Press "Enter" to skip to content

“ஊழல், துரோகம், சர்வாதிகாரம்” – பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் புத்தகத்தை வெளியிட்ட இந்திய மக்களவை செயலகம்

இன்று இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.

நாடாளுமன்றத்தில் ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல்,வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், சர்வாதிகாரம், கண்துடைப்பு ஆகிய வார்த்தைகளை தொகுத்துப் ‘பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்’ அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, குற்றவியல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, கீழ் மகன் (ரவுடி)த்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன.

முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபை குறிப்பில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோதி

இந்தியா பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவுக்கு பிரதமர் நரேந்திர மோதி பங்குபெற உள்ளதாக தினமணி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் நடைபெற்றுவரும் வேளையில், தொடக்க விழா மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கென சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரங்கிலுள்ள அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோதி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்தனா். தொடக்க விழாவுக்காக செய்யப்பட்டு வரும் அனைத்து ஏற்பாடுகளையும் பாா்வையிட்டனா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மாமல்லபுரத்திலும், தொடக்க விழாவை நேரு உள்விளையாட்டரங்கிலும் சிறப்பாக நடத்துவதற்குரிய பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று அச்செய்தி தெரிவிக்கிறது.

இலங்கை அதிபரின் பதவி விலகல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டத்தின் விளைவாக இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தான் வரும் 13ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார் என சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுவரை தனக்கு அவரது பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளதாக நியூஸ்முதல் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ராஜிநாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவிற்கு (13) முன்னர் தமது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசி வாயிலாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு இம்மாதம் உரிய தேதியில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு, பணம் அச்சிடப்பட வேண்டியமையே இதற்கான காரணமாகும். மேலும், அதற்காக அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

இதற்காக, பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து தற்போதுள்ள அமைச்சரவையின் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைத்து உரிய தீர்மானத்தை எடுப்பதே ஒரே தெரிவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அமைச்சரவை கலைக்கப்படும் எனவும், அதற்கேற்ப, உரிய தீர்மானத்தை எடுப்பதற்கு, மீண்டும் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினால் மட்டுமே, இம்மாதம் 25ஆம் தேதிக்குள் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியுமெனவும் கூறப்படுகிறது. அமைச்சரவையின் முடிவு நாணயச் சபைக்கு அனுப்பப்பட்ட பின்னர் பணத்தை அச்சிடுவதற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கப்படும்.

மேலதிக நேரம், விடுமுறை நாட்கள், வாழ்க்கைச் செலவுகள் என சகல கொடுப்பனவுகளையும் தவிர்த்து சம்பளத்திற்கு மாத்திரம் மாதாந்தம் தேவைப்படும் தொகை சுமார் 29 பில்லியன் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது என இலங்கை தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »