Press "Enter" to skip to content

நூபுர் ஷர்மா : முஸ்லிம் வெறுப்புணர்வால் இந்தியா வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 2020ல் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டு மூலம் இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவலாக பரவியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, இஸ்லாமிய வெறுப்புணர்வாக உருவெடுத்தது.

இந்தியாவையும் வெளிநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மத போதகர்கள் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டனர். இது சுமார் 100 ஆண்டுகள் பழமையான இஸ்லாமிய மத போதனை இயக்கமாகும்.

நரேந்திர மோதி தலைமையிலான இந்து தேசியவாத அரசான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் இந்த மாநாட்டை ஒரு ‘சூப்பர் ஸ்ப்ரெட்டர்’ நிகழ்வு என்று குறிப்பிட்டது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்திலான மீம்கள் மற்றும் ஹேஷ்டேகுகள் தப்லீக் ஜமாத் குழு கொரானா வைரஸை பரப்பியதாகக் குற்றம் சாட்டி சமூக ஊடங்களில் பகிரப்பட்டன.

”கொரோனா ஜிஹாத்தில் இருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்” என்பன போன்ற பதற்றத்தை தூண்டும் வகையிலான தலைப்புகளுடன் ஊடகங்கள் செய்திகளை ஒளிபரப்பின.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 1000 பேர் மீது ஊரடங்கு விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. (எட்டு மாதங்களுக்கு பின்பு வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ”அரசின் தீய நோக்கத்தோடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளனர்” என்று கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.)

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பான்மையான மதபோதகர்கள் இந்தோனீசியாவில் இருந்து வந்தனர். இந்தோனீசியா இந்தியாவின் ஒரு வர்த்தகக் கூட்டாளி.

பிராந்திய உச்சி மாநாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தோனீசியா தமது எதிர்ப்பையும் பதிவு செய்தது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான இந்தியாவில் முஸ்லிம்களை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விவகாரம் பயன்படுத்தப்படுவதாக இந்தோனீசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

”இந்த விவகாரம் உள்நாட்டு பிரச்சனைகளை வெளிநாட்டு மயமாக்குவதற்கான ஓர் எடுத்துக்காட்டு” என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு மூத்த உறுப்பினர்கள் முகமது நபி குறித்து கூறிய கருத்துகளால் உண்டாகியுள்ள ராஜீயப் பிரச்னை இஸ்லாமிய வெறுப்புணர்வு குற்றச்சாட்டின் பேரில் நரேந்திர மோதியின் கட்சி அல்லது அரசு சர்வதேச அளவில் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை அல்ல.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூரியா 2015ஆம் ஆண்டு அரேபிய பெண்கள் குறித்து பதிவிட்டிருந்த ஒரு ட்வீட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிகுதியாக பகிரப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் குவைத்தைச் சேர்ந்த முன்னணி தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், அரசியல் விமர்சகர்கள் என பலரும் அதை விமர்சித்து இருந்தனர். சூர்யா பின்னர் அந்த டிவிட்டர் பதிவை நீக்கினார்.

2018ஆம் ஆண்டு நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ”இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேச குடிமக்கள் கரையான்கள் போல இந்தியாவை அரித்து சாப்பிட்டுவிட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Hindu leaders

பட மூலாதாரம், FACEBOOK/DEVBHOOMI RAKSHA ABHIYAN

இது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இந்தியாவின் இரண்டாவது உச்சபட்ச செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரின் இந்தக் கருத்து ”தேவையற்றது மற்றும் தவறான தகவலின் பேரில் கூறப்பட்டது” என்று வங்கதேசத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் அப்பொழுது எதிர்வினையாற்றினார்.

வங்கதேசம் குறித்து வெறுப்புணர்வுடனும் அவமதிக்கும் விதத்திலும் கருத்துக் கூறும் நீண்ட வரலாறை உடையவர் அமித் ஷா என்று வங்கதேச கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

‘இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும்’

இந்தியாவில் வசிக்கும் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரிகளின் தலைவர்கள் காவி உடை உடுத்திக்கொண்டு வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பேசும் பேச்சுக்கள் கடந்த ஓர் ஆண்டில் இந்தியாவில் சுனாமி போல வெளியாகின.

அவற்றில் சில பேச்சுகள் வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என்று குறிப்பிட்டதுடன் இஸ்லாமிய இனப்படுகொலை குறித்தும் குறிப்பிட்டன.

இதற்கு முந்தைய காலகட்டங்களில் இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை ஏமாற்றி மதம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டு ”லவ் ஜிகாத்” என்ற பெயரில் இந்துத்துவ வாதிகளால் முன் வைக்கப்பட்டது.

பசு இறைச்சியைக் கடத்துபவர்கள் என்று தங்களால் சந்தேகிக்கப்பட்டவர்களை இந்து கும்பல்கள் அடித்துக் கும்பல் கொலை செய்துள்ளதுடன் இஸ்லாமியர்கள் நடத்தும் தொழில்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

சமூக ஊடகங்களில் இஸ்லாமிய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக பணியாளர்கள் ஈவிரக்கமின்றி பகடி செய்யப்படுகின்றனர். போலியான இணையதளங்கள் மூலம் இஸ்லாமிய பெண்கள் விற்பனைக்கு வந்த நிகழ்வுகளும் உண்டு.

ஒரு சார்பாக நடந்து கொள்ளும் செய்தி குழுக்களும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களின் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் விதத்திலான பேச்சுகளை ஒளிபரப்பின.

Prime Minister Mod

பட மூலாதாரம், AFP

நரேந்திர மோதி தலைமையிலான அரசு இத்தகைய விவகாரங்களில் ஒன்று அமைதி காத்தது அல்லது மிகவும் தாமதமாக பதிலளித்தது அல்லது ‘உதிரி சக்திகள்தான்’ இவற்றுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியது.

இவை அனைத்தும் சாதாரண இந்துக்கள் இணையதளத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட ஊக்கமாக அமைந்தது. இதனால் பின்விளைவுகளும் ஏற்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செஃப் ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டதால் அவர் பணியாற்றி வந்த துபாய் ஹோட்டலில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

துபாயில் வசிக்கும் இந்தியர்கள் தப்லீக் ஜமாத்திற்கு எதிராக 2020ஆம் ஆண்டில் டிவிட்டரில் பதிவிட்ட பொழுது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு எதிராக வெளிப்படையான இனவாதத்தையும் பாகுபாட்டையும் காட்டும் வகையில் கருத்து வெளியிடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று ஐக்கிய அரபு எமிரேட்சின் அரச குடும்பத்துடன் தொடர்புடைய உள்ளூர் பெண் தொழில்முனைவோர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தற்போதும் கூட எதிர்பாராதவிதமாக இந்தியாவுக்கு எதிரான பதிலடி தீவிரமாக உள்ளது. சௌதி அரேபியா, இரான், கத்தார் உள்ளிட்ட 15 நாடுகள் இந்தியாவிடம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

முகமது நபிக்கு எதிராக கருத்து வெளியிடுவது நிச்சயமாக ”சிவப்பு கோட்டை தாண்டுவதுதான்” என்று முன்னாள் இந்திய வெளியுறவு அதிகாரி தல்மிஸ் அகமது கூறுகிறார்.

சர்ச்சையைக் கிளப்பிய வகையில் பேசியதால் தமது மூத்த உறுப்பினர்களையே நீக்க வேண்டிய நிலைக்கு, தற்போது தமது நரேந்திர மோதியின் கட்சி உள்ளானது.

”அரசின் ஆதரவோடு தீய நோக்கங்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகளும் மூலம் இந்திய சிறுபான்மையினரை இலக்கு வைப்பது இந்தியாவின் சர்வதேச அளவிலான நற்பெயருக்கு நற்பெயர் மீது பின்விளைவுகளை உண்டாக்கக் கூடியதாக இருக்கும்”, என்று இந்தியாவின் முன்னணி அறிஞர்களில் ஒருவரான பிரதாப் பானு மேத்தா கூறுகிறார்.

ஆனால் இந்த விவகாரம் விரைவில் வலுவிழந்து போய், சூழல் முன்பிருந்த நிலையை மீண்டும் வரும் என்று பல பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் நம்புகிறார்கள்.

85 லட்சம் இந்தியர்கள், 35 பில்லியன் அமெரிக்க டாலர் பணம்

இந்தியாவுக்கு வளைகுடா நாடுகளுடன் மிக நீண்ட மற்றும் ஆழமான நட்பு இருக்கிறது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் 6 நாடுகளில் சுமார் 85 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். இது அந்த நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கையை போல இரண்டு மடங்கு.

இந்த ஆறு நாடுகளிலும் வாழும் வெளிநாட்டு சமூகங்களில் அதிகமான எண்ணிக்கை இந்தியர்களுடையது.

அந்த நாடுகளில் இருந்து இந்தியர்கள் ஆண்டுதோறும் இந்தியாவுக்கு சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் அனுப்புகிறார்கள். இவற்றின் மூலம் சுமார் 4 கோடி குடும்பங்கள் பலனடைகின்றன. இவ்வாறு பயன்பெறும் குடும்பங்களில் இந்தியாவின் மிகவும் வறுமை நிலை மிக்க மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் குடும்பங்களும் அடக்கம்.

கடந்த மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார் நூபுர் ஷர்மா

பட மூலாதாரம், TWITTER/NUPUR SHARMA

இந்தியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் இடையே நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 97 பில்லியன் அமெரிக்க டாலர்.

இராக்தான் இந்தியாவுக்கு அதிகமாக பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடு. இரண்டாவது இடத்தில் இருப்பது சௌதி அரேபியா. இந்தியாவின் இயற்கை எரிவாயுவில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான தேவையை பூர்த்தி செய்வது கத்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் வளைகுடா நாடுகளுடனான உறவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். எரிசக்தி பாதுகாப்பு, இந்தியாவிலிருந்து குடியேறுபவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு, அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றால் மேற்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் மிக்க உறவு உள்ளது என்று அசோகா பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ஸ்ரீநாத் ராகவன் கூறுகிறார்.

அரசியல் சார்பற்ற, சட்ட நடைமுறைகளை மதிக்கின்ற, தொழில்நுட்ப அறிவு வாய்ந்தவர்களின் நாடாக வளைகுடா நாடுகளில் இந்தியா பெயர் பெற்றுள்ளது. இவ்வாறு வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதத்திலான பேச்சுகள் தொடர்ந்தால் வளைகுடா நாடுகளில் இருக்கும் நிறுவனத்தினர் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தி கொள்வார்கள். எதிர்ப்புணர்வு இருக்க வாய்ப்புள்ள ஒருவரை எதற்கு அவர்கள் வேலைக்கு எடுக்க விரும்புவார்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார் ‘வெஸ்ட் ஏசியா அட் வார்’ எனும் நூலின் ஆசிரியரும் முன்னாள் வெளியுறவு அதிகாரியுமான அகமது.

ஆனால் இந்த முறை நரேந்திர மோதி அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

”இவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தொடர்ந்தால் அதற்கு பின் விளைவுகள் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வது போல இந்த நடவடிக்கைகள் உள்ளன. உள்நாட்டு அரசியலும் வெளிநாட்டு அரசியலும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை அல்ல; இந்திய அரசு தன் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற சலசலப்புக்குள் இந்தியா சிக்கிக் கொள்ள வேண்டுமா என்று இந்திய அரசு யோசிக்க வேண்டும்”, என்று பேராசிரியர் ராகவன் கூறுகிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »