பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இந்த மே மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் 5 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த 5 சம்பவங்களால் மட்டும் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எந்தெந்தெ தேதிகளில் என்ன நடந்தது? சுருக்கமான பட்டியல்:
மே 13
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள மெல்வாக்கி நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மே 14
அடுத்த சம்பவம் அடுத்த நாளே நடந்தது. மே 14ஆம் தேதி நியூயார்க்கின் பஃப்பலோ நகரில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இனவெறி காரணமாக நடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, தான் இன்னும் அதிகமான கருப்பின மக்களை கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார் என்று காவல்துறை தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
மே 15 (ஒரே நாளில் இரண்டு)
அடுத்த ஒரே நாளில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறின.
கலிஃபோர்னியாவில் உள்ள தைவானிய தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.
அதே நாளில், டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள சந்தை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்தனர். 5 பேருக்குள் தொடங்கிய சண்டையால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
மே 25
உலக கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு 20க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு மே 25ஆம் தேதி நடைபெற்றது. டெக்சாஸ் மாகாணம் யுவால்டே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடத்தபட்ட இந்த துப்பாக்கிச் சூடு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் சந்தேக நபர், காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை.

பட மூலாதாரம், Reuters
இப்படியாக, அமெரிக்காவில் இந்த மே மாதத்தில் மட்டும் 5 இடங்களில் பொதுவெளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளன. மே 25ஆம் தேதி டெக்சாஸின் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலும் 14ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலும் சந்தேக நபர்கள் வணிக ரீதியிலான (கடைகளில் வாங்கக்கூடிய) கைத்துப்பாக்கியை வைத்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
துப்பாக்கி பயன்படுத்தும் குடிமக்கள் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில், அமெரிக்கா முதலிடம் வகிக்கும் நிலையில், ஹிலரி கிளிண்டன் உள்ளிட்ட அமெரிக்க தலைவர்கள் பலரும், குடிமக்கள் துப்பாக்கி பயன்படுத்துவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com