பட மூலாதாரம், AFP
தைவானைச் சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீன ராணுவம் இப்போது தைவான் நீரிணையில் குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
போர்ப் பயிற்சியின் ஓர் அங்கமான இந்தக் குண்டு வீச்சுகள் எதிர்பார்த்த முடிவுகளைத் தந்திருப்பதாகவும் சீன ராணுவம் கூறியுள்ளது.
கடற்பகுதியில் ஏராளமான ஏவுகணைகள் வீசப்படுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டோங்ஃபெங் என்ற வகையைச் சேர்ந்த ஏவுகணைகளை சீன ராணுவம் ஏவியதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
தைவானுக்குச் செல்வது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்று சீனா எச்சரித்திருந்த நிலையும் நான்சி பெலோசி அதைப் பொருள்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி தைவானைச் சுற்றி வளைத்து சீன ராணுவம் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
இந்தப் போர்ப்பயிற்சிக்கு தைவான் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. சாதாரண நிலையை மாற்றுவதற்கு இந்தப் போர்ப்பயிற்சிகளை சீனா பயன்படுத்துவதாக தைவான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒரு அறிக்கையில், “போரை நாடிச் செல்லாமல் போருக்குத் தயாராக இருக்கும் கொள்கையில் உறுதியாக இருப்பதாக” தைவான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு உதவுமாறு உலக நாடுகளை தைவான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
வியாழன் அன்று, வெளியுறவு அமைச்சகம் சீனாவை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு உலக சமூகத்தை வலியுறுத்தியது.

சீனாவுடன் தைவான் மோதும் சாத்தியம் உண்டா?
சீனா தைவானுக்கு நெருக்கமாக தனது போர்ப்பயிற்சிகளை தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கினால், நிலைமை மோசமடைய வாய்ப்பிருப்பதாக மேலாய்வுதச மூலோபாய ஆய்வு மையத்தின் இயக்குநர் போனி லின் கூறுகிறார்.
“தைவானின் வான்வெளியில் விமானங்களை பறக்கவிட சீனா முடிவு செய்தால், தைவான் அவற்றை இடைமறிக்க முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது. நடுவானில் மோதலாகவும் அது மாறலாம் இருக்கலாம், புதிய காட்சிகள் அரங்கேறலாம்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com