Press "Enter" to skip to content

பாம்பேய் தொல்பொருள் ஆய்வு: சாம்பலுக்குள் புதைந்த கர்ப்பிணி ஆமை கண்டெடுப்பு

  • லியோ சாண்ட்ஸ்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், PARCO ARCHEOLOGICO POMPEI

தொல்லியல் ஆய்வுகளில் உலகளாவிய கவனத்தை பெற்ற நகரங்களில், 2000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ரோமப்பேரரசின் நகரமான பாம்பேய் நகரத்துக்கு முக்கியமான இடமுண்டு.

மூடிச்செறிந்த சாம்பலுக்குள் இருந்து முளைத்து வரும் திடீர் தொல்லியல் படிமங்களாலும், அகழாய்வுகளின்போது வெளிப்படும் ஆச்சரியமான ஊகங்களாலும் பாம்பேய் நகரம் எப்போதும் கவனத்துக்குரிய செய்தியாகவே இருக்கிறது.

அந்த வரிசையில், தன் முட்டைகளோடு சாம்பலுக்குள் சமாதியாக்கப்பட்ட கர்ப்பிணி ஆமை ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதலில் பாம்பேய் நகரம் குறித்து ஒரு எளிய புரிதலை பெறுவோம்.

கி.பி 79இல் வெசுவியஸ் என்ற எரிமலையின் சீற்றத்தால் மொத்த பாம்பேய் நகரமும் மூழ்கியது. இந்த எரிமலைச் சீற்றத்தின் சாம்பல், பாம்பேய் நகரத்தையும் அங்கு குடியிருந்தவர்களையும் மொத்தமாகப் புதைத்துவிட்டது. அதன்பிறகு தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம், ஆய்வு செய்வதற்கான ஒரு வளமான ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த தொல்லியல் பூங்காவில் (2017ஆம் ஆண்டு தொல்லியல் பூங்கா என்று பெயர் வைக்கப்பட்டது) தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வுகள் குறித்து அவ்வப்போது செய்திகள் பரபரப்பாவதுண்டு.

இங்கு கிடைத்த ஆண்டான் – அடிமை உடல்வடிவங்கள், ரோமானியப் பேரரசின் காலத்து தேர், ஆண் பெண் இருவரின் எலும்புக்கூடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள் ஆகியவை பாம்பேய் நகரத்தின் மீது தொல்லியலாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

எரிமலை சாம்பலில் கிடைத்த தேர்

பட மூலாதாரம், HANDOUT VIA REUTERS

கர்ப்பிணி ஆமை கண்டெடுப்பு

அந்தவரிசையில், தற்போது கர்ப்பிணி ஆமை ஒன்று முட்டையுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கி.பி. 79க்குப் பிறகு, பாம்பேய் பகுதியில் ஒரு ஊர்வன வகை உயிரினத்தின் எச்சங்கள் கிடைத்துள்ளன.

எரிமலை சீற்றத்தின்போது, ஏற்கனவே சிதைந்திருந்த ஒரு கட்டடத்தின் அடியில் இந்த ஆமை தஞ்சமடைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதற்கு முன்பாக, கி.பி.64இல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, சேதமடைந்த கட்டடம் ஒன்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். முழுமையாக சீரமைத்து முடிக்கப்படாத அந்தப் பகுதியை அகழ்வாராய்ச்சி செய்தபோதுதான் இந்த ஆமையின் எச்சங்கள் கிடைத்துள்ளன.

கி.பி.64ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தில் புதையுண்டுபோன ஒரு கடைக்குக் கீழே இந்த 14 செ.மீ நீளமுள்ள ஆமை ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக புதையுண்டு கிடந்திருக்கிறது.

முட்டையிடுவதற்கேற்ற அமைதியான இடம் தேடி அலையும்போது இந்த ஆமை கொல்லப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டையுடன் கண்டெடுக்கப்பட்ட கர்ப்பிணி ஆமை

பட மூலாதாரம், PARCO ARCHEOLOGICO POMPEI

“இந்த ஆமை எப்படி இங்கு வந்திருக்கும் என்பதற்கு இருவேறு காரணங்கள் இருக்கலாம்,” என்கிறார் இதேபோல வேறோரு ஆமையின் எச்சங்களை, பாம்பேயின் இன்னொரு தொல்லியல் களத்தில் 2002ஆம் ஆண்டு கண்டறிந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் ராபின்சன்.

ஒன்று, இது ஒரு செல்லப்பிராணியாக இருந்து, நிலநடுக்கத்தின்போது தப்பிக்கவேண்டி இந்த இடத்துக்கு வந்திருக்கலாம்.

அல்லது, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து இந்த நகரத்துக்குள் வந்து சுற்றித்திரிந்திருக்கலாம்.

அந்த நிலநடுக்கத்தின்போது பாம்பேய் நகரமே முற்றிலுமாக அழிக்கப்பட்டது. மீண்டும், எல்லா இடங்களையும் சீரமைக்க முடியவில்லை. இந்த காலகட்டத்தில், கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான விலங்குகள் மற்றும் தாவரங்கள் நகரத்துக்கு நகர்ந்துள்ளன” என்றும் தெரிவிக்கிறார் ராபின்சன்.

இதன்மூலம், நிலநடுக்கத்திற்கு பிறகும் இந்த பாம்பேய் நகரம் எவ்வளவு சூழலியல் வளமிக்கதாக இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது.

முட்டையுடன் கண்டெடுக்கப்பட்ட கர்ப்பிணி ஆமை

பட மூலாதாரம், PARCO ARCHEOLOGICO POMPEI

முட்டை என்று நம்ப முடியவில்லை

“இந்த ஒட்டுமொத்த நகரமும் ஒரு கட்டுமான தளமாக இருந்தது. அதில், குறிப்பிட்ட சில இடங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தன. அங்கு இதுபோன்ற உயிரினங்களின் நடமாட்டம் அதிகமாக இருந்திருக்கலாம். அதை அவை முட்டையிட பயன்படுத்தியிருக்கலாம்” என்கிறார் பாம்பேயின் பொது இயக்குநர் கேப்ரியேல் சட்ரீகல்.

இந்த வரிசையில், பாம்பேய்க்கு பார்வயாளராக சென்ற ஃபின்லாந்தைச் முனைவர் பட்ட மாணவர் ஜூனாஸ் வானாலா அவர் பார்த்ததை பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர் சொன்னதாவது: “அவர்கள் ஆமையின் மேலோட்டை நீக்கினார்கள். அதற்குள்ளே ஆமையின் எலும்புக்கூடும் முட்டையும் இருந்தன. அந்த முட்டை மண்படிந்த வெளிறிய பழுப்பு நிறத்தில் இருந்தது. அவர்கள் அதை முட்டை என்று சொல்லாமல் இருந்திருந்தால், நான் அதை முட்டை என்று எண்ணியிருக்க மாட்டேன்.”

கண்டெடுக்கப்பட்ட முட்டை

பட மூலாதாரம், PARCO ARCHEOLOGICO POMPEI

இன்னும் ஆச்சரியப்படுத்தும்

முன்னதாக தேர் கண்டெடுக்கப்பட்டபோது “பாம்பேய் தொடர்ந்து நமக்கு வியப்பளித்துக் கொண்டே இருக்கிறது. இது இன்னும் பல ஆண்டுகளுக்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும். இன்னும் 20 ஹெக்டேர் நிலத்தில் தோண்டி எடுக்கப்பட வேண்டி இருக்கிறது,” எனக் கூறினார் இத்தாலியின் கலாசார அமைச்சரான டரியோ ஃப்ரான்செஸ்செனி.

இந்த பண்டைய கால நகரம், நேப்பிள்ஸில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தென் கிழக்கில் அமைந்திருக்கிறது. இந்த இடம் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இந்நகரம் இத்தாலியிலேயே அதிகம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »