பட மூலாதாரம், Getty Images
(இன்று (27.07.2022) தமிழ்நாடு, இலங்கையின் நாளிதழ்கள் மற்றும் இணையங்களில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்குகிறோம். )
பிரதமா் நரேந்திர மோதி வருகையையொட்டி, சென்னையில் இரு நாள்கள் பலூன்களை பறக்கவிடுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் காவல்துறை தடை விதித்துள்ளது என்று தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஜூலை 28-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திரமோதி பங்கேற்று போட்டியைத் தொடக்கி வைக்கிறாா். அன்று தமிழ்நாடு ஆளுநா் மாளிகையில் தங்கும் பிரதமா் மோதி, மறு நாள் ஜூலை 29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
பிரதமா் வருகையையொட்டி, சென்னையில் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதியும், அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கும் வகையிலும், சென்னையில் இரு நாள்கள் டிரோன்கள், சிறிய வகை ஆளில்லாத விமானங்கள், பாராசூட்டுகள் ஆகியவற்றுக்கு ஜூலை 28, 29ஆம் தேதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதேபோல காற்று பலூன்கள், வாயு பலூன்கள் பறக்க விடுவதற்கும் தடை விதித்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

பீமாவரம் சம்பவம்: ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் சுதந்திர போராட்ட வீரா் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த நாள் விழாவில் கடந்த 4-ஆம் தேதி பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி சென்றபோது, காங்கிரஸ் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டனா். அந்த பலூன்கள் மோடி பயணித்த ஹெலிகாப்டா் மீது மோதுவது போல சென்றதால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இதனால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் சென்னையில் பலூன்கள் பறக்கவிடுவதற்கும், இம்முறை அதிகாரபூா்வமாக தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பலூன்கள் பறக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

பட மூலாதாரம், Getty Images
சி.பி.ஐ. அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ஜனாதிபதி துரௌபதி முர்மூவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குநரகம் போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தி வருகிறது என்பது எதிர்க்கட்சித் தலைவர்களின் தொடர் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் முதல்முறையாக, புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மூவுக்கு கடிதம் எழுதி உள்ளன. இந்தக் கடிதத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயலின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து, தீவிரமாக தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
- இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.
- சட்டம், சட்டமாகத்தான் இருக்க வேண்டும். அச்சமின்றி, சாதகமின்றி, செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது செய்யப்படுவதுபோல, தன்னிச்சையாக, தேர்ந்தெடுத்த நபர்கள் மீது, முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது நியாயமின்றி அதைச் செயல்படுத்த முடியாது.
- இப்படிச்செய்வதின் முக்கிய நோக்கம், அவர்களின் புகழை அழிப்பதும், பா.ஜ.க.வை கொள்கைரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கிற சக்திகளை பலவீனப்படுத்துவதும்தான்.
- மேலும், அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, வாழ்வாதாரம் இழப்பு, வாழ்க்கை-சுதந்திரம்- சொத்துக்களின் பாதுகாப்பின்மை அதிகரித்தல் ஆகிய அன்றாட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, அத்தியாவசியப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பு போன்ற பிரச்சினைகளில் உடனடி விவாதம் நடத்த விடாமல் மோடி அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
5ஜி அலைக்கற்றை: 4.3 லட்சம் கோடி வருவாய் எதிர்பார்ப்பு

பட மூலாதாரம், Getty Images
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கியது. 72 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி கிடைக்கும் என்று இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி தரவு நெட்வொர்க்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. அதானி நிறுவனம் தனிப் பயன்பாட்டுக்காக இந்த ஏலத்தில் கலந்துகொள்கிறது.
மற்ற மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவ்வாண்டு இறுதி அல்லது 2023 மார்ச்சுக்குள் 5ஜி சேவையை பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலத்துக்கான வைப்பு நிதியாக ஜியோ ரூ.14,000 கோடி, ஏர்டெல் ரூ.5,500 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.2,200 கோடி, அதானி குழுமம் ரூ.100 கோடி அளவில் செலுத்தியுள்ளன.


குறைந்த அதிர்வெண், நடுத்தர அதிர்வெண், உயர் அதிர்வெண் என மூன்று வகைகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. 600, 700, 800, 900, 1,800, 2,100, 2,300 மெகாஹெர்ட்ஸ் ஆகியவை குறைந்த அதிர்வெண் வகையில் உள்ளன. 3,000 மெகாஹெர்ட்ஸ் நடுத்தர அதிர்வெண் வகையின் கீழும், 26 ஜிகாஹெர்ட்ஸ் உயர் அதிர்வெண் வகையின் கீழும் உள்ளன.
20 ஆண்டுகால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில் நிறுவனங்களின் நிதிச் சிக்கலைக் குறைப்பதற்காக, ஏலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நிறுவனங்கள், அலைக்கற்றைக்கான தொகையை மொத்தமாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின்போது அவ்வாண்டுக்கான தொகையை செலுத்திக்கொள்ளலாம்.
ஏலத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போபால், டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் 5ஜி முன்னோட்ட சோதனை நடத்தியது.
இந்தியாவில் தற்போது 4ஜி பயன்பாட்டில் உள்ளது. 4ஜி-யைவிட 5ஜியின் வேகம் 10 மடங்குஅதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் நாளில் நடந்த 4 சுற்றுகளின் முடிவில் ஏலத் தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோட்டாபய மீண்டும் நாட்டுக்கு வர இருப்பதாக அறிகிறேன் – இலங்கை அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடு தப்பிச்சென்றுள்ளதாக அறியப்படும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாக அறிகிறேன் என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக இலங்கையில் வெளியாகும் தினகரன் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர் தன, தேவையான விசாவை பெற்றே அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அமெரிக்காவும் விசா தர மறுத்துள்ளதாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அவர் மீண்டும் நாட்டுக்கு வர இருப்பதாக அறிகிறேன். அவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாதிருக்க தேவையான நடவடிக்கைகளை எமது நாட்டு அதிகாரிகள் மேற் கொள்வர் என எதிர்பார்க்கிறேன் என்றார்” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com