Press "Enter" to skip to content

இணைய வசதி முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

இணையம் ஆண்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். நிச்சயம் இப்போதிருப்பதைவிட வித்தியாசமானதாகவே இருக்கும். அதற்காக இணையம் முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று அர்த்தமல்ல.

இரு எழுத்தில் தொடங்கிய பயணம்

1969 அக்டோபர் 29. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், அந்த 21 வயது மாணவி மிக மிக கவனமாக தன் கணிணி முன் அமர்ந்திருந்தாள். கணிப்பொறி அறிவியல் படிக்கும் அந்த மாணவியின் கணிணியில் ஒரு பாப்பப் செய்தி வந்தது. ‘L O’ என்று தொடங்கிய அந்தச் செய்தி, இந்தக் கணிணி இருக்கும் இடத்திலிருந்து சுமார் 560கி.மீக்கு அப்பால், ஸ்டான்பார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்தது.

லாகின் என்பதுதான் முழு செய்தி. அதை படிப்பதற்கான நேரம் கூட இல்லாமல் கணிணி கோளாறாகிப்போனது. ஆனாலும், இரண்டு முனைகளிலும் வெற்றிக்கொண்டாட்டமாக இருந்தது. காரணம் அந்த செய்தி. ஆம். உலகில் முதல்முறையாக இரண்டு கணிணிகள் பேசிக்கொண்ட சம்பவம் இது. அதுமட்டுமல்ல இன்று நம் கைகளில் இருக்கும் இணையம்டின் தொடக்கப்புள்ளி இதுதான்.

அமெரிக்காவின் ராணுவ தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தப்பட்ட இந்த முறைமை, அப்போது அர்பாநெட் என்று அழைக்கப்பட்டது. அந்த நெட்வொர்க்தான், சுமார், 50 ஆண்டுகளுக்குப்பின் இப்படி உலகத்தை உள்ளங்கையில் தரும் மிகப்பெரிய நெட்வொர்க்காக மாறியுள்ளது.

இன்று இருக்கும் இணையம் உங்களை வந்து சேர்வதற்கு ஆயிரக்கணக்கான கரங்களின் உழைப்பு பின்னணியில் இருக்கிறது. அவற்றில் பெரும்பாலானோர் பெண்கள். குறிப்பாக ராடியா பேல்மென், கேரென் ஸ்பொர்க் ஜோன்ஸ், சோபீ வில்சன் ஆகியவர்களைச் சொல்லலாம்.

இணையம் முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தால்?

பட மூலாதாரம், Getty Images

1960இல் பெண்களால் நடத்தப்பட்ட மென்பொருள் நிறுவனம்

இன்று இருக்கும் கணிப்பொறியியல் மற்றும் நிரலாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை பெண்களின் உழைப்பு பெருமளவு இருக்கிறது என்கிறார் இல்லியொனொஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை பேராசிரியர் மார் ஹிக்ஸ். ஆனால், “அவர்களது முயற்சி மிகக்குறைவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்கிறார் ஸ்டெஃபனீ ஷீர்லி. இவர், 1960களிலேயே முழுக்க முழுக்க பெண்களால் இயங்கும் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்தவர். “இணையத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்ததாக அவர் கூறுகிறார்.”

இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், இணையத்தை வடிவமைத்ததில் பலர் சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து (அமெரிக்காவின் கலிஃபோர்னியா) வந்தவர்கள். ஆனால், மிகவும் பன்முகத்தன்மை கொண்ட குழுவால் (அனைத்து நிறங்கள், பாலினங்கள் மற்றும் பாலியல் சார்பு கொண்டவர்கள் ) உருவாக்கப்பட்டிருந்தால் இணையம் எப்படி இருக்கும்? பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மேசையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டு, அதன் வடிவமைப்பில் பெரிய பங்களிப்பைப் பெற்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

பின்னோக்கிச் சென்று வரலாற்றை மாற்றுவது சாத்தியமற்றது என்றாலும், இணையத்தில் ஆண்கள் எப்படி அழியாத தடங்களை பதித்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தக் கேள்வி நிரூபிக்கிறது.

இணையம் கட்டமைக்கப்பட்ட விதம் மற்றும் அதன் தோற்றம், நம் இணைய அடையாளம், மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் முறை மற்றும் இவற்றுக்கான வழிமுறைகள் வரை அனைத்திலும் மாற்றம் இருந்திருக்கும். பெண்களும் சிறுபான்மையினரும் வேறுவிதமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமல்ல. ஆனால் அவர்கள் செய்திருப்பார்கள் என்று பலர் நம்புகிறார்கள். அப்படியானால், இந்த மாறுபட்ட முடிவுகள் எப்படி இருந்திருக்கும்?

மேலும் அனைவருக்கும் சிறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு மாற்று இணையத்தை நாம் வைத்திருக்க வேண்டுமா?

இணையம்

பட மூலாதாரம், Getty Images

லாபம் மட்டுமே நோக்கமா?

லண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் இணையச் சமத்துவத்தைப் போதிப்பவரும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் இணை நிறுவனரான சார்லோட் வெப், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மூலம் அமைக்கப்பட்டால் ஒரு மாறுபட்ட வணிக மாதிரியை இணையம் பெற்றிருக்கும் என நம்புகிறார். இன்று, பெரும்பாலான கணினிமய தளங்களுக்கு ஒரே நோக்கம்தான். பயனர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பது, விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டுவது. “சமூக ஊடகங்களின் விளம்பரங்கள், வருவாய், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது” என்று கூறும் வெப், இது “ஆணாதிக்க”, “முதலாளித்துவ”, மனநிலையிலிருந்து எழுகிறது என்று அவர் நம்புகிறார்.

பெண் மற்றும் சிறுபான்மை தலைமை நிர்வாகிகளும் கூட லாபநோக்கம் கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு (சில நாடுகளில் அதிக பெண் குழு உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஆண்களால் ஆதிக்கம் செலுத்துவதை விட சிறப்பாக செயல்படுகின்றன). ஆனால் வெப் அவர்கள் வித்தியாசமான பரந்துபட்ட ஒரு வணிக மாதிரியை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கலாம். உதாரணமாக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமூக நீதி, பெருநிறுவன பொறுப்பு, மனித உரிமைகள் மற்றும் கூட்டு விடுதலை ஆகியவற்றுக்கும் முன்னுரிமை தரப்பட்டிருக்கும்.”மாறுபட்ட பார்வைகள், மரபுகள் மற்றும் பின்னணியிலிருந்து வருவோர் வரும் அதிகாரப் பதவிகளில் இருந்தால் இந்த மாதிரியான மாறுதல்கள் வெளிப்பட வாய்ப்பு அதிகம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

தர்ம சங்கட நிலை

அப்படி ஒரு பரந்துபட்ட குழு இருந்திருந்தால் அது, அதிக கவனம் கொண்ட ஒன்றாகவும் அதேசமயம், தர்மசங்கடத்தை உருவாக்கவல்ல மேற்கத்திய கலாச்சாரத்தை சாராததாகவும் இருந்திருக்கும். அப்படித்தான் ஒரு தர்ம சங்கடம் 2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம் கூகுள், யாகூ மற்றும் மைக்ரோசாப்ட் பிங் போன்றவற்றில் அல்ட்ராசவுண்ட் மற்றும் மகப்பேறுக்கு முற்பட்ட பாலியல் சோதனைக்கான சேவைகளை வழங்கும் விளம்பரங்களை நீக்குமாறு உத்தரவிட்டது. சமநிலையற்ற பாலின விகிதங்கள் மற்றும் உலகிலேயே அதிக பெண் சிசுக்கொலை விகிதம் கொண்ட இந்தியாவுக்கு இந்த விளம்பரங்கள் பொருந்தாதவை. பின்னர், அத்தகைய விளம்பரங்கள் தொடர்பான 43 வார்த்தைகள் இணையத்தில் தடை செய்யப்பட்டன.ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் தொழில்நுட்ப பேராசிரியரான அனுபம் சந்தர் கூறுகையில், ஒரு நாட்டில் செயல்படும் போது, ​​அதன் உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கான நிபுணத்துவம் நமக்கு இருக்க வேண்டும். அதற்காக பல்வேறு கலாசார பின்னணி கொண்டவர்கள் இருக்க வேண்டும் என்கிறார்.

மொழி

தற்போது, ​​இணையத்தில் ஆங்கிலம் மற்றும் ஒரு சில மொழிகள் ஆதிக்கம் செலுத்துவதாக விமர்சனம் உள்ளது. உலகில் ஏறக்குறைய 7,000 மொழிகள் உள்ளன. ஆனால் இவற்றில் 10 மட்டுமே அனைத்து இணையத்தில் உள்ள கிட்டத்தட்ட 80% உள்ளடக்கத்தின் மொழியாக இருக்கின்றன.

அதுபோக, சுயபாதுகாப்பு வழிமுறைகளும் மாறியிருக்கும். இன்று அலைபேசி எண் இல்லாமல் ஃபேஸ்புக் உள்ளிட்ட கணினிமய தளங்களில் ஒரு பயனர் தன் கணக்கை சரிபார்க்க முடிவதில்லை. இதன்மூலம் தங்கள் தகவல்கள் கசிவதற்கான வாய்ப்பு இருப்பதை பெரும்பாலானோர் விரும்பவில்லை.

அதேபோல, தங்கள் உண்மையான பெயருக்கு மாற்றாக வேறு பெயர் வைத்துக்கொள்வதும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு அது தேவையாக இருக்கிறது என்கிறார் Internet Democracy Project என்ற இந்திய தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அஞ்சா கொவாக்ஸ்.

பெண்கள்தான் இலக்கு

கணினிமய தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால் பாதிக்கப்படுவதில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்தான் அதிகம். சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த 14,000க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகளவில் 10 பெண்களில் ஆறு பேர் ஏதேனும் ஒரு வகையான கணினிமய வன்முறையை அனுபவிப்பதாக தெரிய வந்துள்ளது.1,600 க்கும் மேற்பட்ட ஆபாச வழக்குகளின் (பழிவாங்கும் எண்ணத்துடன் பதிவேற்றப்பட்ட படங்கள் விடியோக்கள் தொடர்பான வழக்குகள்) மற்றொரு ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களில் 90% பெண்கள் என்று தெரியவந்துள்ளது.2020 ஆம் ஆண்டில், பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக் கணிப்பில், இணையத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதில் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டது.

இதே நேரத்தில், அவர்கள் இணையத்தை உருவாக்கும் பொறுப்பில் இருந்திருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு செய்திருக்கலாம். உதாரணமாக, Facebook, Twitter மற்றும் Reddit போன்ற சமூக ஊடக தளங்கள், இப்போது தங்கள் தளங்களில் பழிவாங்கும் நோக்கிலான ஆபாச பதிவுகளை தடை செய்துள்ளன. ஆனால் அவர்கள் 2015ல் தான் அதைச் செய்தன. முன்னணி பெண் ஆர்வலர்களின் அழுத்தத்தை எதிர்கொண்ட பிறகுதான் அது நடந்துள்ளது. ஆனால், “இது ஆரம்பத்திலிருந்தே கொள்கையாக இருந்திருக்க வேண்டும்.” என்கிறார் சந்தர். இது தொடர்பாக பிபிசி தொடர்பு கொண்ட எந்த தளமும் கொள்கைகளை செயல்படுத்த 10 ஆண்டுகள் எடுத்தது ஏன் என்பதை விளக்க தயாராக இல்லை.

நிஜ உலகில் மாற்றம் வேண்டும்

பெண்களும் சிறுபான்மையினரும் மேலே உயர்ந்தால் ஆண்களை விட வித்தியாசமாக செயல்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதேசமயம் “எங்கள் சமூகங்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ள வகையில் ஒரு ஏற்பாடு இருந்தால், அவர்கள் விரும்பியதைச் செய்யலாம், அதன் விளைவுகள் திண்ணமாக இருக்கும்,” என்கிறார் பேராசிரியர் ஹிக்ஸ்.ஒரு மாற்று இணையம் “இன்னும் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்” என்று ஒட்டாவாவின் கார்லேடன் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவரான அபிகாயில் கர்லேவ் கூறுகிறார்.ஏனென்றால், இணையத்தின் பெரும்பாலான சிக்கல்கள் நிஜ உலகில் இருந்துதான் உருவாகின்றன. “சமூக ஊடகங்கள் சமூகத்தின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே” என்கிறார் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் சட்டம், புதுமை மற்றும் சமூகம் பற்றிய பேராசிரியர் லிலியன் எட்வர்ட்ஸ். பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் இணையத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க, அவர்கள் ஆஃப்லைனில் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் வன்முறையை நாம் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.இது சிறந்த கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் பலவற்றிற்கான அணுகலை வழங்குவதாகும். “சமூகத்தில் பங்கு உள்ளவர்கள் பொதுவாக அதைத் தோண்டி எடுப்பதில்லை” என்கிறார் எட்வர்ட்ஸ்.கர்லேவ் ஒப்புக்கொள்கிறார். “சமூகங்கள் வலுவடையும் போது, ​​மக்கள் வன்முறை மற்றும் மோதலால் உந்துதல் குறையும்.””இணையத்தில் பெரிய மாற்றங்களைப் பெறுவதற்கு, நிஜ வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். அப்போதுதான், எந்த பாலினம் அல்லது குழு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல், இணையமானது முதலில் தனது “எல் ஓ” என்ற இரு எழுத்து செய்தியை அனுப்பியபோது எதனால் மகிழ்ந்ததோ, அந்த நோக்கத்தின்படி ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கான ஆரோக்கியமான வழிமுறையாக மாறும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »