- ராபர்ட் பிளம்பர்
- பிபிசி நியூஸ்
பட மூலாதாரம், AFP
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிஐஏ நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்.
“அமெரிக்க மக்களுக்கு எதிரான கொலை மற்றும் வன்முறையின் தடத்தை உருவாக்கியவர்” என்று ஜவாஹிரி பற்றி பைடன் கூறியுள்ளார்.
“இப்போது நீதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தலைவர் இப்போது இல்லை” என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.
தனது ரகசிய வீட்டின் பால்கனியில் ஜவாஹிரி இருந்தபோது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் இரண்டு ஏவுகணைகளை அவர் மீது வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் அவருடன் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஜவாஹிரி மட்டுமே கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜவாஹிரி மீதான துல்லியத் தாக்குதலுக்கு தாம் இறுதி ஒப்புதலை வழங்கியதாக பைடன் தெரிவித்துள்ளார்.
ஜவாஹிரிக்கு வயது 71. அவரும் பின்லேடனும் சேர்ந்து 9/11 தாக்குதல்களைத் திட்டமிட்டனர். 2011-ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடனின் மரணத்திற்குப் பிறகு ஜவாஹிரி அல்-காய்தாவின் தலைவரானார். அவர் அமெரிக்காவால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர்.
அல் ஜவாஹிரி கொல்லப்பட்டது. 2001-ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நீதி என்று பைடன் தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு அக்டோபரில் ஏடனில் யுஎஸ்எஸ் கோல் கடற்படை கப்பலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 17 அமெரிக்க மாலுமிகளைக் கொன்றது உட்பட பிற பயங்கரவாதச் செயல்களிலும் ஜவாஹிரி மூளையாக செயல்பட்டதாக பைடன் கூறினார்.
“எவ்வளவு காலம் எடுத்தாலும், எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து அழிக்கும்” என்று பைடன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters
இதனிடையே அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறியிருப்பதாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
“இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பிராந்தியத்தின் நலன்களுக்கு எதிரானது. 20 ஆண்டுகால தோல்வி அனுபவங்களின் மீள்முயற்சி” என்று அவர் கூறினார்.
ஆனால் இந்த நடவடிக்கைக்கு சட்டபூர்வமான அடிப்படை இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறி சுமார் ஓராண்டுக்குப் பிறகு ஜவாஹிரியின் கொலை நடந்திருக்கிறது.
அமெரிக்காவுடன் 2020-ஆம் ஆண்டு செய்து கொண்ட அமைதி உடன்பாட்டில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல்-காய்தா உள்ளிட்ட தீவிரவாதக் அமைப்புகளைச் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபன்கள் ஒப்புக்கொண்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com