Press "Enter" to skip to content

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட்டில் வேலைக்கு சேர என்ன படிக்க வேண்டும்? எப்படி தயாராவது?

  • தி.ந.ச. வெங்கடரங்கன்
  • மென்பொருள் வல்லுநர்

பட மூலாதாரம், Reuters

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினைந்தாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்.)

சிவாஜி (2007) படத்தில் ரஜினியும் கூட அமெரிக்கா சென்று, அங்கே கணினி துறையில் பல ஆண்டுகள் உழைத்துதான் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்தது போல் வரும். இந்தப் பெருநிறுவனங்களில் சில ஆண்டுகள் வேலை செய்தாலும், அந்த அனுபவம் பெரியதாக மதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற என்ன படிக்க வேண்டும்? வேறென்ன வகைகளில் தயாராக வேண்டுமென்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.

அதிகரிக்கும் மென்பொருள் வல்லுநர்களின் தேவை

கடந்த சில ஆண்டுகளாக பெரு நிறுவனங்களோடு, துளிர் நிறுவனங்களும் (Startup) போட்டிப் போட்டுக் கொண்டு எண்ணிம (Digital) தொழில்நுட்பங்களில் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து வருகிறார்கள். இதோடு, பெருந்தொற்று காலத்தில் நாம் அனைவரும் இணையம் வழியே அன்றாடத் தேவைகளைப் பெறப் பழகியதால், மேகக் கணிமை (Cloud Computing) வழங்கும் அமெரிக்க கணினி நிறுவனங்களின் வியாபாரம் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. இவை தவிர பெருந்தரவுப் பகுப்பாய்வு (Big Data Analytics), இயந்திர வழி கற்றல் (Machine Learning) போன்ற நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் வந்துகொண்டேயிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படை மென்பொருட்கள் (Software). அவற்றை உருவாக்கத் தேவை தேர்ந்த வல்லுநர்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களின் தேவை தற்போது அதிகரித்துள்ளது.

மென்பொருட்கள் உருவாக்கம் என்றவுடன் நாம் புரிந்துகொள்வது ஐ.ஐ.டி. அல்லது தனியார் கல்லூரிகளில் பயின்ற பொறியாளர்கள், கணினிக்கு முன்பு இரவு பகல் பாராமல் கண் விழித்து கோடிங் செய்வது என்பதே. இன்றளவும் இப்படித்தான் பெருமளவு மென்பொருட்கள் உருவாக்கப்படுகிறது என்றாலும், இந்தத் திறமையோடு, அதாவது ஜாவா (Java), சி-ஷார்ப் (C#), சி++ (C++) போன்ற கணினி மொழிகள் தெரிந்திருப்பதோடு, மற்ற திறமைகளும் நிறுவனங்களுக்குத் தேவையாகி வருகிறது.

மென்பொருள்

பட மூலாதாரம், Getty Images

என் கணிப்புப்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் அதிகமான மென்பொருட்கள் குறியீடுகளை (கட்டளைகளை/ Coding) எழுதாமலே உருவாக்கப்படும். மீதியுள்ள, மிகவும் சிக்கலான மென்பொருட்கள் தான் மனிதர்களால் பக்கம் பக்கமாக கோடிங் செய்யப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் மாறும் உலகுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்ய வேண்டியதைப் பற்றியும் வளர்ந்து வரும் பல புதிய வேலைவாய்ப்புகள் பற்றியும் இங்கே தொடர்ந்து பார்ப்போம்.

இந்த கட்டுரையில் வரும் யோசனைகள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேரத் தேவையானவை என்றாலும், நம் நாட்டில் இருக்கும் துளிர் நிறுவனங்களுக்கும் சென்னையில் தொடங்கி இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் சோஹோ (Zoho), ஃபிரெஷ்-ஒர்க்ஸ் (Freshworks), சார்ஜ்-பீ (Chargebee) போன்ற நிறுவனங்களில் வேலைக்குச் சேரவும் பொருந்தும்.

தேவையான அடிப்படை திறமைகள்

கல்லூரியில் நன்றாகப் படித்து, தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்கி, அதோடு கொஞ்சம் திறம்படப் பேசவும் தெரிந்திருந்தால் போதும், கணினி நிறுவனங்களே வேலைக்கு எடுத்து, அவர்களே புதிதாக வந்திருக்கும் நுட்பங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள் என்கிற காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. மாறாக, ஒருவர் தமக்குப் பழக்கப்பட்டது என்பதால் தெரிந்த பழைய நுட்பத்தையே பிடித்துக் கொண்டு இல்லாமல், புதிய புதிய நுட்பங்களை வேகமாக, தானாகவே கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா என்பதைத் தான் இதுபோன்ற நிறுவனங்கள் பார்க்கின்றன.

அப்படி கற்றுக்கொள்ள உடோமி (Udemy), ஏடெக்ஸ் (EdX), கோர்ஸ்ஏரா (Coursera) போன்ற பல கற்றல் தளங்கள் இருக்கின்றன. இதோடு, ஸ்டான்போர்ட் (Stanford), ஐ.ஐ.டி (IIT) போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களும் தங்களின் பல வகுப்புகளை இணையம் வழியாக வழங்குகிறார்கள். இதில் பலவும் இலவசம் அல்லது குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது.

தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

மாணவர்கள் செய்ய வேண்டியது, இவ்வாறு இருக்கும் பல்லாயிரம் வகுப்புகளில் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றை கவனமாகப் படித்து, திறனை வளர்த்துக் கொள்வதுதான். இப்படி எவ்வளவு வகுப்புகளை நீங்கள் கற்றுள்ளீர்கள் என்பது உங்களின் தகுதியாகப் பார்க்கப்படும். இதில் முக்கியமானது என்னவென்றால், நீங்கள் சேர்ந்த வகுப்புகளை அரைகுறையாக இல்லாமல், முழுமையாக முடித்திருக்க வேண்டும். ஏனெனில், இவற்றையெல்லாம் எல்லோராலும் பொதுவில் பார்க்க முடியும்.

அடுத்து, பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை மதிப்பெண்கள் என்பது நீங்கள் படித்தவற்றை எந்த அளவுக்கு நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள் என்பதைக் காட்டும் ஒரு குறியீடு, அவ்வளவு தான். அவர்கள் பார்ப்பது நீங்கள் எந்த அளவு சுயமாக சிந்திக்கிறீர்கள் (இதற்கென்றே பல கேள்விகள் கேட்பார்கள்), எந்தளவுக்கு வியாபார (மற்றும் உலக) நடப்புகளைத் தெரிந்து வைத்துள்ளீர்கள், கணினி அறிவோடு மற்ற துறைகளில் உங்களுக்கு எந்தளவு ஆர்வம் இருக்கிறது என்பவற்றை தான். இவையெல்லாம் உங்களுக்கு இயற்கையாகவே இருக்க வேண்டுமென்றாலும் அவற்றை மெருகேற்ற பல வகுப்புகள், மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற இணையதள வகுப்புகளில் இருக்கிறது. தொழில்நுட்ப விடயங்களோடு இவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள்.

சுய விளம்பரம் செய்யுங்கள்

வாழ்வில் அடக்கம் முக்கியம் தான், ஆனால் இன்றுள்ள போட்டியான உலகில் நம்மைப் பற்றி நாம் பிறரிடம் சொன்னால் தான் தெரியும். குறிப்பாக உங்களின் முதல் வேலையைத் தேடுகிறீர்கள் என்றால் நிறுவனங்களுக்கு உங்களை மதிப்பிட இருப்பது நீங்கள் உருவாக்கியிருக்கும் தரவுகள் தான். இதை எப்படிச் செய்ய வேண்டும்?

நீங்கள் மென்பொருள் பொறியாளர் என்றால் முதலில் செய்ய வேண்டியது கிட்-ஹப் (GitHub) என்கிற கணினி நிரல்களைச் சேமித்து வைக்க, அடுத்தவரோடு பகிர உதவும் இணைய சேவையில் ஒரு கணக்கைத் திறப்பது, இதை இலவசமாகச் செய்யலாம். நீங்கள் பைத்தான் (Python) அல்லது ஜாவா-ஸ்க்ரிப்ட் (Javascript) நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு ஏற்கெனவே கிட்-ஹப் பழக்கமாக இருக்கும். அடுத்து, நீங்கள் எழுதிய மூல குறியீடுகளை (Sourcecode) அதில் பதிவேற்றம் செய்து “பொதுவில்” வைப்பது. நிறைய இருந்தால் நல்லது, அவையெல்லாமே சிறப்பாக இருத்தல் முக்கியமில்லை, ஆனால், அவையெல்லாம் உங்களின் சொந்த படைப்பாக இருத்தல் அவசியம். மேலும், திறந்த மூல மென்பொருள் (Open-source software) சிலவற்றைப் பயன்படுத்தி அவற்றைப் பற்றி கிட்-ஹப்பில் கருத்து கூறியிருந்தால், அவற்றில் செய்யக்கூடிய முன்னேற்றங்களைப் பற்றிய யோசனையோ, புது மூல குறியீடுகளை நீங்களே எழுதியிருந்தாலும் உங்களின் மதிப்புக்கூடும்.

தொழில்நுட்ப நிறுவனங்கள்

பட மூலாதாரம், WESTEND61/GETTY IMAGES

இதே, நீங்கள் தரவுப் பகுப்பாய்வாளர் (Data Analyst) என்றால் முதலில் செய்ய வேண்டியது காகுள் (Kaggle) என்கிற என்கிற பெருந்தரவு பரிமாற்ற இணைய சேவையில் உங்களின் பங்களிப்பை “பொதுவில்” செய்வது. இதே, நீங்கள் புகைப்படக் கலைஞர் அல்லது அதில் ஆர்வம் என்றால், உங்களுக்கான தளம் 500px மற்றும் பிலிக்கர் (Flickr) போன்றவைதான். நடிப்பில் ஆர்வமென்றால் இருக்கவே இருக்கிறது யூ-ட்யூப் (YouTube).

அடுத்து, நீங்கள் சமூக வலைதளங்களில் இருந்தால், உங்களின் பொது பக்கத்தில் சில கருத்துகளை பகிர்வது நல்லது. அதில் நீங்கள் விளையாட்டாகச் சொல்லியிருப்பது கூட உங்கள் நம்பிக்கைகளாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் படிக்கும் தொழில்நுட்பங்களை அதில் பகிர்வது உங்கள் ஆர்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும். எதை எழுதினாலும் உண்மையாக எழுதவும், நடிக்காதீர்கள்.

கொட்டிக்கிடக்கும் புதிய வாய்ப்புகள்

நீங்கள் இப்போதே மைக்ரோசாஃப்ட்டின் ஆட்கள் தேவை பக்கத்திற்குச் சென்றால் அங்கே இருக்கும் 41 துறைகளில் ஒன்றே ஒன்றுதான் மென்பொருள் பொறியியல், மீதம் இருக்கும் 40 துறைகளுக்குத் தேவையான திறமைகள் வேறு, ஆனால் அவை அனைத்துக்கும் இதுவரை கட்டுரையில் பார்த்த அடிப்படை திறமைகள் அவசியம். இதே போன்ற எண்ணிக்கையில் தான் கூகுள், அமேசான் போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகளும் இருக்கும்.

அடுத்த சில ஆண்டுகளுக்கு வளர்ந்துக் கொண்டே இருக்கப் போகும் மென்பொருள் துறை வேலைகள் சில: இயந்திரவழிக் கற்றல், செயற்கை அறிவு, பெருந்தரவாய்வு, எண்ணிம பாதுகாப்பு, இயந்திரவியல், மெய்நிகர் உலக உருவாக்கம் (Metaverse), அணுகுதகைமை (Accessibility), மற்றும் புள்ளியியல். இதில் எதில் ஒன்றிலாவது எடுத்துக்காட்டோடு உங்கள் திறனை நிரூபித்தால், நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக சம்பளத்தோடு, பல வேலைகள் உங்களுக்காகத் தேடிவரும்.

புதிய வாய்ப்புகள்

பட மூலாதாரம், SEAN GLADWELL/Getty Images

உங்களுக்கு பொறியியலில் ஆர்வமில்லையா, நண்பன் (2012) படத்தில் வரும் ஸ்ரீகாந்தை போல உங்களுக்கு புகைப்படம் எடுக்கத் தான் பிடிக்குமா? கவலை வேண்டாம். இந்த நிறுவனங்கள் சட்டம், சந்தைப்படுத்தல், மொழியியல், பொருளியல் என பலவகை துறைகளுக்கான ஆட்களையும் தேடுகிறார்கள். இந்த நிறுவனங்கள் பலவும் இப்போது கணினி விளையாட்டு, திரைப்படம், இணைய தொடர்கள் எனப் பல துறைகளிலும் இருக்கிறார்கள், அதற்கெல்லாம் அவர்களுக்கு ஓவியம் வரைதல், புகைப்படங்கள் எடுப்பது, இசையமைப்பது, திரைப்படம் எடுப்பது, ஆடை அலங்காரம் செய்வது போன்ற திறன் கொண்ட ஆட்கள் வேண்டும். மென்பொருள் பொறியாளர்கள் அளவுக்கு எண்ணிக்கையில் இவர்களின் தேவை தற்போது இல்லையென்றாலும் அவையும் வளரும் என்பது என் கணிப்பு.

மெய்நிகர் உலக (Metaverse) உருவாக்கம்

சென்ற ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை ‘மெட்டா’ என்று மாற்றிக்கொண்டதில் இருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய துறை மெய்நிகர் உலகம். விரைவில் இதே துறையில் ஆப்பிள் நிறுவனமும் முழுவீச்சில் கால்பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதென்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆகுலஸ் (Oculus) என்கிற கருவியை (விலை சுமார் ரூபாய் முப்பதாயிரம்) பயன்படுத்திப் பார்ப்பது. அடுத்து அதற்கு செயலிகளை எப்படிச் செய்வது எனக் கற்றுக்கொள்வது.

மெய்நிகர் உலகம்

பட மூலாதாரம், META

திறன்பேசி செயலிகளை விட இதற்கான செயலிகளை உருவாக்குவது தற்போது மிகக் கடினமானது. முதலில் சி++ அல்லது சி-ஷார்ப் அல்லது ஜாவா-ஸ்க்ரிப்ட் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அடுத்து ஃபேஸ்புக்கின் ஸ்பார்க் ஏ.ஆர் (Spark AR) அல்லது அன்ரியல் (Unreal) அல்லது யூனிட்டீ (Unity) என்கிற காட்சிகளை உருவாக்கும் இயக்கிகளில் தேர்ச்சி பெற வேண்டும். இவற்றில் உள்ளிட முப்பரிமாண வடிவங்களை உருவாக்க மாயா (Maya) அல்லது 3டி-மாக்ஸ் (3DMax) போன்ற செயலிகளில் பயிற்சி பெற வேண்டியதும் அவசியம். மேலும் இசை, படம் வரைதல், கற்பனை மற்றும் கதை சொல்லும் திறன் எனப் பலவற்றில் அடிப்படை அறிவாவது அவசியம். இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள மேலே குறிப்பிட்ட இணைய வகுப்புகளில் பல பாடங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றை கற்றுக் கொள்ள பல மாதங்கள் ஆகும்.

ஆரம்ப நிலை முப்பரிமாண அசைவூட்ட பொறியாளருக்கு (3D Animation Engineer) சுமார் பத்து இலட்சம் ரூபாய் வருடாந்திர சம்பளம் எளிதாக கிடைக்கும்.

செயற்கை அறிவு (Artificial Intelligence) துறை

ஜான் மக்கார்தி (John McCarthy, MIT) என்கிற அமெரிக்க ஆராய்ச்சியாளர் 1956லேயே, கணினிக்கு செயற்கை அறிவைச் சொல்லித் தருவது பற்றி இவ்வாறாக விளக்கியிருக்கிறார்: “மனிதர்களைப் போன்று கணினிகளைச் செயலாற்ற வைக்கும் துறை தான், செயற்கை அறிவு அறிவியல்.” அவர் யோசித்ததை செய்யும் கணினி திறனும் அதை உருவாக்கத் தேவையான அறிவியலும் அன்றிருக்கவில்லை. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அவையெல்லாம் ஒருசேர அமைந்ததால் இந்தத் துறை அசுர வளர்ச்சியடைந்துள்ளது. இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகளில் செயற்கை அறிவியல் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஊபர் (Uber) அல்லது ஓலா (Ola) செயலிகளில் ஆட்டோவை அழைத்தால், நமக்குக் காட்டப்படும் விலையை நிகழ்நேரத்தில் நிர்ணயம் செய்வது இயந்திரவழிக் கற்றல்தான் (Machine Learning). செயற்கை அறிவு என்று சொன்னாலும், கணினிகளுக்கு உயிர் கிடையாது, ஒரு குழந்தை தன்னைச் சுற்றியிருக்கும் உலகைப் பார்த்து எளிதாகக் கற்றுக் கொள்வது போல கணினிகளால் செய்ய முடியாது.

எந்திரன் (2010) திரைப்படத்தில் சிட்டி ரோபோ, ஒரு துறையில் இருக்கும் பிரபல புத்தகங்களை ஒரு சில வினாடிகளில் படித்து, உடனே அதில் வல்லுநராக ஆகிவிடும். உண்மையில் அப்படியெல்லாம் கணினிகளால் செய்ய முடியாது, ஒரு துறையில் பல பல கோடி தரவுகளை உள்ளீடு செய்தால்தான், கணினிகளால் நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பதில் சொல்ல முடியும். இப்படி கணினிகளுக்கு ஒவ்வொரு நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொரு வேலையையும் கற்றுத் தர, புதிது புதிதாக பல நூறு நிரல்களை எழுத வேண்டும், கோடிக்கணக்கான தரவுகளை ஒழுங்குபடுத்திக் கொடுக்க வேண்டும். அதையெல்லாம் செய்வது ‘செயற்கை அறிவு’ வல்லுநர்கள்.

செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம், Getty Images

இந்த துறையில் பிரபலமாக இருப்பது பைத்தான் நிரலாக்க மொழி, வேறு மொழிகளிலும் செய்யலாம் என்றாலும், இந்த மொழிக்கு தான் பல பாடங்களும் திறந்த மூல மென்பொருட்களும் எளிதாகக் கிடைக்கின்றன. ஒரு புது இயந்திரவழிக் கற்றல் கணி நெறியை (Algorithm), அடிப்படையில் இருந்து எழுத பல ஆண்டுகள் ஆகும். அவற்றில் பல பொதுவான நெறிகளைச் சேர்த்து எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்க செய்யும் மென்பொருட்கள் சில இதோ: கூகுளின் டென்சார்-ஃப்லோ (TensorFlow) மற்றும் பை-டார்ச் (PyTorch) போன்ற திறந்த மூல கட்டமைப்புகள் (Frameworks). இவை இரண்டையும் பைத்தான் மொழியில் இருந்து இயக்கலாம். இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்த புள்ளியியல் மற்றும் கணிதவியலில் அடிப்படை புரிதல் வேண்டும். இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள இலவச இணைய வகுப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. சில மாதங்களில் மிதமான அளவு தேர்ச்சி பெறலாம்.

ஆரம்ப நிலை இயந்திரவழிக் கற்றல் மூலம் பொறியாளருக்கு எளிதாக பதினைந்து லட்சம் ரூபாய் வருடாந்திர சம்பளம் கிடைக்கும். செயற்கை அறிவு துறையில் சிறந்து விளங்க மேகக் கணிமை மற்றும் டாக்கர் கொள்கலன் (Docker container) தொழில்நுட்பங்களிலும் திறன் வேண்டும்.

இணையம் வழியாகப் படித்து இந்த துறையில் தேர்ச்சி பெற இந்திய அரசின் ஸ்வயம் (Swayam) தளம் உதவக்கூடும். அதில் பல ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் வகுப்பு எடுக்கிறார்கள். இதைத் தவிர (இந்தியா) தேசிய எண்ணிம நூலகத்திலும் (NDLI) பல பாடங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.

(செயற்கை அறிவு என்னும் அறிவியல் நுட்பத்தில் ஒரு சிறப்பு பகுதி இயந்திரவழிக் கற்றல், அதன் ஒரு பகுதி நரம்பு பின்னலமைப்பு)

தரவு ஆய்வாளர் (Data Analyst)

நீங்கள் ஒரு கணித புலியா? கணித சூத்திரங்களும் எண்களும் உங்களுக்குக் கை வந்த கலையா? அப்படி என்றால் இந்த துறைக்கு ஏற்றவர் நீங்கள் தான்.

இன்றைக்கு கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஒரு வினாடிக்கு பல ஆயிரம் சமிக்ஞைகளை, பல நூறு கோடி பயனாளிகளின் கைபேசி செயலிகளில் இருந்து சேமிக்கிறார்கள். இவற்றை மனிதர்களால் பாகுபடுத்திப் புரிந்துக் கொள்ள முடியாது. கிடைத்தவற்றில் அரைகுறையாக வந்த விவரங்களை நீக்கிவிட்டு, மற்றவற்றை சரிப்பார்த்து, தொகுத்து, வகைப்படுத்தி, அவற்றில் இருந்து தகவல்களை பெற்று, அவை உணர்த்தும் உட்பொருளை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த துறையின் முக்கிய வேலை. உதாரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் அமேசான் மின்-சந்தையில் (Amazon) நிகழ்நேரத்தில் இவை எப்போதும் நடந்துக் கொண்டேயிருக்கிறது.

தரவு ஆய்வாளர்

பட மூலாதாரம், Getty Images

இந்த துறையில் பொறியாளர்களைப் போல பல்லாயிரம் வரி கணினி நிரல்களை எழுத மாட்டார்கள் என்றாலும், இங்கேயும் பைத்தான் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஆர் [R] என்கிற நிரலாக்க மொழியில் நல்ல தேர்ச்சி இருத்தல் வேண்டும். கூடுதல் தகுதி அசூர் காஸ்மோஸ்-டிபி (Azure Cosmos DB), கூகுள் பிக்-குவரி (BigQuery), அமேசான்-டைநமோ (Amazon DynamoDB), கிறாப்பு-க்யூ.எல் (GraphQL) போன்ற ஏதாவது ஒன்றில் பயிற்சி. இவை ஒவ்வொன்றுக்கும் அந்தந்த நிறுவனங்களின் இணையதளங்களிலேயே காணொளி பாடங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அதோடு சேர்த்து அங்கேயே இந்த மென்பொருட்களை இலவசமாக பயன்படுத்திக் கற்றுக் கொள்ளவும் வசதிகள் உள்ளன. இவையெல்லாம் அந்தந்த மேக வழங்கிகளிலேயே (Cloud Servers) இயக்கி பயிற்சி சோதனைகளைச் செய்துப் பார்க்க முடியும் என்பதால் வீட்டில் இருக்கும் மடிக்கணினியே, கற்கும் காலத்தில் உங்களுக்குப் போதும்.

ஆரம்ப நிலை தரவு ஆய்வாளர்களுக்கு சுமார் பத்தில் இருந்து இருபது இலட்சம் ரூபாய் வருடாந்திர சம்பளம் கிடைக்கும். ஒரு பத்தாண்டு அனுபவம் இருந்தால் சுலபமாக இது நாற்பது இலட்சத்தைத் தாண்டும்.

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் சேர்ப்பு முறையைப் பற்றி மேலும் அறிய, அந்தந்த நிறுவனங்களே வெளியிட்டுள்ள விவரமானப் பக்கங்களைப் படித்து மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆர்வமும் முறையான திட்டமிடலும் அதைத் திறம்படச் செயலாற்றும் திறனும் இருந்தால் உங்கள் கனவு வேலை நிச்சயம் வசப்படும்.

(கட்டுரையாளர் தி.ந.ச.வெங்கடரங்கன் சென்னையைச் சேர்ந்தவர். இவர் வலைப்பூ எழுத்தாளர், மென்பொருள் ஆலோசகர், தொழில்முனைவர் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் பயிற்சியாளர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (கௌரவ விருது) போன்ற பன்முகங்களைக் கொண்டவராக அறியப்படுகிறார்.)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »