பட மூலாதாரம், Getty Images
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளாவிய ஃபாஸ்ட் ஃபுட் ஜாம்பவான்கள் உள்ளூர் உணவகங்களிலேயே சாப்பிட்டுப் பழகியிருந்த இந்தியர்களுக்குத் தங்கள் துரித உணவுகளை வழங்கி வருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், துரித உணவுகள் பிராந்திய சுவைகளை நோக்கி அதிகமாக நகர்ந்தன. பிபிசியின் ஸோயா மத்தீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் இதுகுறித்த செய்தியை வழங்குகிறார்கள்.
1996-ஆம் ஆண்டில் மெக்டொனால்ட்ஸ் தனது முதல் கடையை டெல்லியின் உயர்தர பகுதியில் திறந்தபோது, மேற்கத்திய துரித உணவு என்பதே புதுமையானதாக இருந்தது.
பிறகு, அடுத்தடுத்த கிளைகள் உருவாக, மேற்கத்திய துரித உணவுகள் தம் சுவைகளை உள்ளூர் சுவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டது.
எனவே, முட்டை சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட மயோனைஸ், பன்றி இறைச்சியோ மாட்டு இறைச்சியோ இல்லாத பர்கர்கள் ஆகியவை அத்தகைய மாற்றங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டவையே.
சைவ உணவு விரும்பிகளுக்கு என ஒரு தனித்துவமான சைவ உணவுப் பட்டியல் உருவாக்கப்பட்டது. மெக் ஆலூ டிக்கி எனப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பட்டாணியில் செய்யப்பட்ட பர்கர், பீட்சா மெக்பஃப் எனப்படும் பீட்சா டாப்பிங்ஸ் மற்றும் பாலாடைக்கட்டி நிரப்பப்பட்ட சாண்ட்விச் வகை எனப் பலவும் சைவ விரும்பிகளுக்காகத் தயாரிக்கப்படுகின்றன.
இதையெல்லாம் செய்த சிறிது காலத்தித்திலேயே, பர்கர் தேசம் முழுவதும் பிரபலமானது.
நிறுவனத்தின் வர்த்தக முத்திரையான தங்க நிறத்திலான லோகோ இந்திய நகரங்கள் எங்கும் காணப்பட்டது. மெக் டொனால்ட்ஸின் கவர்ச்சிகரமான ‘ஐயம் லவ்விங் இட்’ (எனக்கு இது பிடித்துள்ளது)என்ற வாசகம் பலருக்கும் அவர்களுடைய வாழ்வின் நல்ல நினைவுகளை நியாபகப்படுத்துவதாக இருந்தது.
பாயாசத்தில் உடைத்துச் சாப்பிடும் அப்பளம்
அமெரிக்க துரித உணவு நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளுக்கான ஒரு வடிவத்தை மெக்டொனால்ட் உருவாக்கியது. அதன் விளைவாக, இந்திய மசாலா பொருட்களுடன் சுவையூட்டப்பட்ட பலவிதமான பொருட்கள் கலக்கப்பட்டதால், அந்த உணவுகள் அசல் மேற்கத்திய உணவுகளுடன் சிறிதளவும் ஒத்துப் போகவில்லை.
“இந்தியாவிற்கு ஏற்ப அதுவும் பிராந்திய அளவிலும் கூட தங்கள் தயாரிப்புகளை, மேற்கத்திய துரித உணவு நிறுவனங்கள் எவ்வளவு வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளன என்பதற்குச் சான்றாக மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி மற்றும் டாமினோஸ் ஆகியவை நிற்கின்றன,” என்கிறார், டெக்னோபாக் என்ற ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் சிங்கால்.
தென் மாநிலங்களில் பாயாசத்தில் அப்பளத்தை உடைத்துப் போட்டுச் சாப்பிடுவது முதல் மும்பை நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அப்சரா ஐஸ்க்ரீம்களில் இருக்கும் கொய்யா ஐஸ்க்ரீமில் மிளகாய் தூள் தூவுவது வரை, பல்வேறு வகையான சுவைகளைச் சேர்த்துக் கொள்வது இந்தியாவிற்குப் புதிததல்ல.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்காக, உணவுகளில் ஐரோப்பாவில் விரும்பப்படுவதை விடவும் அதிக மசாலா பொருட்களைச் சேர்ப்பது அல்லது அதிகமான இனிப்புகளைச் சேர்ப்பது ஆகியவற்றைச் செய்வதாகக் கூறுகிறார் சிங்கால்.
மேற்கொண்டு பேசிய சிங்கால், “1990-களில், நெஸ்லே அவர்களுடைய மேகி பிராண்டின் கீழ் ‘சூடான மற்றும் காரமான’ கெட்ச் அப் வகையைக் கொண்டு வந்தது. அது உடனடி வெற்றியைப் பெற்றது. அதேபோல், மேகி நூடுல்ஸுடன் பன்முகத்தன்மை கொண்ட இந்திய நுகர்வோரை ஈர்க்கும் வகையில் பலவிதமான சுவையூட்டும் மசாலா சாஷேக்கள் கொடுக்கப்படுகின்றன,” என்கிறார்.
மேற்கத்திய உணவுகளுக்கான உள்ளூர் மாற்று
ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் நிறுவனங்கள் தங்கள் உணவில் மேன்மேலும் அசாதாரண கலவைகளைச் சேர்த்து பரிசோதிப்பதை நோக்கி நகர்ந்துள்ளன.
ஸ்னிக்கர்ஸ் அதன் பார் சாக்லேட்டில் கேசர் பிஸ்தா வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. டன்கின் சொந்தமாக, தந்தாய், உலர்ந்த பழங்கள், ரோஜா இதழ்கள் மற்றும் குங்குமப்பூவுடன் அலங்கரிக்கப்பட்ட குளிர்ந்த இனிப்பு நிறைந்த பால் பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், மெக்டொனால்ட்ஸ் அதன் பர்கர்களில் பிரபலமான இனிப்பு மற்றும் காரம் கலந்திருக்கும் ரோஸ்ட் கோழிக்கறி வகையான பட்டர் சிக்கனை இணைத்துள்ளது.
பீரா போன்ற உள்நாட்டு தயாரிப்புகளும் மாம்பழ சுவை கொண்ட லஸ்ஸி, மில்க் ஷேக் பீர் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் சந்தையில் துரித உணவு நிறுவனங்களின் வரிசையில் குதித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
கலவை உணவுகள் சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகச் செய்யப்படுகின்றன.
“அசாதாரண உணவு சேர்க்கைகள், உணவு பதிவர்களால் குறிப்பிட்டுக் காட்டப்படும்போது மிகுதியாக பகிரப்பட்டுின்றன. மேலும் அதுவொரு தயாரிப்பு தெரிவுநிலையைக் கொடுக்கிறது,” என்று பிரபல யூட்யூப் சேனலான தில் சே ஃபுடி அல்லது ஃபுடி பை ஹார்ட்டை நடத்தும் கரண் துவா கூறுகிறார்.
ஆனால், எல்லாவற்றுக்கும் உள்ளூர் மாற்று இருக்கக்கூடிய ஒரு நாட்டில், புதிய விசித்திரமான தயாரிப்புகள் நுழைவது கடினமானதாக இருக்கும்.
பர்கர்களைச் சாப்பிட நினைத்தால், அதைப் போலவே விரும்பிச் சாப்பிடக் கூடிய, சூடான மற்றும் மிகவும் காரமான வடை, க்ரீஸ் டோனட்ஸ் போன்ற நல்ல மாற்று உணவுகளும் இருக்கின்றன.
பாப்கார்னை விரும்பினால், அதற்குப் பதிலாக பாலிவுட் பிரபலங்கள் கூட விரும்பிச் சாப்பிடக் கூடிய பேல் பூரி இருக்கிறது.
உள்ளூர் துரித-உணவுகளுக்கான சமையல் வழிகாட்டி சின்னமாக மாறியுள்ள மோமோ எனச் சொல்லப்படும் வேகவைத்த உருண்டையை மறந்துவிடக் கூடாது.

பட மூலாதாரம், Getty Images
பிரெஞ்சு மற்றும் இந்திய கலவை
பிராந்திய அளவில் சாலையின் ஒவ்வொரு வளைவிலும் சுவைகளும் உணவுப் பழக்கங்களும் மாறக்கூடிய வகையில் இருப்பதால், இது மிகவும் சிக்கலானது என்று டுவா கூறுகிறார்.
கடந்த ஆண்டு, மேற்கு இந்தியாவிலுள்ள சூரத் நகரில், வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் கலவையாக அவர் ஒரு பழ தேநீரை ருசித்துப் பார்த்தார். அந்த மாநிலத்தின் மற்றொரு பகுதியில், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய் அடுக்குகளுடன் கூடிய ஐஸ்க்ரீம் சாண்ட்விச் போன்றவை இருக்கக்கூடிய பிரபலமான ஒரு கடையைப் பார்த்ததை நினைவு கூர்ந்தார்.
“குஜராத்தில், மக்கள் தங்கள் உணவில் இனிப்புடன் காரத்தையும் கலக்குகிறார்கள். எனவே இந்த கலவைகள் அங்கு மிகவும் பொதுவானவையாகவும் பிரபலமாகவும் உள்ளன. ஆனால், டெல்லி போன்ற நகரங்களில் இவற்றை விற்பது கடினம்,” என்று அவர் கூறுகிறார்.
இதில் துரித உணவுகள் என்பது ஒரு பக்கம் மட்டுமே.
பூஜா திங்ரா தனது பிரெஞ்சு பேட்டிஸெர்ரியான, Le15ஐ தெற்கு மும்பையில் திறந்தபோது, அவருடைய திட்டம் எளிமையாக இருந்தது. அவர் பிரெஞ்சு நுட்பங்களையும் இந்திய சுவைகளையும் பயன்படுத்த விரும்பினார்.

பட மூலாதாரம், Getty Images
இது, வெற்றிலை மாக்ரோன்கள், தேநீர் கப்கேக்குகள் மற்றும் பச்சை மிளகாய் ட்ரஃபுல்ஸ் போன்ற பல வேடிக்கையான சுவை சேர்க்கைகளுக்கு வழிவகுத்தது. அவரது உணவுப் பட்டியல், நல்ல மதிப்புரைகளைப் பெற்றதால், அவர் மேலும் பரிசோதனை செய்யத் தொடங்கினார். புதிய சுவைகளின் சோதனைகளுக்காக தனது பெற்றோரை சோதனை எலிகளாகப் பயன்படுத்தினார்.
“மெனுக்களை உருவாக்க எனது கலாசாரம் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைப் பார்ப்பது எனக்கு எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். ஒருபோதும் வேலை செய்யாத ஒரு காலா கட்டா மாக்கரோனைப் போல அவற்றில் சில பேரழிவை ஏற்படுத்தலாம் ஆனால், சில உணவுகள் அற்புதமாகவும் இருக்கும்,” என்று திங்ரா கூறுகிறார்.
மேற்கொண்டு, “எங்கள் தீபாவளி மெனுவை எப்போதும் பிரெஞ்சு மற்றும் இந்திய கலவையிலான உணவுகளோடு சிறப்பாகத் திட்டமிடுவதே எனக்குப் பிடித்தமான விஷயம்,” என்று கூறியவர், “எங்கள் காஜூ கட்லி மக்ரோன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு எனது மெனுவில் புதிய பிரெஞ்சு கலவையோடு, பெசன் லட்டுவை சேர்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com