பட மூலாதாரம், Getty Images
தன்னுடைய பெயரையும் பாலினத்தையும் மாற்றக்கோரி உலகின் பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க்கின் மகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஒரு திருநங்கை. மேலும், “தன் தந்தையுடன் இனி எவ்வித உறவையும் பேண விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
18 வயதான அவர் தன்னை பெண் ஆக அங்கீகரிக்குமாறும் தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற அனுமதி கோரியும் அம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, அவருடைய பெயர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் ஆக இருந்தது.
பெயர் மாற்றம் மற்றும் புதிய பிறப்பு சான்றிதழ் கோரி அவர் சாண்டா மோனிக்காவில் பகுதியில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் கவுன்டி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் தற்போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஈலோன் மஸ்க்குக்கும் அவருடைய மகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவு என்ன என்பது குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
மகளின் நிலை – கருத்து கூற மறுக்கும் ஈலோன்
இது தொடர்பாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஈலோன் மஸ்க் கருத்து தெரிவிக்கவில்லை.
கனடா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் என்பவரை ஈலோன் மஸ்க் 2000ஆம் ஆண்டில் திருமணம் செய்தார், இந்த தம்பதி 2008ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அவர்களுடைய முதல் மகன் நெவாடா, 2002ஆம் ஆண்டு பிறந்தார், ஆனால் அக்குழந்தை திடீர் இறப்பு நோய் அறிகுறியால் (Sudden Infant Death Syndrome SIDS) 10 வாரங்களிலேயே இறந்துவிட்டது.
அதன் பின்னர் சேவியர், கிரிஃபின் என்ற இரட்டைக் குழந்தைகளும் பின்னர் டாமியன், காய், சாக்சன் என்ற மூன்று குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிறந்தன.

பட மூலாதாரம், Getty Images
ஈலோன் மஸ்க்குக்கு வேறொரு பெண்ணுடன் X Æ A-Xii மற்றும் ‘ஒய்’ என்ற செல்லப்பெயர் கொண்ட ஏக்சா டார்க் சிடேரெல் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளன.
ஈலோன் மஸ்க் மிக பிரபலமானவராக இருந்தாலும் அவருடைய குழந்தைகளின் அடையாளங்கள் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை.
தந்தையர் தினத்தன்று, தன்னுடைய அனைத்து குழந்தைகளையும் தான் மிகவும் நேசிப்பதாக ஈலோன் மஸ்க் ட்வீட் செய்திருந்தார்.
தன் மகள் தன்னிடமிருந்து விலகிச் செல்லும் முடிவை எடுத்திருப்பது குறித்து ஈலோன் மஸ்க்கிடமிருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.
தன் பாலின எதிர்பாளர்
திருநங்கைகள் குறித்த பிரச்னைகள் பலவற்றுக்காக மஸ்க் குரல் கொடுத்து வருகிறார். மேலும், தன் பாலின ஈர்ப்புக்கு எதிரானவர் என அவர் முத்திரை குத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக ஜனநாயக கட்சிக்கு வாக்களித்த ஈலோன் மஸ்க், தன் ஆதரவை குடியரசு கட்சிக்கு வெளிப்படையாக அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அவருடைய மகள் தன் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுவதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
‘Don’t Say Gay’ என பொதுவாக அழைக்கப்படும் மசோதாவை அறிமுகம் செய்த குடியரசு கட்சியை சேர்ந்த புளோரிடா ஆளுநர் ரான் டீசாண்டிஸின் ரசிகர் என்றும் ஈலோன் மஸ்க் கூறியுள்ளார்.
பாலின விருப்பம் மற்றும் பாலின ரீதியிலான பிரச்னைகள் குறித்து மாணவர்களுக்கு பள்ளிகளில் கற்பிப்பதை இந்த சர்ச்சைக்குரிய மசோதா தடுக்கிறது. இதற்கு இணங்க மறுக்கும் ஆசிரியர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் இந்த மசோதா கூறுகிறது.
பாலின ரீதியிலான மாற்றுப் பெயர்களை கேலி செய்யும் விதமாக 2020ஆம் ஆண்டில் ஈலோன் மஸ்க் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கிவிட்டார். பின்னர், “நான் மாற்றுப்பாலினத்தவர்களை முற்றிலும் ஆதரிக்கிறேன்” என்று அவர் ட்வீட் செய்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முற்பட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com