Press "Enter" to skip to content

சீனாவுக்காக இந்தியாவை ரஷ்யா பகைத்துக்கொள்ளுமா?

  • ரஜ்னீஷ் குமார்
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

மோடி அரசின் தவறான வியூகத்தால் சீனாவும் பாகிஸ்தானும் தோளோடு தோள் சேர்ந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 2ஆம் தேதி மக்களவையில் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பின்பற்றப்படும் தவறான உத்தியால் சீனா-பாகிஸ்தான் ஒன்றிணைந்துள்ளதாகவும், இந்திய மக்களுக்கு எதிராக அரசாங்கம் பெரிய குற்றத்தைச் செய்துள்ளதாகவும் மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

யுக்ரேன் நெருக்கடி ரஷ்யாவையும் சீனாவையும் ஒன்றாக இணைத்துள்ளது என்றும் இப்போது கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைவது இந்தியாவுக்கு எந்த வகையிலும் நல்லதல்ல. இந்தியா இரு நாடுகளுடனும் எல்லைத் பிரச்னைகளை கொண்டுள்ளதுடன் இரு நாடுகளுடனும் இந்தியா போர்களையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா பாரம்பரியமாக இந்தியாவின் நட்பு நாடாகக் கருதப்படுகிறது, ஆனால் யுக்ரேன் நெருக்கடியால் எழுந்த உலகளாவிய சூழ்நிலையில், ரஷ்யாவிற்கு சீனாவின் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

சீனாவின் முக்கியத்துவத்தை இந்தியா குறைக்க முடியாத சூழ்நிலையில், ரஷ்யா, சீனாவுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்வது இயல்பானது.

கடந்த திங்களன்று (25.04.2022) புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்தர `ரைசினா` உரையாடல் அமர்வின் தொடக்க விழாவில் உரையாற்றிய ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன், “ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புக்கு எல்லையே இல்லை” என்று கூறினார்.

உர்சுலா இவ்வாறு கூறும்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் உடனிருந்தனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

சீன- ரஷ்ய உறவு இந்தியாவிற்கு ஆபத்தானதா?

ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக எத்தனை முறை வாக்கெடுப்புகள் நிகழ்ந்த போதும், இந்தியா வாக்களிக்கவில்லை. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கவுமில்லை.

மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் ரஷ்யா தொடர்பான தனது உத்தியை இந்தியா மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், சீனாவும் ரஷ்யாவும் நெருங்குவதைத் தடுப்பதில் இந்திய உத்தி வெற்றி பெற்றதா? என்ற கேள்வி எழுகிறது.

“இப்போது இந்தியாவுக்கு இது மிகவும் கடினமான சூழ்நிலை. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை, இந்தியாவின் அறிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் மாறியுள்ளன. ஆரம்பத்தில், அனைத்து தரப்பு பாதுகாப்பு குறித்த கவலையை இந்தியா வெளியிட்டது. பின்னர் இறையாண்மை குறித்துப் பேசியது. புச்சா மீதான ரஷ்யத் தாக்குதலை இந்தியா கண்டித்தது. ஆனால், வெளிப்படையாக ரஷ்யா என்று குறிப்பிடவில்லை. இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் பாரம்பரியம் மிக்கவைதான். ஆனாலும், தற்போதைய சூழலில், சீனாவின் ஆதரவு, ரஷ்யாவுக்கு மிகவும் அவசியம். அமெரிக்காவை எதிர்க்க, சீனாவுக்கும் ரஷ்ய ஆதரவு அவசியம்” என்கிறார் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழின் சர்வதேச ஆசிரியர் ரெசா-உல் ஹசன் லஸ்கர்,

சீனாவுடனான ரஷ்யாவின் கூட்டு இந்தியாவுக்கு எதிராக அமையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹசன் லஸ்கர், “இந்தியாவின் நிலைமை மிகவும் உணர்ச்சிகரமானது என்றுதான் என்னால் கூற முடியும். சமநிலைப்படுத்தும் நிலைப்பாட்டை இந்தியா கடைபிடிக்க வேண்டும்.” என்றார்.

ரஷ்யாவிற்கு அதிகரிக்கும் சீன சார்பு

சீனா - ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் கடந்த 30 வருடங்களாக விரிவடைந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே மெய்நிகர் உச்சி மாநாடு நடைபெற்றது.

அண்டை நாட்டு நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 20வது ஆண்டு நிறைவையொட்டி இந்த உச்சிமாநாடு நடந்தது. உச்சிமாநாட்டிற்குப் பிறகு, அதிபர் புதின் மற்றும் ஜின்பிங் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

“பனிப்போர் காலத்தில் இருந்தது போல, ராணுவ மற்றும் அரசியல் கூட்டணிகள் இல்லை, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அதை விட அதிகமாக உள்ளது. எங்கள் உறவு சந்தர்ப்பவாதத்திற்கு அப்பாற்பட்டது, நாங்கள் ஒருவருக்கொருவர் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் காலத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை இருந்து வந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் படிப்படியாக வலுப்பெற்றுள்ளன.

வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்

இரு நாடுகளின் பொருளாதாரங்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன. ரஷ்யா இயற்கை வளங்கள் நிறைந்தது ஆனால் அதற்கு தொழில்நுட்பம் தேவை. இந்த விஷயத்தில் சீனா ரஷ்யாவுக்கு உதவியாக உள்ளது. 2060 ஆம் ஆண்டுக்குள் தனது பொருளாதாரத்தை கார்பன் இல்லாததாக மாற்றுவோம் என்று சீனா அறிவித்துள்ளது.

தரைவழியாக ரஷ்யாவை அணுகுவதை உறுதி செய்வதில் சீனா ஈடுபட்டுள்ளது, எனவே ஐரோப்பிய சந்தையை சீனா அதிகம் சார்ந்திருப்பதை ரஷ்யா குறைக்க விரும்புகிறது. இது தவிர, இரு நாடுகளின் அரசியல் மற்றும் உள்நாட்டு அமைப்பில் ஒற்றுமை இல்லையென்றாலும், இரு நாடுகளிலும் ஆளுமையை மையமாகக் கொண்ட ஒரு ஆட்சி உள்ளது.

இரு நாடுகளும் இணைந்து ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இருவருக்குமிடையிலான இராணுவப் பயிற்சிகளும் விரிவடைந்துள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இரு நாடுகளும் ஒரே குரலில் பேசுகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவின் சீன சார்பு அதிகரித்துள்ளது.

ரஷ்ய- சீன உறவு உண்மையில் வரம்பற்றதா?

சீனா - ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

அலெக்சாண்டர் காபுவேவ் சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் ஆவார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஆழம் இருந்தாலும், அதற்கும் வரம்புகள் உள்ளன என்று கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி இவர் எழுதினார்.

உதாரணமாக, கிரைமியா விவகாரத்தில் ரஷ்யாவை சீனா ஆதரிக்கவில்லை. சிரியா மற்றும் ஆப்ரிக்காவில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை சீனா ஆதரிக்கவில்லை. அதே போல், தைவான் விவகாரத்தில் ரஷ்யா தீவிரமாக சீனாவை ஆதரிக்கவில்லை. தென் சீனக் கடலில் கூட, சீனாவின் ராணுவ தளங்களை ரஷ்யா ஏற்கவில்லை.

மேலும், அலெக்சாண்டர் காபுவேவ் கூறுகையில், “பொருளாதார ரீதியாகவும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு வரம்புகள் உள்ளன. வரலாற்றில் ரஷ்யாவில் சீன நிறுவனங்களால் பெரிய முதலீடு இல்லை. ரஷ்யாவிலும் முதலீட்டு சூழல் இப்படி இல்லை. இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் அதிகரித்து வருகிறது, அப்போதும் இதுதான் நிலைமை.” என்று கூறுகிறார்.

உலகளாவிய ஆயுத ஏற்றுமதி

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்பு சமமாக இல்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. ரஷ்யாவின் சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் பங்கு 2013 இல் 10.5 சதவீதமாக இருந்தது, இது 2021 இல் சுமார் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் சீனாவின் பங்கு மேலும் அதிகரிக்கும். மறுபுறம், ரஷ்யா மீது சீனாவின் பொருளாதார சார்பு மிகவும் குறைவு.

2021 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வர்த்தகத்தில் ரஷ்யாவின் பங்கு 2.4 சதவீதமாக மட்டுமே இருந்தது. ரஷ்யாவுக்கு சீனா அதிகம் தேவை என்றும், சீனாவுக்கு ரஷ்யாவின் தேவை குறைவு என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் சீனாவுடனான உறவுகள் நன்றாக இல்லை, ஆனால் ரஷ்யாவுடனான உறவுகள் மிகவும் நன்றாக உள்ளன. சோவியத் காலத்தில் இருந்தே இந்தியா மற்றும் வியட்நாமுடன் ரஷ்யாவின் உறவுகள் நன்றாகவே உள்ளன.

இந்தியாவின் நிலைப்பாடு

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மத்திய ஆசியா மற்றும் ரஷ்ய ஆய்வு மையத்தின் தலைவர் அர்ச்சனா உபாத்யாய், ரஷ்யா இந்தியாவை விட்டு சீனாவுக்கு நெருக்கமாகச் செல்ல முடியாது, இந்தியா ரஷ்யாவை விட்டு மேற்கு நாடுகளுக்கும் செல்ல முடியாது என்று கூறுகிறார்.

“ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்பு எல்லையற்றதில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சமீப காலங்களில் ஆழமடைந்துள்ளன, ஆனால் இரு நாடுகளின் தேவைகளும் ஒன்றுக்கொன்று முரண் படுகின்றன. சீனாவுடனான அசல் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மோதல்கள் நடந்தன. கள்வான் பள்ளத்தாக்கில், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் வீரர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் ரஷ்யா ஆயுத விநியோகத்தை நிறுத்தவில்லை. ரஷ்யா ஒருபோதும் இந்தியாவை விட்டு விலகியதில்லை. இனியும் விலகாது என்று நான் நினைக்கிறேன்.” என்கிறார் அவர்.

இந்தியா ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

மேற்கத்திய நாடுகளின் கண்கள் இந்தியாவின் சந்தையின் மீது இருப்பதாக அர்ச்சனா உபாத்யாய் கூறுகிறார். “இந்தியாவின் ஆயுதத் தேவைகளில் ரஷ்யாவின் பங்கை மேற்கத்திய நாடுகள் அகற்ற விரும்புகின்றன, ஆனால் மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதச் சோதனைகளுக்கு தடை விதித்ததை இந்தியா மறக்காது. அமெரிக்கா பாகிஸ்தானை ஊக்குவித்து இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை அதிகரித்தது. இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ரஷ்யாவின் கூட்டாளித்துவம் இந்தியாவுக்கு முக்கியம். இந்தியா எந்த அழுத்தத்திலும் அதை விட்டுவிட முடியாது. ரஷ்யா இயற்கை வளங்கள் நிறைந்தது, வரவிருக்கும் நாட்களில் நமது ஆற்றல் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கப் போகிறது.” என்கிறார் அர்ச்சனா உபாத்யாய்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இப்போது அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளது என்றும், இதற்கு சமீபத்திய உதாரணம், இந்தியாவில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்காவுக்கு சில கருத்துகள் இருந்தால், இந்தியாவுக்கும் அமெரிக்காவில் மனித உரிமை மீறல் குறித்த கருத்து உண்டு என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் வெளிப்படையாகக் கூறியதுதான் என்கிறார் அர்ச்சனா உபாத்யாய்.

இந்தியாவின் பதில் அமெரிக்காவில் முதல் முறையாகச் சரியான மொழியில் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார். இது தவிர, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்த விஷயத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர், ​​எஸ் ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் இருந்து ஒரு மதிய நேரத்தில் ஐரோப்பா வாங்கும் எண்ணெயை, இந்தியா ஒரு மாதத்தில் வாங்குகிறது என்று கூறியிருந்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »