- டிஃபானி டர்ன்புல்
- பிபிசி செய்தியாளர், சிட்னி
பட மூலாதாரம், HometoBilo/Twitter
ஆஸ்திரேலியாவின் அகதிகள் அடைக்கல கோரிக்கை குறித்த கொள்கைகள் மீதான கோபத்தை ஒருமுகப்படுத்திய, கிறிஸ்மஸ் தீவில் காவலில் வைக்கப்பட்டுள்ள நடேஸ் முருகப்பன் குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்திற்குத் திரும்புவதற்கான நான்கு ஆண்டு காலப் போராட்டம் வெற்றியடைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம், நடேஸ் முருகப்பன் குடும்பத்திற்கு விசா வழங்கியது. அவர்கள் தற்காலிகமாக பில்லோவீலாவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழ் குடும்பம் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடி வருவோர் பெரும்பாலும் அவர்களுடைய குடும்பப் பெயரைக் கொண்டு அறியப்படுவார்கள். ஆனால், நடேஸ் முருகப்பன் குடும்பம் மட்டும் பில்லோவீலா குடும்பம் என அழைக்கப்படுகிறது. பில்லோவீலா என்பது ஆஸ்திரேலியாவில் அவர்கள் 4 ஆண்டுகளாக வசித்து வந்த நகரத்தின் பெயர்.
நாடு கடத்தப்படுவதற்கு எதிரான சட்டப் போராட்டங்கள்
இலங்கை தமிழ் குடும்பமான நடேஸ் முருகப்பன் மற்றும் பிரியா தம்பதியினரும் அவர்களுடைய குழந்தைகளான, ஏழு வயதான கோபிகா மற்றும் நான்கு வயதான தாருணிகா ஆகியோர் தான் அந்த பில்லோவீலா குடும்பம். அவர்களின் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு முதல் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நடேசலிங்கம் முருகப்பன், பிரியா நடராஜா இருவரும் வெவ்வேறு தருணங்களில், இலங்கை உள்நாட்டுப் போருக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறி, ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். நடேஸ் 2012-ஆம் ஆண்டிலும் பிரியா அதற்கு அடுத்த ஆண்டிலும் வந்தனர். அடைக்கலம் கோரி இருவரும் ஆஸ்திரேலிய அரசிடம் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாக்களை ஆஸ்திரேலிய அரசு வழங்கியது.
குடியேறிகளுக்கு வேலை வழங்கும் இறைச்சிக் கூடங்களைக் கொண்ட பில்லோவீலா நகரில் அவர்கள் குடியேறினார்கள். அங்கு சந்தித்துக் கொண்ட இருவரிடையே காதல் மலரவே திருமணம் செய்துகொண்டார்கள். கோபிகா, தாருணிகா என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
ஆஸ்திரேலியாவில் பிரியா மற்றும் நடேஸின் குடியேற்ற விண்ணப்பங்கள் பல ஆண்டு பரிசீலனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. அகதிகள் என்ற தகுதியைப் பெறுவதற்கான வரைமுறைகள் அவர்களுக்கு இல்லையென ஆஸ்திரேலிய அரசு கூறிவிட்டது.

பட மூலாதாரம், HOMETOBILO
2018-ஆம் ஆண்டு நடேஸ் முருகப்பன் குடும்பத்தின் தற்காலிக விசா காலாவதியானபோது, அவர்களை வெளியேற்ற முயற்சி நடந்தது. அப்போது ஆறாயிரம் பேர் வசிக்கும் பில்லோவீலா நகரத்தைச் சேர்ந்தவர்கள், நடேஸ் முருகப்பன் குடும்பத்தை நாட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிராகக் கொந்தளித்தார்கள். ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
நடேஸ் முருகப்பன் குடும்பம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக வழக்கறிஞர்கள் இடைக்காலத் தடை பெற்றனர். பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடந்தன. சமூக ஊடகங்களில் அவர்களுக்கு ஆதரவு பெருகின.
இந்த வழக்கு ஒரு கூக்குரலைத் தூண்டியது. பில்லோவீலாவில் உள்ள உள்ளூர் மக்கள் நடேஸ் முருகப்பன் குடும்பம் திரும்புவதற்காகப் பிரச்சாரம் செய்தார்கள்.
தடுப்பு முகாம் வாழ்க்கை
பில்லோவீலாவில் உள்ள உள்ளூர் மக்கள் அவர்கள் தங்குவதற்காகப் போராடினார்கள். தேசியளவிலான ஆதரவையும் அரசியல் களத்தில் பல்வேறு எம்.பிக்களின் ஆதரவையும் பெற்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.
அவர்களுக்குப் பாதுகாப்பை மறுக்கும் முடிவுக்கு எதிரான சட்டரீதியான சவால்கள் ஆஸ்திரேலியாவின் நீதிமன்றங்களில் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சர்ச்சைக்குரிய கொள்கைகளின் கீழ், நடேஸ் முருகப்பன் போன்ற அடைக்கலம் கோருபவர்களை ஆஸ்திரேலியாவில் காலவரையற்ற காவலில் வைக்கலாம். அதேவேளையில் அவர்களின் அகதி கோரிக்கைகளை மதிப்பிடுவது அல்லது அவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற முடிவை எடுக்கும்.
ஆனால், கடந்த சனிக்கிழமை தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் ஆந்தனி ஆல்பனீஸ், நடேஸ் முருகப்பன் குடும்பத்திற்கு தனது அரசு விதிவிலக்கு அளிக்கும் எனக் கூறினார்.
“மக்களை மோசமாக நடத்தக்கூடாது என்ற செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும் அளவுக்கு நாங்கள் வலுவான சமூகமாக இருக்கிறோம். இவ்வளவு காலமாக இது எப்படி நடந்தது என்பது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது,” என்று அவர் வெள்ளிக்கிழமை கூறினார். ஆனால், தற்காலிக விசாவுக்குப் பதிலாக நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தக் குடும்பத்திற்கு ஆதரவளிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“பில்லோவீலாவுக்கான அவர்களுடைய பயணம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு நீண்ட, வலி மிகுந்த அத்தியாயம் முடிவடைவதைக் குறிக்கிறது. மேலும், அந்தக் காயங்கள் குணமடைவதற்கும் மீண்டு வருவதற்குமான தொடக்கமாகவும் அது இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் அவர்கள் நிரந்தரமாக இருக்க அனுமதிக்கும் வரை இந்தக் குடும்பம் பாதுகாப்பாக இருக்காது,” என்று அந்தக் குடும்பத்தின் நண்பர் ஏஞ்சலா ஃபிரட்ரிக்ஸ் வெள்ளிக்கிழமையன்று ட்வீட் செய்தார்.
அடைக்கல கோரிக்கையை மறுமதிப்பீடு செய்வதற்காக நடேஸ் முருகப்பன் குடும்பம் நீண்ட சட்டப் போராட்டத்தையும் நடத்தியது.

பட மூலாதாரம், SIMONE CAMERON
அந்தக் குடும்பத்தை நாடு கடத்த நடந்த இரண்டு முயற்சிகளுக்குப் பிறகு, 2019-இல் விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவு அவர்களின் வழக்கு தீர்க்கப்படும் வரை, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியாது என்று தீர்ப்பளித்தது. அவர்கள், 1,500 நாட்களுக்கும் மேலாக குடியேற்ற காவலில் (அதில் பெரும்பாலான நாட்கள் ஆஸ்திரேலிய புறக்காவல் பகுதியான இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவில் இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு, தருணிகாவுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதால், அவர்கள் தீவிலிருந்து பெர்த்தில் இருக்கும் சமூக காவலுக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த ஆண்டு பிபிசியிடம் அவர்கள் நீண்டகாலமாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்கள். அவர்களுடைய மூத்த மகள் கோபிகா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தடுப்பு முகாமில் தான் கழித்துள்ளார். தடுப்பு முகாமில் இருந்த ஆண்டுகள் மனச்சோர்வை ஏற்படுத்தியதாக பிரியா கூறினார்.
இதற்கிடையில், குடும்பம் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டபோது வெறும் ஒன்பது மாதமாக இருந்த தருணிகாவுக்கு, மோசமான ஊட்டச்சத்து காரணமாக பல் சொத்தையானது. அதை அகற்றுவதற்கு இரண்டு வயதிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, 2019-ஆம் ஆண்டில் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மற்றொரு நோய்க்காக இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடைக்கல கோரிக்கையாளர்கள் மீதான கடுமையான கொள்கைகள் மனித கடத்தல் மற்றும் கடலில் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதாக ஆஸ்திரேலியா வாதிடுகிறது. ஆனால், ஐநா அதன் அணுகுமுறை மனிதாபிமானற்றது என்று விமர்சித்துள்ளது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com