Press "Enter" to skip to content

ஷின்சோ அபேவை சந்தேக நபர் துப்பாக்கியால் சுட என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உடல் டோக்யோவில் உள்ள அவரது இல்லத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டோக்யோவின் ஆடம்பர குடியிருப்புப் பகுதியில் அவரது வடு உள்ளது. ஷின்சோ அபேயின் இறுதி நிகழ்வு, ஜூலை 12ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில், ஜப்பான் தெற்கில் அமைந்துள்ள நாரா நகரில், அந்நாட்டின் மேலவைக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அடையாளம் தெரியாத நபரால் ஷின்சோ அபே சுடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

அவருடைய கொலை குறித்து விசாரணை நடத்தும் காவல் துறையினர், அதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர், “குறிப்பிட்ட அமைப்புக்கு” எதிரான வெறுப்புணர்வுடன் இருந்ததாக கூறுகின்றனர்.

அந்த அமைப்பில் ஷின்சோ அபே அங்கம் வகித்ததால், குற்றம்சாட்டப்பட்டுள்ள 41 வயதான டெட்சுயா யமாகாமி, அவரை சுட்டதாக நம்புவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஷின்சோ அபேயை சந்தேக நபர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

அஞ்சலிக்காக திரண்ட மக்கள்

ஷின்சோ அபே கொலை

ஷின்சோ அபேயின் உடலை தாங்கிய வாகனம் டோக்யோவில் உள்ள அவரது இல்லத்தை வந்தடைந்த நிலையில், ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் கறுப்பு உடையணிந்து வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர்.

ஜப்பானின் தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று மதியம், ஷின்சோ அபே உடலுக்கு மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) நடைபெறும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் நீண்ட காலமாக பிரதமர் பதவி வகித்தவர் ஷின்சோ அபே. 67 வயதான அவர் கொல்லப்பட்டுள்ளது, துப்பாக்கி சார்ந்த குற்றங்கள் மிகவும் அரிதாக உள்ள ஜப்பான் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) நடைபெற உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டார்.

ஜப்பானின் தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்தவராவார். ஷின்சோ அபே கொலை குறித்து பேசிய அவர், தான் “வார்த்தைகள் அற்று இருப்பதாகவும்”, ஜப்பானின் ஜனநாயகம் “வன்முறைக்கு எப்போதும் அடிபணியாது” என்றும் உறுதியளித்தார்.

மேலவை தேர்தல் எந்த மாற்றமும் இன்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் தீவிர பாதுகாப்புடன் தொடரும் என அவர் தெரிவித்தார்.

சுட்டுவிட்டு தப்பியோடவில்லை

ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் என்பது குறித்தும் அவரை கொலை செய்தவர் தனிநபரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாரா நகரில் உள்ள சாலையின் சந்திப்பு ஒன்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து அபே பேசிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அவர் பின்புறத்தில் இருந்து சுடப்பட்டார்.

அவரை சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபர், இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்பு, ஷின்சோ அபேவுக்கு நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பெரிய துப்பாக்கியுடன் நின்றிருந்த அந்நபர் அபேவை சில மீட்டருக்கு நெருங்கி அவரை நோக்கி இருமுறை சுட்டதாக இக்கொலையை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ஷின்சோ அபே உடனேயே கீழே விழுந்த நிலையில், இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர்.

ஷின்சோ அபேயை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சிக்காத அந்நபரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர்.

அபேவை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உலோகம் மற்றும் மரக்கட்டையால் ஆனது என்றும் அது டேப் மூலம் சுற்றப்பட்டிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிடிபட்ட நபரின் வீட்டிலிருந்து இதேபோன்ற இன்னும் சில நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டன.

அபேயின் கழுத்தில் இரண்டு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தது, மேலும் இந்த தாக்குதலால் அவருடைய இதய செயல்பாடும் பாதிக்கப்பட்டது.

தாக்குதலுக்குப்பின் சில நிமிடங்கள் அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், பதிலளிக்கக்கூடியவராகவும் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆனால், சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நேரத்தில் அதுபோன்று எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருடைய உயிரை காப்பாற்ற சில மணிநேரங்கள் மருத்துவர்கள் முயற்சித்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் அவருடைய மரணம் அறிவிக்கப்பட்டது.

ஷின்சோ அபே

பட மூலாதாரம், Reuters

ஜப்பானிய சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை முழுவதும் “We want democracy, not violence” (“எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும், வன்முறை அல்ல’) என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்) மிகுதியாக பகிரப்பட்டது ஆனது. அதில் பலரும் இச்சம்பவத்திற்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜப்பானில் துப்பாக்கி வன்முறைகள் மிகவும் அரிதானது. ஜப்பானில் நாட்டுத் துப்பாக்கிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் அரசியல் வன்முறைகள் இதுவரை பெரும்பாலும் கேள்விப்படாத ஒன்றாகவே உள்ளது.

ஜப்பானில் கடந்த 2014ஆம் ஆண்டில் துப்பாக்கி சார்ந்த கொலைகள் ஆறு என்றளவிலேயே இருந்தது, இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி சார்ந்த கொலைகள் 33,599 ஆக இருந்தது. ஜப்பானில் ஒருவர் துப்பாக்கியை வாங்குவதற்கு கடுமையான தேர்வுகள் மற்றும் மனநல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதும், சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் ஏர் ரைபில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஷின்சோ அபே

பட மூலாதாரம், Reuters

ஜப்பான் பிரதமராக முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் பதவியேற்றார் ஷின்சோ அபே. பின் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த அவர், பின்னர் உடல்நிலை காரணமாக அப்பதவியிலிருந்து விலகினார்.

பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் தன் கடுமையான நிலைப்பாடுகளுக்காகவும் போருக்கு பிந்தைய ஜப்பானிய அரசியலமைப்பை திருத்த முயன்றதற்காகவும் இவர் அறியப்படுகிறார்.

அபே பிரதமராக இருந்த முதல் முறை அவரின் பொருளாதார கொள்கைகள் வளர்ச்சி பாதைக்கு நாட்டை அழைத்து சென்றன. அது ‘அபேனோமிக்ஸ்’ என்றும் அழைக்கப்பட்டது.

அவருக்குப் பின் கட்சியில் அபேவுக்கு நெருக்கமான யோஷிடே சுகா பிரதமராக பதவியேற்றார், அவருக்குப் பின் ஃபுமியோ கிஷிடா பதவியேற்றார்.

ஷின்சோ அபே கொலை

பட மூலாதாரம், ASAHI SHIMBUN/REUTERS

‘வெறுக்கத்தக்க தாக்குதல்’

உலகளவில் அறியப்பட்ட தலைவர்கள் பலரும் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இதனை “வெறுக்கத்தக்க தாக்குதல்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமரை தொடர்புகொண்டு வருத்தத்தைப் பகிருந்துகொண்டார். மேலும், “இச்சம்பவம் ஜப்பானுக்கும் அபேயை அறிந்தவருக்கும் சோகமானது” என தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் இவ்வார இறுதிநாட்களில் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என்றும் பைடன் உத்தரவிட்டுள்ளார்.

பிரேசிலில் மூன்று தினங்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிபர் ஜேயர் போல்சனேரோ அறிவித்துள்ளார். மேலும் ஜப்பான் மக்களுக்கு தன் இரங்கலையும் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “ஷின்சோ அபே ஒரு உலகளாவிய அரசியல்வாதி” என தெரிவித்துள்ளார்.

தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் இத்தாக்குதலை “ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்” என தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனா மற்றும் தென் கொரிய சமூக ஊடகங்களில் இத்தாக்குதல் குறித்த மகிழ்ச்சியான கருத்துகளும் ஆதிக்கம் செலுத்தின.

சீனாவும் தென் கொரியாவும் வரலாற்று ரீதியாக ஜப்பானுடன் சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளன. ராணுவப் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்ற அபே, தனது பதவிக் காலத்தில் இரு நாட்டு குடிமக்களாலும் வெறுக்கப்பட்டவராக இருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »