Press "Enter" to skip to content

முதுமை ஒரு நோய், அதை சரி செய்து இளமைக்குத் திரும்ப முடியும் என வழிகளை சொல்லும் வல்லுநர்

  • ரஃபேல் பாரிஃபோஸ்
  • பிபிசி பிரேசில், சாவ் பாலோ

பட மூலாதாரம், Getty Images

முதுமை என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது. நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையை இப்படித்தான் அணுகுகிறோம். ஆனால், மரபியல் நிபுணர் டேவிட் சின்க்ளேர் அப்படி அணுகவில்லை.

இருபது ஆண்டுகளுக்கும் மேலான தனது ஆய்வுகளின் அடிப்படையில், சில எளிய பழக்க வழக்கங்களால் வயதாவதைத் தாமதப்படுத்தலாம் என்றும் இதன்மூலம் நாம் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம் என்றும் அவர் கூறுகிறார்.

அதோடு, சின்க்ளேர், மருந்துகள் மூலம் இதை விரைவாக சரி செய்ய முடியும் என்று நம்புகிறார். இது இன்னும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மேலும், நாம் உண்மையில் வயதாவதை நிறுத்துவது மட்டுமின்றி மீண்டும் இளமைக்குத் திரும்ப முடியும் என்று அவர் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் முதுநிலை பட்டமும் பெற்றவரான சின்க்ளேர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வகப் பொறுப்பாளராக இருக்கிறார். அங்கு, நாம் ஏன் முதிர்ச்சியடைகிறோம் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்.

அவரது பணி, அவருக்கு டஜன் கணக்கான அறிவியல் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இது அவரை பிரபலமாக்கியது (டைம் இதழால் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிவிட்டரில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர்.)

மேலும் 35 காப்புரிமைகளை வைத்திருக்கிறார். பல உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவியுள்ளார். மேலும் பலவற்றில் பங்களிப்பு செலுத்துகிறார். அவற்றில் சில முதுமையடைவதைக் குறைக்கவோ அல்லது தடுக்கவோ ஆய்வு மேற்கொள்வதையே பணியாக கொண்டுள்ளன.

மெர்ரில் லின்ச் என்ற வங்கி, 2019-ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்தபோது, முதுமை குறித்த ஆய்வுகளுக்கான துறையின் மதிப்பு 110 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டது. அது, 2025-ஆம் ஆண்டில் 600 பில்லியன் டாலரை எட்டும் எனவும் கூறப்படுகிறது.

ஆயுட்காலம் (ஏன் நமக்கு வயதாகிறது-ஏன் நாம் முதிர்ச்சியடையாமல் இருக்க வேண்டும்) என்ற அதிக அளவில் விற்பனையாகும் நூலின் ஆசிரியரும் சின்க்ளேர் தான்.

பிபிசி பிரேசிலுடன் சின்க்ளேர் உரையாடியபோது, பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, முதிர்ச்சியடைவது ஒன்றும் தவிர்க்க முடியாதது இல்லை என்றார்.

டேவிட் சின்க்ளேர்

பட மூலாதாரம், Getty Images

அதோடு, “இது ஒரு பொதுவான, இயற்கையான செயல்முறை எனக் கருதுவதற்குப் பதிலாக, அதை ஒரு நோய் என்று பார்க்கவேண்டும். அதன்மூலம் அதற்கு சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்,” என்கிறார் சின்க்ளேர்.

மேலும், “முதுமை குறித்த நம் கண்ணோட்டத்தில் தீவிரமான மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மனிதகுலம் அதன் ஆயுட்காலத்தைக் கணிசமாக அதிகரிக்க முடியும்,” என்கிறார். இனி அவருடனான நேர்காணல்…

Línea

நமக்கு வயதாவது ஏன்?

விஞ்ஞானிகள் முதுமையடைவதற்கு ஒன்பது முக்கியமான காரணங்களை அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் என்னுடைய ஆராய்ச்சியில், இந்த காரணங்களில் ஒன்றுதான் முக்கியக் காரணமாக உள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளோம்.

நம் பெற்றோரிடம் இருந்து நாம் பெற்ற மரபணுத் தகவல்கள் (சுற்றுச்சூழல், நேரம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் இரண்டு வகையான தகவல்கள்) நம் உடலில் உள்ளன.

ஒன்று மரபணு குறியீடாக இருக்கும் “கணினி மயமான” தகவல், மற்றொன்று அனலாக். எபிஜெனோம் எனப்படும் எந்த மரபணுக்கள் இயக்கப்படுகின்றன மற்றும் அணைக்கப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் கலத்தில் உள்ள அமைப்புகள்.

ஓர் உயிரணுவின் 20,000 மரபணுக்களை ஆன் மற்றும் ஆஃப் செய்வதுதான் அந்த உயிரணுவுக்கு அது யார் என்பதையும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் கூறுகிறது.

முதுமையடைதல்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், காலப்போக்கில், சிடி-களில் விழும் கீறல்களைப் போலவே எபிஜெனோம் தகவலை இழக்கத் தொடங்குகிறது. மேலும் உயிரணுக்கள் சரியான நேரத்தில் சரியான மரபணுக்களை இயக்கும் திறனை இழக்கின்றன. அவை தம் செயல்பாட்டை இழக்கின்றன. அதுவே நமக்கு வயதாகிவிடக் காரணம் என்று நினைக்கிறேன்.

நமக்கு வயதாக வேண்டிய அவசியமில்லை என்கிறீர்களே. ஏன்?

நமக்கு வயதாக வேண்டுமென்று உயிரியலில் எந்தச் சட்டமும் இல்லை. இதை எப்படி நிறுத்துவது என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், அதன் வேகத்தைக் குறைப்பதில் நாம் சிறப்பாகச் செயல்படுகிறோம். மேலும், ஆய்வகத்தில் முதிர்ச்சிக்குப் பதிலாக மீண்டும் இளமையை நோக்கி மாற்றியமைக்க முடிந்தது.

எபிஜெனோம் மாறக்கூடியது என்பது என் கருத்து. சிடி-யில் உள்ள கீறல்களோடு நாம் வாழும் விதம் பெருமளவு ஒத்துப் போகிறது. சில விஷயங்களைச் சரியாகச் செய்வது, முதிர்ச்சிக்கான கடிகாரத்தின் வேகத்தைக் குறைக்கும். இன்று நாம் அந்த கடிகாரத்தை அளவிட முடியும். அதற்கான ரத்த மற்றும் உமிழ்நீர் பரிசோதனைகள் உள்ளன.

மரபணுவைப் பொறுத்து அல்ல, வாழ்வதைப் பொறுத்தே…

எலிகள், திமிங்கிலங்கள், யானைகள் மற்றும் வெவ்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்ட மனிதர்கள் என பல்வேறு உயிரினங்களில் முதுமை மிகவும் வித்தியாசமான விகிதங்களில் ஏற்படலாம். உங்கள் எதிர்கால ஆரோக்கியத்தில் 80 சதவீதம், உங்கள் மரபணுவைப் பொறுத்து இல்லை, உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது.

நீண்டகாலம் வாழ்பவர்களை கண்காணித்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்த விஷயங்கள் உள்ளன. சரியான உணவு வகைகளை உண்பது (மத்திய தரைக்கடல் உணவுமுறையிலிருந்து தொடங்குவது சரியான தொடக்கமாக இருக்கும்), குறைவான கலோரிகளை உண்பது, அடிக்கடி சாப்பிடுவதைக் குறைப்பது ஆகியவை இதில் அடங்கும். உடற் பயிற்சியும் இதில் உதவுகிறது.

மேலும், ஐஸ், குளிர்ந்த நீர் ஆகியவற்றால் உடல் வெப்பநிலையை மாற்றுவது பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.

இவையனைத்தும் எப்படி முதிர்ச்சியடையும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றன?

இந்த வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் தலையீடுகள் வேலை செய்வதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அவை நோய்க்கும், முதுமைக்கும் எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பை அதிகரிக்கின்றன என்பதே அவர்கள் அப்படி நம்புவதற்கு காரணம்.

உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

சூடாகவோ அல்லது குளிராகவோ இருப்பது, பசியாக இருப்பது மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இந்த பாதுகாப்புகளை செயல்படுத்துவதற்கான வழிகள். இந்த பாதுகாப்புகளின் மூலத்தில் ஒரு சில மரபணுக்கள் உள்ளன.

மேலும் அவற்றின் தொகுப்பை ஆய்வு செய்துள்ளோம். அவை எபிஜெனோமை கட்டுப்படுத்துகின்றன. உடற்பயிற்சியால், பசியால் செயல்படுத்தப்படுகின்றன. இதனால்தான் சரியான உணவுகளை உண்ணுதல் மற்றும் உண்ணாமல் இருத்தல் முதிர்ச்சிக்கான கடிகாரத்தின் வேகத்தைக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பெரும்பாலான நோய்களுக்கு முதுமையே காரணம். இதய நோய், அல்சைமர், நீரிழிவு போன்ற நோய்களுக்கு முதுமையே காரணமாக உள்ளது.

எனவே இது உங்களை வலிமையாக்குகிறது. நீண்டகாலம் வாழ வைக்கிறது என்பது

எனவே இது உங்களை வலிமையாக்குகிறது மற்றும் நீண்ட காலம் வாழ வைக்கிறது என்பது தான் எங்கள் யோசனை.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், உயிரினங்களில் மாறாத முதுமை விகிதம் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், இது உங்கள் ஆய்வுப் பணிகளுக்கு முரணாக உள்ளது. மேலும், முதிர்ச்சியின் வேகத்தைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியாது என்றும் குறிப்பிடுகிறதே?

200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் பயணிக்கக்கூடிய அதிகபட்ச வேகம் குதிரையின் வேகம்.

நமது உயிரியலைக் கடந்து வருவதற்கு நம்மிடையே தொழில்நுட்பங்கள் உள்ளன. தொழில்நுட்பம் பிரச்னைகளைத் தீர்த்து நம்மை முன்பைவிடச் சிறந்ததாக ஆக்குகிறது.

நாம் புதுமைகளை உருவாக்கக்கூடிய உயிரினம். தொழில்நுட்பம் இல்லாமல் நாம் உயிர் பிழைத்திருக்க முடியாது. அதைத்தான் நாம் ஒரு மில்லியன் ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். அதையும் முறியடிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை நாம் கண்டுபிடிப்போம்.

உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

அடுத்தபடியாக, நாம் பரம்பரையாகப் பெற்ற நமது ஆரோக்கியத்தின் வரம்புகளை நாம் கடக்க வேண்டும்.

ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளும்போது அல்லது ஆடை அணியும்போது தினமும் இதைச் செய்கிறோம். நாம் நமது சூழலை மாற்றுகிறோம். மேலும், உடலின் வேதியியலையும் மாற்றலாம்.

முதுமைக்கு வேறுபட்ட அணுகுமுறையை நீங்கள் முன்மொழிகிறீர்கள். முதுமையடையும் செயல்முறையை ஒரு நோயைப் போல் நடத்துவது ஏன்?

ஒரு நோய் என்பது காலப்போக்கில் ஏற்படும் ஒரு செயல்முறை. அதன்விளைவாக, இயலாமை அல்லது இறப்பு ஏற்படுகிறது. அதுவும் முதுமை அடைவதைப் போன்றதே.

முதுமை என்பது ஒரு நோய். அது பொதுவானது. ஆனால், பொதுவானது, இயற்கையானது என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது குணப்படுத்தக்கூடியது. அதன் வேகத்தைக் குறைக்கவும் நிகழாமல் தடுக்கவும் முடியும் என்பதை நாங்கள் நிரூபித்து வருகிறோம்.

முதுமை என்பது ஒரு நோயாக இப்போது கருதப்படவில்லை என்பதன் பொருள், பல ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கையை மக்களுக்கு வழங்கக்கூடிய மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவர்கள் தயங்குவதுதான்.

எனவே, முதுமை என்பது ஒரு நோய், குறைந்தபட்சம் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலை என்று நாம் அறிவிக்க வேண்டும்.

முதுமையடைதல்

பட மூலாதாரம், Getty Images

இது நமது தற்போதைய புரிதலில் இருந்து மிகவும் வித்தியாசமானது. ஏனெனில், இன்று நாம் முதுமையை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பார்க்கிறோம். ஆனால், நீங்கள் அப்படியில்லை என்றும் அதற்கு சிகிச்சையளிக்கலாம், தாமதப்படுத்தலாம் என்றும் சொல்கிறீர்கள். இது தீவிரமான திட்டம் இல்லையா?

இது தீவிரமானது தான். ஆனால், விமானத்தை ஓட்டுவது அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பான்கள், கணினிகளைப் பயன்படுத்துவது ஆகியவையும் தீவிரமானவைதான்.

ஆய்வகத்தில் முதிர்ச்சியடைவதைப் பின்னோக்கி வரச் செய்து இளமையை மீண்டும் கொண்டுவர முடிந்ததாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா?

சிடியில் உள்ள கீறல்களை மெருகூட்டுவதைப் போல, எபிஜெனோமை பூஜ்ஜியமாக்குவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருந்தோம்.

முதிர்ச்சிக்குப் பதிலாக இளமைக்குத் திருப்புவதை பாதுகாப்பாகச் செய்ய முடியுமா என்று பல மரபணுக்களை பரிசோதித்தோம்.

பல ஆண்டுகளாக அதில் தோல்வியுற்றோம். அதோடு, ஆய்வகத்தில் இருந்த உயிரணுக்களில் புற்றுநோயை உண்டாக்கினோம்.

குளிர்ச்சி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், யமனகா காரணிகள் எனப்படும் மூன்று மரபணுக்களைக் கண்டறிந்தோம். அவை உயிரணுக்கள் தங்கள் அடையாளத்தை இழக்காமல் பாதுகாப்பாக முதுமையிலிருந்து மீண்டும் இளமைக்கு மாற்றும்.

இது மனித தோல் செல்கள் மற்றும் நரம்பு செல்களில் பரிசோதிக்கப்பட்டது.

பின்னர் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்ட எலிகளில் சோதனை செய்து பார்வை நரம்புகளுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் அவற்றின் பார்வையை மீட்டெடுக்க முடிந்தது.

இது மனிதர்களுக்கும் எதிர்காலத்தில் வேலை செய்யுமா?

முடியும் என்று நம்பும் முதலீட்டாளர்கள் உள்ளனர்.

கொறித்துண்ணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டு பாதுகாப்பு ஆய்வுகள் நம்பிக்கைக்கு உரிய வகையில் இருக்கின்றன. அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் மனிதர்களின் குருட்டுத் தன்மையைக் குணப்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க முதல் மனித பரிசோதனைகளுக்குச் செல்வோம்.

அறிவியல் இதுவரை கண்டுபிடித்தது என்ன? முதுமை எய்தும் வேகத்தைக் குறைப்பதாக நீங்கள் குறிப்பிடும் மருந்துகள் பற்றி என்ன ஆய்வு செய்யப்படுகிறது?

இயற்கையான மூலக்கூசெயற்கையான மூலக்கூறுகள் உள்ளன. அவை முதுமையின் வேகத்தைக் குறைப்பதிலும் உயிரினங்களின் ஆயுளை நீட்டிப்பதிலும் மனித ஆய்வுகளிலும் கூட நம்பிக்கையளிக்கும் வகையிலான ஆய்வு முடிவுகளைக் காட்டுகின்றன. அவற்றில் குறைந்தது இரண்டு மருந்துகள், சந்தைகளில் ஏற்கெனவே இருப்பவை.

முதுமையைத் தடுக்கும் ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

இரண்டாம் கட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இந்த மருந்துகளில் ஒன்றான மெட்ஃபோர்மினுக்கு நல்ல சான்றுகள் உள்ளன.

நீரிழிவு இல்லாதவர்களை விட நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகள் உள்ளன. ஓர் ஆய்வு இப்போது மெட்ஃபோர்மின் எடுத்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே, புற்றுநோய், இதய நோய் மற்றும் அல்சைமர் போன்றவை ஏற்படும் விகிதங்களை பகுப்பாய்கிறது.

நாம் மரணமின்றி என்றென்றும் வாழ முயல்கிறோமா?

இல்லை (சின்க்ளேர் சிரிக்கிறார்). மருத்துவ ஆராய்ச்சிகளின் நோக்கம் என்ன?

நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுவதா?

ஆம், இங்கேயும் அப்படித்தான்.

வேறுபாடு என்னவெனில், அந்த நோய்கள் வந்தவுடன் அதற்குக் கட்டுப் போடுவதைவிட, நோய்களின் மூல காரணத்தில் கை வைக்கிறோம்.

அதோடு, மூல காரணங்களைத் தாக்கினால், பாதிப்பு முழு உடலுக்கும் அதிகமாக இருக்கும்.

நாம் மூளையை முதிர்ச்சியடைய விட்டுவிட்டு, இதயத்தின் முதிர்ச்சி வேகத்தை மட்டுமே குறைக்கக்கூடாது. ஏனெனில், அல்சைமர் நோயால் பலர் பாதிக்கப்படக்கூடும்.

உடலின் அனைத்து பாகங்களையும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அணுகுமுறை நமக்குத் தேவை. அத்தகைய அணுகுமுறையைத் தான் நான் கையில் எடுக்கிறேன்.

ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இந்த கண்டுபிடிப்புகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?

90 வயதிலும் அதற்கு அப்பாலும் ஆரோக்கியமாக இருப்பது, பல தொழில்களில் ஈடுபடுவது, கொள்ளு பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது, பிள்ளைகளுக்கு பாரமாக இல்லாமல் இருப்பது போன்ற பல தனிப்பட்ட நன்மைகள் உள்ளன.

மற்றொரு நன்மை நிதி.

முதுமையடைதல்

பட மூலாதாரம், Getty Images

எனது சகாக்கள், நானும் சில லண்டன் பொருளாதார வல்லுநர்களும், இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆயுட்காலத்தை நீட்டிப்பது அடுத்த சில பல்லாண்டுகளில், அமெரிக்காவில் மட்டும் எப்படியிருக்கும் எனப் பகுப்பாய்ந்து பார்த்தோம். 86 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரத்தின் மதிப்பை அதிகரிக்கும் என்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அது 300 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார மதிப்பை அதிகரிக்கும்.

மக்கள் நோய்வாய்ப்படாமல் இருப்பதில் இருந்து இந்த மதிப்பை அடைய முடியும். அமெரிக்காவில், பில்லியன் கணக்கிலான டாலர்கள் சராசரி மருத்துவ சிகிச்சைகளை விட, நோய் சிகிச்சைகளுக்காகச் செலவிடப்படுகிறது. இந்தப் பணம் கல்வி மற்றும் காலநிலை மாற்றத் தணிப்பிற்காகப் போராடுவதற்குப் பயன்படுத்தப்படுவதன் மூலம் சமூகத்தை மாற்ற முடியும்.

முதுமையைத் தடுப்பது குறித்த ஆய்வுகள், மெர்ரில் லின்ச் வங்கியால், பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களில் மதிப்பிடப்பட்டுள்ள ஒரு தொழில் ஆகும். மேலும் இது விரைவில் நூற்றுக்கணக்கான பில்லியன்களை எட்டலாம். இதில் ஏன் இவ்வளவு பணமும் ஆர்வமும் முதலீடு செய்யப்படுகிறது?

இது உலகின் மிகப்பெரிய தேவைகளில் ஒன்றாகும். இந்த முன்னேற்றங்களால் பயனடையாத ஒரு நபர் இந்த பூமியிலேயே இல்லை.

நோய்க்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பை மேம்படுத்தும் திறன் உலகையே புரட்சிகரமாக்கும். பல்லாண்டுகளுக்கு உலகப் பொருளாதாரத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை சேமிக்கும். நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு முன்பு இருந்த நமது உலகத்திலிருந்து இப்போது இருக்கும் உலகத்திற்கு மாறியதைப் போலவே, இதுவும் வேறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கும்.

முதுமை அடைவதைத் தாமதப்படுத்தும் அல்லது மாற்றியமைக்கும் நோக்கத்துடன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கும் சில நிறுவனங்களுடன் நீங்கள் சேர்ந்து செயல்படுகிறீர்கள். நாம் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ உதவுவதை இலக்காகக் கொண்ட ஓர் ஆராய்ச்சியாளராக இல்லாமல், இதிலிருந்து லாபம் தேட முயல்பவராக நீங்கள் தோற்றமளிக்கக்கூடும் என்று நீங்கள் கவலைப்படவில்லையா?

மக்களை ஆரோக்கியமானவர்களாக உருவாக்குவதே எனது குறிக்கோள். மேலும் மருந்துகளை உருவாக்குவதற்கான ஒரே வழி, அதை உருவாக்கும் குழுக்களை உருவாக்குவதுதான்.

அதைத்தான் செய்கிறேன்.

ஒரு தொழிலதிபராக இல்லாமல், ஓர் ஆராய்ச்சியாளராக இதை உங்களால் செய்ய முடியவில்லையா?

இல்லை. ஒரு மருந்து தயாரிக்க மில்லியன் கணக்கான டாலர்கள் தேவை.

ஆனால், இந்த நிறுவனங்களில் உங்கள் ஈடுபாடு சிலருக்கு நீங்கள் விளம்பரப்படுத்தும் அறிவியலை சந்தேகிக்க வைக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

என் விஞ்ஞானம் தனித்து நிற்கிறது. அது ஒருபோதும் தவறு என்று நிரூபிக்கப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »