பட மூலாதாரம், Getty Images
இன்று (12.07.2022) தமிழ்நாடு, இலங்கையின் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளில் கவனிக்கத் தக்கவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கேரள தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது தீவிரம் அடைந்து உள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார்.
கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையின் முடிவில், உண்மை நிச்சயம் வெளிவரும். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரத்துடன் நடந்த இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும், மத்திய வெளியுறவுத்துறைக்கு கிடைத்துள்ளது. இதில் நடக்கக்கூடாத சில சம்பவங்களும் நடந்து உள்ளது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கூடுதலாக பேச விரும்பவில்லை. நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை என்று அவர் கூறியதாக தெரிவிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.
தங்க கடத்தல் வழக்கு என்றால் என்பதையும் அதன் பின்னணியையும் இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.
மக்கள்தொகை: 2023இல் இந்தியா சீனாவை முந்தும் – ஐ.நா

பட மூலாதாரம், Getty Images
மக்கள்தொகை பெருக்கத்தில் 2023-ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என்று ஐ.நா கணித்துள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது:
உலக மக்கள்தொகை நிகழாண்டு நவம்பா் 15-இல் 800 கோடியை எட்டும். 1950-க்குப் பின்னா் உலக மக்கள் தொகை மெதுவான வீதத்தில் வளா்ச்சியடைகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியையும், 2050-ஆம் ஆண்டில் 970 கோடியையும் எட்டும்.
2080-இல் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக இருக்கும். 2100 வரை இதே விகிதம் நீடிக்கும். 2023-இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். வரும் 2050-இல் இந்தியாவின் மக்கள்தொகை 166 கோடியாக இருக்கும்.
உலக மக்கள்தொகையில் 29 சதவீதத்துடன் அதாவது 230 கோடி மக்கள்தொகையுடன் 2022-இல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியமாக கிழக்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா திகழ்கிறது.
மத்திய, தெற்கு ஆசியா 210 கோடி மக்களுடன் உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்தைக் கொண்டுள்ளது.இந்த பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் தலா 140 கோடி மக்கள்தொகையுடன் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன.
2050-ஆம் ஆண்டுவரையிலான உலக மக்கள்தொகை பெருக்க கணக்கீட்டின்படி, காங்கோ குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், தான்ஸானியா ஆகிய 8 நாடுகளும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு வகிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், ‘பூமியின் 800 கோடியாவது மக்களைப் பெற போவதால் நிகழாண்டு சா்வதேச மக்கள்தொகை தினம் (ஜூலை 11) முக்கிய மைல்கல்லாகும். நமது பன்முகத்தன்மை, மனிதாபிமானத்தை அங்கீகரிக்கவும், நீடித்த வாழ்நாளை உறுதிப்படுத்தி, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க உதவிய மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டாடவும் இது சரியான தருணம்’ என்றார் என தினமணி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
சசிகலா – ஓபிஎஸ் இணைந்து செயல்பட முயற்சி எடுப்பேன்: திவாகரன்

பட மூலாதாரம், Getty Images
சசிகலா, ஓபிஎஸ் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சி எடுப்பேன் என்று புதுக்கோட்டை திவாகரன் தெரிவித்ததாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நேற்று அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் அளித்த பேட்டி:
சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு வெறும் டிராமா. சசிகலாவுடைய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் வரும் தீர்ப்பில்தான், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பது தெரியவரும்.
எடப்பாடிக்கு ஓபிஎஸ் தேவைப்பட்டார். எடப்பாடிக்கு, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் தேவைப்படுகின்றனர். தேவைப்படுபவர்களை அப்போது பயன்படுத்திக் கொண்டு அவர்களை தூக்கி எறிவது தான் எடப்பாடி வாடிக்கை.

பட மூலாதாரம், Getty Images
ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவது தான் என்னுடைய இலக்கு. சசிகலா, ஓபிஎஸ் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சி எடுப்பேன் என திவாகரன் கூறியதாக தினகரன் நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை: ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்; காவல் அதிகாரி இடைநீக்கம்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, News 1st செய்தித்தளத்தின் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக மூத்த காவல் அதிகாரி ரொமேஷ் லியனகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்முதல் தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் குழு, வைத்தியசாலைக்கு சென்று தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையின் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூத்த காவல் அதிகாரி அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே, சம்பவ இடத்திற்கு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டமை மற்றும் யாருடைய பணிப்புரை, கண்காணிப்பின் கீழ் அவர் செயற்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. இந்த நிலையில், மூத்த காவல் அதிகாரி ரொமேஷ் லியனகே,பணியிடை நீக்கம் செய்யப்ப்ட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் ஊடகவியலாளர்கள் 7 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com