பட மூலாதாரம், Getty Images
வேலை நேரத்தில் ஆபாசப்படம் பார்ப்பது உங்கள் தொழில்வாழ்க்கைக்கு எமனாகலாம். ஆனால் இது தெரிந்தும், நீங்கள் நினைப்பதைவிட அதிகமானோர் இந்த ஆபத்தில் இறங்குகின்றனர்.
வேலைநேரத்தில் சிறிதே இடைவெளி எடுத்துக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்வதையும், கடையில் வாங்குதல் செய்வதையும் ஏன் புதிய டேட்டிங் செயலியை பயன்படுத்துவதைக் கூட பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் ஆபாசப்படங்களை பார்ப்பது?
இது நிச்சயமாக அனுமதிக்கப்படாததுதான். ஆனால், இன்றைய சூழலில் மிகவும் எளிமையாக இணையத்தில் அணுக முடிவதால், இது மிகவும் பரவலாகிவிட்டது என்று உளவியலாளர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள்.
60%க்கும் அதிகமான பேர்
வேலை நாளின் போது ஆபாசபடங்களின் நுகர்வு பெருகுவது குறித்து ஆராய்ச்சிகள் அவ்வளவாக இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகள் இது ஒன்றும் அசாதாரணமானது அல்ல என்று தெரிவிக்கின்றன. இது சில தொழிலாளர்களை ஆச்சரியப்படுத்தலாம்.
கணினி மயமான லைஃப்ஸ்டைல் இதழான Sugarcookie க்காக 2,000 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய கணக்கெடுப்பில், 60% க்கும் அதிகமான மக்கள் பணியிடத்தில் ஆபாச படங்களைப் பார்த்தது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி,2020 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், வீட்டிலிருந்து பணியாற்றும் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், வேலை தொடர்பான பணிகளுக்காகப் பயன்படுத்தும் சாதனங்களில் வயது வந்தோருக்கான தளங்களைப் பார்ப்பதை ஒப்புக்கொண்டனர்.
உலகின் மிகப்பெரிய தளமான Pornhub க்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட உலகளாவிய ஆராய்ச்சி, மக்கள் வேலை நேரத்தில் ஆபாச படங்களை பார்க்கிறார்கள் என்ற கருத்தை ஆதரிக்கிறது. இரவு 10 மணிமுதல், பின்னிரவு 1 மணி வரை ஆபாச உள்ளடக்கத்தைப் பார்ப்பது மிகவும் பொதுவான நேரமாக இருக்கிறது என்றும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மாலை 4 மணி, இரண்டாவது மிகவும் பிரபலமான நேரமாக உள்ளது. பகல்நேரப் பார்வையிடல் வீட்டில் இருந்து பணிபுரியும் ட்ரெண்டுடன் இணைந்தது என்று சிலர் நம்பினாலும் (அதைப் பற்றி விரிவாக பின்னர் பேசுவோம்), தொற்றுநோய் காலகட்டத்திற்கு முன்பே இதேபோன்ற பிற்பகல் பார்வையிடல் அதிகரிப்பு இருந்ததாக, தளத்தின் தரவு தெரிவிக்கிறது.
வேலை நேரத்தில் ஆபாசப்படங்களை பார்த்து பிடிபட்டவர்கள் பற்றிய உயர்மட்ட ஊடக அறிக்கைகள், அதன் பரவலை சுட்டிக்காட்டுகின்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் நீல் பாரிஷ் நாடாளுமன்றத்தில் தனது கைபேசியில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைப் பார்த்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் பதவி விலகினார். வேலையில் ஆபாச படங்களை பார்த்ததற்காக ஸ்வீடிஷ் சிறைக் காவலரின் சம்பளம் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய விமானப் பொறியாளர் தன் முதலாளிக்கு சொந்தமான டேப்லெட்டில், வயதுவந்தோருக்கான உள்ளடக்கத்தை பார்த்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். பிடிபட்டால் தண்டனையின் பேராபத்து இருக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலோ அல்லது நிறுவனத்தின் சாதனங்களிலோ ஆபாச உள்ளடகத்தை மக்கள் ஏன் பார்க்கிறார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவது நியாயமானது. வீட்டிலிருந்து வேலை செய்யும் போக்கு இதை அதிகரித்துள்ளதா என்றும் வணிகங்களில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் வல்லுநர்களும்,நிறுவன உரிமையாளர்களும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஊழியர்கள் ஆபாச உள்ளடக்கத்தை பார்ப்பதற்கான காரணங்கள்
மக்கள் ஆபாச உள்ளடக்கத்தைப்பார்ப்பதற்கு மிகவும் பொதுவான காரணங்கள் அவர்கள் சலிப்புடன் அல்லது பிற உணர்ச்சிகளிலிருந்து தங்களைத் திசைதிருப்ப விரும்புவதே என்று உளவியல் ஆராய்ச்சி கூறுகிறது. வயது வந்தோருக்கான உள்ளடக்கம் கற்பனையை தூண்டவும் பயன்படுத்தப்படுகிறது (உங்கள் சொந்த பாலியல் வாழ்க்கையில் கிடைக்காத விஷயங்களை அனுபவிப்பது அல்லது கண்டறிவது); ஆர்வம் மற்றும் சுய ஆய்வு (உங்கள் சொந்த விருப்பங்களைப் புரிந்துகொள்வது); மற்றும் நிச்சயமாக, தனிப்பட்ட பாலியல் இன்பத்திற்காக இது செய்யப்படுகிறது.
இந்த எல்லா காரணிகளும் பணியிடத்தில் ஆபாச உள்ளடக்கத்தை பார்க்க மக்களை தூண்டுகின்றன என்று பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகர பல்கலைக்கழகத்தின் தொழில்சார் சுகாதார உளவியல் பேராசிரியரான கிரேக் ஜாக்சன் கூறுகிறார். பணியிடங்களில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைப் பார்க்கும் பெரும்பாலானவர்கள், அதை தங்கள் வீட்டில் செய்வதுபோன்ற வழியில் பயன்படுத்துவதில்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம் என்றும் ஜாக்சன் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
“வேலை செய்யும் இடத்தில் யாராவது ஆபாச உள்ளடக்கத்தை பார்த்தால், அவர்கள் எப்படியாவது ரகசியமாக தனது மேசையில் சுயஇன்பம் செய்கிறார்கள் அல்லது சுயஇன்பம் செய்வதற்காக கழிவறைகளுக்குச் செல்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். இது நிச்சயமாக ஒரு கவனச்சிதறல்.”என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அதிருப்தியடைந்த ஊழியர்கள் ஆபாச உள்ளடக்கத்தை “மன அழுத்த நிவாரணம் அல்லது சமாளிக்கும் வழிமுறையாக” பயன்படுத்தக்கூடும் என்று அவர் கூறுகிறார். “நிறுவனங்களில் உள்ள பல தொழிலாளர்கள் முகமற்றவர்களாக உணர்கிறார்கள். நல்ல தலைமைத்துவம் இல்லாத நிலையில், அவர்கள் கவனிக்கப்படாதவர்களாகவும், தனது திறமை சரியாக பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை என்றும், திறனுக்கு சவால்விடும் வேலை கொடுக்கப்படவில்லை என்றும், உணர்கிறார்கள். மேலும் [ஆபாச உள்ளடக்கத்தை பார்ப்பது] ஒரே போன்ற, விருப்பமில்லாத வேலையின் சலிப்பை சமாளிப்பதற்கான ஒரு வழியாக மாறிவிடுகிறது,”என்கிறார் அவர்.
வேலையின்போது ஆபாச உள்ளடகத்தை பார்ப்பது என்பது சிலருக்கு, திருப்தியற்ற முதலாளிக்கு எதிரான வெற்றி அல்லது எதிர்ப்பை காட்டுவதற்காகவும் இருக்கலாம். முன்காலத்தில் மகிழ்ச்சியற்ற ஊழியர்கள் அரை மணி நேரம் செய்தித்தாளில் குதிரை பந்தய கணிப்புகளைப் படிக்க பதுங்கிச் செல்வது அசாதாரணமானது அல்ல என்று ஜாக்சன் நினைவு கூர்ந்தார்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“ஆபாச தளங்களைப் பார்ப்பது என்பது அதன் கணினி மயமான பதிப்பு போன்றது. ஏனென்றால் நீங்கள் வேலை நேரத்தைத் வீணடிப்பதோடு மட்டுமல்லாமல், இணையத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றையும் செய்கிறீர்கள். மேலும் அதைச்செய்ய அனுமதி இல்லை என்பதும் உங்களுக்கு தெரியும்,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் தங்கள் வேலையை விரும்பிச்செய்யும் ஊழியர்கள் கூட ஆபாச உள்ளடகத்தை அணுக ஆசைப்படலாம் என்று போதை ஒழிப்பு சிகிச்சையாளரும், யுகே கவுன்சில் ஃபார் சைக்கோதெரபியின் செய்தித் தொடர்பாளருமான பவுலா ஹால் கூறுகிறார். அவர்கள் இப்போது ஒரு பெரிய விற்பனையை முடித்துள்ளார்கள், ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள், இணையத்தில் ஒரு வேலையை முடித்துவிட்டார்கள், அதற்கு இது ஒரு வெகுமதி என்று நினைப்பார்கள்,” என்று அவர் விளக்குகிறார். ” சிலர் ஒரு கப் காபி மற்றும் ஒருஇனிப்புக்கட்டி (கேக்) சாப்பிடலாம் … வேறு சிலர் ஆபாச படங்களைப் பார்க்கலாம்.”
பல நிறுவனங்கள் சமீபத்திய ஆண்டுகளில் ஐடி பாதுகாப்பை முடுக்கிவிட்டாலும், அலுவலக அடிப்படையிலான ஆபாச பழக்கங்கள் உருவாகலாம். ஏனெனில் வேலையிடத்தில் கணினிகள் மற்றும் சேவையகங்கள் அவற்றைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு புத்திசாலித்தனமாக இல்லை என்று ஜாக்சன் கூறுகிறார். “வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைக் கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் தங்கள் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு போதுமானதாக இல்லை என்பதை பல தொழிலாளர்கள் கண்டறிந்துள்ளனர்,” என்று அவர் கூறுகிறார். “உளவியலில் உள்ள பல விஷயங்களைப் போலவே, நீங்கள் அதைச் செய்து அது உங்களை மகிழ்ச்சியாக உணர வைத்தால், உடனடி எதிர்மறையான விளைவுகள் எதுவும் இல்லை என்றால், நீங்கள் அதை மீண்டும் மீண்டும் செய்வீர்கள்.”
வீட்டில் இருந்து வேலை செய்வதன் விளைவு?
ஒரு தொழிற்சாலை தளம் அல்லது அலுவலகத்திற்கு செல்லாமல் நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை அணுகுவது மிகவும் எளிதானது. ஒரு சக ஊழியர் உங்களை பார்க்கும் ஆபத்து இல்லை. மேலும் எந்தவொரு பணிச் சேவையகத்திலும் இணைக்கப்படாத உங்கள் சொந்த வைஃபை நெட்வொர்க் மூலம் உங்கள் சொந்த சாதனங்களில் அதை பார்க்கமுடியும்.
பெருந்தொற்றின் தொடக்கத்தில் பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு மாறியபோது ஆபாச தளங்களின் உலகளாவிய பயன்பாடு அதிகரித்ததில் ஆச்சரியம் இல்லை. இது சமூக தனிமையுடன் சேர்ந்து அதிக அளவு மன அழுத்தம் மற்றும் சலிப்பு ஆகியவற்றால் இயக்கப்பட்டது என்று கல்வி ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் 2020 அக்டோபர் மாதத்திற்குள், ஆபாச தளங்களின் பயன்பாடு பெரும்பாலும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பியது என்று சுய-அறிக்கை ஆய்வு தெரிவிக்கிறது.
இன்று ஆபாச நுகர்வு பற்றிய புதிய தரவு எதுவும், வீட்டிலிருந்தான வேலையுடன் இணைக்கப்படவில்லை என்றாலும், வழக்கமான வேலை நேரத்தில் வீட்டில் ஆபாச உள்ளடக்கத்தை எளிதாக பார்க்கமுடிவது, ஆபாசஉள்ளடக்கத்தைப் பார்க்கும் சிலரின் பழக்கத்தை பாதித்திருக்கலாம் என்று ஹால் நம்புகிறார்.
தொற்றுநோய்க்குப் பிறகு வீட்டிலிருந்து பணிபுரியும் போது ஆபாச உள்ளடக்கத்திற்கு அடிமையான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் பெரிய தாக்கம் ஏற்படுவதாகவும் ஹால் கூறுகிறார். “எனது கிளையன்ட் குழுவில் இது மிகவும் பொதுவாக உள்ளது. பகல் பொழுதில் ஆபாச உள்ளடக்கத்தை பார்ப்பதால் அல்லது செக்ஸ் அரட்டை அறைகளில் நாளைக்கழித்ததால், காலக்கெடுவை சந்திக்க அதிகாலை 2 மணி வரை வேலை செய்ய வேண்டிவருகிறது. சரியான நேரத்தில் பணிகளை முடிக்க மக்கள் சிரமப்படுகிறார்கள்.”
வென்டி எல் பேட்ரிக், சான் டியாகோவை தளமாகக் கொண்ட தொழில் வழக்குரைஞர், பணியிட குற்றங்கள் மற்றும் வன்முறை பற்றி அவர் இவ்வாறு எழுதுகிறார். “ஆபாச உள்ளடக்கத்தைப் பார்ப்பது மூடிய கதவுகளுக்குப் பின்னால் மிகவும் எளிதானது மற்றும் அலுவலகத்தில் இருப்பதை விட வீட்டில் மிகவும் எளிதானது.” “வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது பணியாளர்களுக்கு அதிக நேரம், இடம் மற்றும் பொறுப்பற்ற தன்மையை வழங்கியுள்ளது,”என்று அவர் கூறுகிறார்.
ஒரு ‘நச்சு’ தாக்கம்
பெரும்பாலான நிறுவன உரிமையாளர்கள் வேலையில் அல்லது நிறுவனத்தின் சாதனங்களில் ஆபாச உள்ளடக்கத்தைப் பார்ப்பதை தவறான நடத்தை என்று வகைப்படுத்தக்கூடும் என்று ஜாக்சன் கூறுகிறார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் அல்லது அமைதியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று அவர் கூறுகிறார். உண்மையில், இங்கிலாந்தில் ஏராளமான வேலைவாய்ப்பு நீதிமன்ற வழக்குகளைப் படித்து, வேலை நேரத்தில் ஆபாச உள்ளடக பயன்பாடு பற்றி விவாதிக்கும் உலகளாவிய மாநாடுகளில் கலந்துகொண்டுள்ள தான், ” பணியிடத்தில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை பயன்படுத்திய எந்த ஒரு வழக்கும் நன்றாக முடிந்ததைக்காணவில்லை” என்று அவர் கூறுகிறார்.
கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கான சிறந்த சூழ்நிலை என்னவென்றால், தாங்கள் அந்த பழக்கத்திற்கு அடிமை என்று நிரூபிக்க முடிந்து, முதலாளியும் அனுதாபமாக இருந்தால், அவர்களின் வேலையைத் தக்கவைக்க ஒரு முன்நிபந்தனையாக ஆலோசனை அல்லது சிகிச்சை அளிக்கப்படலாம் என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அலுவலக நேரங்களில் பணியாளர்களின் ஆபாச நுகர்வு, நச்சு வேலை கலாச்சாரங்களுக்கு பங்களிக்கும் என்றும் அவை நிறுவனங்களின் மீது பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேட்ரிக் வாதிடுகிறார். “ஆபாச உள்ளடக்கத்தில் பெரும்பாலும் மனிதாபிமானமற்ற பாலியல் கதைகள் இருக்கும்,” என்று அவர் கூறுகிறார். “இவை தொடர்ந்து பார்க்கப்படுவதால், பணியிட உறவுகளின் மகிழ்ச்சியையும் உற்பத்தித்திறனையும் அது குறைக்கலாம். சில சமயங்களில் உணர்ச்சியற்ற, பொருத்தமற்ற பேச்சுக்களுக்கு இது வழிவகுக்கும்.”
மோசமான சந்தர்ப்பங்களில் இது பாலியல் துன்புறுத்தலுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறுகிறார். “ஆபாசம் தொடர்பான ஆண் மனப்பான்மை, ஆபாசத்தைப் பகிர்வது அல்லது தற்செயலாக மற்றவர்கள் பார்க்கும் வகையில் அதை காட்டுவது போன்றவை காரணமாக பெண்களின் பணியிட அனுபவங்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை வேலைவாய்ப்பு தீர்ப்பாயங்கள் பற்றிய தனது ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது,” என்கிறார் ஜான்சன்..
ஊழியர்களின் ஆபாச உள்ளடக்கத்தைப் பார்க்கும் பழக்கத்தால் , உற்பத்தியும், லாபமும் பாதிக்கப்படலாம் என்று சிலர் நம்புகிறார்கள். வேலையில் நெறிமுறையற்ற நடத்தையில் ஈடுபடுவது ஆபத்தான பழக்கங்களுக்கு வழிவகுக்க்கும் சாய்வு மேடையாக உள்ளது என்று உளவியல் ஆராய்ச்சி கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உட்டாவில் உள்ள தேவாலயத்துடன் இணைந்த கல்வி மையமான ப்ரிகாம் யங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் ஜர்னல் ஆஃப் வணிகம் எதிக்ஸில் வெளியிடப்பட்ட சமீபத்திய சக மதிப்பாய்வு கட்டுரையையும் ஜாக்சன் சுட்டிக்காட்டுகிறார். பணியிட ஆபாசப் பயன்பாடுகளுக்கும், பணியாளர்கள் தாங்கள் செய்த வேலையின் அளவைப் பற்றி “சரியான தகவல் தராமல் இருப்பது மற்றும் பொய் சொல்வது” போன்ற நெறிமுறையற்ற வணிக நடத்தைகளுக்கும் இடையே நேரடி தொடர்பை இந்தக்கல்வியாளர்களின் சோதனைகள் சுட்டிக்காட்டியது. இருப்பினும், வேலை நேரத்தில் ஆபாச உள்ளடக்கத்தைப் பயன்படுத்துபவர்களில் சிலர் தங்கள் பழக்கங்களுக்காக ஈடு செய்வதாகவும், அதிகமாக வேலை செய்வதாகவும், ஜான்சனின் ஆய்வு கூறுகிறது.
“ஆபாசப் பயன்பாட்டை நியாயப்படுத்த அவர்கள் அதிக வேலை செய்கிறார்கள். இது மிகவும் சுவாரசியமானது. ஒரு தார்மீக வர்த்தகம் இதில் உள்ளது.
மேலும் சகிப்புத்தன்மை கொண்ட எதிர்காலம்?
வேலை நேரத்தில் ஆபாச உள்ளடக்கத்தை பார்ப்பது ஆபத்து நிறைந்தது. ஆயினும் இந்த போக்கை ஓரளவு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஹால் வாதிடுகிறார். வேலை நேரத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பவர்களை “ராட்சஸர்கள்” என்று காட்டுவதற்கு பதிலாக, வேலை நேரத்தில் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய தகவல் பிரச்சாரங்களைப் போலவே, இதன் சாத்தியமான தாக்கத்தைப் பற்றி அதிக வெளிப்படையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களுக்கு அவர் அழைப்பு விடுக்கிறார்.
இன்று சில தொழிலாளர்கள் மதிய உணவு நேரத்தில் எப்போதாவது ஒரு கிளாஸ் ஒயின் சாப்பிடுவதைத் தேர்வு செய்யலாம். ஆனால் இதை அடிக்கடி செய்வது செயல்திறனை பாதிக்கும் என்பதையும், மேசைகளுக்கு அடியில் பாட்டில்களை மறைத்தால் விஷயங்கள் விபரீதமாகும் என்பதையும் பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஆபாச உள்ளடக்கத்தின் “அபாயங்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் ஒரு தெளிவான தேர்வைச்செய்யலாம்” என்று ஹால் கூறுகிறார். தங்கள் ஆபாசப் பயன்பாடு, வேலை காலக்கெடு அல்லது உறவுகளை பாதிக்கக்கூடிய சார்புநிலையாக மாறுகிறதா என்பதை அவர்கள் அடையாளம் காண உதவ வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.
இதற்கிடையில், ஆபாசத்தைப் பார்ப்பது அதிகமாக இருப்பதாக அறியப்படும் வணிகங்களின் மேலாளர்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்க்க அறிவுறுத்தப்படுவார்கள் என்று ஜாக்சன் கூறுகிறார். “பணியிடங்கள் உங்களை ஈடுபாட்டுடன் வைத்திருந்தால், பணியாளர்கள் மிகவும் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டால், வேலை செய்யும் உலகத்தை சமாளிக்க மக்கள் ஆபாசத்தை ஒரு வழியாக பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் காணலாம்.”
வீட்டிலிருந்து வேலை என்று வரும்போது, வீட்டிற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே உள்ள மங்கலான எல்லைகள் காரணமாக, வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு ஊழியர்கள் நேரத்தை செலவிடுவது தொடர்பாக, சகிப்புத்தன்மை அதிகரித்து வருவதாக ஹால் நம்புகிறார்.
மேலும் இது ஒரு சொந்த சாதனத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் வரை, பணியாளர்களின் செயல்திறன் அல்லது தொடர்புகளை பாதிக்காத வரை, பணியிடங்களில் ஆபாசஉள்ளடக்கத்தைப் பார்ப்பதை விட இது மிகவும் குறைவான பிரச்சனையாகவே இருக்கிறது என்கிறார் அவர். “ஒருவர் தங்கள் வீட்டில், காபி பிரேக்கில் என்ன செய்கிறார்களோ அது நிச்சயமாக அவர்களின் சொந்த விஷயம்.”
ஆனால், பகிரப்பட்ட பணியிடத்தில் இது நிச்சயமாக வேறுபட்டது என்று அவர் மேலும் கூறுகிறார். வேலை நேரத்தில் ஆபாச உள்ளடக்கத்தைப் பார்ப்பது இப்போதும் செய்யக்கூடாத ஒன்றாகவே உள்ளது. அது அனுமதிக்கப்படாத செயல்தான் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
(பிபிசி வொர்க்லைஃப் தளத்துக்காக மேடி சாவேஜ் எழுதியது)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com