Press "Enter" to skip to content

சைஃப் அல்-அடில்: அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ”நீதியின் வாள்”

  • மானிட்டரிங் பிரிவு
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைமைப் பதவியை யார் பிடிப்பது என்பதில் கவனம் திரும்பியுள்ளது.

எகிப்தில் பிறந்த சைஃப் அல்-அடில் இதில் முன்னணியில் இருக்கிறார். அல்-ஜவாஹிரியின் நெருங்கிய சகாக்களாக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஐந்து அல்-காய்தா உறுப்பினர்களில் அவர் மட்டுமே இப்போது உயிரோடு இருக்கிறார். இப்போது ஜவாஹிரிக்கு பின் தலைமைப் பதவியை ஏற்கப் போகிறார் என்று நம்பப்படுகிறது.

ஆனால் ஒரு பிரச்சனை இருக்கலாம்.

அல்-காய்தா தீவிர எதிரியாகக் கருதும் நாடான ஈரானில் அரசுக் கட்டுப்பாடுகளின் கீழ் அல்-அடில் தற்போது வாழ்கிறார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

முன்னணி ஜிகாதி

அல்-காய்தாவின் தொடக்க உறுப்பினர், ஒசாமா பின்லேடனின் நம்பகமான கூட்டாளி அல்-அடில். அவர் ஒரு மர்மமான நபர். அமைப்பில் மரியாதைக்குரிய மூத்தவர்.

அவர் நிச்சயமாக அமெரிக்க அதிகாரிகளுக்கு வேண்டப்படும் ஆள். மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் அவரைப் பற்றித் தகவல் தருவோருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி தர அமெரிக்கா காத்திருக்கிறது.

1998-ஆம் ஆண்டு தான்சானியா மற்றும் கென்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது ஒரே நேரத்தில் குண்டுவீசி 220 பேர் கொல்லப்பட்டதில் அல்-அடிலுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று குற்றம்சாட்டப்படுகிறது.

அதே நேரத்தில் அவர் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்த எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க மண்ணில் தாக்குதலை நடத்துவது ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பு உள்ளிட்ட பதிலடிகளுக்குக் காரணமாக அமையலாம் என்று அல்-அடில் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அஞ்சியதாக 2021-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஓர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்-அடிலின் தொடக்க காலம்

அல்-காய்தாவுக்கு முந்தைய காலத்தில் அல்-அடில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது மிகவும் புதிரானது. அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அமைப்பின் தகவல்களின்படி, 11 ஏப்ரல் 1963 அல்லது அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் அல்-அடில்.

அல்-காய்தாவில் அவருக்கு மரியாதை இருந்தபோதும், பெரும்பாலும் தன்னை வெளிக்காட்டாத நபராகவே அவர் இருந்திருக்கிறார். அல்-காய்தாவின் பரப்புரைகளிலும் அரிதாகவே இடம்பெற்றிருக்கிறார்.

அவரது உண்மையான அடையாளம் குறித்த சந்தேகங்களும் உள்ளன; அவரது பெயரான சைஃப் அல்-அடில் என்பது ஒரு பட்டப்பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அல்-அடில் பெரும்பாலும் எகிப்திய சிறப்புப் படையின் முன்னாள் கேணல் முகமது இப்ராஹிம் மக்காவி என்று தவறாக அடையாளம் காணப்பட்டதாக ராணுவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

1980 களில் அல்-கய்தா இயக்கம் நிறுவப்பட்ட காலத்தில் பின்லேடனுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர் சண்டையிட்டதாக அறியப்படுகிறது.

பின் லேடன், ஜவாஹிரி

பட மூலாதாரம், Getty Images

அல்-அடில் பின்னர் சோமாலியாவுக்குச் சென்றார். அங்கு சோமாலிய உள்நாட்டுப் போரில் அமெரிக்க தலையீட்டை எதிர்த்துச் சண்டையிட்ட போராளிகளுக்குப் பயிற்சி அளித்தார். அப்போது மொகாதிஷு நகரில் இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் உலங்கூர்திகள் ராக்கெட்டுகளால் வீழ்த்தப்பட்ட சம்பவம் பிரபலமானது. இதுவே பிளாக் ஹாக் டவுன் என்ற ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அமெரிக்க உலங்கூர்திகளை வீழ்த்திய ராக்கெட்டுகளில் ஒன்று அல்-அடிலின் அணியைச் சேர்ந்த ஒருவரால் ஏவப்பட்டதாக நம்பப்படுகிறது.

90 களின் நடுப்பகுதியில், அல்-அடில் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பினார். 2001 ஆம் ஆண்டு அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் அந்த நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் 2003இல் ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் உடன்பாட்டின்படி பல அல்-காய்தா இயக்கத்தினருடன் அல்-அடிலும் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக சிறையில் இருந்த போதிலும், அல்-காய்தாவுக்குள் அல்-அடிலின் செல்வாக்கு குறையவில்லை. 2011- இல் பாகிஸ்தானில் அமெரிக்க சிறப்புப் படைகளால் பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-ஜவாஹிரிக்கு தலைவர் பதவியை கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் அல்-அடில் முக்கியப் பங்கு வகித்தார்.

இப்போது அவரது முறை வந்திருக்கிறது. தனக்கே அவர் முடிசூட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது சிக்கலானது. அவர் ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாக அமெரிக்காவின் பயங்கரவாத நிபுணர் கொலின் பி கிளார்க் கூறுகிறார்.

இது அவர் தலைமையேற்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.

ஒரு ஷியா நாட்டின் கட்டுப்பாடுகளின் கீழ் வாழும் போது அவர் உலகளாவிய ஜிஹாதி இயக்கத்தை திறம்பட வழிநடத்த முடியும் என்பது கிட்டத்தட்ட நினைத்துப் பார்க்க முடியாதது மட்டுமல்ல, பாதுகாப்பு பிரச்சினையும் உள்ளது.

ஏனென்றால், மற்றொரு மூத்த அல்-காய்தா உறுப்பினரான அபு முஹம்மது அல்-மஸ்ரி 2020-இல் தெஹ்ரானில் இஸ்ரேலிய கமாண்டோக்களின் ரகசிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அல்-அடில் இல்லையென்றால், யார்?

அல்-காய்தா இயக்கத்தின் பல மூத்த தலைவர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டார்கள். ஜவாஹிரிக்கு நேர்ந்ததே பலருக்கும் நடந்திருக்கிறது. அதனால் தலைமைப் பொறுப்புக்குத் தயாராக இருப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

பிளாக் ஹாக்

பட மூலாதாரம், Scott Peterson

அல்-காய்தா சோமாலியா (அல்-ஷபாப்), ஏமன் (AQAP) அல்லது மாலி (JNIM) ஆகிய நாடுகளில் உள்ள அதன் பிராந்திய துணை அமைப்புகள் தலைவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம்.

இதற்கு முன் இப்படி நடக்கவில்லை என்றாலும், பெரிய ஆச்சரியமாக இருக்காது என்று கருதப்படுகிறது. அந்த அளவுக்கு ஜவாஹிரியின் காலத்தில் இயக்கத்தின் அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்கிறது.

அல்ஜீரியாவில் இயங்கும் அல்-காய்தாவின் AQIM பிரிவின் தலைவரான நசீர் அல்-வுஹாய்ஷி, அல்-காய்தாவின் துணைத் தலைவராக 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவர் கொல்லப்பட்டார்.

இப்போது அவர் இல்லையென்றாலும் கிளை அமைப்புகளில் உள்ள தலைவர்களும் மத்தியத் தலைமைக்கு வர முடியும் என்பதையே இது காட்டுகிறது.

எப்படியிருந்தாலும், ஜவாஹிரிக்கு அடுத்தபடியாக அல்-காய்தாவின் தலைமைப் பொறுப்புக்குத் வருபவர், அமெரிக்காவால் குறிவைக்கப்படுவார் என்ற அச்சம் காரணமாக பதுங்கியே வாழ வேண்டிய சவால் நிச்சயம் இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »