Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் சீனர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய ஷாரி பலூச் குடும்பம் கூறுவது என்ன?

  • ரியாஸ் சுஹைல்
  • பிபிசி உருது, துர்பத்

பட மூலாதாரம், BLA

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, கராச்சி பல்கலைக்கழகத்தில் கன்ஃபூசியஸ் நிறுவனத்திற்கு அருகே நடந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் மூன்று சீன ஆசிரியர்களும் ஒரு பாகிஸ்தான் ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்.

பிரிவினைவாத பலூச் விடுதலை ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியது.

பல வார அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு புதிதாக நிறுவப்பட்ட அரசுக்கு இந்த சம்பவத்தை கையாள்வது ஒரு முக்கியமான சவாலாக உள்ளது.

பாகிஸ்தானுக்கு நீண்டகால நட்பு நாடாகவும் முக்கிய முதலீட்டாளராகவும் இருக்கும் சீனா, பாகிஸ்தானில் பெரிய வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் பாகிஸ்தானில் சீனா முதலீடு செய்வதை எதிர்க்கிறது. அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லையெனக் கூறுகிறது அந்த அமைப்பு.

இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஷாரி பலூச் என்ற பெண் என்று அடையாளம் காணப்பட்டார்.

பிபிசி உருது குழு அவரது வீடு உள்ள கலாதக் சென்று தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள நிலைமையைக் கண்டறிய முயன்றது.

ஷாரி பலூச்சின் தந்தை வீடு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் முக்கிய நகரமான துர்பத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலாதக் நகரம். கராச்சி தற்கொலை குண்டுவெடிப்பாளர் ஷாரி பலோச் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்திற்குப் பிறகு வாழச் சென்ற இடம் அது.

ஷாரி அதே நகரத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் தனது முதல் வேலையில் சேர்ந்தார். பிரதான சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளி கட்டடத்தைச் சுற்றி “சுதந்திரத்தின் ஒரே வழி, கொரில்லா போர்” போன்ற வாசகங்கள் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருப்பதை இன்றும் பார்க்கமுடிகிறது.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஒரு பெண் இருந்ததை காவல் துறையினர் கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகளின் உதவியுடன் கண்டறிந்தனர். இதை தொடர்ந்து பலோச் விடுதலை ராணுவத்தின் மஜீத் படைப்பிரிவின் ஷாரி பலோச்தான் இந்த தற்கொலை குண்டுவெடிப்பாளர் என்று அடையாளம் காணப்பட்டார்.

கராச்சியில் ஷாரி பலூச்சின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க சிந்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

துர்பத் நகரத்திலிருந்து கலாதக்கை அடைந்ததும், ஒரு வழிப்போக்கரிடம் பள்ளி முகவரியைக் கேட்டபோது, “எந்த பெண்கள் பள்ளிக்கூடம்?”என்று அவர் வினவினார். ஷாரி ஆசிரியையாக இருந்த பள்ளிக்கூடம் என்று சொன்னபோது, அவர் ஒரு கட்டடத்தை நோக்கி கை காட்டினார்.

ஆறு அறைகள் கொண்ட பள்ளியைப் பார்க்கும்போது, சமீபத்தில்தான் மராமத்து செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பலூசிஸ்தான் அரசின் கூட்டு முயற்சி என்று கூறும் பலகை கட்டடத்திற்கு வெளியே மாட்டப்பட்டுள்ளது.

ஷாரி பலூச்சின் தோழி ஒருவர் எங்களிடம் பேச பள்ளி கட்டடத்திற்கு வெளியே வருமாறு அழைத்த காரணத்தாலும் தான் நாங்கள் பள்ளியைத் தேடினோம்.

ஷாரியின் தோழிக்காக நாங்கள் கட்டடத்திற்கு வெளியே காத்து நின்றோம். ஆனால் விரைவில் அந்தப் பெண் தன்னால் அங்கு வர இயலாது என்றும் தனது சகோதரர் அங்கு வர தன்னை அனுமதிக்கவில்லை என்றும் கூறிவிட்டார்.

இந்த பதில் கிடைத்ததும் நாங்கள் மீண்டும் துர்பத்துக்குச் சென்று ஷாரியின் வீட்டைத் தேட ஆரம்பித்தோம். ஷாரி பலூச்சின் தந்தை ஹயாத் பலூச்சின் வீடு துர்பத் நகரின் ஓவர்சீஸ் காலனியில் உள்ளது என்றும் ஹயாத் பலூச், துர்பத் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் எங்களிடம் கூறப்பட்டது. முன்னதாக அவர் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையிலும் பணியாற்றியுள்ளார்.

தேடிப்பிடித்து அந்த வீட்டை அடைந்தபோது, அந்தத் தெருவில் அரசு நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட சில வாகனங்கள் ஏற்கனவே இருப்பதைக் கண்டோம்.

“அவர் வரவில்லை, இந்த செய்தி தான் வந்தது”

பங்களா போன்ற வீட்டின் முற்றத்தில் சுமார் ஒரு டஜன் பேர் இருந்தனர். மேலும் பலர் உள் அறையில் அமர்ந்திருந்தனர். ஆனால் இந்தச் சம்பவம் குறித்து அங்கு பேச்சு எதுவும் நடக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

சீன குடிமக்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய ஷாரி பலூச்சின் குடும்ப உறுப்பினர்கள் சொல்வது என்ன - கள நிலவரம்

பட மூலாதாரம், BBC URDU

இவர்கள் ஹயாத் பலூச்சிடம் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்க வந்திருந்தனர். தத்ஃபின் (இறுதிச் சடங்கு) இன்னும் நடைபெறாததால், ஃபதேஹா குவானி(அஞ்சலி கூட்டம்) நடக்கவில்லை. ஷாரியின் உடலைப்பெற உறவினர்கள் சிலர் கராச்சிக்கு சென்றிருப்பது எங்களுக்கு தெரியவந்தது.

ஷாரியின் தந்தை ஹயாத் பலோச்சிடம் இந்த சம்பவம் பற்றி எப்போது தெரியவந்தது என்று கேட்டேன். இதற்கு பதிலளித்த அவர், செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் இந்த செய்தி வந்தது என்றும் அதைப்பார்த்த பிறகுதான் தனக்கு விஷயம் தெரியும் என்றும் கூறினார். அப்போதில் இருந்து அவர் அதிர்ச்சியில் இருக்கிறார்.

கடைசியாக வந்தபோது

இந்த நேரத்தில், அவரது குரல் சிறிது கம்மியது. ஆனால் விரைவில் அவர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டார்.

ஷாரி ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள துர்பத்துக்கு வந்திருந்தார் என்றும் கடைசியாக சில வாரங்களுக்கு முன்பு கராச்சியில் தனது மகளைச் சந்தித்தபோது, விரைவில் துர்பத்திற்கு வருவேன் என்று ஷாரி தெரிவித்ததாகவும் ஆனால் அவர் வரவில்லை இந்த செய்திதான் வந்துள்ளது என்றும் ஹயாத் பலோச் குறிப்பிட்டார்.

ஹயாத் பலூச்சிற்கு 10 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 31 வயதான ஷாரி ஆறாவது குழந்தை. ஷாரி, குவெட்டா பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பிறகு அவர் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியராக இருந்தார். இந்த நேரத்தில் அவர் அல்லாமா இக்பால் பல்கலைக்கழகத்தில் B.Ed மற்றும் M.Ed பட்டங்களையும் பெற்றார்.

ஷாரியைப் போலவே, ஹயாத் பலூச்சின் மற்ற குழந்தைகளும் உயர் கல்வியை பெற்றுள்ளனர். அவர்களில் பலர் அரசு பதவிகளில் உள்ளனர். ஷாரியின் கணவர் ஹெபாதன் பஷீர் ஒரு மருத்துவர். மைத்துனர்களில் ஒரு நீதிபதி, ஒருவர் உதவி கருவூல அதிகாரி. இரண்டு பேர் பல்கலைக்கழக கல்வியுடன் தொடர்புடையவர்கள்.

சீன குடிமக்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய ஷாரி பலூச்சின் குடும்ப உறுப்பினர்கள் சொல்வது என்ன - கள நிலவரம்

பட மூலாதாரம், BBC URDU

ஷாரியின் கணவர் தனது அண்டை வீட்டில் வசித்து வந்தார் என்றும் அவரை திருமணம் செய்து கொண்ட பிறகு ஷாரியும் கணவரும், கலாதக் நகருக்கு குடிபெயர்ந்ததாகவும், அங்கிருந்து கராச்சிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்ததாகவும் ஹயாத் பலூச் கூறினார்.

“அதிர்ச்சி அடைந்துள்ளோம்”

ஷாரியின் கணவர் கராச்சியில் உள்ள அமெரிக்கன் டெவலப்மெண்ட் ஏஜென்சியில் பணிபுரிகிறார். ஷாரி கராச்சி பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். செய்யவிருந்தார் ஆனால் இன்னும் சேர்க்கை நடக்கவில்லை.

ஷாரியின் தந்தையின் வீட்டில் இருந்த உறவினர்கள் ஷாரியின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரிகிறது. ஏனெனில் இந்த சம்பவம் நடந்த பிறகு, குழந்தைகள் மற்றும் ஷாரியின் கணவருடன் அவர்களுக்கு தொடர்பு இல்லாமல் இருக்கிறது.

தாக்குதல் நடந்து சுமார் 10 மணி நேரம் கழித்து, ஷாரியின் கணவர் ஹெபாதன், ஷாரி மற்றும் குழந்தைகளுடன் தான் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ஷாரி வெற்றியின் சின்னத்தை காட்டியபடி உள்ளார். இந்த படத்துடன் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தனது மனைவியின் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

பலூச் விடுதலை ராணுவம் பிபிசிக்கு அனுப்பிய செய்தியில், ஷாரி பலோச் தனது கணவருடன் கலந்தாலோசித்த பிறகு, முழு மனதுடன் இந்தத் தாக்குதலை நடத்த முடிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இந்த சம்பவம் தொடர்பான அரசின் விசாரணையில் ஹெபாதனின் தொடர்பு இதுவரை வெளியாகவில்லை. கூடவே ஷாரி பலூச்சின் குடும்பத்தினரிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.

சீன குடிமக்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய ஷாரி பலூச்சின் குடும்ப உறுப்பினர்கள் சொல்வது என்ன - கள நிலவரம்

பட மூலாதாரம், BBC URDU

ஷாரியின் தந்தையைச் சந்திப்பதற்கு முன்பு, பலூச் மொழி எழுத்தாளரும், மனித உரிமைகள் ஆணையத்தின் மூத்த செயல்பாட்டாளரும், தனது இளமைப் பருவத்தில் அரசியலில் தீவிரமாக இருந்தவருமான ஷாரியின் பெரிய சித்தப்பா கனி பர்வாஸின் வீட்டிற்கும் நாங்கள் சென்றோம்.

ஷாரியைப் பற்றி இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை. நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அன்று இரவு நான் அறையில் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அதில் ஒருவர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சொன்னார் என்று கனி பர்வாஸ் குறிப்பிட்டார்.

அந்தப் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தோம். பெயரையும் பார்த்தோம். இது உண்மையிலேயே நம் ஷாரிதான் என்று நான் சொன்னேன். பிறகு இரவில் அவர்கள் வீட்டிற்குச்சென்றோம். அவரது தந்தையாலும், பிற குடும்ப உறுப்பினர்களாலும் இதை நம்ப முடியவில்லை. ஆனால் பிறகு நம்ப வேண்டியதாயிறு. இன்னும் அது ஒரு கெட்ட கனவு போல இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

பள்ளிக்காலம் முதலே அரசியல் இலக்கியங்களில் ஆர்வம்

“ஷாரியின் உடன்பிறப்புகளுக்கு ஷாரியின் தீவிரவாத நாட்டம் பற்றித் தெரியுமா என்று அவர்களிடம் கேட்டேன். தேசியவாத அரசியலில் ஷாரி ஆர்வமாக இருந்தார், மேலும் அரசியல் பற்றி பேசுவார் என்று அவர்கள் கூறினார்கள்,” என்று கனி பர்வாஸ் குறிப்பிட்டார்.

சீன குடிமக்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய ஷாரி பலூச்சின் குடும்ப உறுப்பினர்கள் சொல்வது என்ன - கள நிலவரம்

பட மூலாதாரம், BBC URDU

இருப்பினும், தான் ஷாரியுடன் பேசும்போதெல்லாம், மெய்யியல் பற்றி மட்டுமே பேச்சு இருக்கும் என்றும் அரசியல் பற்றி பேசியது இல்லை என்றும் அவர் கூறினார். ஷாரி தன்னிடம் மெய்யியல் தொடர்பான கேள்விகளைக் கேட்பார் என்றும் அது தொடர்பான புத்தகங்களை தன்னிடமிருந்து எடுத்துச் செல்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷாரி பலூசிஸ்தான் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது அரசியலில் பங்கேற்கத் தொடங்கினார் என்று தனது சகோதரரின் கூற்றுக்கு நேர்மாறாக, ஷாரியின் தந்தை தெரிவித்தார். “ஷாரி 2012 ஆம் ஆண்டில் தனது முதுகலை பட்டம் பெற்றார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டார். துர்பத்தில் இருந்துதான் அவர் BSO வில் (பலூச் மாணவர் அமைப்பு) சேர்ந்தார். BSO வின் ‘ஆசாத்’ பத்திரிக்கையிலும் அவர் எழுதுவார்.

2013-இல் பிஎஸ்ஓ ஆசாத் மற்றும் தீவிரவாத அமைப்புகள் தேர்தலை புறக்கணித்தபோது, அன்றைய தினம் குவெட்டாவில் நடந்த பேரணியில் ஷாரி பங்கேற்றார் என்று சமூக வலைதளமான ட்விட்டரில் தீவிரமாக செயல்படும் பிஎஸ்ஓவின் மத்திய குழுவின் முன்னாள் உறுப்பினர் பிரதான் பலோச் கூறினார்.

உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே அரசியல் இலக்கியங்களைப் படிப்பதில் ஷாரி ஆர்வம் கொண்டிருந்ததாகவும் பிரதான் பலோச் கூறினார்.

ஷாரி, பலூசிஸ்தானின் மக்ரான் பகுதியைச் சேர்ந்தவர். பஸ்னி, ஓர்மாரா, ஜீவானி, குவாதர், துர்பத், பஞ்ச்கூர், டாம்ப் மற்றும் மாண்ட் ஆகிய பகுதிகள்,ஆங்கிலேய காலத்தின்’ சர்தாரிமுறை’ யில் இருந்து விடுதலை பெற்ற இடங்களாக கருதப்படுகிறது. இங்கு ஆண் மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் மற்ற பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில்அதிகமாக உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்றனர். இது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் இந்தப் பகுதி தேசியவாத மற்றும் வர்க்கப் போராட்டத்தின் முன்னணியில் உள்ளது.

சீன குடிமக்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய ஷாரி பலூச்சின் குடும்ப உறுப்பினர்கள் சொல்வது என்ன - கள நிலவரம்

பட மூலாதாரம், BBC URDU

காணாமல் போனவர்கள் தொடர்பான எதிர்வினை

ஷாரி பலூச்சின் இந்த தீவிரவாத நடவடிக்கை அவரது குடும்பத்தை கவலைக்குள்ளாக்கியுள்ள நிலையில், பலூசிஸ்தானுக்கு வெளியே உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் பலூச் மாணவர்களின் வாழ்வில் இந்த பயங்கரவாத சம்பவத்தின் தாக்கம் குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.

சில பலூச் மாணவர்கள் சமூக வலைதளங்களில் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஷாரியை நோக்கி சொல்லும்விதமாக குல்சூம் பலோச் , “சாதாரண மாணவர்கள் செழிக்க வேண்டிய இடத்தை நீங்கள் பாழாக்கிவிட்டீர்கள்! வருடக்கணக்கில் முதலீடு செய்த இடத்தையும் அழித்துவிட்டீர்கள்.”என்று எழுதினார்.

“அப்பாவிகளைக் கொல்வதில் பெருமை இல்லை. கல்வியைத் தொடர விரும்பும் பலூச் மக்களை துன்புறுத்துபவர்களுக்கும் உங்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. கராச்சி பல்கலைக்கழகத்தில் பலூச் மாணவர்கள் எந்த எதிர்விளைவுகளையும் சந்திக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் மீது துன்புறுத்தலோ அல்லது மேலும் அதிக பாரபட்சமோ காட்டப்படாது என்றும் நம்புகிறேன்.”

பல்கலைக்கழகங்களில் கண்டிப்பு இருந்தால், அதற்கு எதிர்வினை இருக்கும் என்று தான் நம்புவதாக, காணாமல் போனோரை கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் குல்சார் தோஸ்த் தெரிவித்தார்.

“காணாமல் போனவர்கள் தொடர்பான எதிர்வினை வேகமெடுத்துள்ளது. இப்படிப்பட்ட படித்த நடுத்தர வர்க்கப் பெண்கள் இந்த இயக்கத்தில் சேரும்போது, வலுக்கட்டாயமாக காணாமல் போகவைக்கப்பட்ட நமது சகோதர, சகோதரிகள் துன்புறுத்தப்படுவதாக உணர்கிறார்கள். இதுவே இத்தகைய எதிர்வினைக்குக் காரணம்.”என்று அவர் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »