பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை காவல் துறையினர் வெளியிடவில்லை.
இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட வெறுப்புணர்வுக் குற்றமாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டை “வன்முறையான பயங்கரவாத செயல்” என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அழைக்கிறது.
இந்த சம்பவத்திற்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் சனிக்கிழமை பிற்பகல் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்தார். இந்த தாக்குதலை அவர் இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஒரு ஒளிக்கருவி (கேமரா)வை பயன்படுத்தியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
“இந்தச் சம்பவத்தை ஒரு வெறுப்பால் தூண்டப்பட்ட குற்றமாகவும், இனரீதியாக தூண்டப்பட்ட வன்முறையாகவும் கருதி நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பின்பஃப்பலோ அலுவலகத்தை தலைமை தாங்கும் ஸ்டீபன் பெலோங்கியா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதியை அடைய, அவர் பல மணி நேரம் பயணித்து வந்ததாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்டனர் என்றும், பலியானவர்களில் பெரும்பாலோர் கறுப்பினர்கள் எனவும் என்று பஃப்பலோ காவல்துறை ஆணையர் ஜோசப் கிராமக்லியா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில், மூன்று பேர், சூப்பர் சந்தையில் பணிபுரிப்பவர்கள். அவர்களில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சூப்பர் சந்தையில் பாதுகாவலராகப் பணிபுரிந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், சந்தேக்கிப்படும் நபரை சுட முயற்சித்தார். ஆனால், அவரும் கொல்லப்பட்டார். அந்த நபர் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், உடல் கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் மீது நீதிமன்றத்தில் முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று எரி கவுண்டி வழக்கறிஞர் ஜான் ஃபிளின் பின்னர் கூறினார். மேலும் சில குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த க்ராடி லிவீஸ் என்பவர், ராணுவ உடையில் இருந்த அவர், துப்பாக்கியில் சுட ஆரம்பித்தார். “ஒருவர் ராணுவ உடையில், வந்து மக்களை நோக்கி சுடுவதை பார்த்தேன்” என்றார்.
இந்த தாக்குதல் நடந்த சூப்பர் சந்தையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஷோன்னில் ஹாரிஸ், தான் பின் கதவு வழியாக தப்பி செல்லும் போது, கிட்டத்தட்ட 70 முறை துப்பாக்கிச் சூடும் சத்ததை கேட்டாதாக தெரிவித்தார். “வார இறுதி நாள். அதனால், கடையில் கூட்டம் அதிகம் இருந்தது. ஒரு கெட்ட கனவாக உணர்ந்தேன்”, என்றார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடனுக்கு விவரிக்கப்பட்டது. “அதிபரும், அவரது மனைவியும் உயிரிழந்தவர்களுக்கும், தங்களின் உறவுகளை இழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்தனர் என்று அதிபரின் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com