Press "Enter" to skip to content

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 24 நாள்களில் 9வது முறையாக தொழில்நுட்பக் கோளாறு

பட மூலாதாரம், Getty Images

(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (13/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

திங்கள் கிழமை துபாயிலிருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமாக மதுரை வந்தது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில், கடந்த 24 நாள்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது இது 9-ஆவது முறை. ஏற்கெனவே தொடர் கோளாறுகள் குறித்து விளக்கமளிக்குமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஜூலை 6-ஆம் தேதி அறிவிப்பு அனுப்பிய நிலையில், தற்போது மற்றொரு நிகழ்வும் நடந்துள்ளது.

கா்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி23 வரிசை விமானம் திங்கள்கிழமை சென்றடைந்தது. துபாய் விமான நிலையத்தை அடைந்ததும் அந்த விமானத்தின் சக்கரத்தை பொறியாளா் ஒருவா் பரிசோதித்தபோது, அது வழக்கத்துக்கு மாறாக கூடுதல் அழுத்தத்துக்குள்ளாகி செயலிழந்ததைக் கண்டறிந்தாா். இந்த விமானம்தான் துபாயில் இருந்து மதுரை புறப்படத் தயாராக இருந்த நிலையில் இந்தக் கோளாறு கண்டறியப்பட்டது.

இதைத்தொடா்ந்து மும்பையிலிருந்து துபாய்க்கு மாற்று விமானத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அனுப்பிவைத்தது. அந்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை வந்தடைந்தது. இதனால், விமானம் மதுரையை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்நிறுவன செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘கடைசி நிமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், துபை-மதுரை விமான சேவை தாமதமானது. உடனடியாக மாற்று விமானம் அனுப்பிவைக்கப்பட்டு பயணிகள் இந்தியா அழைத்து வரப்பட்டனா். காலதாமதம் என்பது அனைத்து விமான நிறுவனங்களிலும் ஏற்படக்கூடியதுதான். விமானத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை’ என்றாா் என தினமணி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வட மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை

அடித்துக் கொலை

பட மூலாதாரம், Getty Images

சென்னை பள்ளிக்கரணையில் வட மாநிலத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை மணிமேகலை 2-வது தெருவில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அங்கு புரிபவர்கள் அனைவரும் சேர்ந்து மது வாங்கி வந்து குடித்தனர். அப்போது மகேஷ் டோசர் என்ற கட்டிட தொழிலாளி, மேடவாக்கம் பகுதியில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் தங்கி இருக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தனது நண்பர்களான பிஷால், அமர் பாஸ்கர் ஆகியோரை தங்களுடன் மது குடிக்க பள்ளிக்கரணைக்கு வரவழைத்தார்.

பின்னர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிஷால், அமர்பாஸ்கர் ஆகியோரை மகேஷ் டோசர் அடித்து விரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் மேடவாக்கம் வந்து தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்கரணைக்கு சென்றனர். அங்கிருந்த மகேஷ் டோசரை கட்டையால் சரமாரியாக தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மகேஷ் டோசர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பள்ளிக்கரணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிஷால் உள்ளிட்டவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மேடவாக்கம் பகுதியில் இருந்த பிஷால் , அமர் பாஸ்கர், கோன் கான், ரேகல் ஹால்டா, மனஜித் உள்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், மகேஷ் டோசர் குடிபோதையில் பிஷாலை தகாத வார்த்தையால் திட்டியதுடன், அவரது தாயைப் பற்றியும் தவறாக பேசியதாக புகார் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிஷால் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகேஷ் டோசரை அடித்துக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கைதான 7 பேரிடமும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் என தினத்தந்தி செய்தி கூறுகிறது.

ரணில் ஜனாதிபதி பதவி வகிக்க இடமளிக்க வேண்டம்: போராட்டக்காரர்களிடம் இலங்கை எம்பிகள் கோரிக்கை

ரணில் விக்கிரமசிங்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவி வகிக்க இடமளிக்க வேண்டாம் என போராட்டக்காரர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘தமிழ் மிரர்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் நேற்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓடிவந்து பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால், இரு மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகியிருப்பார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கா மூவரின் பெயர்கள் பரிந்துரை – விமல் வீரவன்ச

விமல் வீரவன்ச

பட மூலாதாரம், Getty Images

இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின்போது வாக்குகள் மூன்றாக பிளவடையும். இதுவரை மூவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

இலங்கையில் சமூக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிடில் முழு நாடும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் விமல். அவர் மேலும் குறிப்பிடுகையில் , நாடு தீர்மானமிக்க நிலையை தற்போது எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் . பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கபோவதில்லை.

நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கு இதுவரை மூவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி தெரிவு இடம்பெற்ற பிறகு ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை நடத்தி பொருளாதார மீட்சிக்கான தனது திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

ஜனாதிபதி மாளிகை , ஜனாதிபதி செயலகம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகின்றன .

பொருளாதார மீட்சிக்காக நாம் முன்வைக்கும் திட்டங்களை செயல்படுத்தும் தரப்பினருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம். குறுகிய அரசியல் நோக்கங்களை தவிர்த்து சகல அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு அமைய செயல்பட வேண்டும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டாம் என்றால் பொதுத்தேர்தலுக்கு செல்வதை தவிர்த்து பிறிதொரு மாற்று நடவடிக்கை ஏதும் கிடையாது. அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என அவர் பேசியதாக வீரகேசரி செய்தி கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »