பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவில் இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்கள் மற்ற மதங்களை காட்டிலும் வேகமாக வளர்ந்து வருவது, அந்த நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
மறுபுறம், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அது 44% ஆக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியா அதிக நிலப்பரப்பை கொண்ட உலகின் ஆறாவது நாடாக இருக்கும்போதிலும் அங்கு மக்கள் தொகை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதாவது, இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வெறும் இரண்டரை கோடி தான்.
ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 44 சதவீதத்தினர் கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர், இருப்பினும் அதற்கு நெருக்கமாக 39 சதவீத மக்கள் தாங்கள் ‘மதமற்றவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது, 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் ‘மதமற்றவர்களின்’ எண்ணிக்கை கிட்டதட்ட 9% உயர்ந்துள்ளது.
அதே சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து மதங்களாக இந்து மதமும், இஸ்லாமிய மதமும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும், ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் இந்த இரண்டு மதங்களையும் தலா 3% மக்களே பின்தொடர்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.
தொடர்ந்து உயரும் குடிபெயர்வு

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மற்ற மேற்குலக நாடுகளை போன்றல்லாமல் ஆஸ்திரேலியாவில் தாமதமாகவே எவ்வித வேறுபாடுமின்றி அயல்நாட்டினருக்கான கதவுகள் திறக்கப்பட்டன.
குறிப்பாக, 2000ஆவது ஆண்டுக்கு பின்பு ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்களின் குடியேற்றமும் ஆஸ்திரேலியாவில் அதிகரிக்க தொடங்கியது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக அதன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது வெளிநாட்டில் பிறந்த பெற்றோரை (குறைந்தது ஒருவர்) கொண்டவர்களாகவோ உள்ளதாகவும் இப்போது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டரை கோடி பேர்களில் அந்த நாட்டில் பிறந்தோர் முதலிடமும், இங்கிலாந்தில் பிறந்தோர் இரண்டாமிடமும் வகிக்கும் நிலையில், சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றினால் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு குடியேறிகளின் வருகையில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலும், 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு புதிதாக குடியேறியுள்ளனர். அதில், கிட்டதட்ட இரண்டரை லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
மேலும், ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடிகளின் மக்கள் தொகை 3.2 சதவீதமாக (8,12,728 பேர்) உள்ளது. ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் 167 மொழிகளை பேசுவதாகவும் அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவின் மூலம் தெரியவந்துள்ளது.
கனவாக மாறும் சொந்த வீடு கனவு

பட மூலாதாரம், Getty Images
எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் சொந்த வீடு வாங்குவது என்பது அனைத்துத்தரப்பு மக்களின் முக்கியமான இலக்குகளில் ஒன்றாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் அது எட்டாக்கனியாக மாறி வருகிறது.
வீட்டு வசதியை பெறுவதற்கு ஏற்ற உலக நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்கள் மிகவும் பின்தங்கி இருப்பதாக இந்த ஆண்டு வெளிவந்துள்ள ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா பரவலுக்கு பிறகு மக்கள் மாற்று வழிகளை தேட துவங்கியுள்ளதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு சுற்றுப்பயணிகள் இடையே பிரபலமானதாக விளங்கும் கேரவன்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 150% அதிகரித்து 60,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படகு வீடுகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com