Press "Enter" to skip to content

கஞ்சா வளர்ப்பதையும், விற்பதையும் சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து: உல்லாசத்துக்கு நுகரத் தடை

  • ஃப்ரான்சஸ் மாவோ
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

தாய்லாந்து தனது நாட்டின் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கியுள்ளது. இதன் மூலம் தாய்லாந்து மக்கள் கஞ்சா செடி வளர்க்கவும், விற்கவும் தடை இருக்காது.

கடுமையான போதைப் பொருள் சட்டங்கள் நடைமுறையில் உள்ள தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இத்தகைய நடவடிக்கையை எடுக்கும் முதல் நாடாகியுள்ளது தாய்லாந்து.

ஆனால், உல்லாசத்துக்காக கஞ்சா பயன்படுத்துவது தொடர்ந்து தடை செய்யப்பட்டே இருக்கும். ஆனால், இந்த புதிய தளர்வு நடைமுறையில் கஞ்சா மீதான தடை நீக்கமாகவே இருக்கும் என்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

உள்ளூரில் கஞ்சா வணிகத்தை வளர்ப்பது விவசாயத்தையும், சுற்றுலாவையும் வளர்க்கும் என்று அரசாங்கம் நினைக்கிறது. கஞ்சா செடி வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் 10 லட்சம் கஞ்சா செடிகளை அரசே விநியோகிக்கவும் செய்கிறது.

“ஹெம்ப் எனப்படும் சணல் வகைப் பயிர், கஞ்சா ஆகியவற்றின் மூலம் வருமானம் ஈட்ட மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு,” என்று கூறியுள்ளார் தாய்லாந்து துணை பிரதமரும், சுகாதார அமைச்சருமான அனுதின் சர்ண்வீரகுல். கடந்த மாதம் தனது சமூக ஊடகப் பக்கங்களில் இந்த தகவலை அவர் கூறியிருந்தார்.

கஞ்சா இலை சேர்த்து சமைக்கப்பட்ட கோழிக் கறித் துண்டு ஒன்றின் படத்தையும் அவர் தனது ஃபேஸ்புக் பதவில் பகிர்ந்திருந்தார். விதிகளைப் பின்பற்றினால், யார் வேண்டுமானாலும் இந்த உணவைத் தயாரிக்கலாம் என்று அவர் அந்தப் பதிவில் கூறியிருந்தார். போதை தருகிற டெட்ரோஹைட்ரோ கன்னபினால் (THC) என்ற பொருள் 0.2 சதவீதத்துக்கும் குறைவாகவே இந்த உணவுப் பொருளில் இருக்கவேண்டும் என்பது அந்த விதிகளில் முக்கியமானது.

வியாழக்கிழமை முதல் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வீடுகளில் 6 கஞ்சா செடிகள் வரை தொட்டிகளில் வளர்க்கலாம். நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்று பயிரிடலாம். நுகர்வோரும், கஞ்சா கலந்து செய்யப்பட்ட உணவுப் பொருள்களையும், பானங்களையும் உணவகங்களில் கேட்டுப் பெறலாம்.

தாய் உணவுத் திருவிழா ஒன்றில் கஞ்சா செடி சேர்த்து செய்யப்பட்ட ஓர் உணவுப் பொருள்.

பட மூலாதாரம், SOPA Images/Getty Images

சிகிச்சைக்கும்…

அதைப் போல தாய்லாந்து முழுவதும் உள்ள மருத்துவனைகள் கஞ்சாவைப் பயன்படுத்தி தரப்படும் சிகிச்சைகளையும் அளிக்கலாம். மருத்துவத்துக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை சட்டப்படி அங்கீகரித்த முதல் ஆசிய நாடு தாய்லாந்துதான். இதற்கான அனுமதி 2018ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

ஆனால், தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இந்த மருந்துகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதம்தான். பொது இடங்களில் புகைப்பிடிக்கவும் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது பொது இடங்களில் தொந்தரவு செய்யும் செயல் என்று வகைப்படுத்தியுள்ள அதிகாரிகள் இந்த விதியை மீறுகிறவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

4 ஆயிரம் பேரை விடுதலை செய்யத் திட்டம்

ஏற்கெனவே கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்து சிறையில் வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் பேரை இந்த திட்டத்தின் கீழ் விடுவிக்கவும் திட்டமிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.

கஞ்சாவுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கஞ்சா வரைந்த தலைப் பாகை அணிந்த ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images

தாய்லாந்து ஆண்டு முழுவதும் வெப்ப மண்டல தட்வெட்பம் நிலவும் நாடு. இங்கே, உள்ளூர் மக்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பரவலாக கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு நீண்ட வரலாறு உண்டு.

கஞ்சா கட்டுப்பாடு தொடர்பான விரிவான சட்ட வரைவு ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. கஞ்சா பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதிகள் காலப்போக்கில் தளர்ந்துபோகும் என்று வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள்.

Presentational grey line

அலசல்: ஜொனாதன் ஹெட்ஸ் – பிபிசி நியூஸ்

எல்லாம் சரி. தாய்லாந்தில் கஞ்சா சட்டபூர்வமானதா? சட்டவிரோதமா?

கோவிட் கால வீழ்ச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டின் சுற்றுலாப் பொருளாதாரம் மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளது. எனவே, தளர்த்தப்பட்ட கஞ்சா விதிகள் மூலமாக தாங்கள் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில் கஞ்சா பற்ற வைக்க முடியுமா என்றுதான் சுற்றுலாப் பயணிகள் யோசனை செய்வார்கள்.

ஆனால், அரசாங்கம் முடியாது என்கிறது. பொது இடத்தில் கஞ்சா பற்ற வைக்க முடியாது. அத்துடன், 0.2 சதவீதத்துக்கு மேல் போதை தரும் டி.எச்.சி. உள்ள கஞ்சாப் பொருள்களை விற்பதற்கும் தடை உள்ளது.

கஞ்சாவில் இருந்து எடுத்த மருந்துப் பொருள்களைக் கொண்டு தரப்படும் சிகிச்சைகளுக்கான சந்தையை ஆனவரை பயன்படுத்திக்கொள்வதுதான் தாய்லாந்து அரசின் அதிகாரபூர்வ இலக்கு ஆகும். தங்கள் நாட்டின் நெரிசல் மிகுந்த சிறைச் சாலைகளில் நெரிசலைக் குறைப்பதும் அரசாங்கத்தின் செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் ஆகும்.

கஞ்சா செடி வளர்க்கத் தடை இல்லை என்பதால், யாரும் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்ய முடியாது. மருத்துவத்துக்கும், உணவுக்கும் மட்டுமே அனுமதி அளிப்பதாகவும், உல்லாசத்துக்கு நுகர அனுமதி இல்லை என்கிறது அரசாங்கம். ஆனால், நடைமுறையில் இரண்டு பயன்பாட்டுக்கும் இடையிலான கோடு கிழிப்பது கடினமானது.

Presentational grey line

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »