Press "Enter" to skip to content

ஜோ பைடனை வரவேற்க செளதி பட்டத்து இளவரசர் விமான நிலையம் செல்லாதது ஏன்?

பட மூலாதாரம், @SPA

அமெரிக்க அதிபர் ஆக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக செளதி அரேபியாவுக்கு வெள்ளிக்கிழமை சென்றார். பைடன் பதவிக்கு வந்ததில் இருந்து, செளதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் பதற்றம் நிலவி வருவதாக பேச்சு அடிபட்டது.

எனவே, பைடனின் இந்த பயணம் செளதி அரேபியாவுடனான உறவை மீட்டெடுப்பதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது தவிர, செளதி அரேபியா அதன் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்த பகுதியில் இஸ்ரேலின் ஏற்புடைமை அதிகரிக்கவேண்டும் என்றும் பைடன் விரும்புகிறார்.

வெள்ளிக்கிழமை மாலையில் பைடன் ஜெட்டா விமான நிலையத்தை அடைந்தபோது, அவரை வரவேற்க அரச குடும்பத்தைச் சேர்ந்த மன்னர் சல்மானோ அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானோ செல்லவில்லை.

செளதி அரேபியாவின் உண்மையான ஆட்சியாளராக இப்போது பட்டத்து இளவரசர் கருதப்படுகிறார். அதே சமயம், பைடனை வரவேற்கச் சென்றவர் அந்நாட்டின் மெக்கா மாகாண ஆளுநர் காலித் பின் ஃபைசல். அமெரிக்காவுக்கான செளதி அரேபியாவின் தூதர் இளவரசி ரீமா பிந்த் பாந்தரும் அவருடன் சென்றார்.

“பைடனை வரவேற்க மெக்கா ஆளுநர் சென்றிருப்பது ஒரு மோசமான அறிகுறி” என்று ஐரோப்பிய வெளியுறவுகள் சபையின் உறுப்பினரான சின்சியா பியான்கோ ட்வீட் செய்துள்ளார்.

பைடனை வரவேற்பதில் செளதியின் இந்த இணக்கமின்மை, ஒபாமாவின் பயணத்தை நினைவூட்டுவதாக அவர் எழுதியுள்ளார். அப்போது ரியாத் ஆளுநர் ஒபாமாவை வரவேற்றார்.

வரலாறை நினைவு கூர்ந்த ஆய்வாளர்

ஆனால். “எந்த மட்டத்திலான அதிகாரி அதிபர் பைடனை வரவேற்கிறார் என்பதை வைத்து பேச்சுக்கள் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானிக்க முடியாது என்று ரியாத்தில் உள்ள கிங் ஃபைசல் ஆராய்ச்சி மற்றும் இஸ்லாமிய ஆய்வு மையத்தின் மூத்த உறுப்பினர் மருத்துவர் மார்க் தாம்சன் ‘தி இன்டிபென்டன்ட்’ நாளேட்டிடம் கூறினார்.

பிரிட்டிஷ் பிரதமரை துணை ஆளுநர் ரியாத் வரவேற்றார் என்றும் செளதி இளவரசர் முகமது பின் சல்மானை பின்னரே அவர் அரச மாளிகையில் சந்தித்தார் என்றும் மார்க் தாம்சன் நினைவுகூர்கிறார்.

सऊदी अरब

பட மூலாதாரம், @SPA

சந்திப்பின்போது தெரிந்த அறிகுறிகள்…

இருப்பினும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அல்-சலாம் அரண்மனையின் நுழைவாயிலில் அதிபர் பைடனை வரவேற்க நின்றிருந்தார். இருவரும் லேசாக கைமுட்டிகளை தட்டிக்கொண்டனர். ஆனால் அதில் உற்சாகம் காணப்படவில்லை. இருவரின் முகத்திலும் ‘மலர்ந்த புன்னகை’ இருக்கவில்லை.

செளதி அரேபியாவில் பைடனுக்கு அளிக்கப்பட்ட இத்தகைய வரவேற்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை உறுதிப்படுத்துவதாக கருதப்படுகிறது.

இது தவிர பைடனின் வருகை, 2017ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையுடன் ஒப்பிடப்படுகிறது.

டிரம்பை வரவேற்க செளதி அரேபியா மன்னர் சல்மான் விமான நிலையத்துக்கே சென்று காத்திருந்தார்.

அதிபரான பிறகு டொனால்ட் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு செளதி அரேபியாவைத் தேர்ந்தெடுத்தார். அதே நேரத்தில் அமெரிக்காவின் மற்ற அதிபர்கள் பாரம்பரியமாக முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் அண்டை நாடான கனடா அல்லது மெக்ஸிகோவுக்கே சென்றனர்.

டிரம்பை வரவேற்கும் விதமாக பாரம்பரிய வாள் நடனம் நடைபெற்றது. இதில் செளதி அரேபிய மன்னர் சல்மானும் கலந்து கொண்டார்.

டிரம்ப்புக்கு செளதி அரேபியாவால் வாங்குதல் ஆஃப் அப்துல் அஜிஸ் அல்-செளத் பதக்கமும் வழங்கப்பட்டது.

செளதி அரேபியா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து கத்தாருக்கு எதிராக தடை விதித்தபோது அதற்கு டிரம்ப் ஆரம்பத்தில் ஆதரவளித்தார். ஆனால் பின்னர் கத்தாருடன் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் அவர் பணியாற்றினார்.

செளதி அரேபியாவிற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்தார். அதே நேரத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது முடிவை எதிர்த்தனர்.

டிரம்ப்பை வரவேற்க விமான நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும் செளதி அரேபிய மன்னர் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

யேமெனில் செளதி அரேபியாவின் தாக்குதலால் பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையிலும்கூட, செளதி அரேபியாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதற்கான தடைகளை டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்தார். பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை விஷயத்தில் பட்டத்து இளவரசரை டிரம்ப் ஆதரித்தார்.

பைடனின் தேர்தல் பரப்புரை முழக்கம்

செளதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மனித உரிமைகள் பிரச்னையை இதனுடன் இணைத்துப் பார்க்க முடியாது என்றும் டிரம்ப் கூறினார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜரேட் குஷ்னருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

மறுபுறம், 2019ஆம் ஆண்டு நவம்பரில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது பங்கேற்ற பிரசாரத்தின்போது, தான் அதிபரானால் செளதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி அரேபியா பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் பைடன் கூறினார்.

“இனி நாங்கள் செளதி அரேபியாவுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜமால் கஷோக்ஜி விவகாரத்தில் செளதி அரேபியா பதில் சொல்லியே ஆக வேண்டும்,” என்று பைடன் தெரிவித்தார்.

இப்போது செளதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட எட்டாவது அமெரிக்க அதிபர் வரிசையில் சேர்ந்திருக்கிறார் ஜோ பைடன்.

ट्रंप का सऊदी दौरा

பட மூலாதாரம், Getty Images

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது,செளதி அரேபியாவுக்கு நான்கு முறை சென்றுள்ளார். ஒபாமா முதன்முதலில் 2009 இல் ரியாத் சென்றார். அப்போது அவர் அதிபராக பதவியேற்று ஐந்து மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை. 2016ல் ஒபாமாவின் பதவிக்காலம் முடிந்ததும், அவர் மீண்டும் செளதி அரேபியா சென்றார்.

அந்த நேரத்தில் மன்னர் அப்துல்லாவின் மறைவுக்குப் பிறகு மன்னர் சல்மான் பொறுப்பேற்றிருந்தார். ஆனால் விமான நிலையத்தில் ஒபாமாவை மன்னர் சல்மான் வரவேற்கவில்லை. அவரை ரியாத் ஆளுநர் வரவேற்றார். ஒபாமாவின் இந்த வருகை அங்குள்ள அரசு தொலைக்காட்சியில் கூட காட்டப்படவில்லை.

எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ், தனது கடைசி ஆண்டுகளில் 2008ஆம் ஆண்டு செளதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டார்.

எண்ணெய் விலை உயர்வு மற்றும் 2008ஆம் ஆண்டில் நிலவிய பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு அவர் செளதி அரேபியா சென்றார். புஷ்ஷை வரவேற்க மன்னர் அப்துல்லா விமான நிலையம் சென்றார். அதிபர் புஷ்ஷை முத்தமிட்டு வரவேற்றார் மன்னர் அப்துல்லா. அந்த புகைப்படம் அப்போது மிகவும் பிரபலமாகியது.

ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பைடன் இருவரது செளதி பயணங்களும் ஆய்வாளர்களால் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. எண்ணெய் விலை குறையும் விதமாக செளதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று புஷ் அப்போது விரும்பினார்.

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு பைடனும் செளதி அரேபியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிபர் புஷ்ஷை முத்தமிட்டு வரவேற்றார் மன்னர் அப்துல்லா

பட மூலாதாரம், Getty Images

செளதி அமெரிக்கா உறவுகள்

“அமெரிக்க-செளதி உறவுகளில் மனித உரிமைகள் மற்றும் மதிப்புகள் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர நலன்களால் நிர்வகிக்கப்படுகின்றன,” என்று செளதிக்கான முன்னாள் அமெரிக்க தூதர் சைஸா ஃப்ரீமேன் நியூஸ் வீக்கிடம் தெரிவித்தார்.

1945 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று அமெரிக்க-செளதி உறவுகளின் அடித்தளம் போடப்பட்டது. அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மற்றும் செளதி அரேபியாவின் நிறுவன மன்னர் அப்துல் அஜீஸ் இபின் செளத் ஆகியோர் சூயஸ் கால்வாயில் அமெரிக்க கடற்படை கப்பலில் அன்றையதினம் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், செளதி அரேபியாவுக்கு மலிவான விலையில் எண்ணெய் வழங்க, மன்னர் அப்துல்அஜீஸ் ஒப்புக்கொண்டார். பதிலுக்கு, வெளி எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதில் உதவி அளிப்பதாக ரூஸ்வெல்ட் மன்னரிடம் உறுதியளித்தார்.

காதலர் தினத்தன்று இரு நாடுகளுக்கும் இடையே மலர்ந்த இந்த ‘காதல்’,ஆறு இஸ்ரேல்-அரபுப் போர்களைச் சந்தித்திருக்கிறது. இரு நாடுகளும் அந்த நேரங்களில் எதிரெதிர் தரப்புகளில் இருந்தன. 1973 அரபு எண்ணெய் நெருக்கடியில் கூட இரு நாடுகளின் ‘அன்பு’ பாதிக்கப்படவில்லை.

ट्रंप का सऊदी दौरा

பட மூலாதாரம், Getty Images

9/11 தாக்குதலின்போது விமானத்தை கடத்தியவர்களில் பெரும்பாலானோர் செளதி அரேபியாவின் குடிமக்களாக இருந்தாலும் கூட, அதனாலும் பாதிக்கப்படாத அளவுக்கு இருவருக்கு இடையிலான பிணைப்பு வலுவாக இருந்தது.

2003இல் அமெரிக்கா இராக்கை தாக்கியபோது, சதாம் ஹுசேனின் அதிகாரத்தின் முடிவில் இரான் வலுவடையும் என்பதை செளதி அறிந்திருந்தது. ஆனாலும்கூட அந்தக் காலகட்டத்தின் வெப்பம் இருவருக்கும் இடையிலான உறவை உடைக்கவில்லை.

1991 இல் பாரசீக வளைகுடாவில் போர் வெடித்தபோது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ், ரூஸ்வெல்ட்டின் ஒப்பந்தத்தை மதித்து, இராக் ராணுவத்திடமிருந்து செளதி அரேபியாவைப் பாதுகாத்தார்.

1945 இல் அமைக்கப்பட்ட உறவுகளின் அடித்தளம், நிச்சயமாக வலுவாக முன்னேறியுள்ளது. ஆனால் செளதியில் முழு முடியாட்சியும் அதன் சமூக-மத விதிகளான குற்றவாளிகளின் தலை துண்டிக்கப்படுவது போன்றவை மேற்கு நாடுகளின் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செல்கின்றன.

இந்த விஷயங்களில் அமெரிக்கா பலமுறை சங்கடமாக உணர்ந்துள்ளது.

73 ஆண்டுகால உறவில், அமெரிக்காவுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே இரண்டு முறை மட்டுமே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மற்றும் செளதி அரேபியாவின் நிறுவன மன்னர் அப்துல் அசிஸ் இபின் செளத் ஆகியோர் அமெரிக்க கடற்படை கப்பலில் சூயஸ் கால்வாயில் சந்தித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

உறவுகளில் ஏற்பட்ட பதற்றம்

“1962ஆம் ஆண்டில் அதிபர் ஜான் எஃப். கென்னடி, அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அப்போதைய பட்டத்து இளவரசர் ஃபைசலிடம் வற்புறுத்திக் கூறினார். 2015 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா, சிறையில் அடைக்கப்பட்ட ராய்ஃப் படாவியை பகிரங்கமாக தண்டிப்பதை நிறுத்துமாறு மன்னர் சல்மானை வற்புறுத்த வேண்டியிருந்தது,” என்று ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் மற்றும் ‘கிங்ஸ் அண்ட் பிரசிடென்ட்ஸ்: செளதி அரேபியா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் சின்ஸ் எஃப்.டி.ஆர்’ ஆகிய புத்தகங்களின் ஆசிரியரான ரீடல், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம்’ கூறினார்.

” படாவிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக 1,000 கசையடிகளும் விதிக்கப்பட்டன. வலைப்பதிவு எழுதியதற்காக அவருக்கு இந்த தண்டனை கிடைத்தது. படாவிக்கு ஏற்கனவே 50 கசையடிகள் கொடுக்கப்பட்டிருந்தன.”

வெளியுறவுக் கொள்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்த அமெரிக்காவின் முதல் அதிபராக ஜிம்மி கார்ட்டர் கருதப்படுகிறார்.

1977 முதல் அமெரிக்க வெளியுறவுத்துறை, உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை பற்றிய வருடாந்திர அறிக்கைகளைத் தயாரிக்கத் தொடங்கியது. செளதி மீது கார்டரோ பிற அதிபர்களோ இதுபோன்ற அறிக்கையை ஒருபோதும் வெளியிடவில்லை என்று ரீடல் கூறுகிறார்.

பட்டத்து இளவரசர் சல்மானின் வருகைக்குப் பிறகு, செளதியில் ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிபர் டிரம்ப் தனது முன்னோடிகளின் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஆனால் பைடன் நிலைமையை மாற்ற முயன்றார் அது நடப்பதாகத் தான் தெரியவில்லை. பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு தனது சகாக்களுடன் மட்டுமே பேசுவேன் என்று கூறினார். ஆனால் நிலைமை மாறியது. பட்டத்து இளவரசரை சந்திக்க பைடனே செளதி அரேபியா செல்ல வேண்டிய நிலை வந்துள்ளது.

செய்தி வழங்கல் – ரஜ்னிஷ் குமார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »