Press "Enter" to skip to content

மார்ட்டின் லூதர் கிங் முன்கூட்டியே தனது மரணத்தை கணித்தாரா?

  • ஓவன் ஏமோஸ்
  • பிபிசி நியூஸ், வாஷிங்டன் டிசி

பட மூலாதாரம், Getty Images

50 வருடங்களுக்கு முன்பு, மார்டின் லூதர் கிங் தனது இறுதி உரையை ஆற்றினார். அந்த உரையின் முடிவில், தாம் கொலை செய்யப்படுவோம் என்று கணித்தாரா அவர்?

மார்ட்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்ட அந்த வாரம், ஒரு குப்பை பார வண்டி தொடர்பாகத்தான் அவர் மெம்ஃபிஸுக்கு வந்தார். இரண்டு மாதஙக்ளுக்கு முன்பு, இரண்டு கருப்பின துப்புரவுத் தொழிலாளர்கள் — எகோல் கோல் மற்றும் ராபர்ட் வாக்கர் – அந்த பார வண்டியில், மழைக்காக ஒதுங்கியிருந்தனர்.

அதில் ஒரு ஸ்விட்ச் பழுதடைந்து இருந்ததால் இருவரும் நசுங்கி இறந்தனர். அவர்களது மரணம், அதற்கு நகரத்தின் எதிர்வினை, தொழிலாளர்களின் நிலை, இவை அனைத்தும், நூற்றுக்கணக்கான கருப்பின தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு காரணமானது.

எனவே, மார்ட்டின் லூதர் கிங் ஒரு ஏப்ரல் நல்லிரவில், மெம்ஃபிஸிலுள்ள மேசன் டெம்பிளில் 2,000 பேரின் முன் நின்றபோது, அது எகோல் கோல், ராபர்ட் வாக்கர், மற்றும் அவர்களின் சக ஊழியர்களுக்கானதாக இருந்தது.

இருப்பினும், அடுத்து நடந்ததோ, வேறு பல விஷயங்களுக்காக நினைவு கூரப்படுகிறது.

‘நான் சிகரத்திற்குச் சென்று வந்துவிட்டேன்’

உண்மையில், அந்த உரை வேலை நிறுத்தத்தைப் பற்றியதல்ல — முதல் 11 நிமிடங்களுக்கு அது பற்றி அவர் குறிப்பிடப்படவில்லை — ஆனால் அது கருப்பினத்தவர்களின் போராட்டத்தைப் பற்றியும், அதில் கிங்கின் பங்கினைப் பற்றியுமாக இருந்தது. அதன் இறுதிப் பகுதி, தீர்க்கபார்வை போல இருந்தது.

“கடினமான நாட்களை நாம் சந்திக்க இருக்கிறோம்,” என்று மார்டின் லூதர் கிங் மக்களிடம் கூறினார். “ஆனால் உண்மையில் அது எனக்கு பிரச்னை இல்லை, ஏனெனில் நான் சிகரத்திற்குச் சென்று வந்து விட்டேன், நான் கவலைப்படவில்லை.

“எவரையும் போல, நானும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுகிறேன் — நெடுவாழ்வு அதற்கான இடத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

“நான் கடவுளின் விருப்பத்தின்படியே செயல்பட விரும்புகிறேன். அவர்தான் என்னை மலை உச்சி வரை இட்டுச்சென்றவர். நான் அங்கிருந்து நமக்கு வாக்களிக்கப்பட்ட நாடு எத்தகையது என்பதை கண்டிருக்கிறேன்.

மார்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட இடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது

பட மூலாதாரம், Getty Images

“என்னால் உங்களோடு அங்கு வர முடியாமல் போகலாம். ஆனால் இன்றிரவு உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், நாம் ஒரு மக்களாக, வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்வோம்.

“இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை; நான் எந்த மனிதனைக் கண்டும் பயப்படவில்லை. என் கண்கள் கடவுளின் வருகையின் பெருமையைக் கண்டிருக்கின்றன.”

அடுத்த நாள், கிங் அவரது ஹோட்டல் அறையின் பால்கனியில் நின்றிருந்தார், அப்போது அவரது வலது கன்னத்தில் சுடப்பட்டார். தொட்டா அவரது தாடையை துளைத்து, முதுகுத்தண்டின் ஊடே சென்று அவரைக் கொன்றது.

விமானப் பயணம்

‘நெடுவாழ்வு அதற்கான இடத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை,’ என்று அவர் சொல்லியிருந்தார்.

24 மணிநேரங்களுக்கும் குறைவான நேரத்தில் அப்படி அவர் பேசியிருந்தார்.

நான் வாக்களிக்கப்பட்ட நாட்டைக் கண்டிருக்கிறேன். என்னால் உங்களோடு அங்கு வர முடியாமல் போகலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை, ஏனெனில் நான் சிகரத்திற்குச் சென்று வந்துவிட்டேன் எ அவர் பேசியிருந்தார்.

மார்ட்டின் வரப்போவதை முன்பே அறிந்திருந்தாரா?

மார்டின் லூதர் கிங் படத்தை ஏந்தி போராடும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

அவர் உரையாற்றிய அன்று காலை, கிங் ஜியார்ஜியாவின் அட்லாண்டிஸிலிருந்து மெம்ஃபிஸுக்குச் சென்றார். அவரது விமானம் தாமதமாகக் கிளம்பியது.

“தாமதத்திற்கு வருந்துகிறோம்,” என்று விமானி பயணிகளிடம் சொன்னார். “ஆனால் விமானத்தில் மார்டின் லூதர் கிங் இருக்கிறார்.”

பைகள் சோதனை செய்யப்பட வேண்டியிருந்தது, யாராவது வெடிகுண்டு வைத்திருப்பார்களோ என எல்லாமே இரண்டு முறை சோதனை செய்யப்பட வேண்டியிருந்தது.

“மேலும்,” விமானி சொன்னார், “விமானத்தில் இரவு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன”

பின்தொடர்ந்த மரணம்

மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்வில், மரணம் எப்போதுமே அருகிலிருந்தது. அது அவரை பின் தொடர்ந்தது, சிலசமயம் ரகசியமாய், தெருமுனையில் அவர் திரும்பியபோது அங்கு நின்றிருந்தது.

“நீண்ட நாட்களாக, தன்னை வெள்ளை நிற வெறியர்களும், அத்தகைய குழுக்களைச் சேர்ந்தவர்களும் ரகசியமாய் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர் என்பதை கிங் அறிந்தே இருந்தார்,” என்கிறார் கிங் பற்றிய வல்லுநரும், ‘காஸ்பெல் ஆஃப் ஃப்ரீடம்’ நூலின் ஆசிரியருமான ஜானதன் ரீடர்.

“பலரும் அவரைக் கொல்ல எத்தனித்திருந்தனர் என்பதை அவை அறிந்திருந்தார். வெள்ளை நிறவெறி ஆதிக்க சக்திகள் பல சமூக உரிமை செயல்பாட்டாளர்களைக் கொன்றிருக்கிறது — மேலும் அவர் மிகவும் பிரபலமானவராக இருந்தார்.”

1956ல், மான்ட்காமெரி பஸ் புறக்கணிப்புப் போராட்டத்தின் போது, மார்ட்டின் லூதர் கிங்கின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

ஆபத்தான தசாப்தம்

மார்டின் லூதர் கிங்

பட மூலாதாரம், Getty Images

1958ல், நியூ யார்க்கில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கருப்பினப் பெண்ணால் கத்தியால் குத்தப்பட்டு, மரணத்தின் எல்லை வரை சென்று திரும்பினார். 1963ல், அலபாமாவின் பிர்மிங்ஹமில், மேடையிலிருக்கும் போதே ஒரு வெள்ளை நிறவெறியரால் தாக்கப்பட்டார்.

ஒரு வருடம் கழித்து, ஒரு பிரசாரத்திறகாக அதே நகரத்திற்குச் சென்றார். கிங்கின் நண்பர்களான ஆன்ட்ரூ யங் மற்றும் வ்யாட் வாக்கரிடம் பேசிய பேராசிரியர் ரீடர், பயணத்திற்கு முன் கிங் தன் நண்பர்களை எச்சரித்ததாகக் கூறுகிறார்.

“நாம் புல் கொன்னோரின் இடத்திற்குச் செல்லப் போகிறோம்,” என்றார் அவர். (புல் கொன்னோர், சமூக உரிமை இயக்கத்திற்கு எதிரான, அப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி.)

“புல் கொன்னோர் விளையாட்டாகச் செய்யவில்லை. நம்மில் சிலபேர் உயிருடன் திரும்பாமல் போவதற்கான சாத்தியங்கள் உள்ளன.”

எனவே மரணத்தின் நிழல் கிங்கின் பணிகள் மீது எப்போதும் இருந்தது. ஆனால் அவரும், அவரது சகாக்களும் மட்டும் அபாயத்தில் இல்லை. அமெரிக்காவில், 1960கள் ஒரு ஆபத்தான தசாப்தம்.

‘நான் இன்னும் பொருத்தமானவன் தானா?’

சேவியர் ஹிப்லர்

பட மூலாதாரம், Getty Images

அது பல கலகங்களின் காலகட்டம் (ஹார்லெம், ஃபிலடெல்ஃபியா, லாஸ் ஏஞ்சலஸ், டெட்ராய்ட், மற்றும் பிற), போர் (வியட்னாம்), மேலும் அரசியல் கொலைகள் (ஜான் எஃப் கென்னடி, மால்கம் X, மார்டின் லூதர் கிங் அவரே கூட, ராபர்ட் எஃப் கென்னடி).

“இதுதான் எனக்கு நடக்கப் போகிறது,” என்று 1963ல் ஜான் எஃப் கென்னடி கொல்லப்பட்ட பின், கிங் தன் மனைவி கொரெட்டாவிடம் சொன்னார். “நான் உன்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன், இது மோசமான சமூகம்.”

மெம்ஃபிஸுக்கு முந்தைய மாதங்களில், கிங் “மிகவும் மெல்லிய மனநிலையில் இருந்தார்,” என்கிறார் பெராசிரியர் ரீடர்.

“தான் விரும்பிய சமூகத்திற்கு நேர்மாறான பாதையில் அமெரிக்கா சென்று கொண்டிருப்பதாக அவர் அரசியல்ரீதியாக உணர்ந்தார்,” என்கிறார் அவர்.

“வெள்ளை நிறவெறி வடக்கு மாகாணங்களில் பரவியிருந்தது. ஜார்ஜ் வாலஸ் (அலபாமா ஆளுநர் ), அவரது பரம எதிரி, அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்

“இளம் கருப்பினத்தவர்களும், சமூக உரிமை செயற்பாட்டாளர்களும், அவரது கிறிஸ்தவ அகிம்சா நெறிகளிலிருந்து விலகத் துவங்கினர். தாம் இன்னும் பொருத்தமானவனாக இருக்கிறோமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.”

அந்த சந்தேகம், விர்ஜீனியாவில் ஒரு ஹோட்டல் அறையில், அவர் இறப்பதற்கு ஏழு மாதங்களுக்கு முன் வெளிப்பட்டது. சகாக்களுடனான ஒரு சந்திப்பில், கிங் தனியே குடித்துக்கொண்டிருந்தார், அப்போது சத்தம்போட்டு அவர்களை எழுப்பினார்.

“இனியும் இதைச் செய்ய எனக்கு விருப்பமில்லை!” என்று அவர் கூச்சலிட்டார். “எனது சிறிய தேவாலயத்திற்குத் திரும்ப வேண்டும்!” ஆனால், அவர் அங்கு திரும்பவில்லை.

அணையாத சுடர்

மார்டின் லூதர் கிங்

பட மூலாதாரம், Getty Images

அவர் மேற்சென்றுகொண்டே இருந்தார்; போராடிக்கொண்டே; உரிமைகளை கோரிக்கொண்டே. அதனால்தான் ஒரு ஏப்ரல் மழைநாளில், அவர் கருப்பினத் தொழிலாளர்களுக்காக மெம்ஃபிஸிலுள்ள மேசன் டெம்பிளில்ம் நின்றிருந்தார். அப்போது அவருக்கு 39 வயது.

“அவர் இன்னும் சில நாட்களில் தனது மரணத்தைக் கணித்திருந்தாரா என்பது முக்கியமல்ல — ஆனால் அது காலத்திலும், வெளியிலும் மிக அருகிலிருக்கிறது என்று அறிந்திருந்தார்.

“தனது வாழ்க்கை எக்கண்மும் முடிந்து போகலாம் என்பதைப் புரிந்துகொண்டு, அவர் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறார், அதன் அர்த்தத்தைச் சிந்திக்கிறார்.”

மெம்ஃபிஸ் உரையின் முடிவில் கிங் 10 வருடங்களுக்கு முன்பு தான் நியூ யார்க்கில் கத்தியால் குத்தப்பட்டதைப் பற்றிப் பேசினார்.

தான் தும்மியிருந்தால் கூட இறந்து போயிருக்கக்கூடும் என்ற அவர் பல வரலாற்றுத் தருணங்களை இழக்க நேர்ந்திருக்கும் என்றும் கூறினார்.

“இன்றிரவு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்,” என்று மக்களிடம் பேசிய அவர், “அன்றைய தினம் நான் தும்மாமல் இருந்ததற்கு மகிழ்கிறேன்” என்றார்.

அவரது இறுதி வார்த்தைகள், மரணம் சாத்தியப்படகூடும் என்பதன் ஏற்பு மட்டுமல்ல. அவை, தீப்பந்தத்தை அடுத்து வருபவரிடம் கொடுப்பதற்கான தான் கொல்லப்பட்டாலும், சுடரை அணையாமல் காப்பதற்கான முயற்சி.

“நான் ஜெயிக்காவிட்டாலும், நாம் ஜெயிப்போம், என்று அவர் சொல்கிறார்,” என்கிறார் பேராசிரியர் ரீடர்.

“மரணத்திற்குத் தயாராகும் போதும், அவர் நம்பிக்கையிழக்கவில்லை. “அவரது உரை முழுக்க விரவியிருக்கும் கருத்து: ‘நாம் பெருமைகொள்ள நிறைய இருக்கிறது’ என்பதுதான். ‘நான் இறந்தாலும், நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்,’ என்று அவர் சொன்னதாகப் பார்க்கிறேன். வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அருகில் நம்மை இட்டுச்செல்ல என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன்.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »