- ஜோசுவா நெவெட்
- பிபிசி செய்தியாளர், அரசியல் பிரிவு
பட மூலாதாரம், Getty Images
நாட்டை வழிநடத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியுள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.
பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், அரசாங்கம் “சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக” நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு,” என்று தெரிவித்தார்.
இதே கருத்தை பிரதிபலித்த சஜித் ஜாவித், “அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
எம்.பி பதவி வகித்த கிறிஸ் பிஞ்சரை அரசாங்கப் பதவிக்கு நியமித்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்ட சில நிமிடங்களில் இந்த ராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்தன.
இந்த நிலையில், நாட்டின் புதிய நிதியமைச்சர் பதவிக்கு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து வரும் நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்த ஸ்டீவ் பார்க்லேவசம் சுகாதார அமைச்சர் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் மிஷெல் டோனலன் கல்வி அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்தியாவில் ‘மத்திய அமைச்சர்’ என்று குறிப்பிடப்படும் பதவி, பிரிட்டனில் ‘செயலாளர்’ என்று அழைக்கப்படுகிறது. அதனால் இந்த செய்தியில் பிரிட்டன் செயலாளர் என்பதை வாசகர்களின் புரிதலுக்காக ‘பிரிட்டன் அமைச்சர்’ என்றே குறிப்பிடுகிறோம்.
வருத்தம் தெரிவித்த பிரதமர்
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் சில குற்றச்சாட்டுகள் எம்.பி கிறிஸ் பஞ்சருக்கு எதிராக நிலுவையில் இருந்தபோதும், அது பற்றி அறிந்திருந்தும் அவரை ‘துணை தலைமைக் கொறடா’ பதவிக்கு நியமனம் செய்தது ‘எனது மிகப்பெரிய தவறு’ என்று போரிஸ் ஜான்சன் ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பாக பிபிசிக்கு போரிஸ் ஜான்சன் அளித்த நேர்காணலின்போது, “பின்னோக்கிப் பார்த்தால் அது நான் செய்த தவறான செயல். அதனால் மோசமாகப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறினார்.
ஆனால், அத்தகைய பதவி நியமன நடவடிக்கையில் பிரதமர் தொடர்ச்சியாக நடந்து கொண்ட விதம், எதிர்கட்சிகள் மட்டுமின்றி அவரது சொந்த கட்சி எம்.பி.க்கள் சிலராலும் கடுமையான விமர்சிக்கப்பட்டது.
சுனக், ஜாவித் ஆகியோருடன் சேர்த்து டோரி துணைத் தலைவராக இருந்த பிம் அஃபோலமி ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரலையிலேயே தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார். இவர் மட்டுமின்றி வர்த்தக தூதர் பதவியை ஆண்ட்ரூ முர்ரிசன் ராஜினாமா செய்தார். அமைச்சக உதவிப்பணியில் இருந்த ஜோனாத்தன் குல்லிஸ், சாகிப் பாட்டி ஆகியோரும் தங்களுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் தமக்கு எதிராக திரும்பிய அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை மதிப்பிட்ட நிலையில், அவரது தலைமையை வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், பதவி உயர்வு பெறும் அமைச்சர் மைக்கேல் கோவ் மற்றும் பிற கேபினட் அமைச்சர்கள் ஆதரிப்பதாக பிபிசி அறிகிறது.
போரிஸ் ஜான்சனுக்கு விசுவாசமான கூட்டாளிகளாக கருதப்படும் கலாச்சாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ், பிரெக்ஸிட் வாய்ப்புகளுக்கான அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் ஆகியோர் பகிரங்கமாகவே தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். “பிரதமர் வேலைக்கு சரியானவர் போரிஸ்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய தலைவலி
சமீபத்தில்தான் தமது தலைமைக்கு நெருக்கடி வந்தபோது நடத்தப்பட்ட நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றிருந்தார். அந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்த சில மாதங்களிலேயே போரிஸ் ஜான்சன், தமது சொந்த அமைச்சரவை சகாக்களின் ராஜினாமாவால் புதிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடந்து அதில் போரிஸ் 59 சதவீத வாக்குகளுடன் வெற்றியும் பெற்று விட்டார். அதனால் கட்சி விதிகளின்படி கன்மேலாய்வுட்டிவ் தலைமை மாற்றத்துக்கான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்படுவதில் இருந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை போரிஸுக்கு நிவாரணம் உள்ளது.
இந்த நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் விண்மீன்மெர், “ஒரு விரைவான தேர்தல் வந்தால் அதை நான் வரவேற்பேன். நாட்டிற்கு அரசாங்க மாற்றம் தேவை,” என்று கூறினார்.
“அனைத்து தோல்விகளுக்குப் பிறகு, இந்த டோரி அரசாங்கம் (பழமைவாத கட்சியான கன்மேலாய்வுட்டிவ் கட்சியை இப்படி குறிப்பிடுகின்றனர்) இப்போது சரிந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
பிரிட்டனில் போரிஸ் அரசின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டில் நிறைவடைகிறது. எனவே அடுத்த பொதுத்தேர்தல் முறைப்படி பதவிக்காலத்தின் நிறைவில் நடப்பதாக இருந்தால் அதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுக்க பிரதமர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.
எதிர்ப்புக்குரல் கொடுக்கும் தலைவர்கள்
இந்த நிலையில், லிபரல் டெமாக்ராட்ஸ் கட்சித் தலைவர் சர் எட் டேவி, பிரதமரின் “குழப்பம் நிறைந்த அரசாங்கம் நம் நாட்டில் தோல்வியடைந்துள்ளது” என்று கூறி, அவர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஸ்காட்டிஷ் முதல் அமைச்சரும் எஸ்ன்பி தலைவருமான நிகோலா ஸ்டர்ஜியன், ஜான்சனின் அரசாங்கத்தில் “முழுமையாக அழுகிப் போன” எல்லாம் போக வேண்டும். அவரது அமைச்சரவையில் இருப்பவர்கள் “பொதுமக்களிடம் பொய் உரைத்தவர்கள்” என்று குற்றம்சாட்டினார்.

இது போரிஸ் ஜான்சனின் முடிவின் தொடக்கமா?
மூத்த அமைச்சர்கள் பதவி விலகிய பிற்பாடு நடந்த நாளின் அலுவலில், பிரதமரின் முக்கிய விமர்சகர்கள் சிலர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போரிஸுக்கு மற்ற அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
ரிஷி சுனக்கும் சஜித் ஜாவித்தும் அதைத்தான் செய்துள்ளனர். பிரதமரை வெளியேற்ற வேண்டுமானால் தங்களின் ராஜினாமா அவசியம் என்று இருவரும் கருதியுள்ளனர்.
ஒருவேளை அந்த இருவரும் எதிர்கால தலைமைப் போட்டிக்கான நிலைப்பாட்டையும் கொண்டிருக்கலாம். ஆனால் இங்குள்ள நிலைமையை பார்க்கும்போது, இப்போதும் இந்த சூழலை தவிர்க்க முடியும் என்று பிரதமர் இல்லம் நம்புவதாகத் தோன்றுகிறது.
ரிஷி, ஜாவித் வெளியேறிய பிறகும் போரிஸ் ஜான்சனின் ஆதரவாளர்களே வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வணிக அமைச்சர் பதவிகளை வகிக்கிறார்கள்.
கார்டன் பிரெளன் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த சிலர் பதவி விலகியபோதும் அவரது விசுவாச அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்ததால் அவரது அமைச்சரவை தப்பித்த வரலாறையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால், இப்போதைய சூழலில் மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். போரிஸ் ஜான்சனை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் சில அமைச்சர்களில், குறிப்பாக இளநிலை அமைச்சர்கள் ரிஷி சுனக், சஜித் ஜாவித் வழியை பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது.

தெரீசா மேவுக்கும் இதே தலைவலிதான்
போரிஸுக்கு முன்பு பிரதமர் பிரதமர் பதவி வகித்த தெரீசா மேவும் இதேபோன்ற சூழலில் கட்சி அளவிலான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார். அதில் அவர் வெற்றி பெற்றார், ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரெக்சிட்டை அணுகிய விவகாரத்தில் அவரது நடவடிக்கைகள் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. அதன் அழுத்தம் அதிகரித்ததால் அவர் பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளால் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்பிக்கள் சிலரை, பிரதமரின் ராஜினாமா செய்ய குரல் கொடுக்கத் தூண்டியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்று மிகவும் தீவிரமாக இருந்தபோது, பிரதமர் இல்லம் மற்றும் அதற்கு அருகே உள்ள பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் பிரதமரின் பிறந்த நாள் விழாவும் அடங்கும். அந்த செயல்பாட்டுக்காக நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கே, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக லண்டன் காவல் துறை அபராதம் விதித்தது.
அதன் மூலம் பிரிட்டனில் அரசாங்க விதியை மீறிய குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமரானார் போரிஸ் ஜான்சன்.
இது மட்டுமின்றி, சில கன்மேலாய்வுட்டிவ் எம்.பி.க்கள், வரி உயர்வு நடவடிக்கை மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் செலவினத்தை கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையில் தெளிவில்லை என்று விமர்சித்து வந்தனர்.
இத்துடன் கடந்த ஜூன் மாதம் டிவெர்டன், ஹோனிட்டன் மற்றும் வேக்ஃபீல்டில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததும் பிரதமர் போரிஸுக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே மேலதிக அழுத்தத்தை அளித்தது. இதன் உச்சமாக கன்மேலாய்வுடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஆலிவர் டெளடென் விலகவும் நேர்ந்தது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
செவ்வாய்க்கிழமை மாலையில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக சஜித் ஜாவித் தமது ராஜினாமா கடிதத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதுவும் தமது இல்லத்தில் செய்தியாளர்களை பிரதமர் போரிஸ் சந்தித்த சில நிமிடங்களில் தமது ராஜினாமா கடிதத்தை சஜித் பகிர்ந்திருந்தார்.
சஜித் ஜாவித் – 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவர் பதவி பதவி விலகல் கடிதத்தில், “இனி நல்ல மனசாட்சியுடன் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாது,” என்று கூறியுள்ளார்.மேலும், “உள்ளுணர்வாகவே நான் ஒரு அணி வீரன். ஆனால் தங்களுடைய அரசாங்கத்திடம் இருந்து அதே நேர்மையை எதிர்பார்க்க பிரிட்டிஷ் மக்களுக்கு உரிமை உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.”ஒரு தலைவராக நீங்கள் வெளிப்படுத்தும் தொனி மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகள், உங்களுடைய சகாக்கள், கட்சி மற்றும் இறுதியில் நாட்டை பிரதிபலிக்கும்,” என்றும் தமது கடிதத்தில் சஜித் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரிஷி சுனக்கும் தமது ராஜினாமா கடிதத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
கன்மேலாய்வுடிவ் கட்சியின் எதிர்கால தலைவராகும் சாத்தியம் மிக்கவராக கருதப்படும் ரிஷி சுனக், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரசாங்கத்தில் தரநிலைகள் “போராடத் தகுந்தவை” என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Rishi Sunak
2020, பிப்ரவரியில் பிரிட்டன் நிதியமைச்சராக பதவியேற்றதில் இருந்து, ரிஷி சுனக் எப்போதும் பொருளாதாரக் கொள்கை மற்றும் பொதுச் செலவின விவகாரங்களில் பிரதமருடன் ஒத்துப்போகாதவராகவே தோன்றினார்.
“நான் உங்களுக்கு விசுவாசமாக இருந்தேன். எங்கள் கட்சியின் தலைவராவதற்கு நான் உங்களை ஆதரித்தேன், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்கப்படுத்தினேன்.நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிகளின் பொறுப்பை நீங்கள் என்னிடம் ஒப்படைத்ததற்கு நன்றியுடன் நான் உங்களின் நிதிமைச்சராக பணியாற்றினேன். ஆனால், இனியும் என்னால் உங்களை ஆதரிக்க முடியாது,” என்று ரிஷி சுனக் தமது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார்.
நமக்குள் எழும் சில கருத்து வேறுபாடுகள் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ள ரிஷி, “அடுத்த வாரம் பொருளாதாரம் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட கூட்டு உரை தயாரிப்பின்போது, நம் இருவரும் அணுகுமுறைகளும் அடிப்படையிலேயே மிகவும் மாறுபட்டவை என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது, ஆனால் இனியும் இதில் தொடர முடியாது என்ற முடிவுக்கு நான் தயக்கத்துடன் வந்துள்ளேன்,” என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
இந்திய தொழில் அதிபரும், இன்ஃபோசிஸ் நிறுவனருமான நா. ரா. நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி ஆகியோர் ரிஷி சுனக்கின் மாமனார்-மாமியார் ஆவர். பிரிட்டனின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படலாம் என்று ஊகங்கள் வலுவாக எழுந்த சூழலில் அவரது ராஜினாமா வெளிவந்திருக்கிறது. பிரிட்டனில் இவர் செளத்ஹாம்ட்டன் மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
Source: BBC.com