பட மூலாதாரம், PA Media
நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்ட சர் சல்மான் ருஷ்டி, கடந்த அரை நூற்றாண்டாகவே தனது இலக்கியப் பணியின் காரணமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன.
பிரிட்டிஷ் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ 1981-ஆம் ஆம்டில் புக்கர் பரிசை வென்றது.
ஆனால் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நான்காவது நாவலான தி சாத்தானிக் வெர்சஸ் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. இதன் தலைப்பை சாத்தானின் வசனங்கள் என்று கூறலாம். இது அதற்கு முன்பு எந்தப் புத்தகமும் சந்திக்காத எதிப்பைச் சந்தித்தது. இஸ்லாமிய உலகம் கொந்தளித்தது.
ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தன. அந்தப் புத்தகம் வெளிவந்தபிறகு அவர் தலைமறைவாகவே வாழ நேரிட்டது. பிரிட்டிஷ் அரசு அவருக்கு பாதுகாப்பு அளித்து வந்தது.
சல்மான் ருஷ்டியைக் கொல்லுமாறு ஈரானின் உச்ச மதத் தலைவராக இருந்த அயதுல்லா ருஹோல்லா கோமேனி ஃபத்வா என்படும் மதக்கட்டளையை 1989-ஆம் ஆண்டு பிறப்பித்தார்.
இந்தப் பிரச்னைக்காக இரானும் பிரிட்டனும் தங்களது அரசுமுறை ராஜீய உறவுகளை முறித்துக் கொண்டன. இஸ்லாமியர்களின் தீவிரமான எதிர்வினையால் கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் கண்டித்தனர்.
சல்மான் ருஷ்டி, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் அப்போதைய பம்பாயில் பிறந்தார்.
14 வயதில் அவர் இங்கிலாந்துக்கு படிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். பிறகு கேம்பிரிட்ஜில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
அவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைத்தது. தனது இஸ்லாமிய மத நம்பிக்கைகளைத் துறந்தார். சில காலம் ஒரு நடிகராவும் இருந்தார். அதன் பிறகு நாவல்களை எழுதத் தொடங்கினார்.
அவரது முதல் புத்தகமான ‘க்ரிமஸ்’ பெரிதாக வெற்றியடைவில்லை. ஆனால் அவருக்கு திறமை இருப்பதை எழுத்துலகம் புரிந்து கொள்ள அது அவருக்கு உதவியது.
தனது இரண்டாவது புத்தகமான மிட்நைட்ஸ் சில்ட்ரனை எழுத ருஷ்டிக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டன. இது பரவலாகப் பாராட்டப்பட்டது. 5 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது.
மிட்நைட்ஸ் சில்ட்ரன் இந்தியாவைப் பற்றி பேசியது. 1983-இல் வெளியான அடுத்த நாவலான ‘ஷேம்’ பாகிஸ்தானைப் பற்றியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ருஷ்டி நிகரகுவா நாட்டு பயணத்தைப் பற்றிய ‘தி ஜாகுவார் ஸ்மைல்’ நாவலை எழுதினார்.
செப்டம்பர் 1988-ஆம் ஆண்டு அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய சாத்தானிக் வெர்சஸ் நாவல் வெளியிடப்பட்டது. இந்த பின்-நவீனத்துவ நாவல் முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாவல் தங்களது மதத்தை அவமதிப்பதாக அவர்கள் கருதினர்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு தடை விதித்த முதல் நாடு இந்தியா. அதன் பிறகு பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற முஸ்லிம் நாடுகள் இந்தியாவைப் பின்பற்றி ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்தன.
ஆயினும் எழுத்துலகம் இந்த நாவல் பாரட்டப்பட்டது. நாவல்களுக்கு வழங்கப்படும் விட்பிரெட் பரிசைப் பெற்றது. ஆனால் நாவல் பிரபலமாகும்போதே அதற்கான எதிர்ப்பும் கடுமையாக அதிகரித்தது. ஏராளமானோர் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினார்கள்.
சில முஸ்லிம்கள் இந்த நாவல் இஸ்லாத்தை அவமதிப்பதாகக் கருதினர். கதையில் பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களுக்கு முகமது நபியின் மனைவிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டது உள்ளிட்ட பல அம்சங்களை முஸ்லிம்கள் கண்டித்தனர்.
சாத்தானின் வசனங்கள் என்ற தலைப்பு, குரானில் இருந்து முகமது நபியால் நீக்கப்பட்ட இரண்டு வசனங்களைக் குறிப்பிடுகிறது. அவ்விரு வசனங்களும் பிசாசினால் தரப்பட்டவை என்று முகமது நம்பியதாகக் கருதப்படுகிறது.
1989-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டனின் பிராட்போர்டில் முஸ்லிம்கள் புத்தகத்தின் நகலை எரித்தனர். செய்தித்தாள் முகவர்கள் அவரது புத்தகங்களைக் காட்சிப் படுத்துவதை நிறுத்தினர். ஆனால் தன் மீதான மத நிந்தனைக் குற்றச்சாட்டுகளை ருஷ்டி நிராகரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ருஷ்டிக்கு எதிராக நடந்த கலவரங்களில் மக்கள் கொல்லப்பட்டனர். இரான் தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டது. ருஷ்டியின் தலைக்கு தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பிரிட்டனின் சில முஸ்லிம் தலைவர்கள் பொறுமையாக இருக்குமாக அறிவுறுத்தினர். ஆனால் மற்றவர்கள் இரானின் உச்ச மதத் தலைவரை ஆதரித்தனர். ருஷ்டி மீதான கொலை மிரட்டல்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டித்தன.
அதன் பிறகு ருஷ்டி தனது மனைவியுடன் காவல் துறை பாதுகாப்பில் தலைமறைவாக வாழத் தொடங்கினார். இஸ்லாமியர்களுக்கு ஏற்படுத்திய துயரத்துக்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். ஆனாலும் இரானின் உச்ச மதத் தலைவரான கோமேனி, ருஷ்டிக்கு எதிரான பத்வாவை மீண்டும் பிறப்பித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ருஷ்டியைப் போலவே அதை விற்பனை செய்தவர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன.
அதே நேரத்தில் அந்தப் புத்தகம் அட்லாண்டிக் பெருங்கடலின் இரு புறம் உள்ள நாடுகளிலும் பரபரப்பாக விற்பனையாகியது. பிரிட்டனைப் போலவே ஐரோப்பிய நாடுகள் ருஷ்டியை ஆதரித்தன். பெரும்பாலான நாடுகள் தெஹ்ரானில் இருந்து தூதர்களைத் திரும்பப் பெற்றன.
இதனிடையே 1991-ஆம் ஆண்டு ஜூலையில் ருஷ்டியின் புத்தகத்தை ஜப்பானில் மொழிபெயர்த்த ஹிடோஷி என்பவர் டோக்கியோவில் கொல்லப்பட்டார். உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே பல முறை கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
அதே மாத தொடக்கத்தில், இத்தாலிய மொழிபெயர்ப்பாளரான எட்டோர் கேப்ரியோலோ, மிலனில் உள்ள அவரது குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டார். எனினும் அவர் உயிர்பிழைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
1998-ஆம் ஆண்டில் இரான் அரசு மனம் மாறியது. ருஷ்டிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பத்வாவை அதிகாரப்பூர்வமாக ஆதரிப்பதை விலக்கிக் கொண்டது.
சாத்தானின் வசனங்கள் புத்தகத்துக்குப் பிறகும் பல புத்தகங்களை ருஷ்டி எழுதியுள்ளார். ஹாரூன் அண்ட் தி சீ ஆஃப் ஸ்டோரிஸ் (1990), இமேஜினரி ஹோம்லேண்ட்ஸ் (1991), தி மூர்ஸ் லாஸ்ட் சை (1995), தி கிசுற்று உள்ளிட்டவை அடங்கும்.
ருஷ்டி நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இலக்கியத்திற்கான அவரது சேவைகளுக்காக 2007-ஆம் ஆண்டில் அவருக்க சர் பட்டம் வழங்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டில், சாத்தானின் வசனங்கள் பற்றிய சர்ச்சையை ஒட்டிய தனது வாழ்க்கையின் நினைவுகளை புத்தகமாக வெளியிட்டார்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com