Press "Enter" to skip to content

பிரிவினையால் கைவிட்டு வந்த பாகிஸ்தான் வீட்டிற்கு 75 ஆண்டுகள் கழித்துச் சென்ற ரீனா வர்மா – நெகிழ்ச்சியான சம்பவம்

  • சுமைலா ஜாஃபரி
  • பிபிசி நியூஸ்

90 வயதான ரீனா வர்மா பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல 75 ஆண்டுகளாகக் கனவு கண்டார். அது இறுதியாக நிறைவேறியுள்ளது.

புனேவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பயணம் செய்த வர்மா, கல்லூரி சாலையிலுள்ள வீட்டை நோக்கிச் செல்லும்போது அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அங்குள்ள மக்கள் அவரது வருகையை மேளதாளங்களுடன் கொண்டாடினர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு சுதந்திர நாடுகளை உருவாக்க வழிவகுத்த பிரிவினைக்குச் சில வாரங்களுக்கு முன்பு, 1947ஆம் ஆண்டில் வர்மாவின் குடும்பம் ராவல்பிண்டியை விட்டு வெளியேறியது.

அப்போது, மதக் கலவரங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் எல்லையைக் கடக்க தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியபோது, ​​​​பிரிவினை குழப்பமும் ரத்தக்களரியும் ஏற்பட்டது. அதுவும் குறிப்பாக பஞ்சாபில்.

இதில் பல வலிகளும் அதிர்ச்சிகளும் நிறைந்திருந்தாலும், தனது தந்தை தனது சேமிப்பில் கட்டிய வீட்டைப் பற்றி நினைப்பதை வர்மா நிறுத்தவே இல்லை.

2021ஆம் ஆண்டில், அவர் ஒரு நேர்காணலில், தான் விட்டுச் சென்ற வீட்டைப் பற்றி ஏக்கத்துடன் பேசிய பிறகு, அவர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டார்.

இந்தியா-பாகிஸ்தான் ஹெரிடேஜ் கிளப் என்ற ஃபேஸ்புக் குழுவின் செயல்பாட்டாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள அவரது பழைய வீட்டைத் தேடத் தொடங்கினர். இறுதியாக ஒரு பெண் பத்திரிகையாளர் அந்த வீட்டைக் கண்டுபிடித்தார்.

ஆனால், கோவிட்-19 பேரிடரால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வர்மாவால் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல முடியவில்லை.

ரோஜா பூக்கள் தூவி ரீனா வர்மாவை வரவேற்கும் உள்ளூர்வாசிகள்

கடந்த மார்ச் மாதம், அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல விசாவிற்கு விண்ணப்பித்தபோது, ​​எந்தக் காரணமும் கூறாமல் அது நிராகரிக்கப்பட்டது.

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான பிரிவினை மற்றும் உறவுகள் பெரும்பாலும் சுமுகமாக இல்லாததால், இந்தியாவும் பாகிஸ்தானும் பல போர்களிலும் மோதல்களிலும் ஈடுபட்டுள்ளன. தொடர் மோதல்களின் விளைவாக, எல்லைகளைத் தாண்டி மக்கள் சுதந்திரமாகப் பயணிக்க முடியவில்லை.

“நான் மிகவும் உடைந்து போனேன். இறப்பதற்கு முன் தன் வீட்டைப் பார்க்க மட்டுமே விரும்பிய 90 வயது முதியவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் அது நடந்தது,” என்கிறார் வர்மா.

அவர் மீண்டும் விண்ணப்பிக்க முடிவு செய்தார். ஆனால் அதற்கு அவர் விண்ணப்பிக்கும் முன்பே, அவரது கதை ஒரு பாகிஸ்தானிய அமைச்சரின் கண்ணில் பட்டது. அவரது விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலிக்க டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டின் தூதரகத்திற்கு அறிவுறுத்தினார்.

“பாகிஸ்தான் தூதரகத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததும் நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். அவர்கள் என்னை வந்து விசா எடுக்கச் சொன்னார்கள். சில நாட்களில் இது நடந்தது.”

ஆனால், அதிக சவால்கள் இருந்தன; அங்கு வானிலை மிகவும் வெப்பமாக இருந்தது. சமீபத்தில் தனது மகனை இழந்து தனியாகப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த வர்மா, இன்னும் சில மாதங்கள் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

காத்திருப்பு மிகவும் வேதனையானது. ஆனால் அவர் நோய்வாய்ப்படும் நிலைக்குச் செல்ல விரும்பவில்லை. அதனால் அவர் காத்திருந்து இறுதியாக ஜூலை 16 அன்று பாகிஸ்தானுக்கு வந்தார்.

ஜூலை 20 அன்று, வர்மா இறுதியாக தனது பழைய வீட்டிற்கு வந்தார். நான் அவரைச் சந்தித்தபோது, ​​அவர் நன்றாக உடையணிந்திருந்தார். அவர் காதணிகளைப் போலவே அவர் கண்களும் மின்னின.

எலுமிச்சை சாரைப் பருகிய அவர், அந்த வருகையைப் பற்றி தனக்குக் கலவையான உணர்வுகள் இருப்பதாகக் கூறினார். “இது கசப்பான மற்றும் இனிமையான அனுபவம்,” என்று அவர் கூறினார்.

“நான் இந்தத் தருணத்தை என் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். நான் இங்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனாலும் நான் இன்று தனிமையாக உணர்கிறேன்.”

1947ஆம் ஆண்டு தனது வீட்டை விட்டு வெளியேறியபோது, ​​அவரும் அவரது சகோதரிகளும் திரும்பி இங்கு வருவார்கள் என்று நினைக்கவே இல்லை என வர்மா கூறினார்.

“என் சகோதரிகளில் ஒருவருக்கு அமிர்தசரஸில் திருமணம் நடந்தது. 1947ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என் மைத்துனர் எங்களைச் சந்தித்து, எங்களைத் தன்னுடன் அனுப்பும்படி என் தந்தையை வற்புறுத்தினார். பிரச்னை உருவாகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால், அந்த ஆண்டு கோடைக்காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியான ஷிம்லாவுக்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். நாங்கள் வழக்கமாக முர்ரியில் எங்கள் விடுமுறையைக் கழிப்போம். அதற்கு பதிலாக, சிம்லா சென்றோம்”. முர்ரி ராவல்பிண்டியில் இருந்து 88 கிமீ (55 மைல்) தொலைவில் உள்ள ஒரு மலைப்பிரதேச பகுதியாகும்.

“எனது பெற்றோர் வர மறுத்தார்கள். ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு எங்களுடன் அவர்களும் சேர்ந்தனர். என் அம்மாவைத் தவிர, நாங்கள் அனைவரும் பிரிவினையை படிப்படியாக ஏற்றுக்கொண்டோம். அவரால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அது எங்களுக்கு என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எப்போதும் கூறுவார். முதலில் நாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வாழ்ந்தோம். இப்போது அது முஸ்லீம் ராஜ்ஜியமாக இருக்கும். ஆனால் எங்களை எப்படி எங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்த முடியும்,” என்கிறார்.

ராவல்பிண்டியில் தாங்கள் விட்டுச் சென்ற வீட்டிற்காக, அகதிகளுக்கு இழப்பீடாக தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டைத் தனது தாயார் ஏற்கவில்லை என்று வர்மா கூறுகிறார். அப்படிச் செய்தால், இப்போது பாகிஸ்தானாக மாறியிருக்கும் தங்களுக்குச் சொந்தமான சொத்தை அவர்களால் ஒருபோதும் மீட்க முடியாது என்று அவர் நம்பினார்.

வர்மா தனது குழந்தைப் பருவத்தில் வாழ்ந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, செய்தியாளர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர். கட்டடத்தின் ஆலிவ்-பச்சை முகப்பில் புதிதாக வர்ணம் பூசப்பட்டது. வீட்டின் தோற்றம் சற்று நவீனமானது. ஆனால் கட்டமைப்பு பழையதாக இருந்தது.

வர்மாவின் கதை, அவரைப்போல தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த பலருக்கு உத்வேகம் அளித்தது.

இதற்கிடையில், அவரைப் பார்க்கவும் அவருடன் செல்ஃபி எடுக்கவும் மக்கள் பலரும் விதிகளில் கூடினர்.

வர்மா இரண்டு மணி நேரம் உள்ளே இருந்தார். அவர் மீண்டும் தோன்றியபோது, பல ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) அவருக்காகக் காத்திருந்தன.

வானிலை ஈரமாகவும் வீதிகள் நெரிசலாகவும் இருந்தன. ஆனால் வர்மா தன்னைச் சுற்றியுள்ள கூட்டத்தால் முற்றிலும் திகைப்பில் இருந்தார். ஓடுகள், கூரைகள் மற்றும் நெருப்பூட்டும் இடம் என அவரது வீடு இன்னும் அப்படியே இருப்பதாகவும் ஒரு காலத்தில் தான் இங்கு வாழ்ந்த அழகான வாழ்க்கையையும் தான் இழந்த அன்புக்குரியவர்களையும் இது நினைவூட்டுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“என் இதயம் துக்கமாக இருக்கிறது. ஆனால் நான் வாழ்நாள் முழுவதும் காத்திருக்கும் ஒரு தருணத்தை அனுபவிக்க நன்றியுணர்வுடன் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

வெறுப்பு அரசியலும் சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகளும் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்திய பிராந்தியத்திற்கு வர்மாவின் அழகான கதை நம்பிக்கையை அளித்ததாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள பலர் நம்புகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »