- ஜூலியானா கிரக்னானி, மேதவி அரோரா, செராஜ் அலி
- பிபிசி, தவறான தகவல்களை கண்டறியும் குழு
பட மூலாதாரம், ER YAMINI
தென்னிந்தியாவில் சமூக ஊடக பிரபலமாக இருக்கும் ஈஆர் யாமினி தனது வாழ்நாளில் ட்விட்டரில் பதிவிட்டதே இல்லை என்கிறார். அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் தான் தனது ரசிகர் கூட்டத்தை வளர்க்க விரும்புகிறார்.
ஆனால், மார்ச் மாத தொடக்கத்தில், அவருடைய படத்தைப் பயன்படுத்தி ஒரு ட்விட்டர் கணக்கு ட்வீட் செய்தது. அதில், இரண்டு ஆண்கள் (ரஷ்யா மற்றும் இந்தியாவைக் குறிக்கும் வகையில்) கட்டிப்பிடிப்பதைக் காட்டும் காணொளியோடு, “#ISTandWithPutin. True Friendship” என்ற வரிகளுடன் பதிவிடப்பட்டிருந்தது.
ரஷ்யா-யுக்ரேன் போரில் தான் எந்த நாட்டையும் ஆதரிக்கவில்லை என்கிறார் யாமினி. மேலும், அவர் தனது ரசிகர்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்.
அவர், “என் படத்தை அந்த கணக்கில் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். அவர்கள் (ரசிகர்கள்) அந்த ட்வீட்டை பார்த்தால், என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்கிறார்.
மார்ச் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில், #IStandWithPutin மற்றும் #IStandWithRussia என்ற வலையொட்டுக்களை (வலையொட்டு (ஹேஷ்டேக்)) பயன்படுத்தி, ட்விட்டரில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை விளம்பரப்படுத்தும் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இந்தப் போலிக் கணக்கு உள்ளது.
இத்தகைய போலிக் கணக்குகளால் பல்வேறு பிராந்தியங்களில் பல தலைப்புகள் டிரண்டிங்காகிறது. குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் போருக்கான ஆதரவு இருப்பதாக இந்தப் போலிக் கணக்குகள் காட்டுகின்றன.

பட மூலாதாரம், TWITTER
இந்த கணக்குகளை பரிசோதிக்கும்போது சில கணக்குகள் உண்மையாக ஆதரவை வழங்குவதுபோல தெரிகிறது.
ஆனால், வேறு பல கணக்குகள் நம்பகத்தன்மை அற்றதாகத் தெரிகிறது. அவர்கள் அதிகளவில் செய்திகளை ரீட்வீட் செய்தார்கள்.
“அவையெல்லாம் பாட்கள், போலி கணக்குகள் அல்லது சமரசம் செய்யப்பட்ட கணக்குகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த நாடுகளில் புதினுக்கான ஆதரவை செயற்கையாகப் பெருக்குவதற்காகச் செய்யப்பட்டன,” என்கிறார் இணைய தீங்குகள் மற்றும் தவறான தகவல்களை ஆராய்ச்சி செய்யும் சிஏஎஸ்எம் டெக்னாலஜியின் இணை நிறுவனர் கார்ல் மில்லர்.
மார்ச் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் பல்வேறு மொழிகளில் ரஷ்யாவுக்கான ஆதரவை ஊக்குவிக்கும் 9,907 கணக்குகளை இந்த அமைப்பு கண்காணித்தது. அதில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கணக்குகள் ஸ்பேம் என சிஏஎஸ்எம் கண்டறிந்தது.

பட மூலாதாரம், TWITTER
பிபிசி இந்த நூற்றுக்கணக்கான நம்பகத்தன்மையற்ற கணக்குகளை ஆய்வு செய்தது. எங்கள் ஆராய்ச்சி மில்லரின் கருத்தை உறுதி செய்கிறது. அவை உண்மையானவை எனக் காட்டிக் கொள்ள முயல்கின்றன. ஆனால், உண்மையில் அவை போலியானவை.
இத்தகைய கணக்குகளில் பயன்படுத்தப்படும் படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம் தேடிப் பார்த்தபோது, அவை பிரபலங்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் இதர சராசரி பயனர்களிடமிருந்து நகலெடுத்து பயன்படுத்தப்பட்டவை என்பதைக் கண்டறிந்தோம். அவர்களுக்கு, யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் தங்கள் படங்கள் ரஷ்யாவை ஆதரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவில்லை.
கணக்குகளை யார் உருவாக்கினார்கள், அவர்களுக்கும் ரஷ்ய அரசுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை.
ப்ரீத்தி ஷர்மா என்ற சமூக ஊடக கணக்கை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதன் பயோவில் மயாமியில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு “மாடல் மற்றும் தொழில்முனைவோர்” என்று கூறுகிறது.

பட மூலாதாரம், TWITTER
இந்தக் கணக்கு இருந்து ரஷ்யாவின் படையெடுப்பிற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 26-ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கில் இருந்து செய்யப்பட்ட ரீட்வீட் ஒன்று, “புதின் ஒரு நல்ல மனிதர்” என்று கூறுகிறது.
ஆனால், கணக்கின் சுயவிவரங்களில் பதிவேற்றப்பட்டுள்ள படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண், உலகின் மறுபக்கத்தில் இருக்கிறார். அவர் பெயர் நிக்கோல் தோர்ன். அவர் ஒரு ஆஸ்திரேலிய சமூக ஊடக பிரபலம். அவர், இன்ஸ்டாகிராமில் 15 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார். அதோடு, ட்விட்டரில் இருக்கும் அவருடைய அசல் கணக்கை எப்போதாவது தான் பயன்படுத்துகிறார்.
மற்றொரு கணக்கு இந்திய பாடகர் ராஜா குஜ்ஜார் எனக் கடந்து செல்ல முயல்கிறது. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியன்று அதில் முதல் ட்வீட் பதிவிடப்பட்டது. கணக்கில் இடப்பட்ட 178 பதிவுகளும் ரீட்வீட் செய்யப்பட்டதாகும். இதுவே தானியங்கிச் செயல்பாட்டின் வலுவான குறியீடு.

பட மூலாதாரம், TWITTER
பிபிசி, தோர்ன் மற்றும் குஜ்ஜரை தொடர்புகொண்டபோது, இந்தக் கணக்குகள் தங்களுடையது இல்லை என்று இருவரும் உறுதி செய்தனர்.
பெரும்பாலானவை தானியங்கி பாட் கணக்குகள் என்றாலும், விசாரிக்கப்பட்ட அனைத்து கணக்குகளுமே நம்பகத்தன்மையற்றவை அல்ல.
பிப்ரவரி 2022-இல் உருவாக்கப்பட்ட ஒரு கணக்கை எடுத்துக்கொள்ளலாம். மார்ச் 2 முதல் ட்வீட்கள் தொடங்குகின்றன. அதற்கு பின்தொடர்பாளர்கள் இல்லை. பிபிசி அந்தக் கணக்கின் சுயவிவர படத்தை ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தபோது, லிங்க்ட்இன்னில் இந்திய இளைஞர் ஒருவரின் கணக்கு கிடைத்தது.
அந்தக் கணக்கு, செந்தில் குமார் என்ற ஏரோநாட்டிகள் இஞ்சினியரால் அமைக்கப்பட்டது. அவரைத் தொடர்புகொண்டபோது, ரஷ்யாவுக்கு ஆதரவான செய்திகளை ரீட்வீட் செய்வதற்காக ஏன் ட்விட்டர் கணக்கை உருவாக்கினார் எனக் கேட்டோம்.
“வழக்கமாக, நான் ட்விட்டரை திறந்து, அதிகமாக பகிரப் படும்கில் இருப்பதைப் பார்ப்பேன். எனவே நான் இந்தப் பதிவுகளைப் பார்த்து அவற்றை ரீட்வீட் செய்தேன்,” என்று அவர் கூறினார். கடந்த காலத்தில், ரஷ்யா இந்தியாவை ஆதரித்ததாகவும் இந்தியர்கள் இப்போது ரஷ்யாவை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். மேலும் அவரது கணக்கு புதியது. ஏனெனில், அவர் தனது முந்தைய கணக்கின் கடவுச் சொல்லை மறந்துவிட்டதாகக் கூறினார்.

கணக்குகள் மேற்கத்திய நாடுகள் மீதான கலவையான விமர்சனங்களை ட்வீட் செய்கின்றன. பிரிக்ஸ் நாடுகள் என்றழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன. புதினுக்கு நேரடி ஆதரவை வழங்குகின்றன.
“தகவல் பிரசாரங்கள் மேற்கு நோக்கியதாக இயக்கப்படும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆயினும் எந்தக் கணக்கும் மேற்கத்திய நாடுகள் குறித்துப் பேசவோ அல்லது மேற்கிலிருந்து வந்ததாகவோ கூறவில்லை,” என்று மில்லர் கூறுகிறார்.
நம்பகத்தன்மையற்ற கணக்குகளின் தொகுதி எதுவாக இருக்கும் என்பதை அடையாளம் காண, ஆராய்ச்சியாளர்கள் கணக்குகளை உருவாக்கும் தேதிகள், “மனிதத்தன்மையற்ற” ட்வீட் பதிவிடும் முறை (நாளொன்றுக்கு 24 மணிநேரமும் ட்வீட் செய்வது போன்ற கணக்குகள்) மற்றும் ட்வீட் செய்யப்பட்ட தலைப்புகளின் வரம்பைப் பார்க்கிறார்கள்.
“இந்த விஷயங்கள் எதுவும் பெரியளவில் ஆபத்தானதல்ல. ஆனால், அவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, இந்தக் கணக்குகள் சந்தேகத்திற்குறியதா என்பதைக் கவனிக்க முடிகிறது,” என்கிறார் மில்லர்.

பட மூலாதாரம், TWITTER
சரியான ஒளிப்படம் இல்லாமல் இருப்பது, கணக்கு போலியானது என்பதற்கான குறிப்பிடத்தக்க அடையாளமாக இருக்கலாம். CASM ஆல் கண்காணிக்கப்பட்ட 100 கணக்குகளின் மாதிரியில், 41 கணக்குகளில் சுயவிவரப் படங்கள் இல்லை என்று பிபிசி கண்டறிந்தது. மேலும் 30 பேர் புதின் அல்லது ஃபேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பெர்க் போன்ற நபர்களின் படங்களை வைத்திருந்தனர். நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே சாதாரண தனிநபர்களின் படங்களை வைத்திருந்தனர். அவற்றில் சில திருடப்பட்டவை.
“தனிநபர்கள், குழுக்கள் அல்லது நிறுவனங்கள் மற்றவர்களைத் தவறாக வழிநடத்த, குழப்ப அல்லது ஏமாற்ற” ஆள்மாறாட்டம் செய்வதை ட்விட்டர் தடை செய்கிறது.
போர் தொடங்கியதில் இருந்து #IStandWithRussia மற்றும் #ISTandWithPutin என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்)குகளுடன் இணைக்கப்பட்ட டஜன் கணக்கான கணக்குகளை இடை நிறுத்துவது உட்பட, அதன் தளத்தைக் கையாளுதல் மற்றும் ஸ்பேம் கொள்கையை மீறியதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை அகற்றியுள்ளதாக நிறுவனம் எங்களிடம் கூறியது.
ட்விட்டர், சிஏஎஸ்எம் அமைப்பின் ஆராய்ச்சிகளால் சுட்டிக்காட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகளையும் பிபிசி சார்பில் குறிப்பிட்டுக் காட்டப்பட்ட 12 கணக்குகளையும் விசாரித்து இடைநிறுத்தியதாகக் கூறுகிறது.
அதேநேரம், யுக்ரேன் போரைச் சுற்றியுள்ள உணர்வை செயற்கையாகப் பெருக்குவதற்கு பரவலாக ஒருங்கிணைக்கப்படும் நடவடிக்கைகளுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் ட்விட்டர் கூறியது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com