Press "Enter" to skip to content

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை? தேர்தல் ஆணையம் ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images

(இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.)

வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக இந்திய தேர்தல் ஆணையக்குழு தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய குழு அண்மையில் தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது. அந்த நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரிடம் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கலந்துரையாடினார்.

அப்போது “புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க ஆண்டுக்கு 4 தகுதி தேதிகள், ஆதார் எண் இணைத்தல், வாக்குச் சாவடிகளில் முதியவர்களுக்கு முன்னுரிமை, கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கீடு, பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் என பல்வேறு சீர்திருத்தங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவிபாட், மத்திய பார்வையாளர்கள் என பல்வேறு நடைமுறைகள் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. பாதுகாப்புப் படை வீரர்களுக்காக மின்னணு தபால் வாக்குரிமை திட்டம் (இடிபிபிஎஸ்) வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதே திட்டத்தை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நீட்டிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என சுஷில் சந்திரா பேசியதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்திதெரிவிக்கிறது.

இனி ஆண்டுக்கு 6 கிராமசபைக் கூட்டங்கள் – மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Screengrab

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி ஆண்டுதோறும் 6 கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வானது, இனி பின்பற்றப்படும்.

அதன்படி, இனி ஆண்டுதோறும் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கடைப்பிடிக்கப்படும். மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம். இந்த இரண்டு தினங்களிலும் கூடுதலாக இனி கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

அதன்படி, ஜனவரி 26- குடியரசு தினம், மே -1 தொழிலாளா் தினம், ஆகஸ்ட் -15 சுதந்திர தினம், அக்டோபா் – 2 காந்தியடிகள் பிறந்த தினம், மாா்ச் – 22 உலக தண்ணீா் தினம், நவம்பா் – 1 உள்ளாட்சி தினம் ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா் என தினமணி நாளிதழின் இணையத்தில் செய்து வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு உதவ முன்வரும் உலக வங்கி

உலக வங்கி

பட மூலாதாரம், Getty Images

இலங்கையின் மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உதவ முன்வந்துள்ளதாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் மருத்துவ சேவை பிரிவுகளில் 525 மருந்து வகைகளுக்கும் , 5,376 சத்திர சிகிச்சை மருந்து வகைகளும் நிறைவடைந்துள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திடீர் இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல முக்கிய உயிர் பாதுகாக்கும் நோய்களுக்கு உயோகிக்கும் மருந்துகள் பலவும் இவற்றில் அடங்குகின்றன. இதே போன்று தனியார் வைத்தியசாலையில் 76 முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தனியார் வைத்தியசாலை மற்றும் தாதியர் இல்ல சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஒட்டுமொத்தமாக மருந்துவ கட்டமைப்பில் சுமார் 5,900 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக 30 மில்லியன் டாலரை வழங்குவதற்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய தட்டுப்பாடு நிலவும் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு உலக சுகாதார நிறுவனத்திடமும் நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சிறந்த பதில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி அரசு அமைய கோரிக்கை

பிரதமரும், அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து விட்டு அனைத்துக் கட்சி அரசு அமைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டல்லஸ் அழகபெரும ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக டெய்லி மிர்ரர் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து வரும் பொருளாதார, அரசியல் நெருக்கடியால் நாடு பெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. இதனை சமாளிக்க அனைத்துக் கட்சி அரசு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காவது ஓராண்டுகாலத்துக்கு அனைத்துக்கட்சி அரசு அமைக்கப்படவேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிய இரண்டு பக்க கடிதத்தில் விளக்கி கோரிக்கை வைத்துள்ளார் டல்லஸ் என்று டெய்லி மிர்ரர் செய்தி தெரிவிக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »