Press "Enter" to skip to content

சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து ‘பீர்’ உற்பத்தி – குடிநீருக்கு தட்டுப்பாடாம்

பட மூலாதாரம், NEWBREW

கழிவுநீரைக் கண்டால் நம்மில் பெரும்பாலானோர் முகம் சுளித்து, மூக்கை மூடிக்கொள்ளும் நிலையில், சிங்கப்பூரில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து ‘பீர்’ தயாரிக்கப்படுகிறது. ‘நியூப்ரூ’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்த பீர் வகைக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தீவு நாடான சிங்கப்பூரில் நீர்வளம் போதுமான அளவில் இல்லை. அதனால் தனது தண்ணீர் தேவையை ஈடுகட்ட பல்வேறு திட்டங்களை அந்நாடு செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் கழிவுநீரை குடிநீராக மாற்றும் திட்டம் முக்கியமானது.

மேலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதற்காக இத்தீவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் 2061க்குள் தண்ணீர் விவகாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே அந்நாட்டின் இலக்கு.

‘நியூ வாட்டர்’ (புது நீர்) என்ற பெயரில், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் திட்டத்தை கடந்த 2003ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது சிங்கப்பூர்.

முன்பே பயன்படுத்தப்பட்ட, கழிவுநீரில் இருந்து குடிநீரா என்ற முகச்சுளிப்புடன் கூடிய கேள்வி எழுந்த போதிலும், இத்திட்டம் உரிய பலனை அளிக்கும் என அந்நாட்டு அரசு உறுதியாக நம்பியது. அதையடுத்து, இப்புதிய திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டது.

அதன் பலனாக, சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் ‘நியூ வாட்டர்’ திட்டத்துக்கு கணிசமான பங்கு உள்ளது.

நவீன தொழில்நுட்பம் தரும் உத்தரவாதம்

சிங்கப்பூர் பீர்

பட மூலாதாரம், NEWBREW

கழிவுநீரை சுத்திகரிப்பதில் உலக தரத்தை கடைப்பிடிப்பதாகச் சொல்வதுடன் நிற்காமல், அதைச் செயல்பாட்டிலும் நிரூபித்து வருகிறது சிங்கப்பூர் அரசு. இதற்காக பெருந்தொகையைச் செலவிடவும் செய்கிறது. வீடுகளிலும் வேறு பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் தண்ணீரை மொத்தமாக சுத்திகரிப்பு செய்கிறார்கள்.

அதன் பின்னர் அந்த நீர், நவீன முறையில் வடிகட்டப்பட்டு நுண்ணிய துகள்கள், கிருமிகள் அகற்றப்படுகின்றன. அடுத்த கட்டமாக, ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சவ்வூடு முறை, புற ஊதா கிருமி நீக்க நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் அந்நீரில் இருந்து மிச்சம் மீதி இருக்கும் பாக்டீரியாக்களும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களும் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் மிக தூய்மையான தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் பீர்

பட மூலாதாரம், NEWBREW

பல்வேறு வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு முறைகளை நன்கு ஆராய்ந்த பிறகே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புது நீர்தான் தற்போது பீர் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.

புதிய நீர் ஆதாரங்கள் இல்லாத இஸ்‌ரேல், லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் இந்த புது நீர் தொழில்நுட்பம் ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது அல்லது செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

சிங்கப்பூரில் நீர் விநியோக மேலாண்மையை கவனிக்கும் அந்நாட்டின் பொதுப் பயன்பாட்டு வாரியமும் (PUB) உள்நாட்டைச் சேர்ந்த ப்ரூவெர்ஸ் (Brewerkz) நிறுவனமும் இணைந்து, ‘நியூப்ரூ’ (NEWBrew) பீர் வகையை உருவாக்கி உள்ளன.

இந்த பீரின் சுவை குறித்து பல்வேறு விதமான கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. கழிவுநீரை சுத்திகரித்து, அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பீர் என்று சொன்னால் மட்டுமே உண்மை தெரியும். இல்லையெனில் மற்ற பீர் வகைகளைப் போன்றுதான் ‘நியூப்ரூ’ பீரின் சுவையும் உள்ளது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

மலேசிய நீரை சார்ந்திருக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் பீர்

பட மூலாதாரம், The Brewerkz Company

சிங்கப்பூர் தனது தண்ணீர் தேவையை ஈடுகட்டுவதற்கு அண்டை நாடான மலேசியாவை பெரிதும் சார்ந்துள்ளது.

மலேசியாவில் இருந்து தினந்தோறும் 250 மில்லியன் கேலன் (1000 கேலன் = 3,780 லிட்டர்) தண்ணீர் சிங்கப்பூருக்கு கிடைக்கிறது. மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலுள்ள நதியில் இருந்து இந்த நீரை மலேசியா எடுக்கிறது.

இந்த தண்ணீர் பகிர்வுக்காக மலேசியா, சிங்கப்பூர் இடையே 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், புதிய ஒப்பந்தங்களாக மாறின.

எனினும் நாள்களின் போக்கில் சில பிரச்சினைகள் தலைதூக்கின. தண்ணீர் பகிர்வு தொடர்பாக மலேசியா சில கோரிக்கைகளை முன்வைக்க, சிங்கப்பூர் அவற்றை ஏற்க மறுக்க, இரு நாடுகளும் இப்போது அனைத்துலக நடுவர் மன்றத்தை அணுகும் அளவுக்குப் பிரச்னை முற்றியுள்ளது.

“இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, தினமும் மலேசியாவிடம் இருந்து 250 மில்லியன் கேலன் தண்ணீர் பெறும் சிங்கப்பூர் அரசு, அதிலிருந்து 2% சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஜோகூர் மாநிலத்துக்கு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 2061 காலாவதியாகும்,” என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2%க்கு அதிகமாகவும் சிங்கப்பூரில் இருந்து தண்ணீர் வாங்குகிறது ஜோகூர் மாநிலம். எனினும் இவ்வாறு பகிரப்படும் நீருக்கான விலை என்ன என்பதில்தான் சிக்கல் நிலவுகிறது. குறைவான விலைக்கு தண்ணீரைப் பெறும் சிங்கப்பூர், அதை சுத்திகரித்த பின்னர் விற்கும்போது அதிக தொகையைப் பெறுகிறது என்றும் இதை ஏற்க இயலாது என்றும் மலேசியா சுட்டிக்காட்டுகிறது.

கழிவுநீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் முதல் பீர் வகை என்று நியூப்ரூ பீரை குறிப்பிட இயலாது. இதற்கு முன்னதாகவே, சுவீடனைச் சேர்ந்த ஒரு நிறுவனமானது, கார்ல்ஸ்பெர்க் பீர் நிறுவனத்துடனும், சுற்றுச்சூழல் ஆய்வு மையம் ஒன்றுடனும் இணைந்து கழிவறை நீரைக் கொண்டு ஒரு பீர் வகையை உருவாக்கி உள்ளது.

அதேபோல், கனடாவைச் சேர்ந்த ஒரு மதுபானத் தயாரிப்பு நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த நீர் தொழில்நுட்ப நிறுவனத்துடனும் கல்கேரி பல்கலைக்கழக (University of Calgary) ஆய்வாளர்களுடனும் இணைந்து இத்தகைய முயற்சியை மேற்கொண்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »