பட மூலாதாரம், Serhiy Haidai
கிழக்கு யுக்ரேன் பகுதியில் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பிலோஹோரிவ்கா என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ரஷ்யப் படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தப் பள்ளியில் யுக்ரேன் கிராமவாசிகள் 90 பேர் வரை தஞ்சமடைந்திருந்தனர்.
யுக்ரேன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்றளவும் தளர்வடையவில்லை என்பதற்கு கிராமவாசிகள் தஞ்சம் அடைந்த பள்ளி மீது நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலே சான்று.
இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து பள்ளி கட்டடத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதை அணைக்க தீயணைப்பு படையினர் 3 மணிநேரத்திற்கும் மேல் போராடினர் என்ன லூஹான்ஸ்கின் ஆளுநர் தெரிவித்தார். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக லுஹான்ஸ்கில் உள்ள பாபாஸ்னா என்ற இடத்தில் ரஷ்யப் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
ரஷ்ய விமானம் ஒன்றிலிருந்து குண்டு விழுந்ததாக லூஹான்ஸ்கின் மேயர் செஹிவ் ஹைடாய் தெரிவித்துள்ளார்.
“குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, வெப்பநிலை மிக கொடூரமாக இருந்தது. எங்களின் அவசர சேவை பிரிவு களத்தில் பணியாற்றி வருகிறது. அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இடிபாடுகளை அகற்ற முயற்சித்து வருகின்றனர். ஆனால் அதற்குள் மக்கள் உயிருடன் இருப்பர் என்பதற்கான சாத்தியம் மிக குறைவு,” என்று தெரிவித்தார் செஹிவ்.
“இடிபாடுகள் எல்லாம் மொத்தமாக அகற்றப்பட்டவுடன் இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை சரியாக சொல்ல முடியும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை. மேலும் ரஷ்ய தரப்பிலிருந்து இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

பட மூலாதாரம், Reuters
இந்த சண்டையில் நகரில் உள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு வருவதாக செஹிவ் ஹைடாய் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினின் முக்கிய கூட்டாளியான சென்சென் குடியரசின் தலைவர் ரம்சான் காடிரோவ், தனது படைகள் நகரின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தாக்குதல் நடந்த பள்ளிக்கு அருகில் உள்ள பகுதியான டொனெஸ்கில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், ஹோல்மிவ்ஸ்கி என்ற நகரில் யுக்ரேன் படைகள் ஷெல் குண்டு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கின்றனர்.
முன்னதாக யுக்ரேன் – ரஷ்யா என இருதரப்பினரும் மற்றொரு தரப்பில் மிகுந்த இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தனர். யுக்ரேனிய அரசு, ரஷ்யப் படையில் 400 எதிரிகளை கொன்றதாகவும், எட்டு டாங்கிகளையும், 28 கவச வாகனங்களையும், கப்பல் மற்றும் உலங்கூர்தி ஒன்றையும், 27 ட்ரோன்களையும் அழித்ததாக தெரிவித்தது.
ரஷ்யாவின் ராணுவம், தனது வான் படை மட்டும் 420 யுக்ரேனிய சிப்பாய்களை கொன்றதாக தெரிவித்தது. மேலும் 55 ராணுவ உபகரணங்களை அழித்ததாகவும், ஒடெஸ்ஸா துறைமுகத்திற்கு அருகில் போர்க் கப்பல் ஒன்றையும், ஏவுகணை ஒன்றையும் அழித்ததாகவும் தெரிவித்தது. அதேபோல இரண்டு தாக்குதல் விமானங்களையும், உலங்கூர்தி ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது
ஆனால் இந்தக் கூற்றுகளை பிபிசியால் சுயாதீனமாகப் பரிசோதிக்க இயலவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com