மனநல பிரச்னைகள் உடையவர்களை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகளை (சிகிச்சைகள்) கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சமையல் சிகிச்சை குறித்து உங்களுக்குத் தெரியுமா? மன நல பிரச்னைகளை சரிசெய்வதற்கு சமையலையே சிகிச்சையாக பரிந்துரைக்கும் நிபுணர்கள் உள்ளனர்.
சமையல் சிகிச்சை என்பது என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?
சமையல் சிகிச்சையில் ஒரு நிபுணருடன் இணைந்து சமைக்க வேண்டும். பல்வேறு அமர்வுகளுக்குப் பின்னர் மெல்ல மெல்ல நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள். நீங்கள் சமைக்கும் விதம், சமையலறையில் நீங்கள் வேலை செய்யும் விதம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் என, நாங்கள் பேசிய நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.
நெருக்கமான ஒருவரை இழப்பதால் ஏற்படும் துயரம், பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட மன நல பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கவும் இச்சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சமையல் சிகிச்சையின் பலன்கள் குறித்து போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றாலும், ‘பேக்கிங்’ செய்வது உங்களின் நம்பிக்கையை உயர்த்துவது குறித்து சில ஆதாரங்கள் உள்ளன.
“பிடித்தமானதை சமையுங்கள்”
சமையல் சிகிச்சையில், “உங்களுக்கு மிக பிடித்தமான எளிய உணவுகளை சமைக்க வேண்டும்” என, பிரிட்டனில் ‘கிச்சன்’ சிகிச்சை’ நடத்திவரும் சார்லோட் ஹேஸ்டிங் கூறுகிறார்.
“யாரோ ஒருவரையோ அல்லது ஒரு சம்பவத்தை நினைவுகூறும் உணவுகளை சமைக்கலாம்” என்கிறார், ஹேஸ்டிங்.
ஒருவருடைய இழப்பில் வாடும்போது இது நமக்கு உதவலாம் என்பது ஹேஸ்டிங்கின் கூற்று.
“நேரம் எடுத்து சாப்பிடுங்கள்”
என்ன உணவு உண்கிறோம் என்பதை அறிந்து நேரம் எடுத்து கவனம் செலுத்தி உண்ண வேண்டும் என்றும், நாம் உண்ணும் உணவு குறித்து பெருமிதமாக உணர வேண்டும் எனவும் கூறுகிறார், தொழில்முறை உளவியலுக்கான சிகாகோ ஸ்கூல் பேராசிரியர் கோசெட்.
“சமைத்த பின்னர், பாத்திரங்களை அப்படியே தூக்கியெறியாமல், அவற்றை கழுவுவதும் இந்த சிகிச்சையின் ஒரு பகுதியாக உள்ளது. இது நம் உணர்வுப்பூர்வமான வெளியையும் சுத்தப்படுத்துவதற்கான அடையாளப் பிரதிநிதித்துவமாகவும் இருக்கலாம்” என கோசெட் கூறுகிறார்.

சமையல் தொடர்பானதை சிந்தியுங்கள்
சமையல் கலை குறித்த புத்தகங்களை ஒருபக்கம் விடாமல் படிப்பதும் உங்களை ஆற்றுப்படுத்தலாம். அல்லது குழந்தைப்பருவத்தில் உங்களுக்கு விருப்பமான உணவு குறித்தும் பேசலாம். “சமையல் சிகிச்சை என்பது சமையலில் ஈடுபடுவது மட்டுமல்ல, உணவு குறித்து விவாதிப்பது, உண்பது, உணவுடனான ஒருவருடைய உறவு எல்லாமும்தான்” என கோசெட் கூறுகிறார்.
பலன்கள் பொருட்டல்ல
“குழந்தை பருவத்தில் நாம் சமைக்கும் எதற்கும் எந்த கணக்கும் இல்லை, எந்த உணவாக இருந்தாலும் அதில் ஒரு பொருளை இவ்வளவுதான் சேர்க்க வேண்டும் என யாரும் சொல்ல மாட்டார்கள். அதேபோன்று, உணவால் உங்களின் மனநலனில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள் குறித்தோ அதுகுறித்த அழுத்தங்களிலோ கவனம் செலுத்தக்கூடாது, அதன் முடிவு குறித்து அழுத்தங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது” என, ஹேஸ்டிங்ஸ் கூறுகிறார்.

சமையலில் நீங்கள் தவறுகள் செய்தாலும் அது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் உதவலாம் என கோசெட் கூறுகிறார்.
“அதாவது, தொழில் ரீதியாகவோ அல்லது, தனிப்பட்ட உறவுகளிலோ நீங்கள் தவறு செய்வது பிரச்னை அல்ல” என முடிக்கிறார் கோசெட்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com