Press "Enter" to skip to content

இயற்கை அதிசயம்: ஆக்டோபஸை வகையாகச் சமைத்துச் சாப்பிடும் இந்தியப் பெருங்கடல் தீவு

  • அந்தோணி ஹாம்
  • பிபிசி ட்ராவல்

பட மூலாதாரம், Getty Images

முதல் முறையாக நீங்கள் ரோட்ரிக்ஸ் தீவுக்குச் சென்றால் விமானத்தில் இருந்து இறங்கும் முன்னரே அச்சத்தில் உறைந்துவிடுவீர்கள். ஏனென்றால், விமானத்தில் இருந்து பார்க்கும்போது இங்கு விமானம் இறங்குவதற்கான தளம் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படக்கூடும்.

மொரீஷியஸுக்கு வடகிழக்கே 600கிமீ தொலைவில் இருக்கும் தனி உலகம் அது. அதற்கு அருகே எந்த நிலப்பரப்பும் கிடையாது. இது உலகின் மிக தொலைதூரத்தில் மக்கள் வசிக்கும் தீவுகளில் ஒன்று.

விமானத்தில் இருந்து பார்த்தால் ​​ரோட்ரிக்ஸ் என்பது கடல், காயல், வட்டவடிமான நிலப்பரப்புகளைக் கொண்ட அழகான இடமாகும். அலைகள்தான் ரோட்ரிகஸின் வெளிப்புற எல்லையைக் வகுக்கின்றன.

ரோட்ரிக்ஸ் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக இருந்தால், அங்கிருந்து யாரும் தப்பிக்க முடியாது. தனிமைதான் இந்தத் தீவின் நண்பன். அது உலகத்திலிருந்தும் அதன் சத்தத்திலிருந்தும் இந்தத் தீவைப் பாதுகாக்கிறது.

ரோட்ரிக்ஸ் தீவுக்கு 1528 இல் முதன்முதலாகக் கப்பல்கள் வந்தபோது முதலாவது மனிதன் வந்திறங்கியதாக வரலாறு பதிவு செய்திருக்கிறது. அந்தத் தீவில் அப்போது யாரும் வசிக்கவில்லை.

ஒருவேளை அதற்கு முன்னர் அந்த வழியாகச் சென்ற கப்பல்களின் பணியாளர்கள் யாரும் இங்கு கரைக்கு வந்திருந்தால்கூட அதற்கான பதிவுகள் எதையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை. அதனால் 1528-க்கு முன்பு ரோட்ரிக்ஸ் ஓர் ஆளில்லாத் தீவாகவே இருந்திருக்கிறது.

கிழக்கு ஆப்பிரிக்காவை அரேபியா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் பரபரப்பான கடல் வர்த்தகப் பாதைகளில் இருந்து வெகு தொலைவு கிழக்கிலும் வெகு தொலைவு தெற்கிலும் இருக்கிறது ரோட்ரிக்ஸ். போர்த்துகீசிய, டச்சு மற்றும் பிரஞ்சு கப்பல்கள், 16 ஆம் நூற்றாண்டில் இடையிடையே ரோட்ரிக்ஸில் தங்கியிருந்தபோதும் கூட, தங்கள் உணவுப் பொருட்களை நிரப்புவதற்குத் தேவையான காலம் மட்டுமே இங்கு தங்கியிருந்தனர்.

ரோட்ரிகஸ்

பட மூலாதாரம், Getty Images

1691 ஆம் ஆண்டில், பிரான்சின் கத்தோலிக்க அரசாங்கத்தின் மதத் தண்டனையில் இருந்து தப்பித்து, பிரான்சுவா லெகுவாட் என்ற பிரெஞ்சுக்காரர் ரோட்ரிக்ஸ் தீவுக்கு வந்தார். ரோட்ரிகஸில் பல ராட்சத ஆமைகள் இருப்பதாக தனது குறிப்புகளில் அவர் எழுதியிருக்கிறார்.

“ஒருவர் தரையைத் தொடாமல் ஆமை ஓட்டின் மேலேயே 100 காலடிகளுக்கும் அதிகமாக எடுத்து வைக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

லெகுவாட்டும் அவருடன் வந்தவர்களும் ரோட்ரிகஸில் முதல் காலனியைத் திட்டமிட்டனர். ஆனால் மிகத் தொலைவாக இருப்பதும், பெண்கள் இல்லாததும் அவர்களுக்குக் கடினமாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனிமையைத் தாங்க இயலாமல், ஒரு படகைக் கட்டி அவர்கள் தீவை விட்டு வெளியேறினர். அதன் பிறகு அவர்கள் திரும்பிவரவேயில்லை.

தீவை விட்டு லெகுவாட்டை வெளியேற்றிய அதே தனிமைதான் இன்றைக்கு மக்கள் அந்தத் தீவின் மீது ஈர்ப்பு கொள்ளவும் காரணமாகியிருக்கிறது. கொரோனா பரவுவதற்கு முந்தைய காலங்களில், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மொரீஷியஸுக்கு வருகை தந்தனர். இவர்களில் சுமார் 90,000 பேர் ரோட்ரிக்ஸுக்கு பயணம் செய்தனர்.

இந்தத் தீவில் போக்குவரத்து நெரிசல்கள் இல்லை. பரபரப்பாக எதுவும் நடக்காது. குற்றங்கள் கிட்டத்தட்ட இல்லை.

“ரோட்ரிக்ஸ் மிகவும் பாதுகாப்பான இடம். வெப்பமான காலங்களில் நாங்கள் எங்கள் கதவுகளைத் திறந்து வைத்தே தூங்குகிறோம்.” என்கிறார் 54 ஆண்டுகளாக ரோட்ரிகஸில் வாழ்ந்த மொரிஷியஸின் சிறந்த சமையல் கலைஞர்களில் ஒருவரான ஃபிரான்சுவா பாப்டிஸ்ட்.

தீவு

பட மூலாதாரம், Getty Images

பாதுகாப்பு என்பது இந்த் தீவின் அமைதியில் இருந்தே வருகிறது. ரோட்ரிக்ஸ் 45,000 க்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இவர்கள் கடந்த காலத்தில் ஆப்பிரிக்க அடிமைகள் மற்றும் ஐரோப்பிய குடியேறியவர்களின் வழிவந்தவர்கள். “ஆப்பிரிக்காவிலிருந்து சேகா நடனம், பிரிட்டனில் இருந்து மதிய தேநீர், பன்றி இறைச்சி ஆகிய பாரம்பரியங்களைப் பெற்றோம்” என்று பாப்டிஸ்ட் கூறினார்.

ரோட்ரிக்ஸ் என்பது ஒரு கிராமத்தைப் போல. இங்கு அனைவருக்கும் அனைவரையும் தெரியும்.

ரோட்ரிகஸின் தலைநகரான போர்ட் மாதுரின் கூட எப்போதாவதுதான் பரபரப்பாகிறது. அதுவும் ஒரு கப்பல் துறைமுகத்துக்கு வந்தால் மட்டுமே. சனிக்கிழமை சந்தைகளில் கூட்டம் தென்படலாம். அங்கும் 10 மணிக்குப் பிறகு ஆள் நடமாட்டம் இருக்காது.

தீவின் மேற்கில், ஒரு நிலப் பகுதியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக இந்தத் தீவில் குடியேறியவர்கள், மாலுமிகள் போன்றவர்களால் தீவின் ஆமைகள் அழிந்துபோயின். பெரும்பாலான மரங்களை வெட்டப்பட்டன. இந்த வளங்களை மீட்டெடுக்கும் முயற்சி சமீபத்திய ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதற்காக, இந்தியப் பெருங்கடலின் வெவ்வேறு இடங்களில் இருந்து ராட்சத ஆமைகளை வரவழைக்கப்பட்டன. ரோட்ரிகஸை பூர்விகமாகக் கொண்ட சுமார் ஒரு லட்சம் மரங்களை நட்டுள்ளனர்.

மேற்கு கடற்கரையோரத்தின் குறுகிய சாலையோரத்தில் மரச்சட்டங்கள் வரிசையாக இருக்கும். அவற்றின் மீது பேய்கள் போல வெள்ளை ஆக்டோபஸின் கால்கள் அசைவதைக் காணலாம்.

ஆக்டோபஸ்

பட மூலாதாரம், Anthony Ham

ஆக்டோபஸ் என்பது ரோட்ரிகஸ் கலாச்சாரத்தின் மையமாகும். உணவின் மிகவும் முக்கியமான அங்கமாகும். ரோட்ரிகஸில் உள்ள ஒவ்வொருவரும் வாரத்தில் குறைந்தது இரு முறையாவது ஆக்டோபஸை சாப்பிடுகிறார்கள்.

கடலுக்குப் போய் ஆக்டோபஸை பிடிக்கும் பணியை பெரும்பாலும் பெண்களே செய்கிறார்கள். அதிகாலை நேரத்தில் ஆக்டோபஸ் பிடிக்கும் பெண்களைப் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் அவர்கள் வீட்டுக் கடமைகளைச் செய்கிறார்கள்.

ரோட்ரிகஸின் தேசிய உணவான ஆக்டோபஸை அழியாமல் காக்க வேண்டிய கட்டாயத்தில் இங்குள்ள அதிகாரிகள் இருக்கிறார்கள். அத்துமீறி ஆக்டோபஸ் பிடிப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பிப்ரவரி, மார்ச் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் யாரும் ஆக்டோபஸை பிடிக்க முடியாது.

தீவின் ஒரு முனையில், ஆக்டோபஸை விதவிதமாகச் சமைத்துப் பறிமாறுகிறார்கள். வறுக்கப்பட்ட ஆக்டோபஸ், ஆக்டோபஸ் கறி, ஆக்டோபஸ் குழம்பு என பல ரகம். அத்துடன் இறால் உள்ள வேறு வகையான உணவுகளும் கிடைக்கும். ரோட்ரிகஸுக்கு வந்துவிட்டால் ஆக்டோபஸை சாப்பிடாமல் போக முடியாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »