Press "Enter" to skip to content

மரண தண்டனை நிலைப்பாட்டை மாற்ற மறுக்கும் சிங்கப்பூர் – காரணம் என்ன?

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Carmen Martínez Torrón/Getty Images

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. நடப்பாண்டில் இதுவரை நான்கு பேர் போதைப் பொருள் கடத்தலுக்காக அங்கு தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அனைத்துலக மன்னிப்பு சபையும், மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகளும், ‘வேண்டாம் மரண தண்டனை’ என்று சிங்கப்பூரை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் சிங்கப்பூர் அரசாங்கம் ‘சட்டத்தை மீறும் அளவிலான போதைப்பொருள் கடத்தலுக்கு தூக்கு’ என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் சிங்கப்பூர் குடிமக்களுடன், அந்நாட்டில் வசிப்பவர்களில் பெரும்பாலானோரும்கூட அரசாங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக உள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தபட்ட ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன.

நடப்பாண்டில் மூன்று மலேசியர்களுக்கும், ஒரு சிங்கப்பூரருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் ‘மீண்டும் மரண தண்டனை அலை’ தொடங்கிவிட்டதாக ‘அனைத்துலக மன்னிப்பு சபை’ எச்சரிக்கை மணியடித்துள்ளது. இதையடுத்து மனித உரிமை ஆர்வலர்கள், சிங்கப்பூருக்கு எதிராக வரிந்து கட்டியுள்ளனர்.

உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன.

இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டுமே போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுகின்றன என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டுகிறது.

இதற்குப் பதிலளித்துள்ள சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம், போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்டங்களால் பல்லாயிரம் மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதாகக் கூறியுள்ளார்.

விவாதங்கள் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சிங்கப்பூர் ஏன் இவ்வளவு பிடிவாதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்? மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கலாமே? எனும் கேள்விகளும் எழுந்துள்ளன.

சிங்கப்பூர் அரசாங்கம் கடும் சட்டங்களை அமல்படுத்த என்ன காரணம், இச்சட்டங்கள் குறித்து அந்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள், தனது நிலைப்பாட்டை அந்த அரசு எவ்வாறு நியாயப்படுத்துகிறது என்பதை அறிய முற்பட்டது பிபிசி தமிழ்.

தரத்தில் முன்னிலை வகிக்க விரும்பும் சிங்கப்பூர்

  • ஆசிய அளவில் வாழ்க்கைத் தரத்தில் முதலிடம்.
  • உலகளவில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாமிடம்.
  • ஆசிய அளவில் வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கான மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம்

– இவை எல்லாம் சிங்கப்பூர் பெற்றுள்ள பெருமைக்குரிய அடையாளங்களில் சிலவாகும்.

இந்தத் தகவல்களை சிங்கப்பூர் உள்துறை அமைச்சு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

“உங்கள் குடும்பத்தாருடன் சிங்கப்பூரில் மிகுந்த பாதுகாப்புடன் வாழ முடியும்,” என தன் குடிமக்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களுக்கும் நம்பிக்கையுடன் உறுதி அளிக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம்.

அனைத்துலக அளவில் மிகக் குறைவான குற்ற விகிதம், வசிப்பதற்கு ஏற்ற நாடு, வெளிப்படையான சட்ட அமைப்பு, நம்பிக்கைக்குரிய காவல்துறை, செயலூக்கம் உள்ள குடிமக்கள் ஆகியவற்றின் காரணமாக உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது சிங்கப்பூர்.

இத்தீவு நாட்டில் நள்ளிரவிலும் தனியாக நடந்து செல்ல முடியும் என்று அந்நாட்டு குடிமக்களில் 94 விழுக்காட்டினர் நம்புகிறார்கள். 69% வெளிநாட்டவர்களுக்கும்கூட இந்த நம்பிக்கை உள்ளது.

சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தவரையில் ஆசிய, பசிபிக் வட்டாரத்தில் முதல் பத்து இடங்களுக்குள் சிங்கப்பூரும் உள்ளது. ஆக்லாந்து, சிட்னி, வெலிங்டன், மெல்பர்ன் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஐந்தாம் இடத்தில் உள்ளது சிங்கப்பூர்.தோக்கியோ உள்ளிட்ட ஜப்பானிய நகரங்கள் அதற்கு அடுத்த இடங்களில்தான் உள்ளன என்கிறது சிங்கப்பூர் உள்துறை அமைச்சு.

சிங்கப்பூரில் சரிபாதி (47%) நிலப்பரப்பு பசுமையாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் மரங்கள் நடப்படுகின்றன.

அந்நாட்டின் எந்தப் பகுதியில் நீங்கள் குடியிருந்தாலும், வீட்டை விட்டு வெளியே வந்து பத்து நிமிடங்கள் நடந்தால், நிச்சயமாக ஒரு பூங்காவை அடைந்திருப்பீர்கள். எதிர்வரும் 2030க்குள் 1,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி ஓட்டுவதற்கென பாதைகள் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது அரசாங்கம்.

இவ்வாறு அனைத்திலும் முதல் நிலை, முதல் தரம் ஆகியவை நிலைத்திருக்க வேண்டும் என்றால், சமூகத்தில் கட்டொழுங்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கு கடும் சட்ட திட்டங்கள் தேவை என்றும் மறைமுகமாக உணர்த்துகிறது சிங்கப்பூர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடும் சட்டங்கள்

சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டுக்கும் சட்டங்களுக்கும் அந்நாட்டு மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு உள்ளது. இது தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஊடகம் நடத்திய ஆய்வின்போது 95 விழுக்காட்டினர் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்போது இந்த எண்ணிக்கை 98% ஆக அதிகரித்துள்ளது. 13 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய சுமார் இரண்டாயிரம் பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

போதைப் பொருள் வணிகம்.

பட மூலாதாரம், Getty Images

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதை 93 விழுக்காட்டினரும், பிரம்படி கொடுப்பதற்கு 80 விழுக்காட்டினரும் ஆதரவளித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டால் கட்டாய மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு 70 விழுக்காட்டினரின் ஆதரவு உள்ளது.

கடந்த 2018 ஜூலை தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 97 விழுக்காட்டினரின் ஆதரவு உள்ளது.

புனர்வாழ்வுத் திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்பதற்கும் சற்றேறக்குறைய 96 விழுக்காட்டினரின் ஆதரவு அளித்துள்ளனர்.

அண்டை நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் கஞ்சா (cannabis)பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைத்துள்ள நிலையில், சிங்கப்பூர் மக்களில் 87 விழுக்காட்டினர் அதற்கு எதிராக உள்ளனர்.

கஞ்சா பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்ற நிலை நீடிக்க வேண்டும் என்பதே சிங்கப்பூரர்களின் விருப்பமாக உள்ளது.குறிப்பாக முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 84 விழுக்காட்டினர் கஞ்சா பயன்பாட்டை எதிர்க்கின்றனர்.

குற்றம் புரிய தூண்டும் போதைப்பொருள்கள்

போதைப்பொருள் பயன்படுத்துவோர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது சிங்கப்பூர்.

போதைப்பொருள் பயன்பாட்டுக்கும், குற்றவியல் நடத்தை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போக்குக்கும் இடையே ஒருவித தொடர்பு இருப்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

அதேவேளையில் போதைப்பொருள் கடத்தலுக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனைகள் குறித்து அறிந்திருந்தால், அக்குற்றத்தைச் செய்பவர்கள், நிச்சயம் தயங்குவார்கள் என்றும், குறைந்தபட்சம் கடத்தப்படும் போதைப்பொருளின் அளவு குறையும் என்றும் அரசாங்கம் கருதுகிறது.

குற்றம் புரிந்து சிறை செல்பவர்கள், தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதும், மீண்டும் அதே தவறை செய்யாத வகையில் கண்காணிக்கப்படுகிறார்கள். போதைப் பித்தர்களுக்கு மறுவாழ்க்கை அளிக்கும் வகையில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அந்நாட்டின் முதன்மையான போதைப்பொருள் அமலாக்க முகமையாகும்.

அங்கு போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த பின்பற்றப்படும் வியூகமானது, அதன் விநியோகம், தேவை ஆகிய இரண்டையுமே குறைக்க வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அமைந்துள்ளது.

போதைப்பொருளால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்து இளையர்களுக்கு கற்பிப்பதன் மூலம், அவர்களைப் போதைப் பழக்கத்திற்கு ஆட்படுவதில் இருந்து தடுக்க இயலும் என அரசாங்கம் நம்புகிறது.

போதைப்பொருள்கள் அற்ற நாடாக சிங்கப்பூரை உருவாக்குவதுதான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் முதன்மை நோக்கம். இப்பிரிவின் ஊழியர்கள், சிங்கப்பூரர்களுடன் மட்டுமல்லாமல், ஒரே குறிக்கோளைக் கொண்டுள்ள பல்வேறு உலக நாடுகளுடனும் சிங்கப்பூர் அரசு இணைந்து செயல்படுகிறது. போதைப்பொருள் விவகாரத்தில் அறவே சகிப்பத்தன்மையற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர்.

உறுதியான சட்டங்களை வகுத்திருப்பதுடன் அவற்றை கண்டிப்பான முறையில் அமல்படுத்துகிறார்கள். இப்படி வலுவான சட்டங்கள் மற்றும் கொள்கைகளால் வழிநடத்தப்படும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவானது உளவுத்துறை, விரிவான விசாரணைகள் ஆகியவற்றின் உதவியோடு போதைப்பொருள் பரவலைத் தடுக்கிறது.

இவற்றையும் மீறி தங்கள் நாட்டில் போதைப்பொருள்கள் பரவுவதை அங்குள்ள அரசாங்கம் விரும்பவில்லை என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

குறைப்பதைவிட தடுப்பது சிறந்தது என்கிறது சிங்கப்பூர்

தீங்கு தடுப்பு அணுகுமுறை போதைப்பொருள் பிரச்னையை அணுகுவதில் நல்ல பலனைத் தருவதாகவும் சிங்கப்பூர் கருதுகிறது.

போதைப்பொருள் அற்ற கலாசாரம், சமூகத்தை உருவாக்குவதில், இந்த நடவடிக்கைதான் தம் குடிமக்களை தற்காக்கும் முதல் அம்சம் என்கிறது அந்நாட்டு அரசு.

தூக்குத்தண்டனையை கைவிட வலியுறுத்தும் அம்னெஸ்டி அமைப்பு

அனைத்துவித குற்றங்களுக்குமான தூக்குத்தண்டனை கைவிடப்பட வேண்டும் என்கிறது அம்னெஸ்டி அமைப்பு.

இன்றைய தேதியில் 110 நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்தாகச் சுட்டிக்காட்டுகிறார். அனைத்துலக மன்னிப்பு சபையின் பிராந்திய ஆய்வுப் பிரிவு துணை இயக்குநர் எமர்லைன் கில்.

அண்மையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இருவரை தூக்கிலிட்டதன் மூலம் மீண்டும் ஒருமுறை அனைத்துலக சட்டங்களை மீறும் வகையில் சிங்கப்பூர் நடந்து கொண்டுள்ளதாக கில் குற்றம் சாட்டுகிறார்.

தூக்குத் தண்டனையை அகற்ற வேண்டும் என்ற திசையில் உலகம் சென்று கொண்டிருக்கும் வேளையில், சிங்கப்பூர் அரசாங்கம் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதாகவும் குறைகூறுகிறார் எமர்லைன் கில்.

“தூக்குத் தண்டனை என்பது எதற்கும் நிச்சயமாக தீர்வாக அமையாது. எனவேதான் அதைக் கடுமையாக எதிர்க்கிறோம். தூக்குத் தண்டனையால் குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகம், அனைத்துலக போதைப்பொருள் தடுப்பு வாரியம் ஆகிய இரு அமைப்புகளுமேகூட போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் எனவும் உலக நாடுகளிடம் இந்த அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

“மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது ஓர் அரசாங்கத்தின் கடமை. அதற்கு மாறாக மரண தண்டனையைப் பயன்படுத்துவது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே சிங்கப்பூர் அதிகாரிகள், இந்த வெட்கக்கேடான, மனிதாபிமானமற்ற தண்டனையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்,” என்கிறார் எமர்லைன் கில்.

சிங்கப்பூரில் எத்தகைய குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது?

மொத்தம் 33 குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட சிங்கப்பூர் சட்டங்கள் வழிவகுக்கின்றன. கொலை, தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்கள் முக்கியமானவை.

கடந்த 2012ஆம் ஆண்டு கட்டாய மரணத் தண்டனை என்பதில் இருந்து சில குற்றங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கடந்த 1970க்கு முன்பு வரை, சிங்கப்பூரில் மரண தண்டனைக்குரிய வழக்குகள் தனி நீதிபதி ஒருவரால்தான் விசாரிக்கப்படும். எனினும் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட நடுவர் மன்றம் ஒன்றும் வழக்கு விசாரணையை செவிமடுக்கும்.

அதன் முடிவில் விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட இருதரப்பு வாதங்களையும் தனி நீதிபதி தொகுத்தளிப்பார். அதன் அடிப்படையில் அந்த நடுவர் மன்றம் மரண தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுத்து தெரிவிக்கும். இதையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி தீர்ப்பளிப்பார்.

எனினும் 1970க்குப் பிறகு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மரண தண்டனைக்குரிய வழக்குகளை விசாரிக்கும் வகையில் நடைமுறை மாற்றப்பட்டது.

அக்காலக்கட்டத்தில் ஒரு வழக்கு குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது.

இன்றைய சிங்கப்பூர் இளம் தலைமுறையினரின் மனப்போக்கு என்ன?

சிங்கப்பூர்

பட மூலாதாரம், Getty Images

மிகச் சிறிய நாடான சிங்கப்பூரில் மக்கள் தொகையும் குறைவுதான். மனித ஆற்றல் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பணிகளைச் செய்ய, வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்துள்ளது.

குறிப்பாக, உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

எனவே, போதைப்பொருள்கள் நாட்டுக்குள் அதிகமாக ஊடுருவிப் புழங்கும் பட்சத்தில், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தனிநபர் என்பதையும் கடந்து சமூகத்தையும் பாதிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது சிங்கப்பூர் அரசு.

இதன் தாக்கம் நாட்டின் வளர்ச்சியிலும் எதிரொலிக்கும் என்பதால்தான் சிங்கப்பூர் அரசு போதைப்பொருள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. அண்டை நாடான மலேசியாவின் எல்லையைக் கடக்கும் ஒருவரால் அரை மணி நேரத்தில் நடைப்பயணமாகவே சிங்கப்பூர் எல்லையை அடைந்துவிட முடியும்.

மலேசியாவிலும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. எனவே, தனது எல்லைகளைக் கண்காணிப்பதில் சிங்கப்பூர் மிக கவனமாக உள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் இன்றைய சிங்கப்பூர் இளம் தலைமுறையினர் சற்றே தாராளப்போக்கை கொண்டிருப்பதாக ஒருதரப்பு கூறுகிறது. இதன் காரணமாக அரசாங்கம் போதைப்பொருளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அவர்களுக்குப் புரிய வைக்கும் விதமாக புதிய கற்பித்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் குற்றவாளிகள் போதைப்பொருளுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றனர். ஒருசிலர் இக்குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் குற்றவாளி ஒருவர் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக குறைவான அளவில், போதை மருந்தை கடத்தியதாக ஒருமுறை கூறியிருந்தார். இதனால் காவல்துறையிடம் சிக்கினாலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட மாட்டாது.

போதைப்பொருள் வழக்கில் 26 ஆண்டுகள் சிறைத்தண்டனையை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அனுபவித்து வரும் பெண் கைதி ஒருவர், தாம் அளித்த ஒரு பேட்டியின்போது, மரண தண்டனை என்பது பொருத்தமான ஒன்று என்றும், அதன் மூலம் போதைப்பொருள் விற்பவர்களையும் அவற்றைப் பயன்படுத்துபவர்களையும் தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் எவ்வாறு பல குடும்பங்களுக்கு பாதிப்புகளையும் துயரங்களையும் ஏற்படுத்தியது என்பது தமக்கு நன்றாகத் தெரியும் என்றார் அவர்.

மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் குழந்தைகளின் நிலைமை குறித்தும் அவர் கவலையும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

தூக்கிலிடும் முன்பு எடுக்கப்படும் புகைப்படம்

சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவது சர்ச்சையாகி உள்ளது எனில், அந்தத் தண்டனையை நிறைவேற்றும் முன்பு கடைபிடிக்கப்படும் ஒரு நடைமுறையும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.

தண்டனை நிறைவேற்றப்பட உள்ள சில தினங்களுக்கு முன்பு, தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளிக்குப் பிடித்தமான உடைகள் உள்ளிட்ட சில பொருள்களை குடும்பத்தார் வாங்கித் தரலாம். அந்தப் புத்தாடையை அணிந்து கொண்டு அந்த கைதி சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இது மிகவும் கொடூரமான நடைமுறை என ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர்.

அண்மையில் போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்ட மலேசியாவை சேர்ந்த குல்வந்த் சிங் விவகாரத்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது என்றும், அவரது குடும்பத்தாரைப் பார்த்தபோது தமக்கு வேதனையாக இருந்தது என்றும் சொல்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கோகிலா அண்ணாமலை.

“அந்த இறுதிக்கட்ட நிமிடங்களை என்னால் மறக்க இயலாது. கல்வந்த் சிங் குடும்பத்தார் அவருக்காக புதிய ஆடைகளை வாங்கியபோது நானும் உடன்சென்றிருந்தேன். கல்வந்துக்காக என்னவெல்லாம் வாங்கலாம் என்று ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுத்தனர். “மான்செஸ்டர் கால்பந்து அணியின் சின்னம் பதித்த டி-சட்டையை வாங்கினர்.

ஜீன்ஸ் பேண்ட் (கால்சட்டை) வாங்கினால் அளவு சரியில்லாமல் போய்விடக்கூடும் என்பதால் ஜாக்கர்ஸ் வாங்கிக் கொண்டனர். என் பங்குக்கு ஒரு தொப்பியும், அவருக்கான சப்பாத்தும் (ஷூ) வாங்கினேன்.

“புத்தாடை, தொப்பி, சப்பாத்து அணிந்து கொண்டு சிறைச்சாலையில் உள்ள மாடிப்படிகளை சில முறை வேகமாக ஏறி இறங்கியதாகவும், அது தமக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகவும் தனது குடும்பத்தாருடனான கடைசி சந்திப்பின்போது கல்வந்த் சிங் கூறினாராம். என்னிடம் இதை தெரிவிக்குமாறு குடும்பத்தாரிடம் அவர் கூறியுள்ளார்.

“அந்தக் கடைசி சந்திப்பின்போது சில நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொண்டு அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்துள்ளது. ஆனால் அந்த மகிழ்ச்சி அடுத்த சில தினங்களில் காணாமல் போனது.

“இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புத்தாடையும் புன்சிரிப்புமாகக் காணப்படும் கல்வந்த் சிங், ஒரு நாற்காலி மீது தனது ஒரு காலை தூக்கி வைத்தபடி காட்சியளிக்கிறார்.

நாகேந்திரன் தர்மலிங்கம்

பட மூலாதாரம், SHARMILA

சில மாதங்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்ட மலேசியாவை சேர்ந்த அறிவுசார் குறைபாடு உள்ளதாகக் கருதப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கமும் இப்படியொரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால் எதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் எம்.ரவி.

இவர் நாகேந்திரனுக்காகவும் வழக்காடியவர்.

“இதுவும் ஒரு வகை தண்டனைதான். கொடூரமான தண்டனை. இதுகுறித்து சிறை நிர்வாகம் எந்த விளக்கமும் அளித்ததில்லை. என்னாலும் இதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.

“கடந்த 2005ஆம் ஆண்டிலேயே இந்த வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. அப்போது சண்முகம் முருகேசு என்பவரின் தாய், அவர் தூக்கலிடப்பட்டதும் என்னிடம் அந்தப் புகைப்படத்தைக் காண்பித்தார். தனது மகனைப் பார்க்கும்போது விளம்பர மாடலைப் போல் காட்சியளிப்பதாகக் கூறினார்.

“ஆனால் எதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த வகையான கொடுமை இருப்பதை நம்ப முடியவில்லை,” என்கிறார் வழக்கறிஞர் எம்.ரவி.

60 ஆண்டுகளில் 850 பேரை தூக்கிலிட்ட தர்ஷன் சிங்

சிங்கப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் கடந்த 1959ஆம் ஆண்டு முதல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் பணியில் இருந்தவர் தர்ஷன் சிங்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமது 89ஆவது வயதில் கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்தார்.

தமது பணிக்காலத்தில் 850-க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் தர்ஷன் சிங்.

“ஒவ்வொரு முறையும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டவர்களை தூக்கிலிடும்போதும், ‘இந்த உலகை விட சிறந்த இடத்துக்கு உங்களை அனுப்பப் போகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ என்று சொல்லித்தான் தண்டனையை நிறைவேற்றுவேன்.

“இவர்களில் ஒரே நாளில் 18 பேருக்கு தண்டனையை நிறைவேற்றியதும் அடங்கும். ஒரே சமயத்தில் மூன்று தூக்குக்கயிற்களை பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

“1963ஆம் ஆண்டு Pulau Senang தீவுச் சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தின்போது நான்கு சிறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 58 பேர் கைதாகினர். அவர்களில் சிலரைத்தான் தூக்கிலிட்டேன்.

“மற்றொரு முறை 90 நிமிடங்களில் அடுத்தடுத்து ஏழு பேரை தூக்கிலிட்டுள்ளேன்.ஏழு பேரும் கொலைக்குற்றம் புரிந்தவர்கள்,” என்று தர்ஷன் சிங் தெரிவித்துள்ளார்.

1994 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில்தான் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், அச்சமயம் உலகளவில் அதிக எண்ணிக்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியதாகவும், சில சமயங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படாத ஆண்டுகளும் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார்.

நடப்பாண்டில் இதுவரை நான்கு பேர் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். தற்போது 60 பேர் வரை தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, வங்க தேசம், சீனா, கானா, இந்தியா, இந்தோனிசியா, மலேசியா, நெதர்லாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்ஃபின்ஸ், போர்ச்சுகல், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூர் சிறையில் வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரும் என்பதை அறிந்து தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்காக காத்திருக்கின்றனர்.

தூக்குத்தண்டனைக்கு எதிரான போராட்டங்களும் எதிர்ப்பும்

கடந்த 2005 மே 6ஆம் தேதி, சண்முகம் முருகேசு என்பவருக்கு தாக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிங்கப்பூரில் ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதுபோன்ற ஒரு கூட்டம் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது சிங்கப்பூரில் அதுவே முதல் முறை எனக் கூறப்பட்டது.

முருகேசு மலேசியாவுக்குச் சென்று திரும்பிய பிறகு, அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், 300 கிராம் எடைகொண்ட ஒரு உறையில் இருப்பது மட்டுமே போதைப்பொருள் என்று தாம் அறிந்திருந்ததாகவும், மற்ற ஐந்து உறைகள் குறித்து தமக்கு ஏதும் தெரியாது என்றும் அவர் விசாரணையில் குறிப்பிட்டார்.

எனினும், அதைப் பொருட்படுத்தாமல் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக சிலர் குரல் கொடுத்தனர்.

பின்னர், 2005ஆம் ஆண்டு ஆஸ்‌திரேலியாவைச் சேர்ந்த Van Tuong Nguyen என்பவர், போதைப் பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்டார். இதற்கு ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இருதரப்பு உறவு பாதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. எனினும், சிங்கப்பூர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

2010ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர் Alan Shadrake எழுதிய Once a Jolly Hangman: Singapore Justice in the Dock என்ற புத்தகத்தில் சிங்கப்பூரின் சட்ட, நீதி அமைப்பை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, சிங்கப்பூரில் தனது புத்தகத்தை அறிமுகப்படுத்த வந்த அவர், கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற அவமதிப்புக்காக ஆறு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு உலக அளவில் பரப்பாகப் பேசப்பட்டது.

எனினும், அவர் பின்னர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதாக செய்தி வெளியானது.

கடந்த மார்ச் மாதம் மலேசிய இளைஞர் நாகேந்திர தர்மலிங்கத்தை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து, சிங்கப்பூரில் 400க்கும் அதிகமானோர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மனித உரிமை ஆர்வலர்களான கிர்ஸ்டன் ஹன், கோகிலா அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் நாகேந்திரன் தூக்கிலிடப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு, மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது.

மக்களிடம் மாற்றம் தென்படுகிறது என்கிறார் கிர்ஸ்டன் ஹன்

கிர்ஸ்டன் ஹன்

பட மூலாதாரம், KIRSTEN HAN

சிங்கப்பூர் அரசாங்கத்தின் சட்டங்களை குடிமக்களில் பெரும்பாலானோர் வரவேற்பதாக கூறப்பட்டாலும், தற்போது நிலைமை மாறி வருகிறது என்கிறார் சமூக செயல்பாட்டாளரான கிர்ஸ்டன் ஹென் (Kirsten Han).

பிபிசி தமிழிடம் பேசிய அவர், நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்படுவதை இணையம் வழி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அந்த மனுவில், சுமார் நூ றாயிரத்துக்கும் (100,000) மேற்பட்டோர் கையெழுத்திட்டதை சுட்டிக்காட்டினார்.

நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டதும் பல சிங்கப்பூரர்கள் பூக்களுடனும், நாகேந்திரன் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்கவும் நேரில் வந்ததையும் அவர் நினைவுகூர்கிறார்.

“கடந்த 2010ஆம் ஆண்டு Yong Vui Kong என்வர் தூக்கிலிடப்பட இருந்த வேளையில், நூறாயிரத்துக்கும் மேற்பட்டோர் அவருக்கு ஆதரவான மனுவில் கையெழுத்திடனர். இத்தனை பேரின் ஆதரவைத் திரட்ட பல வாரங்கள் ஆகின. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இதற்காக சாலைகள் தோறும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

“இதேபோல் அண்மையில் தூக்கிலிடப்பட்ட தட்சிணாமூர்த்திக்கு ஆதரவாக நடத்தப்பட்ட நிகழ்விலும் ஏராளமானோர் பங்கேற்றனர். குற்றம்சாட்டப்ப்ட ஒரே ஒரு நபருக்காக இப்போது யாரும் போராடவில்லை. ஒட்டுமொத்தமாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

சிங்கப்பூரர்கள், பொதுவாக போராட்டங்களை வெறுப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அரசியல் ரீதியில் செயலற்றவர்கள் எனும் விமர்சனமும் உண்டு. ஆனால் இன்று சிங்கப்பூரர்கள் போராட முன்வருகிறார்கள். நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்ட தினத்தன்று சாங்கி சிறைச்சாலை வாயிலில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தபோதிலும், குறைந்த எண்ணிக்கையிலானாவர்கள் அங்கு கூடியிருந்தனர். தாங்கள் இதுவரை பார்த்திராத ஒருவருக்காக தங்கள் அக்கறையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தினர். இதுதான் மாற்றம்.

“ஆனால் அரசாங்கம் மரணதண்டனை தான் சரியான தீர்வு என தொடர்ந்து கூறி வருவதுடன், அது தொடர்பாக மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பை ஆதாரமாக முன்வைக்கிறது.

ஆனால் உண்மையில் கேள்வி கேட்கும், சவால் விடுக்கும், நேரடியாக புறக்கணிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,” என்கிறார் கிர்ஸ்டன் ஹன்.

மக்களுக்கு எது சிறந்ததோ அதை அரசாங்கம் செய்யும்: அமைச்சர் சண்முகம்

இதற்கிடையே சில கடுமையான குற்றச்செயல்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க அத்தண்டனை பயனளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்படுவதை அரசாங்கம் விரும்புவதில்லை. அதேசமயம் மக்களுக்கு எது சிறந்ததோ அதை அரசாங்கம் தொடர்ந்து செய்யவேண்டும்,” என்று அமைச்சர் சண்முகம் மேலும் கூறியுள்ளார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈராண்டுகளுக்குள் ஒருவர் மீண்டும் குற்றம் புரியும் விகிதம் 20 விழுக்காடாய் உள்ளது என்றும், மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் இது ஆகக் குறைவான விகிதங்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“சிறையில் இருக்கும்போதே கைதிகளின் குடும்பத்தாரை தொடர்புகொண்டு அவர்களுக்கு எப்படி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வெளியே வந்தபிறகு அவர்களுக்கு எதுபோன்ற ஆதரவு தேவை என்பதையும் நாம் எடுத்துகூறுகிறோம்,” என்று அமைச்சர் சண்முகம் கூறியதாக சிங்கப்பூரின் ‘செய்தி’ ஊடகம் தெரிவிக்கிறது.

உலக அளவில் சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்படுவது, தற்கொலை செய்துகொள்ளும் விகிதங்கள் சிங்கப்பூரில் மிகக் குறைவு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் கிர்ஸ்டன் ஹன் போன்றவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை தொடர்பாக வெளிப்படைத்தன்மை தேவை என வலியுறுத்துகின்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »