Press "Enter" to skip to content

தைவானை நோக்கி சீறிப்பாய்ந்த சீன ஏவுகணைகள் – அச்சத்தில் மீனவ குடும்பங்கள்

  • ருபெர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ்
  • பிபிசி நியூஸ், தைவான்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசியின் சுருக்கமான ஆனால் சர்ச்சைக்குரிய தைவான் பயணத்தின் மோசமான விளைவால், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம், எப்படி கணிக்கப்பட்டதோ அதுபோலவே நடந்து வருகிறது.

நான்சி பெலோசி தைவானுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த இரண்டு நாட்களாக தைவானை சுற்றி சீனா அதன் முப்படைகளின் போர் ஒத்திகையை நடத்தியது. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை தைவானை சுற்றி பெரிய அளவிலான போர் ஒத்திகையில் சீனா ஈடுபட்டது.

சீன போர் விமானங்களும் கண்காணிப்பு கப்பல்களும் தைவானின் கடல் எல்லையை கடந்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக படைகளைத் தயார் நிலையில் தைவான் வைத்துள்ளது.

ஏவுகணை அமைப்புகளை தைவான் தனது எல்லையில் நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது. விமானங்களும் கப்பல்களும் எல்லையை ஒட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.

இருப்பினும், சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் போரிடுவதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதலாவதாக, தைவானை சுற்றி ஆறு ராணுவ விலக்கல் மண்டலங்களை சீனா அறிவித்தது. சுயாதீன ஆளுகையுடன் செயல்பட்டு வரும் தனித்தீவான தைவானை சீனா அதனிடமிருந்து பிரிந்த ஒரு மாகாணமாகப் பார்க்கிறது.

1px transparent line
1px transparent line

அந்த மண்டலங்கள் நடைமுறைக்கு வந்த இரண்டு மணி நேரத்திற்குள், சீனா குறைந்தது இரண்டு டாங் ஃபெங் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜலசந்தியின் குறுக்கே வடக்கு தைவான் கடற்கரையிலுள்ள மண்டலங்களை நோக்கி ஏவியது.

இந்த நடவடிக்கை, 1996ஆம் ஆண்டில் சீனா என்ன செய்ததோ அதேபோன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. அப்போது, தைவான் சர்வதேச அங்கீகாரத்தை நாடியதற்காக, அதை சீனா தண்டிக்க முயன்றது. இப்போதும் அதே வடிவத்திற்கு நெருக்கமாக சீனாவின் செயல்பாடுகள் உள்ளன. இந்த ஏவுகணை சோதனைகளின் நோக்கம் தெளிவாக மிரட்டல் விடுவது தான்.

ஆனால், இந்த நடவடிக்கை தைவானின் கப்பல் மற்றும் விமானத் தொழில்களுக்குப் பெரிய இடையூறுகளை ஏற்படுத்துகிறது. உலகின் பரபரப்பான, தொழில் மிக்க கப்பல் பாதைகளில் சில தைவானை சுற்றியுள்ள கடல் பரப்பில் உள்ளன. இப்போது, அங்குப் பயணிக்கக்கூடிய அனைத்துக் கப்பல்களும் மாற்று வழித்தடத்தில் செல்ல வேண்டியுள்ளது.

தைவானின் வடக்கு கடற்கரையில், மீன்பிடித் துறைமுகமான பி ஷா யுவில் (Bi Sha Yu), துறைமுகப் பக்கத்தில் அமர்ந்திருந்த மீனவர்கள், “அரசியல்வாதிகள் சண்டையிடும்போது எப்போதும் பாதிக்கப்படுவது எளிய மக்கள் தான்,” என்று சத்தமாகப் புலம்பிக் கொண்டே, வலைகளைச் சரிசெய்து கொண்டிருந்தனர்.

“ஆனால், நாம் என்ன செய்ய முடியும். இப்போது கடலுக்குச் செல்வது ஆபத்தானது,” என்று ஒரு கேப்டன் கூறினார்.

நான்சி பெலோசியின் தைவான் பயணம் சீனா - தைவான் பதற்றத்தை அதிரித்தது

பட மூலாதாரம், Handout

இன்னொருவர், துறைமுகத்திற்குத் திரும்பி தனது படகின் கயிற்றைத் துறைமுகத்தில் கட்டிக் கொண்டிருந்தார். அவர், “இன்று காலையில் நான் கடலுக்குச் சென்றேன். ஆனால், கடலோர காவல்படை வானொலியில் எங்கள் அனைவரையும் உடனடியாக துறைமுகத்திற்குத் திரும்பும்படி கூறியது,” என்று கூறினார்.

மேலும், ஆனால் அதற்குத் தான் கவலைப்படவில்லை என்று கூறியவர், “விலக்கு மண்டலங்கள் எங்குள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. எனவே, கடலோர காவல்படை சொல்வதை நாங்கள் செய்தாக வேண்டும்,” என்றார்.

கப்பல்துறையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த அவருடைய மனைவி, “ஒவ்வொரு நாளும் நாங்கள் நஷ்டப்படுகிறோம். எங்களால் மீன் பிடிக்க முடியாவிட்டாலும், பணியாளர்களின் கூலியை நாங்கள் கொடுத்தாக வேண்டும்,” என்கிறார்.

பிபிசியிடம் பேசிய பெரும்பாலான மக்கள் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தும் என்று நம்பவில்லை. கப்பல்துறையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், “அவர்கள் ஒரு கும்பல் தான், அந்த கம்யூனிஸ்டுகள் பெரிதாகப் பேசுவார்கள். ஆனால், அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். நாங்கள் 70 ஆண்டுகளாக அவர்களுடைய அச்சுறுத்தல்களுக்கு நடுவே தான் வாழ்கிறோம்,” என்றார்.

சீனா - தைவான் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், ஒரு நாளில் மட்டுமே சீனா இதைச் செய்துள்ளது. சீனா தனது நிலைமையை மேலும் வீரியமாக்க இன்னும் நிறைய நேரம் உள்ளது. சீன கப்பல்கள் தைவானின் கடல் எல்லைக்குள் ஊடுருவக்கூடும்.

தீவுக்கு மேலாக ஏவுகணையை சீனா ஏவுவதற்குத் தயாராகி வருகிறது என்ற சாத்தியக்கூறு மிகவும் தீவிரமான ஊகமாக உள்ளது. சீனா அறிவித்துள்ள விலக்கு மண்டலங்களில் ஒன்று பசிபிக் பெருங்கடலில் தைவானின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது தான் அதற்குக் காரணம்.

சீனாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை தைவானை கடக்க வேண்டும். அத்தகைய ஏவுகணை ஏவும் செயல்பாடு, தைவான் வான்வெளியில் செய்யப்படும் தெளிவான மீறல்.

2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜப்பானிய தீவான ஹொக்கைடோ மீது நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா ஏவியது மட்டுமே இதற்கு முன்பு இதைப்போல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

இப்போது கேள்வி என்னவென்றால், “சீனா, வடகொரியாவின் நடவடிக்கையைப் பின்பற்றுமா?”

1px transparent line

தைவான் – சீனா பிரிந்தது ஏன்?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா – தைவான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்குத் தப்பியோடியது.

தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும் வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தைவானை அங்கீகரிக்கக்கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.

1px transparent line
1px transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »