- பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர்
- பிபிசி நியூஸ்
பட மூலாதாரம், Getty Images
9/11 நாட்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு முதல் உளவுப்படை அணியை வழிநடத்திய சிஐஏ முகவர் கேரி ஷ்ரோன் ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது 80ஆவது வயதில் காலமானார். பொதுவாக உளவு அமைப்புகளில் வாழ்ந்து, கடமைக்காகவே அர்ப்பணித்து மறைந்தவர்கள் பற்றி உலகம் அதிகம் அறிவதில்லை. ஆனால், அந்த உளவு அமைப்புகளின் வரலாற்றில் இதுபோன்ற ஜேம்ஸ் பாண்டுகள் என்றென்றும் நினைவுகூரப்படுவர். அத்தகைய ஒருவர்தான் கேரி ஷ்ரோன்.
அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அழித்தொழித்த அமெரிக்க நடவடிக்கையில் அவர் ஆற்றிய வரலாற்றுபூர்வ பங்களிப்பை இங்கே விரிவாக காணலாம்.
அது…. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 19, , உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன், 9/11 தாக்குதலில் ஏற்பட்ட இடிபாடுகளில் இன்னும் புகைந்து கொண்டிருந்த நிலையில், சிஐஏ அதிகாரி கேர் ஷ்ரோன் தனது மேலதிகாரியின் அலுவலகத்தில் தான் செய்ய வேண்டியவை குறித்த உத்தரவுகளைப் பெற்றார்.
அதில் ஒன்று, “பின்லேடனை பிடிக்கவும் கொல்லவும் அவரது தலையை பனிப்பெட்டியில் கொண்டு வர வேண்டும்,” என்பது.
ஒசாமா பின்லேடனின் வலது கரமாகக் கருதப்பட்ட அய்மன் அல் ஜவாஹிரி மற்றும் அல்-காய்தாவின் உள்வட்டத்தின் மற்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை, “அவர்களுடைய தலைகளை ஈட்டி முனையின் மீது குத்த வேண்டும்” என்று கேர் ஷ்ரோனுக்கு வந்த உத்தரவுகள் நேரடியானதாகவே இருந்தன.
அடுத்த சில நாட்களுக்குள், ஷ்ரோன் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் குழு ஆப்கானிஸ்தானில் தரையிறங்கியது. அவர்கள் செயற்கைக்கோள் தொலைபேசிகளை விடச் சற்று கூடுதலான வசதிகளைக் கொண்ட சாதனங்களை வைத்திருந்தனர். அத்துடன், அவர்களுக்கு ஆதரவளிக்கும் கூட்டாளிகளுக்காக லட்சக்கணக்கான டாலர்கள் பணமும் வைத்திருந்தனர்.
சில வாரங்களுக்குப் பிறகு, அக்டோபர் 7ஆம் தேதி தாலிபன் ஆளுகையில் இருந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடங்கியது. இது ஆகஸ்ட் 2021இல் முடிவடைந்த சுமார் 20 ஆண்டுகால போரைத் தொடக்கி வைத்தது.
பின்லேடன், 2011ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். ஆனால், அவரது வலது கரமாக செயல்பட்ட ஜவாஹிரியை கொல்ல மேலும் பத்தாண்டுகள் ஆயின.
ஆகஸ்ட் 1ஆம் தேதி, இறுதியாக காபூலில் அமெரிக்க ட்ரோன் ஒன்று ஜவாஹிரியை கண்டுபிடித்த ஒரு நாள் கழித்து, கேரி ஷ்ரோன் தனது 80ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.


அவருடைய மரணத்தை அடுத்து, சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் ஆற்றிய இரங்கல் உரையில், அமெர்க்க உளவுத்துறையில் பணியாற்றும் ஒவ்வோர் அதிகாரிக்கும் ஷ்ரோனின் வாழ்க்கையை “ஒரு காவியமாக, உத்வேகமாக” குறிப்பிட்டுப் பாராட்டினார்.
“இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானிலும் சிஐஏவிலும் அவர் பணியாற்றிய அனைத்து பதவிகளிலும், மிகச் சிறப்பான திறனை கேரி வெளிப்படுத்தினார். அவருடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, வாய்மை தவறாமை மற்றும் விடாமுயற்சியை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்,” என்று வில்லியம் பர்ன்ஸ் கூறினார்.
அந்த நேரத்தில் சிஐஏவில் பணியாற்றிய சில அதிகாரிகளே, ஆரம்பகட்ட நடவடிக்கையை வழிநடத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருந்தார்கள். பல தசாப்தங்களாக நீடித்த எங்கள் தொழிலில், ஷ்ரோன் 1980கள் மற்றும் 1990களில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சிஐஏ-வின் தலைவராகப் பணியாற்றினார்.
அந்த நேரத்தில், ஆப்கானிஸ்தான் மீது “அமெரிக்க அரசுக்கு எந்த ஆர்வமும் இருக்கவில்லை,” என்று அவர் பிபிஎஸ்-இல் அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்தார்.
“தாலிபன்கள் அங்கு இருந்தனர். அவர்கள் மனித உரிமை மீறல்களைச் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதுவொரு துயர்மிகுந்த அரசாங்கம். தங்கள் மக்களை மோசமாக நடத்தினார்கள். ஆனால், உண்மையில், வாஷிங்டனில் இருந்தவர்கள் யாரும் அதன்மீது அவ்வளவாக அக்கறை காட்டவில்லை.”

பட மூலாதாரம், Central Intelligence Agency Twitter
இருப்பினும், 1996ஆம் ஆண்டு வாக்கில், 1980களில் சோவியத்துக்கு எதிரான கொரில்லா போரில் பங்கெடுத்த, பெரியளவில் அப்போது அறியப்படாத ஜிஹாதியான ஒசாமா பின்லேடனின் நடவடிக்கைகளில் அமெரிக்க உளவுத்துறை கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகு, “நிலைமை மாறத் தொடங்கியது” என்று ஷ்ரோன் கூறினார்.
சிஐஏவின் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் ஒரு சிறு குழுவை ஷ்ரோன் உருவாக்கினார். அந்தக் குழுவே செளதி நாட்டவரான பின்லேடனால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து முதலில் எச்சரித்தது. ஷ்ரோன் விரைவில், அந்தப் பிராந்தியத்தில் அவர் இருந்த காலத்திலிருந்து அறிந்து வைத்திருந்த ஆப்கன் தாலிபன் தளபதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஷ்ரோன் வழிகாட்டுதலின் பேரில், சிஐஏ பலமுறை பின்லேடனை கொல்லவோ பிடிக்கவோ முயன்றது. பின்லேடனின் வாகனத் தொடரணி (கான்வாய்)மீது மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவது, ஏவுகணைகள் மற்றும் குண்டு வீச்சுத் தாக்குல்களை மேற்கொள்வது, தெற்கு ஆப்கனில் இருக்கும் பின்லேடனின் பண்ணையில் சோதனையிடுவது வரை எல்லாம் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது.
இந்த நேரத்தில் உச்சகட்டமாக, பின்லேடன் 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டு வெடிப்புகளை நடத்தினார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் அல்-காய்தா தளங்கள் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான கப்பல் ஏவுகணை தாக்குதலில் இருந்து பின்லேடன் தப்பினார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அல்-காய்தாவைச் சேர்ந்த விமான கடத்தல்காரர்கள், 9/11 தாக்குதலைத் தொடங்கினர்.

பட மூலாதாரம், Getty Images
2001ஆம் ஆண்டு, அறுவை சிகிச்சை ஜாபிரேக்கர் என்று அதிகாரபூர்வமாக அறியப்படும் ஆப்கானிஸ்தானுக்கான ஆபரேஷனில், ஷ்ரோன் மற்றும் ஏழு அமெரிக்கர்கள், 1996ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானை ஆண்ட தாலிபன் அரசை எதிர்த்துப் போராடும் குழுக்களின் கூட்டணியான வடக்குக் கூட்டணியோடு (Northern Alliance) இணைந்தார்கள். அப்போது 59 வயதாகியிருந்த ஷ்ரோன், சிஐஏவின் பணியாளர்களுக்கான ஓய்வுபெறும் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கு வெறும் 11 நாட்களே மிச்சமிருந்தது.
“நான் அந்த ஆப்கனுக்குள் செல்ல அழைப்பு வரும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. வடக்குக் கூட்டணியில் இருப்பவர்களுடனான எனது நீண்ட கால உறவைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இது சரியான தேர்வு என்றே நினைக்கிறேன்,” என்று ஷ்ரோன் பல ஆண்டுகளுக்குப் பிறகு கூறினார்.
ஷ்ரோனின் மதிப்பீட்டையே முன்னாள் சிஐஏ துணை ராணுவ அதிகாரியும் ஆப்கானிஸ்தான் போர் வீரரும் முன்னாள் துணை பாதுகாப்புச் செயலருமான, மைக்கேல் “மிக்” முல்ராயும் கூறினார்.
“செப்ரம்பர் 11, 2001ஆம் தேதிக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் அவருடைய அனுபவம், அவர் தலைமையிலான படையெடுப்பு, ஆரம்பகட்ட படையெடுப்பில் எங்கள் வெற்றிக்கு முற்றிலும் முக்கியமானது. ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற முதல் அணியில் இருந்ததோடு, கேரி முன்னின்று படையை வழிநடத்தியதன் மூலம் அவர் ஓர் உதாரணத்தை அமைத்தார்,” என்று முல்ராய் பிபிசியிடம் கூறினார்.
ஒரு ராணுவ நடவடிக்கையாக, ஆப்கானிஸ்தானின் ஆக்கிரமிப்பு குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியடைந்தது. 2001 டிசம்பருக்குள் தாலிபன்களை அதிகாரத்திலிருந்து விரட்டியது. ஆனால், ஷ்ரோனின் முக்கிய இலக்கான, பின்லேடன் மற்றும் அல்-ஜவாஹிரி போன்ற பிற மூத்த அல்-கொய்தா பிரமுகர்கள் தப்பிவிட்டனர். அதே நேரத்தில், தாலிபன்கள் மீண்டும் ஒருங்கிணைந்து போரிட்டதால், போர் உச்சகட்டத்தை அடைந்தது.

பட மூலாதாரம், Reuters
2003ஆம் ஆண்டு இராக் படையெடுப்பால் சிஐஏ மற்றும் ராணுவத்தின் வளங்கள் குறைக்கப்பட்டதன் காரணமாக, ஆப்கானிஸ்தானை பாதுகாப்பதிலும் அதன் முக்கிய எதிரிகளைப் பிடிப்பதிலும் அமெரிக்கா தோல்வியடைந்ததாக ஷ்ரோன் தனது வாழ்வின் பிற்பகுதியில் அளித்த பேட்டிகளில் கூறினார்.
இராக் அரசாங்கத்துக்கு 9/11 தாக்குதல்களோடு தொடர்பு இருந்தது என்று ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் அமெரிக்க நிர்வாகத்தின் ஆரம்பகட்ட கூற்றுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், அப்படியான எந்தத் தொடர்பும் இருந்ததாக தாம் நம்பவில்லை என ஷ்ரோன் தெரிவித்தார்.
“இராக் நடவடிக்கையில் ஆட்கள் தேவைப்பட்டதால், இந்த சிறிய தொலைதூர முகாம்கள் மற்றும் தளங்களில் இருக்கும் வீரர்கள், சிஐஏ பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இது உண்மையில் எங்களுக்குப் பெரிய இழப்பாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த இழப்பு இன்றளவும் நிலைத்துள்ளது,” என்று அவர் என்பிஆரில் 2005ஆம் ஆண்டு கூறினார்.
ஷ்ரோன் இறுதியாக ஆப்கன் படையெடுப்புக்குப் பிந்தைய ஆண்டுகளில் ஓய்வு பெற்றார். பின்னர், 2005ஆம் ஆண்டில் “முதல் இன்” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார்.
அவருடைய ஓய்வுக்குப் பிறகும், பின்லேடனின் கூட்டாளிகள் ஷ்ரோனை ஓர் இலக்காகப் பார்த்தனர். 2013ஆம் ஆண்டில், சோமாலிய போராளிக் குழுவான அல்-ஷபாப் ட்விட்டரில் அவரைக் கொன்றதாகக் கூறியது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள், என்பிசியிடம் அத்தகைய கூற்றுகளில் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தினர்.
“கேரி ஷ்ரோன் உயிருடன் இருக்கிறார், நலமுடன் இருக்கிறார்,” என்று அந்த நேரத்தில் வெளியான என்பிசி செய்தியறிக்கை குறிப்பிட்டது.
ஷ்ரோனின் பணி, விர்ஜீனியாவிலுள்ள சிஐஏ தலைமையகத்தில் உயிர்ப்போடு இருக்கிறது. 2001ஆம் ஆண்டு பயணத்தின்போது ஷ்ரோன் பயன்படுத்திய உலங்கூர்தி அங்குள்ள சிஐஏ மைதானத்தில் அவரது நினைவாக இப்போதும் வைக்கப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com