Press "Enter" to skip to content

ஆப்கன் நிலநடுக்கம்: உணவோ, தங்குமிடமோ இல்லாமல் தவிக்கும் மக்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்தவர்கள், சாப்பிட எதுவுமில்லை, தங்க இடமில்லை, காலரா தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறுகிறார்கள். பிபிசியின் செகந்தர் கெர்மானி, நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பக்திகா மாகாணத்தில் இருந்து செய்திகளை வழங்கி வருகிறார்.

தனது குடும்ப வீட்டில் மிச்சமிருக்கும் இடிபாடுகளுக்கு இடையே கண்ணீரோடு ஆகா ஜான் தேடிக் கொண்டிருந்தார்.

“இதெல்லாம் என் மகனின் காலணிகள்,” என்று அவற்றிலிருந்த தூசுகளைத் தட்டிவிட்டபடி கூறினார். அவருடைய மூன்று இளம் குழந்தைகளும் இரண்டு மனைவிகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர்.

புதன்கிழமை அதிகாலை வேளையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஆகா ஜான் அவருடைய குடும்பத்தினர் தங்கியிருந்த அறையை நோக்கி வேகமாக ஓடினார்.

“அனைத்தும் இடிபாடுகளுக்கு அடியில் கிடந்தன. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. என் உறவினர்களை உதவிக்கு அழைத்தேன். ஆனால், என் குடும்பத்தினரை நாங்கள் வெளியே எடுத்தபோது, அவர்கள் உயிரிழந்திருந்தனர்.”

பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில், ஆகா ஜானின் கிராமம் அமைந்திருக்கும் பகுதி, நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. அதில், சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் 3,000 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அருகிலுள்ள பெரிய நகரத்திற்குச் செல்ல, பெரும்பாலும் மோசமான நிலையிலிருக்கும் சாலைகளில் மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டும். தொலைதூரத்தில் இருக்கும் இடம் என்பதால் காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வதும் மிகக் கடினமாகிறது. சிலர் தாலிபன்களின் ராணுவ உலங்கூர்திகளில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பொதுவாக மண் மற்றும் கல்லால் கட்டப்பட்ட கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீடும் மோசமாகச் சேதமடைந்து காணப்படுகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் யாராவது ஒருவரையேனும் இழந்து துக்கப்படுவதைப் போல் தெரிகிறது.

ஹபீப் குல், பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரின் எல்லையைத் தாண்டி கூலி வேலை செய்து கொண்டிருந்தார். நிலநடுக்கம் குறித்த செய்தியை அறிந்ததும் அவர் பர்மாலில் இருக்கும் தனது கிராமத்திற்கு விரைந்தபோது, அவருடைய உறவினர்களில் 20 பேர் பலியாகியிருந்தனர். அதில் 18 பேர் ஒரே வீட்டில் பலியாகினர்.

தனது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களோடு ஆகா ஜான்(இடதுபுறம்)

“யாருடைய பெயர்களை நான் உங்களுக்குக் கொடுப்பேன்? மூன்று சகோதரிகள், என் மருமகள், என் மகள், சிறு குழந்தைகள் என்று என் உறவினர்களில் பலர் உயிரிழந்துவிட்டார்கள்.

நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு கிராமவாசிகளும் தங்கள் வீட்டிற்கு ஏற்பட்ட அழிவைக் காட்ட விரும்புகிறார்கள். இந்தப் பேரழிவை உலகம் காண விரும்புவதால்,

நாம் சந்திக்கும் ஒவ்வொரு கிராமவாசிகளும் தங்கள் வீட்டிற்கு அழிவை காட்ட விரும்புகிறார்கள். அதற்கு ஒரு காரணம், இந்தப் பேரழிவை உலகம் காண வேண்டும். மற்றொரு காரணம், உதவி விநியோகப் பட்டியலில் தங்கள் பெயர்கள் சேர்க்கப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

“உலகம் எங்களை சகோதரர்களாகப் பார்த்து எங்களுக்கு உதவி செய்தால், நாங்கள் இங்கு எங்கல் நிலத்தில் இருப்போம். இல்லையென்றால், கண்ணீரோடு இவ்வளவு காலம் வாழ்ந்த இந்த இடத்தை விட்டு வெளியேறுவோம்,” என்று ஹபீப் குல் பிபிசியிடம் கூறினார்.

மேலே, ராணுவ ஹெல்காப்டர்கள் வானத்தில் சுழல்கின்றனர். அவர்கள் இனி காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வதில்லை. ஆனால் பொருட்களை வழங்குகிறார்கள். தாலிபன் அதிகாரிகள் எங்களிடம் மீட்பு நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

ஹபீப் குல்

வீடுகளை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்குத் தங்குமிடம் என்பது மிக முக்கியமான தேவை.

ஆகா ஜானும் அவருடைய எஞ்சியிருக்கும் மகன்களில் ஒருவரும் ஒரு வெற்று நிலத்தில் மரக் குச்சிகளுக்கு இடையே ஒரு பெரிய தார்ப்பாய் போட்டுள்ளார்கள். மற்ற குடும்பங்கள், அவர்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கட்டிய வீடுகளின் எச்சங்களால் சூழப்பட்டிருக்கும் கூடாரங்களில் தங்கியுள்ளன.

காலித் ஜான் இப்போது தனது ஐந்து இளம் பேரக் குழந்தைகளுக்குப் பொறுப்பானவர். அவர்களுடைய தந்தை, அவருடைய மகன், காலித் ஜானின் மற்ற இரண்டு குழந்தைகள் ஆகியோர் நிலநடுக்கத்துக்குப் பலியாகினர்.

“அவர்களுக்கு எஞ்சியிருப்பது நான் தான்,” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். மேலும், ஒரு கூடாரத்தின் கீழ் ஒரு பாரம்பர்ய படுக்கையின் மீது அமர்ந்திருந்தவர், “ஆனால், இங்குள்ள வீடுகள் உட்பட அனைத்துமே அழிக்கப்பட்டு விட்டன. என்னால் வீட்டை மீண்டும் கட்ட முடியாது,” என்கிறார்.

நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குடும்பத்தினரோடு நிற்கும் தாத்தா காலித் ஜான்

ஆப்கானிஸ்தான் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்கள் சேதங்களை மதிப்பீடு செய்து பொருட்களை வழங்குகின்றன. ஆனால், இதுவொரு பெரிய நெருக்கடி. நாடு ஏற்கெனவே மோசமான மனிதாபிமான நெருக்கடியில் இருக்கும் சூழலில் இது நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை, காலரா பரவும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளது.

ஹபீப் குல் கிராமத்தில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்ய ஆண்கள் கூடினர். சுமார் 250 பேரில் 50 பேர் பலியாகினர். இப்போது உயிர் பிழைத்தவர்கள் மீதும் அவர்களுக்கு எவ்வளவு விரைவாக உதவிகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதிலும் கவனம் திரும்பும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »