்துக்கு தெற்கே உள்ள அம்ஹாரா பகுதியில், அரசு சார்புப் படைகள் உதவிப் பொருட்கள் செல்வதைத் தடுத்து வருகின்றன.

இந்தப் பிராந்தியத்திலும் மோதல் பரவி, பல மக்கள் இடம்பெயர்ந்தனர். இப்பாதை உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பற்றதாக மாறியது.

சூடான் வழியாக மேற்கு டீக்ரே பகுதிக்குள் உதவிப் பொருட்களை கொண்டு வருவதும் சாத்தியமற்றது. காரணம் அப்பகுதி எத்தியோப்பிய அரசை ஆதரிக்கும் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் உதவிப் பொருட்களை தாக்கியதாக அல்லது உதவிப் பொருட்களை பறிமுதல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அம்ஹாரா பகுதியில் உள்ள உதவிக் கிடங்குகளை டீக்ரே விடுதலை முன்னணி குழுவைச் சேர்ந்த போராளிகள் தாக்கி கொள்ளையடித்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

கொம்பொல்சா நகரில் உள்ள உதவிக் கிடங்குகளை, எத்தியோப்பிய ராணுவம் கைப்பற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், போராளிகள், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து அக்கிடங்கை கொள்ளையடித்ததாக உலக உணவுத் திட்ட அமைப்பினர் கூறினர்.

“டீக்ரே பகுதியில் களமிறக்கப்பட்டுள்ள உலக உணவுத் திட்ட அமைப்பின் அணிகளால் திருட்டைத் தடுக்க முடியவில்லை. துப்பாக்கி முனையில் ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டது உட்பட, பல்வேறு மிரட்டல்கள் காரணமாக கொள்ளையடித்ததைத் தடுக்க முடியவில்லை” என அவ்வமைப்பு கூறுகிறது.

அதிகரித்து வரும் போர் நடவடிக்கைகளால், மனிதநேயப் பணியாளர்களின் நடமாட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பொருட்கள் நிறைந்த டிரக்குகள்

பட மூலாதாரம், Reuters

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள இலக்குகளுக்கு எதிராக, எத்தியோப்பிய அரசாங்கம் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல் காரணமாக, அக்டோபர் 22ஆம் தேதியன்று இடைநிறுத்தப்பட்ட, மெக்கெல் மற்றும் தலைநகர் அடிஸ் அபாபா நகரங்களுக்கு இடையேயான வழக்கமான விமான சேவைகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

அஃபார் பிராந்தியத்தின் ஊடாக மெக்கெல்லே நகரத்துக்கான மனிதாபிமான உதவிகளை கிளர்ச்சியாளர்கள் தடுப்பதாக எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹ்மத் குற்றம் சாட்டியுள்ளார்.

டீக்ரே விடுதலை முன்னணி குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, எத்தியோப்பிய அரசாங்கத்தை குற்றம்சாட்டியது.

“எந்தவித போக்குவரத்தும் இல்லாத பகுதிகளில் நடக்கும் மோதலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், மேலும் அவர் உணவு உதவிப் பொருட்களைச் சுமந்து வரும் வாகனங்களைத் தடுக்க அனைத்து விதமான சாக்குப்போக்குகளையும் கூறுகிறார்,” என டீக்ரே விடுதலை முன்னணியின் கெடசெவ் ரெடா பிபிசியிடம் கூறினார்.

எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹ்மத்

பட மூலாதாரம், Getty Images

கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியதாக சில குறிப்பிடப்படாத மனிதாபிமான அமைப்பு மீது வெளி விவகாரத் துறை அமைச்சர் ரெட்வான் ஹுசைன் குற்றம்சாட்டினார். மேலும் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தமாகவும் கூறினார்.

மருத்துவர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் என்கிற அமைப்பு, உதவி அமைப்புகளின் செயல்பாடுகளில் சந்தேகத்தை ஏற்படுத்தும் பொது அறிக்கைகள், அதன் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்துவதாகக் கூறுகிறது.

நவம்பர் 2020 காலத்தில் சண்டை தொடங்கியதில் இருந்து 24 உதவிப் பணியாளர்கள் இப்பகுதியில் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது ஐக்கிய நாடுகள் சபை.

சர்வதேச நிவாரண நடவடிக்கைகளும் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. வடக்கு எத்தியோப்பியாவில் அதன் மனிதாபிமான உதவிகளுக்கு சுமார் $350 மில்லியன் டாலர் கூடுதல் நிதி தேவை என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது.

அப்பிராந்தியத்தின் பெரும் பகுதிகளில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது, மின்சாரமும் இல்லை. இது முக்கிய சேவைகளை வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

“எரிபொருள் மற்றும் பணப் பற்றாக்குறை, தொலைத்தொடர்பு முடக்கம் ஆகியவை மனிதாபிமான உதவிகளைச் மேற்கொள்வதில் குறிப்பிடத்தக்க வகையில் தடையாக இருக்கின்றன, மேலும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதை தடுக்கின்றன” என ஐ.நா கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »